Published:Updated:

``ஒரு வருஷத்துல 6 லட்சம் லாபம்... என் புதினா ஃபாரீனுக்கும் போகும்!" - அசத்தும் புதினா சாகுபடி

ஒரு வருஷத்துக்கு 6 முறை அறுவடை செய்வேன். ஒவ்வொரு அறுவடைக்கும் 1,50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவா 50,000 ரூபாய் போனாலும், 1,00,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

புதினா
புதினா

விவசாயிகள் எல்லாப் பயிரையும் ஒரே நேரத்தில் பயிர் செய்யும்போது, எந்தப் பயிர் தனக்கு நிலையான வருமானம் கொடுக்கிறதோ, அந்தப் பயிரை அதிகமாகப் பயிர் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராமத்தில் வசிக்கும் இயற்கை விவசாயி சிங்காரம் புதினா பயிர் செய்து அதிக வருமானம் ஈட்டி வருகிறார். காலை வேளையில் தோட்டத்தில் புதினா அறுவடையில் ஈடுபட்டிருந்த சிங்காரத்தைச் சந்தித்துப் பேசினோம்.

"எனக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. பாரம்பர்ய விவசாயக் குடும்பம்தான். எங்களுக்கு வேற தொழில் என எதுவும் கிடையாது. முன்னால தக்காளி, பீன்ஸ்னு பல காய்கறிகளைப் பயிர் செஞ்சேன். ஆனா, அதுல நல்ல வருமானம் கிடைக்கல. அப்புறமா என் நண்பர் கொடுத்த யோசனையால புதினா சாகுபடி செஞ்சேன். புதினா வேர்களையெல்லாம் அவரே வந்து கொடுத்தாரு. முதன்முதலா 5 சென்ட் நடவு செஞ்சேன். நல்ல வருமானம் கிடைச்சது. மற்ற காய்கறிகளைவிட அதிகமான லாபத்தைக் கொடுத்தது புதினா. அப்புறம் படிப்படியா அதிகப்படுத்தி ஒரு ஏக்கருக்கு நட்டேன். மலைப் பிரதேசம் என்பதால் புதினா கொஞ்சம் செழிப்பாக இருந்தது. மாட்டு கோமியம், வேப்பம் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, மோர்க் கரைசல்னு எல்லாத்தையும் பயிருக்குக் கொடுப்பேன். இதனால பூச்சிகள் புதினாவைத் தாக்காது. இதுபோக விளக்குப் பொறியும் வைப்பேன். இது மூலமாவும் பூச்சிகள் கட்டுப்படுது. முதல்ல புதினாவை மார்கெட்ல கொண்டு போயி விற்பனை செஞ்சேன். சரியான விலை கிடைக்கல. ஆனால், வெளியூர்கள்ல இருந்து இயற்கைப் புதினாவுக்கு ஆர்டர் கிடைச்சது. இப்போ மூணு நாளைக்கு ஒரு முறை என் புதினா சவுதி அரேபியா, மஸ்கட், அபுதாபி பகுதிகளுக்கு எக்ஸ்போர்ட் ஆகுது. நான் நேரடியா விற்பனை செய்யலை. என்னிடம் ஒரு வியாபாரி வாங்கிட்டுப் போய் எக்ஸ்போர்ட் பண்றார். என்னிடம் வாங்கிய புதினாக்களை தரம் பிரிச்சு, அதை ஐஸ் பேக்கிங் செய்து அனுப்புகிறார். என்னிடம் லோக்கல் வியாபாரிகளும் வாங்குகிறார்கள். எல்லோருக்கும் ஒரே விலைதான். ரசாயனங்கள் இல்லாததால் மக்களும் விரும்பி வாங்குறாங்க.

இப்பவும் தக்காளி, பீன்ஸ், காளிபிளவர்னு காய்கறிகள் பயிர் செய்றேன். ஆனா, அதுல கிடைக்குற வருமானத்தை விட புதினாவுல அதிகமான வருமானம் கிடைக்குது. மத்த காய்கறிகள்ல 25 சதவிகிதம்தான் லாபம் கிடைக்கும். புதினாவுல 70 சதவிகிதம் லாபம் கிடைக்குது. இதைச் சுழற்சி முறையில செய்துகிட்டு வர்றேன். புதினா கொஞ்சம் தண்ணீர் அதிகமா தேவைப்படுற பயிர்தான். தினமும் தண்ணீர் பாய்ச்சணும். அதனால வாய்க்கால் பாசனம், சொட்டுநீர்ப் பாசனம்னு ரெண்டு முறையிலயும் பாசனம் செய்யுறேன். வறட்சிக் காலத்துல எப்பவும் சொட்டுநீர்ப் பாசனம்தான் கைகொடுக்குது. மாலை வேளையில்தான் அறுவடை செய்யுறேன். கடந்த ஆறு வருஷமா புதினாவை சாகுபடி செய்துகிட்டு வர்றேன்." என்றவர், புதினா சாகுபடி செய்யும் முறைகளை பகிர்ந்துகொண்டார்.

புதினா
புதினா

“செம்மண் நிலங்கள்ல நல்லா வளரும். தண்ணீர் தேங்கி இருக்குற நிலத்தைத் தவிர்க்கணும். இதுக்குனு தனியா பட்டம் ஏதுவும் இல்லை. எல்லாப் பட்டங்களிலும் நடவு செய்யலாம். ஒரு முறை நடவு செஞ்சா, அதிகபட்சம் ரெண்டு வருஷம் வரைக்கும் பலன் கொடுக்கும். முழுக்க, வெயிலோ அல்லது முழுக்க நிழலோ உள்ள இடத்திலோ சரியா வளராது. நிழலும், வெயிலும் கலந்த இடங்கள்ல மட்டுமே புதினாவை நடவு செய்யணும். 25 சென்ட் நிலத்துல, ரெண்டு டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி, நிலத்தை நல்லா புழுதியா உழவு செய்யணும். எல்லாப் பாத்திகள்லேயும், தண்ணீர் நிற்குற மாதிரி மேடு பள்ளம் இல்லாம சமமா பாத்தி பிடிக்கணும். இடவசதி, தண்ணீர் வசதிக்கு ஏற்ற மாதிரித்தான் பாத்தியோட அளவைத் தீர்மானிக்கணும். பொதுவா பத்துக்கு பத்தடி அளவுகள்லதான் பாத்திகளையும் எடுக்கணும்.

பாத்திகளில் தண்ணீரை விட்டு நிலத்தை ஈரமாக்கி, புதினா தண்டுகளை நடவு செய்யணும். நடவுத் தண்டுகளை விவசாயிகள்கிட்ட இருந்தே வாங்கலாம். ஒரு தண்டுக்கும் அடுத்த தண்டுக்கும், இடையில நாலு விரல் இடைவெளி இருக்குற மாதிரி நடவு செய்யணும். நடவுக்குப் பின்னால ஈரம் காய விடாம தண்ணீர் கொடுக்கணும். அதனால செடி, உடனே உயிர் பிடிச்சு தழைக்க ஆரம்பிக்கும். 15 முதல் 20-ம் நாள்களுக்குள்ள களை எடுக்கணும். 10 கிலோ கடலைப் பிண்ணாக்கைத் தூளாக்கி, பாத்தி முழுவதும் தூவி விடலாம். 30 மற்றும் 40-ம் நாள்கள்ல 20 கிலோ கடலைப் பிண்ணாக்கை பாசன நீரில் கரைச்சு விடலாம். இதனாலயே பூச்சித்தாக்குதல் ஓரளவு குறையும். இருந்தும் பூச்சித் தாக்குதல் இருந்தா, மூலிகைப் பூச்சி விரட்டியைப் பயன்படுத்தலாம்.

50 முதல் 60 நாளுக்குள்ள புதினாவை அறுவடை செய்யலாம். தரையில இருந்து, ரெண்டு விரல் கிடை அளவு விட்டு, கீரையை அறுக்கலாம். அறுத்த பிறகு, காம்புகளை ஒரே மட்டமா அறுத்துட்டு, களை எடுத்து நீர் பாய்ச்சி, மறுபடியும் கடலைப் புண்ணாக்கை உரமாகக் கொடுக்கணும். இப்படிச் செஞ்சா மறுபடியும் புதினா தழைக்க ஆரம்பிக்கும்.” என்றவர், நிறைவாக வருமானம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

விவசாயி சிங்காரம்
விவசாயி சிங்காரம்

“புதினா ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை அறுக்கலாம். இந்தக் கணக்குப்படி, ஒரு வருஷத்துக்கு 6 முறை அறுவடை செய்வேன். ஒவ்வொரு அறுவடைக்கும் 1,50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவா 50,000 ரூபாய் போனாலும், 1,00,000 ரூபாய் லாபம் கிடைக்கும். 6 முறை அறுவடைக்கு 6,00,000 லாபம் கிடைக்கும்.” என்றபடி விடைகொடுத்தார் சிங்காரம்.