Published:Updated:

``மந்திரி பதவி இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும்... ஆனால், நான் என்றைக்கும் விவசாயிதான்"

பி.மூர்த்தி

மந்திரி பதவி இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும். ஆனால், நான் என்றைக்கும் விவசாயிதான். தினமும் காலையில எந்திருச்சு வயக்காட்டை ஒரு சுத்து சுத்தி வந்தாதான் மனசுக்கு நிம்மதியா இருக்கும்... மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் யதார்த்தமாகப் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி.

``மந்திரி பதவி இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும்... ஆனால், நான் என்றைக்கும் விவசாயிதான்"

மந்திரி பதவி இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும். ஆனால், நான் என்றைக்கும் விவசாயிதான். தினமும் காலையில எந்திருச்சு வயக்காட்டை ஒரு சுத்து சுத்தி வந்தாதான் மனசுக்கு நிம்மதியா இருக்கும்... மேய்ச்சல் சமூக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் யதார்த்தமாகப் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி.

Published:Updated:
பி.மூர்த்தி

``தினமும் காலையில எந்திருச்சு வயக்காட்டை ஒரு சுத்து சுத்தி வந்தாதான் மனசுக்கு நிம்மதியா இருக்கும்" என்று மேய்ச்சல் சமூக கூட்டமைப்பினர் நடத்திய விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி இயல்பாகப் பேசினார்.

விழாவில்
விழாவில்

நாட்டின மாடு, ஆடு வளர்ப்போரை பொருளாதர ரீதியாக முன்னேற்றவும், அருகி வரும் பாரம்பர்ய மேய்ச்சல் நிலத்தையும், நாட்டு மாட்டினத்தையும் பாதுகாக்கவும் மதுரையைச் சேர்ந்த தொழுவம் என்ற அமைப்பு பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

தென் மாவட்டங்களில் கிடை மாடு, ஆடு வளர்ப்போர் குறித்து ஆய்வு செய்து ஆவணப்படுத்தியும், கீதாரிகளை ஒருங்கிணைத்து நபார்டு வங்கி உதவியோடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் மாட்டுக் கிடை அமைப்பது, பால் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள், சாணம் மூலம் அழகு சாதனப் பொருள்கள், ஊதுபத்தி, விபூதி, கோமியம், இயற்கை உரங்கள் எனத் தயாரித்து வருகிறார்கள்.

நாட்டின மாடு வளர்ப்பவர்கள்
நாட்டின மாடு வளர்ப்பவர்கள்

தொழுவம் உற்பத்தியாளர் குழு கிடை மாடுகள் மூலம் மதிப்புக் கூட்டி தயாரித்துள்ள 20-க்கும் மேற்பட்ட பொருள்களை அறிமுகம் செய்யும் ஆவினப் பொருளாதார மீட்பு விழா சமீபத்தில் மதுரையில் நடந்தது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, ``இது அருமையான நிகழ்ச்சி. சங்க காலத்திலிருந்து கிடை மாடும், கிடை ஆடும் நம் உணர்வோடு ஒட்டி வருது. கிராமங்களில் ஆடு மாடுகளைக் குழந்தை போல பாவித்து, தெய்வமாக வழிபடுவாங்க.

கிடை மாட்டுச் சாணத்திலிருந்து என்னென்ன பொருள்கள் உற்பத்தி செய்யலாம் என்பதை ஆராய்ச்சி செய்து, என்ன பயன் என்பதை நாட்டுக்கே தெரிவித்திருக்காங்க. பல வருடங்களுக்கு முன் நம்ம வீட்டு வாசலில் முதல் சாணம் தெளிப்பாங்க. கூரை வீடோ, ஓட்டு வீடோ சுவரில் சாணத்தைக் கரைத்து பூசுவாங்க. கிருமிகள் வந்துவிடக் கூடாது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கு.

பி.மூர்த்தி
பி.மூர்த்தி

நானும் ஒரு விவசாயிதான். அப்பல்லாம் கிராமத்துல காலையிலயே விறகடுப்புல சோறு ஆக்குவாங்க. பழைய சோறு சாப்பிட்டா சாயங்காலம் வரைக்கும் பசிக்காது. ரசாயன உரமெல்லாம் வர்றதுக்கு முன்னாடி வயக்காட்டுல சாணத்தைதான் உரமா போடுவாங்க. நல்லா உழுதுட்டு ஒரு மாசம் கிடப்புல போடுவாங்க. சாணத்தோடு கலந்து வர்ற மண் வாசனை மணக்கும். நெல் விளைச்சல் நல்லாருக்கும்.

ராத்திரியில கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்க வீட்டுல உள்ள பெண்கள் இடிப்பார்கள். அதை நிலத்துல போட்ட பிறகுதான் நெல்லை நடுவாங்க. அதைச் சாப்பிட்டவர்கள் 80, 90 வயசுலயும் திடகாத்திரமா இருந்தார்கள். நவீன விவசாயத்துக்கு மாறின பிறகுதான் எல்லாமே மாறிடுச்சு. நெல்லை விதைக்கிற திலிருந்து அறுக்குறது வரை ரசாயன உரங்களைப் போடுறோம். அப்புறம் அதுல சமைக்கிற சோறு நல்லா இருப்பதில்லை. புதுப்புது நோய்கள் வருது.

இதெல்லாம் மாறணும்னா, நாம 40 வருஷத்துக்கு முன்னால போகணும். அப்பதான் நம்ம உடம்பு ஆரோக்கியமா இருக்கும். நானும் 10 வருடமா இயற்கை விவசாயம்தான் பண்ணிகிட்டு இருக்கேன். ஆனால், வருடா வருடம் நட்டம் வருது. அதுக்கு காரணம் ரசாயனம் போடுற விளைச்சலைவிட குறைவா மகசூல் வர்றதுதான். அதுக்கான விழிப்புணர்வு இன்னும் வரல. உழுதவன் கணக்கு போட்டா உழக்கு கூட மிஞ்சாதுன்னு சொல்வாங்க. இப்ப சிறுதானியம் விளைவிக்கிறது நல்ல லாபத்தைத் தருது. ஏற்றுமதிக்கானதா மாறிடுச்சு. அதைச் செய்யலாம்.

விழாவில்
விழாவில்

நாங்க பத்து தலைமுறையா கிடை மாடுகள் வச்சிருக்கோம். பொதுவா, பட்டி பெருகும்பாங்க. பராமரிப்பு இல்லாததால எங்க பட்டி குறைஞ்சிடுச்சு. எனக்கு 15 வயசு இருக்கும்போது எங்க கிட்டே 1,000 கிடை மாடு இருந்துச்சு. காலையில் எழுந்ததும் கிடைல போய் சாப்பிடணும்னு சொன்னதும் அப்பா கூட்டிக்கிட்டு போவாரு. ராத்திரி கறந்த பாலுல மோரை ஊத்தி அதுல சோத்தை கலந்து மண் பானையில தருவாங்க. அதைப் பனை ஓலையில கத்திரிக்காய் மிளகாய் போட்டு வச்ச கூட்டை தொட்டுக்கிட்டு சாப்பிட்டா சாயங்காலம் வரை பசிக்காது. கையை கழுவினாலும் வெண்ணெய் பிசுக்குப் போகாது.

நாட்டு மாட்டுப் பால் கொடுப்பது குழந்தைகளுக்கு நல்லது. முன்னெல்லாம் பாலுக்காக வீட்டுக்கு நாலு நாட்டு மாடு வச்சிருந்தாங்க. இப்ப அதையெல்லாம் பார்க்க முடியல. எங்க கிராமத்துல காலையில மாட்டை அவுத்து விட்டால், பக்கத்துல உள்ள மலையில மேஞ்சுட்டு அதுவா சாயங்காலம் வீட்டுக்கு வந்துடும். அதுபோலதான் ஆடுகளையும் மேய அனுப்புவோம். பாரஸ்ட்டுகாரங்க (வனத்துறையினர்) சொல்ற மாதிரி எந்த பாதிப்பும் கிடையாது. அவங்க மரக்கன்று வச்சோம்னு சொல்வாங்க. அது வளர்ந்து பார்த்ததில்லை.

ஆடு மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் எல்லா ஊர்களிலும் இருந்தது. அதைப் பாதுகாக்கணும். வருகின்ற காலத்தில் கிடை ஆடு மாடுகளுக்கு பாதிப்பு இருக்காது என்பதற்கு இந்த விழாவுக்கு இவ்வளவு பேர் வந்துள்ளதே சாட்சி.

பி.மூர்த்தி
பி.மூர்த்தி

ஜல்லிக்கட்டு இப்பத்தான் ரொம்ப பிரபலமாயிருக்கு. அப்பல்லாம் எல்லா கிராமத்துலயும் பொதுவான ஒரு காளை இருக்கும். இனப்பெருக்கத்துக்காக வச்சிருப்பாங்க. அதைக் கலந்துக்க சொல்லி ஜல்லிக்கட்டு நடத்துறவங்க வெத்தலை பாக்கு வச்சு அழைப்பாங்க. ஆனால், இப்ப படிச்ச பசங்களும் செலவு பண்ணி ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கிறாங்க. என்னோட தொகுதியில மட்டும் 2,000 ஜல்லிக்கட்டு மாடு இருக்கு.

ஊருல சாண எருவை எரிச்சு வர்ற சாம்பலில்தான் பல் விளக்கினோம். அதுலதான் விபூதி பூசினோம். இப்ப வர்ற விபூதி எதுல தயாரிக்கிறாங்கன்னு தெரியல.

என்னோட 10 ஏக்கர் தோட்டத்துல செம்மறி ஆட்டு கிடையத் தவிர வேற எதுவும் போடுறதில்லை. அங்க விளையுற இளநீ பெருசாவும் ரொம்ப ருசியாகவும் இருக்கும்.

6 வருடத்துக்கு முன்னாடி 15 நாட்டு பசுமாடுகள் வாங்கி வளர்த்தேன். அது நல்லா வளர்ந்து 100 மாடுகளாயிடுச்சு. அப்புறம் பராமரிக்க முடியாமல் வளர்க்கிறவங்க கிட்டே கொடுத்துட்டேன்.

தமிழ்நாட்டு ஆடு, மாடு சாணங்கள் எவ்வளவு சிறப்பானது என்பது கேரளாக்காரனுக்கு தெரிஞ்சுதான் அனைத்தையும் வாங்கிட்டு போயிடுறான். நம்ம ஆளுங்க அதிக மகசூல் கிடைக்காதுன்னு பயன்படுத்த மாட்டேங்கிறாங்க.

நான் என்றைக்கும் இயற்கை விவசாயத்தோடு இணைந்து வாழ்ந்து வருபவன். மந்திரி பதவி இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும். ஆனால், நான் என்றைக்கும் விவசாயிதான். தினமும் காலையில எந்திருச்சு வயக்காட்டை ஒரு சுத்து சுத்தி வந்தாதான் மனசுக்கு நிம்மதியா இருக்கும்.

இன்னைக்கு அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் விவசாயத்தில் முழுதா கவனம் செலுத்த முடியலை. நான் என்றைக்கும் கிடை மாடு வைத்திருப்பவன், விவசாயிதான். நாட்டு மாட்டினங்கள் அழியாது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது" என்றார்.