Published:Updated:

75 சென்ட், ரூ. 1,95,000 வருமானம்... இயற்கையில் செழிக்கும் வாழை...

வாழைத்தார்களுடன் பிரதாபன்
பிரீமியம் ஸ்டோரி
News
வாழைத்தார்களுடன் பிரதாபன்

நேரடி விற்பனையில் நிறைவான லாபம்!

மகசூல்

சாயன விவசாயத்தில் விளைவிக்கப்படும் மற்ற விளைபொருள்களைவிட, வாழை போன்ற பழ வகைகளில் நேரடி பாதிப்புகள் அதிகம். இவற்றைச் சமைக்காமல் சாப்பிடுவதால், நச்சுத் தன்மையின் வீரியம் கூடுதலாக இருக்கும். இவை பயிராக இருக்கும்போது ரசாயனம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அறுவடைக்குப் பிறகு, பளபளப்புக்காகவும், விரைவாகப் பழுக்க வைப்பதற்காகவும் விதவிதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், நஞ்சில்லாப் பழங்களை உற்பத்தி செய்து, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டுவருகிறார்கள் சிலர். இதற்குப் பிரதிபலனாக, களைக்கட்டுப்பாடு, பூச்சிநோய் எதிர்ப்புத்திறன், குறைவான சாகுபடி செலவு உள்ளிட்ட பலவிதப் பயன்கள் இவர்களுக்குக் கைக்கொடுக்கின்றன. இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் தஞ்சாவூர் மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த விவசாயி பிரதாபன்.

வாழையை இயற்கை முறையில் பழுக்க வைக்கும் கொடாப்பு முறை
வாழையை இயற்கை முறையில் பழுக்க வைக்கும் கொடாப்பு முறை

இவர் பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். 25.11.2017 தேதியிட்ட இதழில், `மண்ணுக்கும் உரமாகும் மக்காச்சோளம்’ என்ற தலைப்பில் இவரது அனுபவ கட்டுரை வெளியானது. தற்போது, இயற்கை வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கரின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, இயற்கை முறையில் வாழைச் சாகுபடி செய்துவருகிறார். முக்கால் ஏக்கர் நிலத்தில் இவர் பயிர் செய்திருந்த பச்சைநாடன், தற்போது அறுவடை முடியும் தறுவாயில் உள்ளது. இது தவிர ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தில் பூவன், தலா அரை ஏக்கர் நிலத்தில் ரஸ்தாலி, செவ்வாழை எனச் சாகுபடி செய்திருக்கிறார். தற்போது பூவன் அறுவடைக்கு வரத் தொடங்கியிருக்கிறது. மற்ற இரண்டு ரகங்களும் இளம் பயிர்களாக இருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாழையை இயற்கை முறையில் பழுக்க வைக்கும் கொடாப்பு முறை
வாழையை இயற்கை முறையில் பழுக்க வைக்கும் கொடாப்பு முறை

இவரைச் சந்திக்க, அவரது வாழைத் தோட்டத்துக்குச் சென்றோம். மண்ணுக்கடியில் பாரம்பர்ய முறையில் கொடாப்பு போடப்பட்டிருந்த வாழைத்தார்களை வெளியில் எடுத்துக்கொண்டிருந்த பிரதாபன், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். “இந்த முறையில பழுக்க வைக்கும் வாழைப்பழங்கள் சுவையா இருக்கும். இதுதான் உடம்புக்கு நல்லது. மூணு அடி நீளம், ரெண்டு அடி அகலம், ரெண்டு அடி ஆழத்துக்குக் குழி எடுத்து, அதுக்குள்ளார வாழைச் சருகுகளைப் போட்டு, வாழைத்தார்களைப் படுக்கைநிலையில் வரிசையா அடுக்கிவெச்சு, அதுமேல மறுபடியும் சருகுகளைப் போட்டு மூடி, காற்றுப் புகாத அளவுக்கு மண்ணைக் கொண்டு மூடிடுவோம். இதோட பக்கவாட்டுப் பகுதியில ஒரு சின்னப் பானையைப் புதைச்சு, அதுல தேங்காய் நாரையும் சாம்பிராணியையும் பயன்படுத்திப் புகையை உருவாக்கி, மூட்டம் போடுவோம். இது மாதிரி காலையிலயும் சாயங்காலமும் ரெண்டு வேளை மூட்டம் போடுவோம். 24 மணிநேரத்துல வாழைத்தார்கள் பழுக்க ஆரம்பிச்சிடும். அதுக்குப் பிறகு கொடாப்பை அப்புறப்படுத்திட்டு, தார்களை வெளியில் எடுத்துடலாம். அடுத்த ரெண்டு மூணு நாள்ல பழம் நல்லா பழுத்திடும். நான் விளைவிக்கும் வாழைத்தார்கள் எல்லாத்தையுமே இது மாதிரிதான் பழுக்கவெக்கிறேன். இது நம் முன்னோர்கள் கடைப்பிடிச்ச பாரம்பர்ய முறை. ஆனா, இப்போ கடைகள்ல கிடைக்கும் பெரும்பாலான வாழைப்பழங்கள், ரசாயனத்துல பழுக்கவெச்சதாத்தான் இருக்கு. அதெல்லாம் உடம்புக்கு ரொம்பக் கெடுதல்” என்று பேசிக்கொண்டே வாழைத் தோட்டம் முழுவதையும் நமக்குச் சுற்றிக் காண்பித்தார் பிரதாபன்.

செழித்து வளர்ந்திருக்கும் வாழைமரங்கள்
செழித்து வளர்ந்திருக்கும் வாழைமரங்கள்

அப்போது ஏராளமான எறும்புகள், நம் கால்களில் ஏறிக் கடித்துத் தீர்த்தன. நாம் வலியில் துடிக்க, பிரதாபனோ சிரித்த முகத்தோடு, ‘‘பயப்படாதீங்க. கொஞ்ச நேரம் வலிக்கும். வேற ஒண்ணும் ஆகாது. இங்கே மட்டுமில்லை, தோட்டம் முழுக்கவே எறும்புகள் நிறைஞ்சிருக்கு. மண்ணுல மட்டுமில்லை. வாழை மேலயும் நிறைய எறும்புகள் ஊர்ந்துக்கிட்டு இருக்கு. இது விவசாயிகளோட நண்பன். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி உபயோகப்படுத்தாமல் இருந்தாலே எறும்புகள் தானாகத் தேடிவரும். பயிர்களைத் தாக்கக்கூடிய அனைத்துவிதமான பூச்சிகளையுமே இது கட்டுப்படுத்துது. இதை நான் கண்கூடா உணர்றேன். எறும்புக்கடியைத் தாங்க முடியாமல் பூச்சிகள் ஓடிடும். இது மட்டுமில்லை, இன்னும் பலவிதங்கள்ல எறும்புகள் ஒத்தாசை பண்ணுது. மண்ணுக்குள்ள துளைகள் போட்டுக்கிட்டு போறதுனால, வாழையோட வேர்களுக்குக் காற்றோட்டம் கிடைக்குது. மக்காத தாவரக்கழிவுகளை எறும்புகள் சாப்பிட்டுடுது. எறும்புகளோட எச்சம், மண்ணுக்கு உரமாகி, வளப்படுத்திக்கிட்டு இருக்கு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எறும்புப் புத்து இருக்குற இடத்துல வாழை, கூடுதல் செழிப்போட இருக்குது. ஜீவாமிர்தம் அதிகமா கொடுக்குறதுனாலதான், என்னோட வாழைத் தோட்டம் முழுக்க எறும்புகள் நிறைஞ்சிருக்கு. ஜீவாமிர்தத்துல வெல்லம் கலக்குறதுனால, அந்த இனிப்புக்காக எறும்புகள் அதிகமா வருது” என இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை விவரிக்கும் பிரதாபன்,

‘‘இந்தத் தோட்டத்தோட மொத்த பரப்பு 4 ஏக்கர். முக்கால் ஏக்கர்ல 700 பச்சைநாடன், ஒண்ணேமுக்கால் ஏக்கர்ல 1,500 பூவன், தலா அரை ஏக்கர்ல 500 ரஸ்தாலி, 500 செவ்வாழைனு சாகுபடி செஞ்சிருக்கோம். பச்சைநாடன் அறுவடை முடியப்போகுது. பூவன் இப்பதான் அறுவடைக்கு வர ஆரம்பிச்சிருக்கு. ரஸ்தாலியும் செவ்வாழையும் அஞ்சு மாசப் பயிரா இருக்குது. என்னோட வாழைக்கு முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமே ஏற்படலை. காரணம் அடிப்பாகம் நல்லா பெருத்து, திடகாத்திரமா இருக்கு. பாசன நீர்ல அதிகளவு ஜீவாமிர்தம் கொடுக்குறதுனால, மண்ணு வளமாகி, நல்லா பொலபொலப்பா இருக்குது. அதனால வாழையோட வேர்கள் படர்ந்திருக்கு.

எறும்புகள் மண்ணுக்குள்ள துளைகள் போட்டுக்கிட்டு போறதுனால, வாழையோட வேர்களுக்குக் காற்றோட்டம் கிடைக்குது. களைகள் இருக்குறதுனால, மண்ணுல நேரடியா சூரிய வெப்பம் தாக்காமல் தடுக்கப்படுது.

வாழைக்கன்றுகளை பீஜாமிர்தத்துல நனைச்சுப் புதைச்சதுனாலயும், குழியில அடியுரமா கனஜீவாமிர்தம் போடுறதுனாலயும் தேவையான ஊட்டம் கிடைச்சு, நோய் எதிர்ப்புத்திறனோடு இங்க இருக்கும் வாழை மரங்கள் ஊக்கமா வளருது. வாழையில இருக்குற சருகுகளைக் கழிக்கிறதில்லை. இதனால் ஈரப்பதம் பாதுகாக்கப் படுறதோட, பூச்சிகளின் நேரடித் தாக்குதல்கள்ல இருந்தும் பாதுகாக்குது.கரும்புள்ளி, கீறல்கள் இல்லாமல் பழங்கள் பார்வையா இருக்க, பூ ஒடிச்சதும் தார்கள் மேல திராட்சை ரசம் தெளிப்போம். 15 நாள் இடைவெளியில இரண்டு முறை திராட்சை ரசம் தெளிப்போம். இதனால காய்களோட எடையும் பருமனும் அதிகரிச்சு திரட்சியா இருக்குது. காய்களோட பளபளப்பும் கூடுது. பொதுவா வாழை விவசாயிகள் நிலத்தைக் கொத்தி, களைகளை அப்புறப்படுத்தி, சுத்தமாவெச்சிருப்பாங்க. ஆனா நாங்க அப்படிச் செய்றதில்லை. ஒருமுறைகூட மண்ணை கொத்தலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தோட்டம் முழுக்க காடு மாதிரிக் களை மண்டி கிடக்குது. களைகள் இருக்குறதுனால, மண்ணுல நேரடியா சூரிய வெப்பம் தாக்காமல் தடுக்கப்பட்டுடுது. மண்ணுல ஈரப்பதம் இருக்குறதுனால, மண்புழுக்கள் மேல வந்துட்டுப் போகுது. கறையான்களும் நிலத்தை வளப்படுத்துது. களைகள் வளர்ந்து, வாழ்நாள் முடிஞ்சதும், மட்கி மண்ணுக்கு உரமாயிடுது. ஓரளவுக்கு வளர்ந்த நிலையில உள்ள வாழையிலதான் இது மாதிரி களைகள் வளர அனுமதிப்போம். கன்னு நட்டதுல இருந்து அடுத்த மூணு மாசத்துக்கு களைகளைக் கட்டுப்படுத்தியே ஆகணும்.

வாழைத்தார்களுடன் பிரதாபன்
வாழைத்தார்களுடன் பிரதாபன்

கன்னு நடவு செஞ்ச அன்னிக்கே, ஏக்கருக்கு 20 கிலோ வீதம் தட்டைப்பயறு விதைச்சு, உயிர் மூடாக்கு உருவாக்கிடுவோம். அடுத்த ஒரு மாசத்துல நல்லா தளதளனு தட்டைப்பயறு வளர்ந்து காடு மாதிரி மண்டிடும். 90 நாள்கள்ல பயறை மட்டும் அறுத்தெடுத்து, அதை மாவாக்கி, ஜீவாமிர்தத்துக்குப் பயன்படுத்திக்குவோம். தட்டைப்பயறு செடி 120 நாள்கள்ல காய்ஞ்சு, தானாக மட்கி மண்ணுக்கு உரமாகிடும். இது தழைச்சத்து. இதோட வேர் முடிச்சுல இருக்குற நைட்ரஜன் மண்ணுக்குக் கிடைக்குது” என்று சொன்னவர், பச்சைநாடன் அறுவடை மற்றும் விற்பனை குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

‘‘முக்கால் ஏக்கர்ல 700 பச்சைநாடன் மரங்களைச் சாகுபடி பண்ணியிருந்தோம். இதுல 650 தார்கள் விற்பனைக்குத் தேறி வந்துச்சு. இதுவரைக்கும் 600 தார்கள் அறுவடை செஞ்சிருக்கோம். என்னோட வாழைத்தார்களை மொத்த வியாபாரிகிட்ட விற்பனை செய்யக் கூடாதுங்கறதுல உறுதியா இருந்தேன். கொடாப்புல பழுக்கவெச்சு, சீப்புகளா வெட்டியெடுத்து, அட்டைப் பெட்டியிலவெச்சு, நேரடியாகப் பழக்கடைகளுக்கு விற்பனை செய்ய முடிவு பண்ணினேன்.

‘‘எறும்பு புத்து இருக்குற இடத்துல வாழை, கூடுதல் செழிப்போட இருக்குது. ஜீவாமிர்தம் அதிகமா கொடுக்குறதுனாலதான், என்னோட வாழைத்தோட்டம் முழுக்க எறும்புகள் நிறைஞ்சிருக்கு.’’

ஆரம்பத்துல இதோட அருமை பழக்கடைக்காரங்களுக்குத் தெரியலை. `ரசாயனம் இல்லாத வாழைப்பழம்’னு சொல்லி, `இதைத் தனியா விற்பனை செஞ்சு பாருங்க’னு வற்புறுத்தித்தான் சம்மதிக்கவெச்சேன். மக்கள்கிட்ட இதுக்கு நல்ல வரவேற்பு இருந்ததுனால, தஞ்சாவூர்ல இருக்குற ஒரு சில பழக்கடைக்காரங்க என்னோட வாழைப்பழங்களைத் தொடர்ச்சியா வாங்க ஆரம்பிச்சாங்க.

ஒரு கிலோ வாழைப்பழம் 30 ரூபாய்னு விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கேன். ஒரு தார்ல இருந்து சராசரியா 10 கிலோ வாழைப்பழங்கள் கிடைக்கும். இதுமூலமா ஒரு தார்ல இருந்து 300 ரூபாய் வீதம் 600 தார்கள் மூலமா, 1,80,000 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இன்னும் 50 தார்கள் மரத்துல இருக்குது. அதை வெட்டி, பழமாக்கி விற்பனை செஞ்சா, 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக மொத்தம் இந்த முக்கால் ஏக்கர்ல பச்சைநாடன் சாகுபடி செஞ்சதுல, 1,95,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லா செலவும் போக, 1,12,300 ரூபாய் நிகர லாபமாகக் கையில மிஞ்சும். இது எனக்கு ஓரளவுக்கு திருப்தியா இருந்தாலும்கூட, இதை நான் முழுமையான வெற்றியாக நினைக்கலை.

