Published:Updated:

இயற்கை வேளாண்மை : 10 - பயிர்களின் காவலன் பஞ்சகவ்யா...

இயற்கை வேளாண்மை
பிரீமியம் ஸ்டோரி
News
இயற்கை வேளாண்மை

ஆய்வுப் பார்வையும் அறிவியல் உண்மையும்!

நிலம், மாடு இரண்டும் இல்லையென்றால் வேளாண்மை இல்லை. ஆக விவசாயத்தின் முதுகெலும்பு மாடு எனச் சங்ககால நூல்கள் குறிப்பிடுகின்றன.

மாட்டின் சாணம் மண்ணிற்குக் கீழே வேர்களுக்கு உரமாகவும், மாட்டின் சிறுநீர் மண்ணிற்குமேலே பயிர்களுக்கு வளர்ச்சியூக்கியாகவும் அறிவியலின் பயனை அறிந்தோ அறியாமலோ பண்டைத்தமிழ் வேளாண் குடிகள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பிறகு மாட்டிலிருந்து பெறக்கூடிய பால், தயிர், நெய், சாணம், மாட்டுச்சிறுநீர் ஆகிய ஐந்து முக்கியப் பொருள்களினாலான நொதிக்கலவைகளை ஆயுர்வேத முறைகளில் நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தினார்கள். முதலில் மனிதனுக்கும் அதைத்தொடர்ந்து பயிர் வளர்ச்சிக்கும், மகசூல் பெருக்கத்துக்கும் பயன்படுத்தினார்கள்.

இந்த ‘ஐந்துபொருள் நொதிக்கவை’ (பஞ்சகவ்யா) முழுமையாக விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வேப்பெண்ணெய் பயன்பாட்டுக்கு முன்பே, விவசாயத்தில் இலைவழி தெளிப்பாகப் பஞ்சகவ்யா பயன்பாடு இருந்திருக்கிறது. இதைப் பல்வேறு நூல்கள் உறுதிப்படுத்துகின்றன. தற்போது நாம் திரவ வடிவில்தான் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்துகிறோம். ஆனால், பழங்காலத்தில் மாட்டின் ஐந்து பொருள்களையும் நீரேற்றமடையச்செய்து திரவ மற்றும் திட வடிவ உரமாகப் பதப்படுத்திப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மனிதர்களுக்கும், பயிர்களுக்கும் என அனைத்துக்குமாகப் பயன்படும் சர்வரோக நிவாரணியாக இருப்பதால் ‘பஞ்சகவ்யா’ எனக் காலப்போக்கில் ஒரு பெயர் வைத்தார்கள்.

செந்தூர்குமரன்
செந்தூர்குமரன்

பஞ்சகவ்யா என்பது சமஸ்கிருத வார்த்தை. பஞ்ச(பாஞ்ச்)என்றால் ஐந்து. கவ் என்றால் மாடு. மாட்டிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்களில் தயாரிக்கப்படும் பொருள் என்பதால் ‘பஞ்சகவ்யா’ என்று அழைக்கப்படுகிறது.

முற்காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் மனிதர்களுக்கான சிகிச்சையில் பஞ்சகவ்யா பயன்படுத்தப்பட்டது. மனிதர்களுக்கு ஏற்படும் கொடிய நோய்களைக் குணப்படுத்தவும், பயிர்களுக்கும் இதைப் பயன்படுத்தியதாக ஆயுர்வேத குறிப்புகள் இருக்கின்றன. பிறகு இதைக் கையாண்ட விவசாயிகள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் இதில் சோதனையைத் தொடர்ந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு பொருளைச் சேர்க்கத் தொடங்கினார்கள். இப்படிப் பல கட்டங்களைத் தாண்டி இன்றைக்கும் மிகச்சிறப்பாகப் பயன்பாட்டில் இருக்கிறது பஞ்சகவ்யா.

