Published:Updated:

`இதற்காகத்தான் பாடுபட்டோம், நம்பிக்கை வீண் போகவில்லை!' - 35 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரி

 நிரம்பிய குறிச்சி ஏரி
நிரம்பிய குறிச்சி ஏரி

அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பணிபுரியும் எங்க ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் நிதி திரட்டிக் கொடுத்தனர்.

``35 வருடங்களுக்குப் பிறகு எங்க ஊர் ஏரியில் முழுமையாக நீர் நிரம்பியிருக்கிறது. இதனால் எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சொந்த முயற்சியில் ஏரியைத் தூர் வாரினோம். அதில் இயற்கை தண்ணீரை நிரப்பி எங்களைத் தட்டி கொடுத்திருக்கிறது. ஏரி மட்டுமல்ல, இப்பதான் எங்க மனசும் நிறைஞ்சு இருக்கு'' என ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

குறிச்சி ஏரி
குறிச்சி ஏரி

ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாபட்டு என்ற ஊர் வடக்கு, தெற்கு என இரண்டு ஊராட்சிகளாகச் செயல்படுகிற பெரிய அளவிலான கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு விவசாயம்தான் முதுகெலும்பு. ஆற்றுத் தண்ணீர் பல ஆண்டுகளாக வராததால் ஆழ்குழாய் நீரைப் பயன்படுத்தியே விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதை நினைத்து கவலை கொண்ட அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரைச் சேமிக்கின்ற வகையிலான முயற்சியில் இறங்கினர்.

குறிப்பாக உலகின் பல நாடுகளில் பணிபுரியும் ஆம்பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து ஊரில் உள்ள நீர் நிலைகளைத் தூர்வாரி காக்க வேண்டும் என நினைத்தனர். இதற்காக அவர்கள் பெரும் முயற்சி எடுத்தனர். ஊர் மக்களும் இதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். அதேபோல் சுற்றுச் சூழல் மீது ஆர்வம் கொண்டவர்களும் இளைஞர்களின் இந்தச் செயலுக்கு உறுதுணையாக இருந்து பெரும் உதவிகளைச் செய்தனர். இதையடுத்து ரூ.18 லட்சம் செலவில் அந்த ஊரின் பெரிய ஏரியான குறிச்சி ஏரியைத் தூர்வாரினர்.

குறிச்சி ஏரி
குறிச்சி ஏரி

இதுகுறித்து வைரக்கண்ணு என்பவரிடம் பேசினோம். ``எங்கள் ஊரில் ஆண்டாள், குறிச்சி, குறும்பை என மூன்று பெரிய ஏரிகள் உள்ளன. இவற்றைத் தூர்வாரி தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி இரண்டாவது பெரிய ஏரியான குறிச்சி ஏரியைத் தூர்வாரும் பணியைத் தொடங்கினோம். இதற்காக அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பணிபுரியும் எங்க ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் நிதி திரட்டிக் கொடுத்தனர்.

மேலும் அங்கிருந்தபடியே ஏரி தூர்வாரும் பணியை முறைப்படுத்திச் சரியான திட்டமிடலுடன் செய்வதற்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கினர். அதன்படி 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட குறிச்சி ஏரியைத் தூர்வாரும் பணி தொடங்கியது. முதற்கட்டமாகக் குளத்தின் கரைகளில் மண்டிக் கிடந்த புதர் செடிகளை ஊர் மக்களைக் கொண்டு அகற்றினோம். பின்னர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குளத்தின் கரைகளைப் பலப்படுத்தியதுடன் 8 அடி ஆழத்துக்கு ஏரி தூர்வாரப்பட்டது.

ஆம்பலாப்பட்டு மக்கள்
ஆம்பலாப்பட்டு மக்கள்

மேலும் இந்த இடம் பறவைகள் வசிப்பதற்கு ஏற்ற இடமாகவும் இருக்க வேண்டும். ஏரியில் இருக்கின்ற நீர் ஆவியாவதைத் தடுக்க வேண்டும். நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காக ஏரியில் 25,000 மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். ஏரியின் நடுவில் மூன்று இடங்களில் 50 அடி அகலத்தில் வட்ட வடிவில் மேடான திட்டு அமைத்து அதன் மேல்பகுதியிலும், ஏரியின் கரைப்பகுதியிலும் அரசம், மகிழம், இலுப்பை உள்ளிட்ட மரக்கன்றுகளை ஊன்றினோம். அத்துடன் பனை விதைகளும் விதைத்தோம். எங்கள் கண்களாக இவற்றைப் பராமரித்து வருகிறோம்.

`அரசும் செய்ய மாட்டேங்குது... எங்களையும் செய்யவிட மாட்டேங்கிறாங்க!' - அழியும் துறையூர் ஏரி

ஏரி தூர்வாரி முடித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. எல்லோரும் இந்த ஏரியில் நீர் நிரம்ப வேண்டும் என ஏக்கத்துடன் காத்துக்கிடந்தனர். அவர்களின் ஏக்கத்தைப் போக்குகின்ற வகையில் ஒரு மாதத்துக்கும் மேலாக அடிக்கடி நல்ல மழை பொழிந்தது. இதன் மூலம் காட்டாறுகளில் வந்த தண்ணீர் எங்கள் ஊர் ஏரியை நிரப்பியது. இதன் மூலம் ஏரி முழுக்கத் தண்ணீர் நிரம்பி தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது.

குறிச்சி ஏரி
குறிச்சி ஏரி

இதைக் கண்ட எங்க ஊர் மக்கள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. எல்லோரும் ஏரிக்குத் திரண்டு வந்து செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பெரியவர்கள் இயற்கையை வணங்கிக் கையெடுத்துக் கும்பிட்டனர். வெளிநாட்டில் இருக்கும் இளைஞர்கள் அடைந்த பேரானந்தத்திற்கு அளவே இல்லை. இதற்காகத்தான் பாடுபட்டோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. ஏரி நிரம்பியதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வரும் கோடையில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது. மரக்கன்றுகளும் செழிப்பாக வளரத் தொடங்கிவிட்டன. பறவைகள் ஏரியை வட்டமடித்து வசிக்கத் தொடங்கிவிட்டன. கண்ணுக்கு எட்டிய தூரம் தண்ணீரால் ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. ஏரி நிரம்பியது போல் இப்போது எங்கள் மனதும் நிறைந்துவிட்டது. விரைவில் மற்ற ஏரிகளைத் தூர்வாரும் பணியைத் தொடங்குவோம்'' என்றார் உற்சாகக் குரலில்.

பின் செல்ல