Published:Updated:

கொய்யா... ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.1,60,000 - நல்ல மகசூல் கொடுக்கும் வளைத்துக் கட்டும் நுட்பம்!

கொய்யாத் தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
கொய்யாத் தோட்டம்

தொழில்நுட்பம்

கொய்யா... ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.1,60,000 - நல்ல மகசூல் கொடுக்கும் வளைத்துக் கட்டும் நுட்பம்!

தொழில்நுட்பம்

Published:Updated:
கொய்யாத் தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
கொய்யாத் தோட்டம்

ன்றைய இளைஞர்கள் பலரும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார் கள். அந்த வரிசையில் கடலூர் மாவட்டம், பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், இயற்கை விவசாயம் செய்து வருவதுடன், அது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது சேமக்கோட்டை கிராமம். அங்குதான் இருக்கிறது ஆறுமுகத்தின் தோட்டம். விவசாயப் பணியிலிருந்த ஆறுமுகத்தைச் சந்தித்தோம்.

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக, கரும்புச் சோகையால் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் அமர்ந்து பேசினோம். “நான் டிப்ளோமா இ.சி.இ படிச்சேன். பிறகு, தொலைதூர கல்வி மூலம் எம்.ஏ - சமூகவியல் முடிச்சேன். போட்டித்தேர்வு எழுதி, அரசு வேலைக்குப் போகணும்ங்கிறதுதான் என்னுடைய ஆசை. அதுக்காகத்தான் முதுநிலை படிப்புவரைக்கும் படிச்சேன்.

ஆறுமுகம்
ஆறுமுகம்

எங்களுக்கு 4 ஏக்கர் நிலம் இருக்குது. அப்பா விவசாயம் பார்த்துட்டு இருந்தார். நான் சில தனியார் நிறுவனங்கள்ல வேலைக்குப் போனேன். 10,000 ரூபாய் வரைக்கும் சம்பளம் கொடுத்து அதிகமான வேலை வாங்குனாங்க. அது எனக்குப் பிடிக்கல. வருத்தமா இருந்துச்சு. ஒரு கட்டத்துல வேலையை விட்டுட்டேன். பேசாம விவசாயம் பண்ணலாம்னு தோணுச்சு. ஒரு நாள் அப்பாகிட்ட மனசுவிட்டுப் பேசினேன். ‘உனக்கு எப்படித் தோணுதோ அப்படியே செய்பா’னு சொல்லிட்டாரு.

அப்பா, ரசாயன விவசாயம்தான் செய்தார். நான் சின்ன வயசுல இருந்தே அப்பாகூட வயலுக்குப் போவேன். சின்னச் சின்ன வேலைகளைச் செய்வேன். ஆனால், விவசாயம் பற்றி முழுமையாகத் தெரியாது. அப்பா விவசாயம் பண்ணும்போது லாபம் குறைவா தான் வரும். சில சமயம் நஷ்டமும் ஆகிடும். செலவும் அதிகமாக இருந்தது. அதனால இயற்கை முறையிலான விவசாயத்துல எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இருந்தாலும் எப்படித் ஆரம்பிக்குறதுன்னு தெரியல. யூடியூப்ல இயற்கை விவசாயம் பத்தித் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பிச்சேன். அப்போதுதான் திண்டுக்கல் பிரிட்டோராஜ் அறிமுகம் கிடைச்சது. அவர் மூலமா பல்வேறு தகவல்களைத் தெரிஞ்சுகிட்டேன். இயற்கை விவசாயத்தைக் கத்துகிட்டேன்னுதான் சொல்லணும்.

கொய்யாத் தோட்டம்
கொய்யாத் தோட்டம்

முதன்முறையா 2017-ம் வருஷம், கொய்யா, மணிலா முருங்கை, உளுந்து, பருத்தி பயிர்களை இயற்கை முறையில பயிர் பண்ணினேன். முதல் முயற்சியிலேயே நல்ல பலன் கிடைச்சது. இயற்கை முறையிலான இடுபொருளை நானே தயார் செய்றேன். ஜீவாமிர்தம், மீன் அமிலம், தேமோர் கரைசல், தயிர் கரைசல், அக்னி அஸ்திரம், இ.எம். கரைசல், 18 இலை பூச்சிவிரட்டி, அமுதக்கரைசல், மேம்படுத்தப்பட்ட தொழுவுரம், இலைகள் நுண்ணூட்டச்சத்துனு எல்லாத்தையும் நானே தயார் பண்ணி, பயன்படுத்துறேன். இப்ப நான் வாழை, கொய்யாவுல ஒருமுறையைப் பயன்படுத்துறேன். அதுமூலமா நல்ல பலன் கிடைக்குது’’ என்றவர் அதைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

‘‘என்னோட தோட்டத்துல வாழை தனியா சாகுபடி பண்ணல. அங்கொண்ணும் இங்கொண்ணுமாதான் இருக்கு. அந்த வாழைகளோட தார்கள்ல பஞ்சகவ்யா கட்டிட்டு வர்றேன். அது மூலமா நல்ல பலன்கள் கிடைக்குது. வாழை மரத்துல காய்கள் உருவான பிறகு, பூக்கள் உதிர ஆரம்பிக்கும். அந்தச் சமயத்துல வாழைத்தார் முனையிலிருந்து அரையடி இடைவெளியில பூவை அறுத்து எடுத்துட்டு, அதுல பஞ்சகவ்யாவை கட்டி விடுவேன். 50 மி.லி பஞ்சகவ்யாவை 20 மி.லி தண்ணியில கலந்து, ஒரு பாலித்தீன் கவர்ல ஊத்தி, வாழைத்தாரோட கடைசித் தண்டுல கட்டிவிடணும்.

வாழையில் பஞ்சகவ்யா கரைசல்
வாழையில் பஞ்சகவ்யா கரைசல்

பஞ்சகவ்யா கொடுத்த நம்பிக்கை

இப்படிக் கட்டுறதுனால வாழைப் பழம் பளபளப்பாகவும் திடமாகவும், திரட்சியாகவும் இருக்கும். தார் முழுக்க வாழை ஒரே அளவுல இருக்கும். நடவிலிருந்தே பாசன நீர்ல பஞ்சகவ்யா வைக் கலந்து வேர் வழியா பாய்ச்சலாம். இதனால், சீப்புகள் அதிகமா உருவாகும். தார் நீளமாக இருக்கும். குலை நோய் வராது. மீறி வந்தால் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்’’ என்றவர், ‘‘இதைச் சோதனை முயற்சியா செஞ்சிப் பார்த்தேன். நல்ல பலன் கிடைச்சிருக்கு. இப்ப நம்பிக்கை வந்திருச்சு. அடுத்து வாழையை அதிக பரப்புல சாகுபடி செய்யப்போறேன்’’ என்றவர், கொய்யாச் சாகுபடி பற்றிய தகவலுக்குள் புகுந்தார்.

‘‘2017-ம் வருஷம், 3 ஏக்கர்ல ‘லக்னோ 49’ ரகக் கொய்யாவை 20×20 அடி இடைவெளியில நடவு பண்ணினேன். ஒரு ஏக்கருக்கு 110 கன்றுகள்வரை நடவு செய்யலாம். அடர் நடவு முறையில ஒரு ஏக்கர்ல 400 கொய்யா வரைக்கும் நடவு பண்றாங்க. ஆனா, அதைப் பராமரிக்குறது கொஞ்சம் கஷ்டமான வேலை. எப்பவும் வயல்ல ஆள் இருந்துகிட்டே இருக்கணும். ஆனா, அதிக இடைவெளியில சாகுபடி செய்யும்போது, பராமரிக்குறது ரொம்பச் சுலபமா இருக்கும். நான், கொய்யா கிளைகளை வளைச்சு, புதுசா உருவாகுற சிம்பு மூலமா மகசூல் எடுக்குற முறையைக் கடைப்பிடிக்கிறேன். அதுக்கு பேரு வளைத்துக் கட்டுதல் முறை’’ என்றவர் அந்த முறையை விளக்கினார்.

வளைத்துக் கட்டும் முறை
வளைத்துக் கட்டும் முறை

கிளைகளை வளைக்கும் மணல் பைகள்

நடவு செய்து, ஒன்றரை வருடமான கொய்யா மரங்களில்தான் இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும். இந்த வயதில் தரையிலிருந்து அதிகபட்சம் 2 அடி உயரத்தில் மரம் இருக்கும். நான்கைந்து கிளைகள் இருக்கும். அந்தக் கிளைகளை ஒடியாத அளவுக்கு வளைத்து, அதன் முனையில், ஒரு கிலோ மணல் நிரப்பிய பாலித்தீன் பையைக் கட்டி விட வேண்டும். கட்டிய சில நாள்களில் வானை நோக்கியபடி அதிக கணுக்கிளைகள் துளிர்விடத் தொடங்கும். அதில் நான்காவது இலை வரும்போது பூப்பூக்கத் தொடங்கும். இயல்பான மரத்தில் கொய்யா காய்ப்பதை விட இந்த முறையில் அதிக அளவில் கொய்யா காய்க்கும். ஓர் ஆண்டுக்குப் பிறகு வளைத்த கிளைகளை வெட்டி விட வேண்டும். அடுத்த ஆண்டுப் புதியதாக வந்த கிளைகளை வளைத்துக் கட்ட வேண்டும். இதனை 3 ஆண்டுகள் வரை செய்யலாம்’’ என்றவர் நிறைவாக,

