Published:Updated:

`ரசாயனம் இல்லாத வாழைப்பழம்' - நேரடி விற்பனையில் லாபம் ஈட்டும் விவசாயி!

வாழைத்தார்களுடன் பிரதாபன்
வாழைத்தார்களுடன் பிரதாபன்

ஆரம்பத்துல இதோட அருமை பழக்கடைக்காரங்களுக்குத் தெரியலை. `ரசாயனம் இல்லாத வாழைப்பழம்'னு சொல்லி, 'இதைத் தனியா விற்பனை செஞ்சு பாருங்க'னு வற்புறுத்தித்தான் சம்மதிக்கவெச்சேன்.

ரசாயன விவசாயத்தில் விளைவிக்கப்படும் மற்ற விளைபொருள்களைவிட, வாழை போன்ற பழ வகைகளில் நேரடி பாதிப்புகள் அதிகம். இவற்றைச் சமைக்காமல் சாப்பிடுவதால், நச்சுத் தன்மையின் வீரியம் கூடுதலாக இருக்கும். இவை பயிராக இருக்கும்போது ரசாயனம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அறுவடைக்குப் பிறகு, பளபளப்புக்காகவும், விரைவாகப் பழுக்க வைப்பதற்காகவும் விதவிதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், நஞ்சில்லாப் பழங்களை உற்பத்தி செய்து, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டுவருகிறார்கள் சிலர். இதற்குப் பிரதிபலனாக, களைக்கட்டுப்பாடு, பூச்சிநோய் எதிர்ப்புத்திறன், குறைவான சாகுபடி செலவு உள்ளிட்ட பலவிதப் பயன்கள் இவர்களுக்குக் கைக்கொடுக்கின்றன. இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் தஞ்சாவூர் மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த விவசாயி பிரதாபன்.

தற்போது, இயற்கை வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கரின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, இயற்கை முறையில் வாழைச் சாகுபடி செய்துவருகிறார். முக்கால் ஏக்கர் நிலத்தில் இவர் பயிர் செய்திருந்த பச்சைநாடன், தற்போது அறுவடை முடியும் தறுவாயில் உள்ளது. இது தவிர ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தில் பூவன், தலா அரை ஏக்கர் நிலத்தில் ரஸ்தாலி, செவ்வாழை எனச் சாகுபடி செய்திருக்கிறார். தற்போது பூவன் அறுவடைக்கு வரத் தொடங்கியிருக்கிறது. மற்ற இரண்டு ரகங்களும் இளம் பயிர்களாக இருக்கின்றன.

- பிரதாபன் மேற்கொள்ளும் சாகுபடி முறைகளை முழுமையாக அறிய, இதோ பசுமை விகடன் சிறப்புக் கட்டுரை >75 சென்ட், ரூ. 1,95,000 வருமானம்... இயற்கையில் செழிக்கும் வாழை..!

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

இவரைச் சந்திக்க, அவரது வாழைத் தோட்டத்துக்குச் சென்றோம். மண்ணுக்கடியில் பாரம்பர்ய முறையில் கொடாப்பு போடப்பட்டிருந்த வாழைத்தார்களை வெளியில் எடுத்துக்கொண்டிருந்த பிரதாபன், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். "இந்த முறையில பழுக்க வைக்கும் வாழைப்பழங்கள் சுவையா இருக்கும். இதுதான் உடம்புக்கு நல்லது. மூணு அடி நீளம், ரெண்டு அடி அகலம், ரெண்டு அடி ஆழத்துக்குக் குழி எடுத்து, அதுக்குள்ளார வாழைச் சருகுகளைப் போட்டு, வாழைத்தார்களைப் படுக்கைநிலையில் வரிசையா அடுக்கிவெச்சு, அதுமேல மறுபடியும் சருகுகளைப் போட்டு மூடி, காற்றுப் புகாத அளவுக்கு மண்ணைக் கொண்டு மூடிடுவோம். இதோட பக்கவாட்டுப் பகுதியில ஒரு சின்னப் பானையைப் புதைச்சு, அதுல தேங்காய் நாரையும் சாம்பிராணியையும் பயன்படுத்திப் புகையை உருவாக்கி, மூட்டம் போடுவோம். இது மாதிரி காலையிலயும் சாயங்காலமும் ரெண்டு வேளை மூட்டம் போடுவோம். 24 மணிநேரத்துல வாழைத்தார்கள் பழுக்க ஆரம்பிச்சிடும். அதுக்குப் பிறகு கொடாப்பை அப்புறப்படுத்திட்டு, தார்களை வெளியில் எடுத்துடலாம். அடுத்த ரெண்டு மூணு நாள்ல பழம் நல்லா பழுத்திடும்.