பஞ்சகவ்யாவில் பயன்படுத்தும் ஐந்து பொருள்களில் பல்வேறு சத்துகள் உள்ளன. சாணம், சிறுநீரில் உள்ள சத்துகள்பற்றி ஏற்கெனவே பார்த்தோம். இந்த இடத்தில் மீண்டும் அதனை நினைவுபடுத்துகிறேன்.

சாணத்தில் உள்ள மெதனோஜெனிக் பாக்டீரியா, அற்புதமான பணியைச் செய்து மண்ணின் உயிர்த் தன்மையைப் பாதுகாக்கிறது. மேலும், சூடோமோனஸ் பிலேகாக்ளாஸிசிடா மற்றும் சூடோமோனஸ் ஏரொஜினோசா வகை பாக்டீரியாக்களை மண்ணில் பெருக்குகிறது. இந்த வகை பாக்டீரியா மூலம், குளோர்பைரிபாஸ், சைபெர்மெத்ரின் மற்றும் பென்வோலரானேட் போன்ற ரசாயனப் பூச்சிக்கொல்லிகளால் மண்ணில் ஏற்படும் தீமைகளைத் தடுக்கும் வேலையையும் செய்கிறது சாணம். பயிர்கள் செழிப்பாக வளரத் தேவையான திசு மூலக்கூறுகளான செல்லுலோஸ் மற்றும் செமி செல்லுலோஸ் ஆகியவை சாணத்தில் போதுமான அளவில் இருக்கின்றன. இவை தவிர பேசில்லஸ், கோரேனோபாக்டீரியம், லாக்டோபாசில்லஸ், ஈஸ்ட், சாக்கரோமைசீஸ், சிட்ரோபாக்டீரியா, என்டெரோபாக்டர், கிளப்சில்லா, க்ளூவீரா, பஸ்டேரோல்லா, ப்ரொவிடென்சியா மற்றும் சூடோமோனஸ் போன்ற நுண்ணுயிரிகளும் சாணத்தில் மிக அதிகமாக இருக்கின்றன.

மாட்டுச் சிறுநீரில் தண்ணீர்சத்து 95 சதவிகிதம், யூரியா 2.5 சதவிகிதம் இருக்கிறது. தாது உப்பு, ‘ஹார்மோன்கள்’ எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள், ‘என்சைம்கள்’ எனப்படும் நொதிகள் அனைத்தும் 2.5 சதவிகிதம் இருக்கின்றன. ஒரு லிட்டர் சிறுநீரில் 1-1.7 மி.லி அமோனியம் நைட்ரேட் இருக்கிறது. மேலும் இதில் உலர்ந்த பொருள்கள் ஐந்து முதல் ஏழு சதவிகிதம், அங்ககப் பொருள்கள் 2.3 சதவிகிதம், மொத்த நைட்ரஜன் 0.6-1.2 சதவிகிதம், மொத்த பாஸ்பரஸ் 0.02 சதவிகிதம், மொத்த பொட்டாசியம் 1.3 முதல் 1.4 சதவிகிதம் இருக்கின்றன.

இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை

பாலில் புரதச்சத்து, கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், அமினோ அமிலங்கள், ஹைட்ரஜன், கால்சியம், லாக்டோபேசிலஸ் ஆகிய சத்துகள் இருக்கின்றன. இதில் தண்ணீரின் அளவு 87.7 சதவிகிதம், லாக்டோஸ் 4.90 சதவிகிதம், கொழுப்புச்சத்து 3.4 சதவிகிதம், புரதச்சத்து 3.3 சதவிகிதம், அனைத்து தாது உப்புகள் 0.7 சதவிகிதம் இருக்கிறது.