பழக்கடைகளைத் தேடிப் போயி நேர்ல விற்பனை செய்யறதுனால பேக்கிங், போக்குவரத்து செலவு விரயமாகுது. கடுமையான உழைப்பையும் கொடுக்க வேண்டியிருக்கு. வாழைப்பழங்களை, பழக்கடைகளுக்குக் கொண்டு போறதுக்காகவே பழைய கார் ஒண்ணை விலைக்கு வாங்கியிருக்கேன்.

எதிர்காலத்துல இதையெல்லாம் நான் தவிர்க்கணும். இயற்கையில விளைவிக்கப்பட்ட என்னோட வாழைப்பழங்களோட மகத்துவம் புரிஞ்சு, மக்கள் என்னோட தோட்டத்துக்கே தேடி வந்து நேரடியாக வாங்கிக்கிட்டுப் போகணும். அதைத்தான் நான் முழுமையான வெற்றியா நினைக்கிறேன்” எனத் தனது எதிர்பார்ப்பைத் தெரிவித்து விடைகொடுத்தார் பிரதாபன்.

தொடர்புக்கு, பிரதாபன், செல்போன்: 98437 90737

75 சென்ட், ரூ. 1,95,000 வருமானம்... இயற்கையில் செழிக்கும் வாழை...

இப்படித்தான் சாகுபடி!

முக்கால் ஏக்கரில் (75 சென்ட்) பச்சைநாடன் சாகுபடி செய்ய, பிரதாபன் மேற்கொள்ளும் சாகுபடி முறைகள்:

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் 4 சால் சட்டிக்கலப்பை மூலமாகவும், 2 சால் கொக்கிக் கலப்பை மூலமாகவும் உழவு ஓட்ட வேண்டும். கடைசி உழவுக்கு முன்பாக, அடியுரமாக 300 கிலோ கனஜீவாமிர்தம் இட வேண்டும். வாழைக்கு வாழை ஆறே முக்கால் அடி இடைவெளிவிட்டு, ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுத்து, ஒரு கைப்பிடி கனஜீவாமிர்தம் இட வேண்டும். பீஜாமிர்தத்தில் விதைநேர்த்தி செய்யப்பட்ட வாழைக்கன்றைக் குழியில் நட வேண்டும். உயிர் மூடாக்கு உருவாக்குவதற்காக, 15 கிலோ தட்டைப்பயறு தெளிக்க வேண்டும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப அவ்வப்போது தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். ஒவ்வொரு முறையும் பாசனநீரில் 150 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்துவிட வேண்டும்.

90-ம் நாள் பயறை மட்டும் அறுவடை செய்து கொள்ளலாம். 120 நாள்களில் தட்டைப்பயறு காய்ந்து மடியத் தொடங்கும். தார் உருவாகி, பூ ஒடித்த பிறகு, 10 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி திராட்சை ரசம் கலந்து, காய்கள்மீது தெளிக்க வேண்டும். காய்கள் முழுமையாக முதிர்ச்சி அடைந்த பிறகு, தார்களை அறுவடை செய்து, ஏற்கெனவே சொன்னதுபோல் மண்ணுக்கடியில் பாரம்பர்ய முறையில் கொடாப்பு போட்டு, பழுக்க வைக்க வேண்டும்.

திராட்சை ரசம் எப்படித் தயாரிக்க வேண்டும்?

ந்து கிலோ கறுப்பு திராட்சையை, தோலுடன் நன்கு பிசைந்து கூழாக்கி, அதனுடன் ஐந்து கிலோ நாட்டுச் சர்க்கரையைக் கலந்து கலக்கிவிட வேண்டும். காற்றுப் புகாதவாறு பிளாஸ்டிக் கேனில் நன்கு மூடிவைத்து, இருட்டறையில் வைக்க வேண்டும். அடுத்த 15 நாள்களில் திராட்சை ரசம் தயார். இதை வடிகட்டி, 100 மி.லி திராட்சை ரசத்துக்கு, 10 லிட்டர் வீதம் தண்ணீர் கலந்து வாழைத்தார்கள் மீது தெளிக்க வேண்டும். தேவைக்கேற்ப, இதை ஆறு மாதங்கள்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.