செழித்து வளர்ந்திருக்கும் வாழைமரங்கள்
செழித்து வளர்ந்திருக்கும் வாழைமரங்கள்

நான் விளைவிக்கும் வாழைத்தார்கள் எல்லாத்தையுமே இது மாதிரிதான் பழுக்கவெக்கிறேன். இது நம் முன்னோர்கள் கடைப்பிடிச்ச பாரம்பர்ய முறை. ஆனா, இப்போ கடைகள்ல கிடைக்கும் பெரும்பாலான வாழைப்பழங்கள், ரசாயனத்துல பழுக்கவெச்சதாத்தான் இருக்கு. அதெல்லாம் உடம்புக்கு ரொம்பக் கெடுதல்" என்று பேசிக்கொண்டே வாழைத் தோட்டம் முழுவதையும் நமக்குச் சுற்றிக் காண்பித்தார் பிரதாபன்.

"முக்கால் ஏக்கர்ல 700 பச்சைநாடன் மரங்களைச் சாகுபடி பண்ணியிருந்தோம். இதுல 650 தார்கள் விற்பனைக்குத் தேறி வந்துச்சு. இதுவரைக்கும் 600 தார்கள் அறுவடை செஞ்சிருக்கோம். என்னோட வாழைத்தார்களை மொத்த வியாபாரிகிட்ட விற்பனை செய்யக் கூடாதுங்கறதுல உறுதியா இருந்தேன். கொடாப்புல பழுக்கவெச்சு, சீப்புகளா வெட்டியெடுத்து, அட்டைப் பெட்டியிலவெச்சு, நேரடியாகப் பழக்கடைகளுக்கு விற்பனை செய்ய முடிவு பண்ணினேன். ஆரம்பத்துல இதோட அருமை பழக்கடைக்காரங்களுக்குத் தெரியலை. 'ரசாயனம் இல்லாத வாழைப்பழம்'னு சொல்லி, 'இதைத் தனியா விற்பனை செஞ்சு பாருங்க'னு வற்புறுத்தித்தான் சம்மதிக்கவெச்சேன். மக்கள்கிட்ட இதுக்கு நல்ல வரவேற்பு இருந்ததுனால, தஞ்சாவூர்ல இருக்குற ஒரு சில பழக்கடைக்காரங்க என்னோட வாழைப்பழங்களைத் தொடர்ச்சியா வாங்க ஆரம்பிச்சாங்க. இந்த முக்கால் ஏக்கர்ல பச்சைநாடன் சாகுபடி செஞ்சதுல, 1,95,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லா செலவும் போக, 1,12,300 ரூபாய் நிகர லாபமாகக் கையில மிஞ்சும்" என்றார்.

- பிரதாபன் மேற்கொள்ளும் சாகுபடி முறைகளை முழுமையாக அறிய, இதோ பசுமை விகடன் சிறப்புக் கட்டுரை >75 சென்ட், ரூ. 1,95,000 வருமானம்... இயற்கையில் செழிக்கும் வாழை..! 

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

வீடியோ வடிவில்...

அடுத்த கட்டுரைக்கு