தயிரில் கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி 2, பி 12, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், புரதம், குடல்வால் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் என அனைத்தும் இருக்கின்றன. நெய்யில் வைட்டமின் ஏ, பி2, கால்சியம், கிளைகோஸைட்ஸ் போன்றவை இருக்கின்றன. இந்தச் சத்துகள் எல்லாம் சிந்தாமல் சிதறாமல் பயிர்களுக்குக் கொடுப்பதற்காகச் சில பொருள்களைச் சேர்த்தார்கள். குறிப்பாக, இதில் உள்ள நுண்ணுயிரிகள் பன்மடங்கு பெருக்குவதற்காகச் சில ஊடகங்களைப் பயன்படுத்தினார்கள். அப்படிப் பயன்படுத்திய ஊடக உபபொருள்கள்தான் இளநீர், கரும்பு, வாழைப்பழம் போன்றவை.

மனிதர்களுக்குக் கொடுப்பதாக இருந்தால் ஐந்து பொருள்கள் போதும். மனித உடலிலே பல்வேறு துணைநிலை நன்செய் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. ஆனால் பயிர்களுக்கு அப்படியல்ல. நாம் கொடுப்பதை அப்படியே எடுத்துக்கொள்ளும். அதனால் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொடுத்தால் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அதற்காக 5 பொருள்களுடன், மேலே சொன்ன 3 பொருள்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலரும் தங்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு கலவைகளில் பஞ்சகவ்யாவைத் தயாரித்துப் பயன்படுத்துகிறோம். தவறொன்றும் இல்லை என்றாலும் மாட்டின் முக்கிய ஐந்து பொருள்களைத்தாண்டி மேலே சொன்ன பொருள்களைக் குறிப்பிட்ட அளவில் சேர்த்துக்கொண்டால், அதன் முழுமையான பலனை அடைய முடியும். இந்த அறிவியலில் சிதறல் ஏற்பட்டால் முழுமையான பலன் கிடைக்காது. எனவே பஞ்சகவ்யா தயாரிப்பு மற்றும் பயன்பாட்டில் அறிவியல் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய இயற்கை வேளாண் மையம் ஆகியவை பஞ்சகவ்யா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமெனப் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, நிலையான, அங்கீகரிக்கப்பட்ட ஒரு வரையறையை உருவாக்கி இருக்கிறார்கள்.

பஞ்சகவ்யாவில் உள்ள 5 பொருள்களில் எண்ணற்ற நுண்ணுயிர்கள், சத்துகள் இருக்கின்றன. அவற்றைச் சிந்தாமல் சிதறாமல் பயிர்களுக்குக் கிடைக்க இந்த வரையறை பயன்படும். அதன்படி, தயாரித்துப் பயன்படுத்தும்போதுதான் பஞ்சகவ்யாவின் பலன் 100 சதவிகிதம் முழுமையாகக் கிடைக்கும். அறிவியல்பூர்வமாக முழுமையான பலன் கிடைக்கும் வகையில் பஞ்சகவ்யா தயாரிக்கும் முறையைப் பார்ப்போம்.

நிலை 1 சாண-நெய் கலவை: பசுஞ்சாணம் 7 கிலோ, நெய் ஒரு கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாகக் கையால் பிசைந்துகொள்ள வேண்டும். பிசைவதற்கு முன்பாகக் கையை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் வைத்துவிட வேண்டும். கைகளைச்சுத்தம் செய்துகொண்டு, மூன்று நாள்களுக்குக் காலையும் மாலையும் நன்கு பிசைந்து விட வேண்டும்.

இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை

நிலை 2 -மாட்டுச்சிறுநீர் கரைசல்: சாண-நெய் கலவை தயாரித்த மூன்றாம் நாள் மாலையில், மாட்டுச்சிறுநீர் கரைசல் தயார் செய்ய வேண்டும். மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர் எடுத்து, அதனை 10 லிட்டர் உப்பில்லாத நல்ல தண்ணீரில் நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கரைசலை பத்து நிமிட இடைவெளியில் ஐந்து முறை சுத்தமான குச்சி கொண்டு கலக்க வேண்டும். நன்கு தெளிந்த மாட்டுச்சிறுநீர் கரைசல் தயார். தற்போது ஒரு பாத்திரத்தில் மாட்டுச்சிறுநீர் கரைசலும், மற்றொரு பாத்திரத்தில் சாண-நெய் கலவையும் தயாராக இருக்கும். இப்போது மாட்டுச்சிறுநீர் கரைசலை எடுத்து, சாண-நெய் கலவையில் ஊற்ற வேண்டும். சாண-நெய் கலவையை, சிறுநீர் கரைசலில் சேர்க்கக் கூடாது. பலர் இந்தத் தவற்றைச் செய்கிறார்கள்.

சற்று திடநிலையில் உள்ள சாண-நெய் கலவையில்தான், திரவ நிலையில் உள்ள மாட்டுச்சிறுநீர் கரைசலைக் கலக்க வேண்டும். அதையும் அப்படியே எடுத்து மொத்தமாகக் கொட்டக் கூடாது. மாட்டுச்சிறுநீர் கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாக, சாண-நெய்க்கலவையில் ஊற்றிக் கலக்க வேண்டும். முழுமையாகக் கரைந்த பிறகு, சுத்தமான பிரத்தியேகமான பிளாஸ்டிக் டிரம்மில் ஊற்றி, மூடிப் போட்டு 15 நாள்கள் வைத்து விட வேண்டும். தினமும் காலை மாலை மூடியைத் திறந்து, இடப்புறம் 7 சுற்று, வலப்புறம் 7 சுற்று எனக் குச்சியில் கலக்கிவிட்டுத் திரும்பவும் மூடிவிட வேண்டும்.

சுத்தப்படுத்திய பாதுகாப்பாக வைக்கப்பட்ட ஒரே குச்சியைத்தான் கடைசி வரை பயன்படுத்த வேண்டும். தினம் தினம் ஒரு குச்சியைப் பயன்படுத்தக் கூடாது. இந்தக் கலவையில் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஆக்சிஜன் தேவை. அதற்காகத்தான் தினமும் மூடியைத் திறந்து கலக்கி விட வேண்டும். இப்போது மொத்தம் 18 நாள்கள் ஆகியிருக்கும்.

நிலை 3 பால் மற்றும் உபபொருள்கள் கலவை: மேற்கூறிய கலவைகள் தயாரான 18-ம் நாள், ஒரு தனி பாத்திரத்தில் பால் மற்றும் உபபொருள்கள் கலவை தயார் செய்ய வேண்டும். முதலில் 2 லிட்டர் தயிர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 3 லிட்டர் பால் ஊற்றி நன்றாகத் தயிர் திரைகள் மறையும் வரை கலக்க வேண்டும். பிறகு, மற்றொரு பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரை 3 கிலோ எடுத்துத் தூளாக்கிய பிறகு இதனுடன் 3 லிட்டர் இளநீர் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். தற்போது நாட்டுச்சர்க்கரை-இளநீர் கலவையை முதலில் தயாரித்து வைக்கப்பட்ட தயிர்-பால் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றிக்கொண்டே கலக்க வேண்டும்.

இவ்வாறு நன்கு கலந்த இந்தப் பால்-உபபொருள்கள் கலவையை, ஏற்கெனவே தயார் நிலையில் உள்ள மாட்டுச்சிறுநீர், சாண-நெய் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கி விட வேண்டும். இந்த டிரம்மில் இறுதியாக 12 நன்கு பழுத்துக் கனிந்த வாழைப்பழங்களைப் பிசைந்து இட வேண்டும் (அழுகிய பழங்களைப் பயன்படுத்தக் கூடாது). ஈஸ்ட் கிடைத்தால் இதனுடன் 100 கிராம் சேர்க்கலாம். இந்தக் கலவைதான் அறிவியல்பூர்வமான அளவீடு கொண்ட பஞ்சகவ்யா. இந்தக் கலவையை மூடி, மேலும் 12 நாள்கள் வைத்து, பிறகு பயன்படுத்தலாம். தினமும் காலை மாலை மூடியைத் திறந்து இடப்புறம் 7 சுற்று, வலப்புறம் 7 சுற்று எனக் குச்சியில் கலக்கிவிட்டுத் திரும்பவும் மூடிவிட வேண்டும். சரியாக 30 நாள்களில் தூய பஞ்சகவ்யா தயாராகிவிடும். 30 நாள்களுக்குப் பிறகு, அதனை எடுத்து வடிகட்டிப் பயன்படுத்தலாம். வடிகட்டும்போது சுத்தமான பருத்தி துணியைப் பயன்படுத்த வேண்டும்.

பஞ்சகவ்யாவின் வரலாறு, பயன்பாடு, அறிவியல் ஆகியவை அடுத்த இதழில்...

- வளரும்

நல்ல வளர்ச்சி!

ஞ்சகவ்யாவில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் அளவானது, ஒரு மி.லி பஞ்சகவ்யாவில் 18.5 லட்சம் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் இருக்கும். 22.6 லட்சம் லாக்டோபேசில்லஸ், 38,000 நன்மை செய்யும் பூஞ்சைகள், 250 மெத்தனோஜென் இருக்கும். இவை பயிர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்

ஐந்து பொருள்களுடன் மேலும் மூன்று பொருள்களை ஏன் சேர்க்க வேண்டும்?

பொதுவாகப் பாக்டீரியாக்களை அதிகப்படுத்துவதற்கான ஊடகமாக இளநீரைப் பயன்படுத்துவார்கள். இதில் தாது உப்பு சத்துகளும் அதிகம். அதேபோல நொதித்தல் செயல்பாட்டுக்காக வாழைப்பழம் சேர்ப்பார்கள். நொதிப்பதற்கு சில என்சைம்கள் தேவைப்படுகின்றன. அவை வாழைப்பழத்தில் இருக்கின்றன. அனைத்து பாக்டீரியாக்களும் இனிப்பு கலந்து ஊடகத்தில் சிறப்பாக வளரும். அதில் நன்செய்ப் பூஞ்சைகள் அதிக அளவில் வளரும். அதற்காகத்தான் கரும்புச் சாறு அல்லது வெல்லத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதைத்தவிர வேறு எந்தப் பொருள்களையும் பஞ்சகவ்யா தயாரிப்பில் சேர்க்கக் கூடாது. புகையிலை, சுண்ணாம்பு என ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமாகக் கைக்குக் கிடைக்கும் பொருள்களைச் சேர்த்து பஞ்சகவ்யா தயாரிக்கிறார்கள். ஆனால் அப்படி உருவாவதை பஞ்சகவ்யா என ஏற்றுக்கொள்ள முடியாது. சாணம், சிறுநீர், பால், தயிர் மற்றும் நெய் ஆகிய ஐந்து பொருள்களுடன் ஊடகமாக இளநீர், வாழைப்பழம், கரும்புச் சாறு அல்லது வெல்லம் கலந்து தயாரிக்கப்படுவது மட்டுமே பஞ்சகவ்யா. இதுதான் முழுமையான பலனைக் கொடுக்கும். இதைத்தாண்டிக் கண்ட பொருள்களைச் சேர்த்துச் செய்யப்படும் பஞ்சகவ்யாவில் முழுமையான பலன் கிடைக்காது.

தேனீ வளர்ப்பு பண்ணை... தொழில் ரகசியமும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்!

என்ற வீடியோவை பசுமை விகடன் யூ-டியூபில் காண கீழ்க்காணும் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.

20 சென்டில் 60,000 ரூபாய் வருமானம் தரும் டிராகன் ஃப்ரூட்!

என்ற வீடியோவை பசுமை விகடன் யூ-டியூபில் காண கீழ்க்காணும் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.

ஜே.சி குமரப்பாவின் வழியில் ஒருங்கிணைந்த தற்சார்பு பண்ணை - அசத்தும் முன்னாள் எம்.எல்.ஏ!

என்ற வீடியோவை பசுமை விகடன் யூ-டியூபில் காண கீழ்க்காணும் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.