மணல் பைகள்
மணல் பைகள்

8,000 கிலோ மகசூல்

‘‘கொய்யாவை உள்ளூர் வியாபாரிகளே வாங்கிக்கொள்கிறார்கள். கிலோ 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கொடுக்கின்றேன். சராசரியாகக் கிலோ 20 ரூபாய் போகும். ஒரு ஏக்கரிலிருந்து வருடத்திற்குச் சராசரியாக 8,000 கிலோ மகசூல் கிடைக்இடுபொருள்கள்குது. அதன் மூலம் 1,60,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. அதுல செலவுன்னு பார்த்தா அதிகபட்சம் 10,000 ரூபாய் ஆகும். எங்க தோட்டத்துக்கு எதுவும் வெளியில வாங்குறது இல்ல. உரம், பூச்சி விரட்டி எல்லாமே நாங்களே தயார் செஞ்சிக்குறோம். நாங்களே எல்லா வேலைகளும் செஞ்சிக்குறோம். தற்சார்பு முறையில விவசாயம் செய்யுறதால செலவு ரொம்பக் குறைவுதான். செலவுபோக ஏக்கருக்கு 1,50,000 ரூபாய் லாபமா நிக்குது. ஆக, மூணு ஏக்கர் கொய்யா மூலமா ரூ.4,50,000 கிடைக்குது. தினமும் என்னோட உழைப்புகான ஊதியமா 500 ரூபாய்னு வருடத்துக்கு ரூ.1,82,500 எடுத்துக்கிறேன். மீதியுள்ள ரூ.2,67,500 லாபமா கிடைக்குது’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு,
ஆறுமுகம்,
செல்போன்: 96559 50696.

கோழிகளுக்குப் பஞ்சகவ்யா
‘‘சிறுவிடை, பெருவிடை, கருங்கோழினு சுமார் 100 கோழிகளை வளர்க்குறேன். வாரம் ஒரு தடவை கோழிகளுக்குத் தீவனமாப் போடுற அரிசியில் கொஞ்சம் பஞ்சகவ்யா கலந்து கொடுப்பேன். அதனால கோழிகள் நோய்ப் பாதிப்பு இல்லாம ஆரோக்கியமா இருக்குது” என்றார்.

இடுபொருள்கள்
இடுபொருள்கள்

10 வகையான இடுபொருள்கள்

இயற்கை இடுபொருள்கள் பற்றிப் பேசிய ஆறுமுகம், ‘‘பஞ்சகவ்யா தயாரிக்கத் தேவையான சாணம், மாட்டுச் சிறுநீர் இதையெல்லாம் மாடு வளர்க்கறவங்ககிட்ட வாங்கிக்கிறேன். சில பொருள்களை என் தோட்டத்திலிருந்தே எடுத்துக்குவேன். அது இல்லாம ஒரு லிட்டர் பஞ்சகவ்யா தயார் செய்ய எனக்கு 20 ரூபாய் செலவாகுது. பஞ்சகவ்யா உள்ளிட்ட 10 வகையான இயற்கை இடுபொருள்களைத் தயார் பண்ணி பயன்படுத்திட்டு வர்றேன். நல்ல பலன் கிடைக்குது. என்கிட்ட கேக்குறவங்களுக்குக் கட்டணம் எதுவும் வாங்காம தயாரிப்பு முறைகளைச் சொல்லிகொடுக்குறேன்’’ என்றார்.

கருவாட்டுப்பொறி
கருவாட்டுப்பொறி

கருவாட்டுப்பொறி
பூக்கள் பூத்துக் காய் காய்க்கும் பயிர்களில் காய்ப்புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த கருவாட்டுப்பொறி பயன்படுத்தலாம். இதற்கு ஒரு லிட்டர் காலி வாட்டர் கேனை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் கழுத்து பகுதிக்குக் கீழே, பென்சில் அளவுக்கு நான்கைந்து துளைகள் இட்டுக்கொள்ள வேண்டும். உள்ளே 200 மி.லி தண்ணியை ஊற்றி, அதில் நான்கைந்து கருவாட்டுத் துண்டுகளைப் போட்டுப் பாட்டிலை மூட வேண்டும். அதை ஒரு கயிற்றில் கட்டி மரத்தில் தொங்கவிட்டால் போதும். கருவாட்டு வாசனைக்கு வரும் பழ ஈக்கள், உள்ளே மாட்டிக்கொள்ளும். இந்த முறை மூலம், காய்ப் புழுக்களிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism