Published:Updated:

இயற்கை விவசாயம்... மருத்துவச் செலவு இல்லாத உலகம் படைக்கும் விவசாயி ஸ்ரீதரன்

விவசாயி ஸ்ரீதரன்
விவசாயி ஸ்ரீதரன்

`எப்போதும் மாப்பிள்ளை சம்பா கிட்டத்தட்ட 6 அடி வளரும். ஆனால், இந்த வருடம் கிச்சடி சம்பா, சீரகச் சம்பா 6 அடிக்கு உயர்ந்து வளர்ந்திருக்கிறது.'

இயற்கை முறையில் பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த விவசாயி ஒருவர், 6 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் சீரகச்சம்பா சாகுபடி செய்து அசர வைத்திருக்கிறார்.

ஸ்ரீதர்
ஸ்ரீதர்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் கடந்த 6 ஆண்டுகளாகத் தனக்குச் சொந்தமான 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவர் தற்போதும் மறைந்துவரும் பாரம்பர்ய நெல் வகைகளான மாப்பிள்ளைச் சம்பா, கிச்சடி சம்பா, சீரகச்சம்பா, பூங்காறு, வாசனை உள்ளிட்ட நெல் ரகங்களைத் தேடி சேகரித்து சாகுபடி செய்து வருகிறார்.

ஸ்ரீதரனிடம் பேசினோம். "தமிழர்களின் 90 சதவிகித உணவு பழக்கவழக்கம் அரிசி வகையைச் சார்ந்து உள்ளது. ஆகையால், உடல் நலம் காக்க இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். நம்முடைய மண்ணானது வளம் மிக்கதாக மாறும்போது நெற்பயிர்கள் செழித்து வளரக்கூடிய தன்மை உண்டாகிறது. அக்கால பழமொழிபோல் "மண்ணை மடிக்க மடிக்க எருவாகும்." இதற்கு உதாரணமாக ஒரு உழவுக்கு 8 சால் உழவு செய்து, மண்புழு, கடல்பாசி, இலை சத்து மற்றும் சாண எரு, கல்ல புண்ணாக்கு, எள்ளுப் புண்ணாக்கு, பஞ்ச கவ்யம் போன்றவற்றை உரமாக வயலில் இடுவதால் பூச்சி தாக்குதல் இல்லாமல் மகசூல் அதிகரிக்கிறது.

எப்போதும் மாப்பிள்ளை சம்பா கிட்டத்தட்ட 6 அடி வளரும். ஆனால், இந்த வருடம் கிச்சடி சம்பா, சீரகச் சம்பா 6 அடிக்கு உயர்ந்து வளர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் மண் இயற்கை வளமாக மாறியதால் நெற்கதிர்கள் வளர்ந்திருக்கிறது. இயற்கை விவசாயம் செய்யும்போது நம்முடைய மண் நல்ல வளம் பெறும். வயலில் நத்தை, புழுக்கள், தட்டான், காளான் போன்ற பல்லுயிர் பெருக்கம் ஏற்படும்.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயத்தால் குறைந்த செலவில் நிறைந்த லாபம் பெறலாம். இயற்கை விவசாயத்தை அதிக அளவில் விவசாயிகள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் என்னுடைய வயலில் விளையும் நெல் ரகங்களை ஆண்டுக்கு 10 விவசாயிகளுக்கு விதைகள் கொடுத்து அவர்களையும் இந்த இயற்கை விவசாயம் செய்வதற்கு ஊக்குவித்து வருகிறேன். இதுவரை 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறியுள்ளனர்.

இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட பாரம்பர்ய நெல்லை சாப்பிடும்போது மிக அதிக அளவு சத்து கிடைக்கிறது. மாப்பிள்ளை சம்பா அரிசி மிக உன்னதமாக சுவையாக இருக்கும். அதேபோல சீரகச் சம்பா, கிச்சிலி சம்பா, பூங்கா உள்ளிட்ட ரகங்கள் சாப்பிட ருசியோடு மட்டுமல்லாமல், எளிதில் ஜீரணமாகும். இந்தப் பாரம்பர்ய நெல் ரகத்தைச் சாப்பிடும்போது எந்த விதமான உடல் நோயும் நம்மை அண்டாது. இத்தகைய நெல் ரகங்களை உண்டதால் நம்முடைய முன்னோர்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். மருத்துவச் செலவே இல்லாத ஒரு உலகம் படைக்க இளைஞர்கள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும். இயற்கை விவசாயத்தை தமிழக அரசு அதிக அளவில் ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு