Published:Updated:

இயற்கை வேளாண்மை - 12: பயிர்களின் தற்காப்பு கவசம் தசகவ்யா!

ஆய்வுப் பார்வையும் அறிவியல் உண்மையும்!

பிரீமியம் ஸ்டோரி

தசகவ்யாவில் 50 சதவிகிதம் பூச்சி, நோய் விரட்டும் தாவரக்கலவை இருக்கிறது.

எந்தக் கரைசலைத் தயார் செய்தாலும் முதலில் திடப் பொருளைத்தான் பாத்திரத்தில் போட வேண்டும்.

ஞ்சகவ்யாவின் மேம்படுத்தப்பட்ட கலவைதான் ‘தசகவ்யா’. பஞ்சகவ்யா பெரும்பாலும் வளர்ச்சி ஊக்கியாக (80-90 சதவிகிதம்) பயன்படுத்தப்படுகிறது. மேலும் பூச்சிவிரட்டும் (10-20 சதவிகிதம்) ஆற்றலையும் கொண்டுள்ளது.

வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சி, நோய் வராமலிருப்பதற்கான எதிர்ப்பாற்றல் ஆகியவற்றைச் சேர்த்து வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தரமேற்றப்பட்ட பஞ்சகவ்யா கலவைதான் ‘தசகவ்யா’.

இந்த தசகவ்யா பயன்படுத்துவதால் பயிர் வளர்ச்சியைத் தாண்டி, பூச்சி நோய்க்கு எதிரான ஒவ்வாமை சக்தியைப் பயிர்களில் உருவாக்கும்.

கடந்த இரண்டு இதழ்களாகப் பஞ்சகவ்யாவை அறிவியல் முறையில் தயாரிக்கும் முறையைப் பற்றிப் பார்த்தோம். அதன்படி தயார் செய்த பஞ்சகவ்யாவுடன், சில தாவரங்களைச் சேர்த்தால் தசகவ்யா தயாராகிவிடும். அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இயற்கை வேளாண்மை - 12: பயிர்களின் தற்காப்பு கவசம் தசகவ்யா!

‘தச(தஸ்)’ என்றால் இந்தி மொழியில் 10 என்று பொருள். பஞ்சகவ்யாவில் (மாட்டுச்சாணம், மாட்டுச்சிறுநீர், பால், தயிர், நெய்) 5 பொருள்கள் உள்ளன. இதனுடன் மேலும் 5 வகையான தாவரங்களைச் சேர்த்தால் 10 பொருள்களின் கலவையாகிவிடும். இதை தசகவ்யா என்கிறோம். பஞ்சகவ்யாவில் அப்படி நாம் சேர்க்கும் தாவரங்கள், கசப்புத்தன்மை உள்ளதாகவும், ஒடித்தால் பால் வரும் தாவரங்களாகவும் இருந்தால் தசகவ்யா தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கென்று பிரத்யேகமாகத் தாவரங்களைத்தேடிப் போகத்தேவையில்லை. ஒவ்வொரு பகுதியிலும், ஆங்காங்கே கிடைக்கும் தாவரங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனாலும், பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, 9 வகையான முதல் நிலைத்தாவரங்களும் அதற்கு இணையான 9 நிகர்நிலைத் தாவரங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை நம் பகுதிகளில் எளிதாகக் கிடைக்கும் தாவரங்களே. இவற்றைப் பயன்படுத்தினால், தசகவ்யாவின் முழுமையான வீரியம் பயிர்களுக்குக் கிடைக்கும். இவற்றில் பூச்சி, நோய் ஒவ்வாமையைப் பயிர்களில் கொண்டுவர ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஏதேனும் ஐந்து தாவரங்களை நாமே தேர்வு செய்து தசகவ்யா தயாரிக்கலாம்.

முதல்நிலைத் தாவரங்கள்: வேம்பு, எருக்கு, கொளுஞ்சி, நொச்சி, காட்டாமணக்கு, ஆடாதொடா, புங்கன், ஊமத்தை மற்றும் அரளி ஆகியவை.

நிகர்நிலைத் தாவரங்கள்: குப்பைமேனி, கருந்துளசி, காகிதப்பூ இலை, சோற்றுக்கற்றாழை, வெங்காயத்தாள், கொத்தமல்லி இலை, வெற்றிலை, சீமைக்கருவேல் இலை, செம்மந்தாரை ஆகியவை.

இயற்கை வேளாண்மை - 12: பயிர்களின் தற்காப்பு கவசம் தசகவ்யா!

இந்த முதல் மற்றும் நிகர்நிலைத்தாவரங்கள் பால் வடியும் அதேசமயம் கசப்பு அல்லது துவர்ப்புத் தன்மை கொண்டவை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கின்றன. இந்தத் தாவரங்களில் உள்ள இரண்டாம்நிலை வேதிப்பொருள்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட்டுப் பூச்சி, நோய் ஒவ்வாமைக்கான எதிர்ப்பு சக்தியைப் பயிர்களுக்குக் கொடுக்கும். எனவே இந்தத் தாவரங்களைப் பயன்படுத்துவதால் அதிக பலன் கிடைக்கும்.

மேலும் இவை அனைத்தும் ஒத்த இரண்டாம் நிலை வேதிப்பொருள்களைக் கொண்ட தாவரங்கள். சுருக்கமாகச் சொன்னால், ஒன்றுடன் ஒன்று இணைந்து செயலாற்றும் தன்மைகொண்டவை. இவை ஒவ்வொன்றிலும் இருக்கும் இரண்டாம் நிலை வேதிப்பொருள்களுக்காகத்தான் இவை தசகவ்யாவில் சேர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு தாவரத்திலும் உள்ள இரண்டாம் நிலை வேதிப்பொருள்கள் பற்றிப் பார்ப்போம்.

வேப்பிலையில் உள்ள இரண்டாம் நிலை வேதிப்பொருள்களான அசாடிராக்டின், நிம்பின், மீலியாகார்ப்பின், ஜெடுனின் ஆகியவை சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிரானது. இதில் உள்ள சைகோசயனின் நோய் பரப்பும் பூஞ்சணத்தை இலைகள் படர அனுமதிக்காது. எருக்கு இலையில் உள்ள கேலோட்ரோபின், கேலோடாக்ஸின், அஸ்சாரின், கேலாக்டின், கொளுஞ்சியில் உள்ள பீட்டாப்ரோலின், நொச்சியில் உள்ள ரீட்டா சைக்கிளிக், ட்ரைடெர்பீன் ஆகியவை பூச்சிகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். காட்டாமணக்கில் உள்ள சாப்போனின், கௌமாரின் ஆகியவை பூஞ்சைகளையும், ஆடாதொடா இலையில் உள்ள வாசிசைன், புங்கன் இலையில் உள்ள சார்பிக், பெருலிக், எலாஜிக், கௌமாரிக் அமிலங்கள் சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் அனுமதிக்காது. ஊமத்தையில் உள்ள டானின் சாப்போனின், அரளியில் உள்ள ட்ரைடெர்பீன், ஓலியான்ரின், நீரின் ஆகியவை புழுக்கள், தாய் அந்துப்பூச்சிகளை அண்டவிடாது. தண்டை ஒட்டிய மண்ணில் வளரும் பியுசேரியம் போன்ற மண்ணில் வாழும் வேரழுகல் நோயை உண்டாக்கும் பூஞ்சைகளைத் தடுக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிகர்நிலைத் தாவரங்களில் உள்ள இரண்டாம் நிலை வேதிப்பொருள்களைப் பொருத்தமட்டில், துளசியில் உள்ள ஜெரானியோல், அபிஜினின், கேம்பர், தைமால், லினோலூல், யூஜினால், காகிதப்பூவில் உள்ள பால்மிடின், ஒலியின், ஸ்டீரின், சீமைக்கருவேல் இலையில் உள்ள டானின், ட்ரைடெர்பீனாய்ட்ஸ், குப்பைமேனி செடியில் உள்ள டானின், சாப்போனின், டெர்பீனாய்ட்ஸ், ஆந்த்ராகுயினோன்ஸ் ஆகியவை பூச்சி மற்றும் நோய் பரப்பும் பூஞ்சணங்களை வரவிடாமல் தடுக்கும். இவை தவிர, வெற்றிலையில் உள்ள டானின், டெர்பினாய்ட்ஸ், கொத்தமல்லியில் உள்ள டானின், ஆந்த்ராகுயினோன்ஸ், வெங்காயத் தாளில் உள்ள சிஸ்டீன் சல்பாக்ஸைடு, மெத்தீன், அல்லீன், செம்மந்தாரையில் உள்ள குயினோன்ஸ், ஆக்ஸிபைன்ஸ், டெர்பீன்ஸ் ஆகியவை பூஞ்சண நோய்களிலிருந்து பயிரைக் காக்கும் இரண்டாம் நிலை வேதிப்பொருள்கள்.

இயற்கை வேளாண்மை - 12: பயிர்களின் தற்காப்பு கவசம் தசகவ்யா!

இந்த இரண்டாம் நிலை வேதிப்பொருள்கள் பஞ்சகவ்யாவுடன் இணையும்போது செடிகளுக்கான வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி நோய்களுக்கு எதிரான ஒவ்வாமை சக்தியையும் உருவாக்குகின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, பயிருக்கு மிகப்பெரிய பாதுகாப்புக் கவசமாக இருக்கின்றன. பயிர் வளர்வது, பூப்பூப்பது, மகசூல் கொடுப்பது ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கின்றன. அதே நேரம், எதிரிகளின்(பூச்சி) தாக்குதலையும் முறியடித்து அரண்போல் காக்கின்றன.

இந்த குணாதிசயங்களால், பயிர் வளர்ச்சி துரிதப்பட்டு, பூச்சி, நோயிலிருந்து காத்து, சிறந்த மகசூலைப் பெறவும் வகை செய்கிறது தசகவ்யா. இந்தியாவில் உள்ள பல வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்ள அங்கக வேளாண்மைத் தொடர்புத்துறைகள், ஊட்டியில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் ‘பாரம்பரிய அங்கக வேளாண் திட்டம்’ (மத்திய அரசின் பி.கே.வி.ஒய் திட்டம்) போன்ற இயற்கை வேளாண் சார்ந்த வயல்வெளி ஆராய்ச்சிகளில் பல்வேறு பயிர் நிலைகளில் தசகவ்யா உட்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த ஆராய்ச்சி முடிவுகளின் ஒட்டுமொத்த சாரம்சம் இதுதான்.

பஞ்சகவ்யா தெளிக்கும்போது, 45 நாள்களில் பூப்பூக்கும் தாவரம் 5 நாள்கள் முன்பாக, அதாவது 40 நாள்களில் பூப்பூக்கும். உதாரணமாக ஒரு காய்கறிச்செடியில் 45-ம் நாள் 30 பூக்கள் பூக்கும் என வைத்துக்கொள்வோம். அந்த நிலையில் பஞ்சகவ்யா தெளித்தால் 5 நாள்களுக்கு முன்னதாகவே அதே 30 பூக்கள் பூத்து, அனைத்து பூக்களும் காயாக மாறும்.

ஆனால் பூக்கள் காய்களாக மாறும் நேரத்தில், தண்டு துளைப்பான் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் உள்ளிட்ட பூச்சித் தாக்குதல் இருந்தால் இரண்டு, மூன்று கிளைகள் பாதிக்கப்படும். அதனால் 20 சதவிகிதம் பூக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இது மகசூலைப் பாதிக்கும். இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காகத்தான் தசகவ்யா பயன்படுகிறது. காய்கறிப்பயிர்களில் நட்ட 15 முதல் 20 நாள்களிலிருந்தே 7 முதல் 10 நாள்கள் இடைவெளியில் தசகவ்யா தெளித்து வரும் வயலில், பூச்சி நோய்த்தாக்கம் தவிர்க்கப்படும். இதனால் பூக்கள் காய்களாக மாறும் நேரத்தில் பூச்சி, நோய்த் தாக்குதல் அதிகம் இருக்காது. மொத்த பூக்களில் 80-90 சதவிகிதப் பூக்கள் காய்களாக மாறும்.

இயற்கை வேளாண்மை - 12: பயிர்களின் தற்காப்பு கவசம் தசகவ்யா!

தசகவ்யாவில் 50 சதவிகிதம் பூச்சி, நோய் விரட்டும் தாவரக்கலவை இருக்கிறது. மீதியுள்ள 50 சதவிகிதத்தில் பஞ்சகவ்யா உள்ளது. இது செடிகளின் வளர்சிதை மாற்றத்தில் பெரும் பங்காற்றுகிறது. செடிகளின் வளர்சிதை மாற்றத்தில் எந்த ஒரு செடியும் குறிப்பிட்ட நாள்களுக்குள் இலைதழைப் பருவத்திலிருந்து பூக்கும் பருவத்தை அடைய வேண்டும். இந்த இலைதழைப்பருவத்தில் செடிகளில் ‘ஆக்சின்’ என்ற வளர்ச்சி ஊக்கியானது, பயிர்கள் முளைத்த அல்லது நட்ட நாளிலிருந்து ஒவ்வொரு செடியும் தனக்குத்தானே உற்பத்தி செய்து கொள்ளும். இந்த ஆக்சின் உற்பத்தித்திறனில் வேறுபாடோ அல்லது குறைபாடோ இருந்தால் செடி பூப்பூக்கும் தருணம்வரை ஒரு வாளிப்பான, திறன்மிகு செடியாக வளர முடியாது. பயிர் வளர்ச்சி குன்றிக் காணப்படும். ஒரு குறிப்பிட்ட நாளில் உதாரணமாகக் காய்கறிப்பயிர்களில் 28 முதல் 35 நாள்களுக்குள் இலைதழைப்பருவம் முடிந்து பூக்கும் பருவத்திற்குள் செடி நுழையும்போது, இந்த இலைதழைகளை உற்பத்தி செய்யும் வளர்ச்சி ஊக்கியான ஆக்சினின் உற்பத்தி மட்டுப்பட்டு ஜிப்ரலிக் அமிலம், சைட்டோகைனின் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளைச் செடிகள் தாமாகவே உற்பத்தி செய்யத்தொடங்கும். அப்போதுதான் செடி இலைதழைப்பருவத்திலிருந்து பூக்கும் பருவத்திற்கு மாறும். ஆனால் சமீபகால வேதியியல் வேளாண் அணுகுமுறைகளால் இந்த வளர்ச்சி ஊக்கிகளைச் செடிகள் தாமாகவே உற்பத்தி செய்யும் அறிவியல் நிகழ்வுகளில் சிறிது தேக்க நிலை உள்ளது. இதைச்சீர் செய்யும் இயற்கை வழி ஆயுதங்கள்தான் பஞ்சகவ்யாவும், தசகவ்யாவும். பயிர்களின் வளர்சிதை மாற்றங்களில் வளர்ச்சி ஊக்கிகளைப் பயிர்கள் தாமாகவே உற்பத்தி செய்யும் சமன் நீர் கலவைகள். ஆக இதிலிருந்து விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டியது, பஞ்சகவ்யா தெளிப்பதனால் 5 நாள்களுக்கு முன்பாகப் பலன் கிடைக்கும். அந்தப் பலன் முழுமையாகக் கிடைக்கத் தசகவ்யா உதவி செய்கிறது. ஆக இரண்டையும் சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்.

தசகவ்யா தயார் செய்யும் முறை: மேலே சொன்ன பல வகையான தாவரங்களின் இலை மற்றும் அதை ஒட்டிய நுனி மென்தண்டுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை அப்படியே முழுமையாகப் பயன்படுத்தக் கூடாது. அனைத்தையும் 5 சென்டிமீட்டர் முதல் 10 சென்டிமீட்டர் அளவு இருக்குமாறு துண்டுத் துண்டாக வெட்டிப் பயன்படுத்த வேண்டும். மாறாகத் தாவரங்களை முழுவதும் பயன்படுத்தும்போது, இந்தத் தாவரங்களில் உள்ள இரண்டாம் நிலை வேதிப்பொருள்கள் முழுமையாக வெளியே வராது. அவை முழுமையாக வெளியே வந்தால்தான் நமக்கு முழுப் பலன் கிடைக்கும். எனவே துண்டுத் துண்டாக நறுக்கிப் பயன்படுத்த வேண்டும். வெட்டிய துண்டுகளை உடனடியாகப் பயன்பாட்டிற்கு உட்படுத்த வேண்டும். நீண்ட நேரம் வைக்கக் கூடாது. வெயில் படும் இடத்தில் கண்டிப்பாக வைக்கக் கூடாது.

இயற்கை வேளாண்மை - 12: பயிர்களின் தற்காப்பு கவசம் தசகவ்யா!

ஒவ்வொரு தாவரத்தையும் எந்த அளவு எடுத்துக்கொண்டோமோ, அதே அளவு மாட்டுச் சிறுநீர் சேர்க்க வேண்டும். உதாரணமாக ஒரு கிலோ வேப்பிலை எடுத்தால் அதனுடன் ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரைச் சேர்க்க வேண்டும். தற்போது விவசாயிகள் தங்களால் தெரிவு செய்யப்பட்ட 5 தாவரங்களையும் நறுக்காமல் பெரிய பெரிய துண்டுகளாக எடுத்துக்கொண்டு மொத்தமாக ஒரு டிரம்மில் கொட்டி, அதில் 5 லிட்டர் மாட்டுச் சிறுநீர் கலந்து கரைசல் தயார் செய்கிறார்கள். அந்தக் கரைசலில் பலன் கிடைக்கும் என்றாலும், முழுமையான பலன் கிடைக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொன்றுக்கும் அடிப்படை அறிவியல் கோட்பாடு இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு, அறிவியல் முறைப்படி தயார் செய்து பயன்படுத்தும்போதுதான் எதிர்பார்க்கும் முழுமையான பலனை அடைய முடியும். 5 தாவரங்களையும் முறைப்படி தனித்தனியே மாட்டுச் சிறுநீரில் ஊறவைக்க வேண்டும். ஒரு கிலோ இலையுடன் கூடிய நுனிமென்தண்டை வெட்டிப் போட்டு ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர் ஊற்ற வேண்டும். நான் மேலே சொன்ன வரிசையில் வேம்பில் தொடங்கிச் செம்மந்தாரை வரையிலான ஏதேனும் 5 தாவரங்களை (3 பூச்சிவிரட்டித் தாவரங்கள் மற்றும் 2 நோய் ஒவ்வாமைக்கான தாவரங்கள்) கொண்டு தயார்செய்ய வேண்டும். தனித்தனி பாத்திரத்தில் 5 தாவரங்களையும் தனித்தனியே இட்டு ஒவ்வொன்றிலும் மாட்டுச் சிறுநீரைச் சமஅளவு ஊற்ற வேண்டும். அனைத்திற்கும் ஒரே ஒரு பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது.

பொதுவாக இந்த இடத்தில் விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. எந்தக் கரைசலைத் தயார் செய்தாலும் முதலில் திடப் பொருளைப் பாத்திரத்தில் போட்டு, அதற்கு மேல் திரவப் பொருள்களைச் சிறிது சிறிதாக ஊற்றிக்கொண்டே கலக்க வேண்டும். அந்த அடிப்படையில் பாத்திரத்தில் தாவரத்தைப் போட்டபிறகு அதன் மீது மாட்டுச் சிறுநீரை ஊற்ற வேண்டும்.

மாட்டுச் சிறுநீரையும் மொத்தமாக ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இலைகளும் நனையுமாறு ஊற்ற வேண்டும். பிறகு அதைக் குறைந்தபட்சம் 15 நாள்கள் ஊற விட வேண்டும். வெயில் படாத நிழலான இடத்தில் வைத்தால் போதும். அன்றாடம் கலக்கிவிடத் தேவையில்லை. 15 நாள்களில் 5 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை கலக்கிவிட்டால் போதுமானது.

15 நாள்களுக்குப் பிறகு, இந்தக் கரைசல்களை ஒன்று சேர்க்க வேண்டும். இதிலும் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் தெரிவு செய்த 5 தாவரங்களையும் தனித்தனியாகப் போடும்போது, வரிசைப்படி போட்டோம் அல்லவா? அந்த வரிசையில் கரைசல்களை ஒன்று சேர்க்க வேண்டும். உதாரணமாக முதலில் வேம்பு. இதை ஒன்று என வைத்துக்கொள்ளுங்கள். எருக்கு இரண்டாவது கரைசல். இப்போது, இரண்டாவது கரைசலை எடுத்து, முதல் கரைசலான வேம்பில் ஊற்ற வேண்டும். அடுத்து, மூன்றாவது கரைசலை எடுத்து ஊற்ற வேண்டும். தொடர்ந்து, நான்கு, ஐந்து என வரிசைப்படி ஊற்ற வேண்டும். இப்போது 5 தாவரங்களின் இரண்டாம் நிலை வேதிப்பொருள்களின் கரைசல்கள் கலந்த கரைசல் தயாராகிவிட்டது. நாம் ஊற்றிய மாட்டுச் சிறுநீர் இரண்டாம் நிலை மூலக்கூறுகளை எடுத்துக்கொண்டு வெளியேறிய இலைச்சாறு என மொத்தம் 5-6 லிட்டர் கரைசல் இருக்கும். இதை நன்கு வடிகட்டித் தூய கரைசலாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கரைசலைப் பஞ்சகவ்யாவுடன் சேர்த்துக் கலக்க வேண்டும். 5:1 என்ற விகிதத்தில் இந்தக் கரைசலைச் சேர்க்க வேண்டும். உதாரணமாக 5 லிட்டர் பஞ்சகவ்யாவில் இந்தத் தாவரக் கரைசலை ஒரு லிட்டர் சேர்க்க வேண்டும்.

இப்போது நம்மிடம் சராசரியாக 5 லிட்டர் தாவரக் கரைசல் இருக்கும் என வைத்துக்கொண்டால், இதை 25 லிட்டர் பஞ்சகவ்யாவில் கலக்க வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாகச் சேர்க்கத் தேவையில்லை. தேவைக்கு ஏற்பச் சேர்த்துத் தசகவ்யா தயார் செய்துகொள்ளலாம். ஆனால், 5 பங்கு பஞ்சகவ்யா, ஒரு பங்கு தாவரக் கரைசல் என்ற அளவில் கலக்க வேண்டும் என்பது முக்கியம்.

பஞ்சகவ்யா, தாவரக் கரைசல் கலந்த கலவையை நன்றாகக் கலக்க வேண்டும். இதை 20 நாள்கள் வைத்திருக்க வேண்டும். தினமும் காலை, மாலை இருவேளையும் கலக்கி விட வேண்டும். அதற்குப் பிறகு மீண்டும் வடிகட்டிப் பயன்படுத்தலாம்.

பயன்கள்: அனைத்து வகையான பயிர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இயற்கை விவசாயத்தின் அடிப்படை ‘வருமுன் காப்போம்’ என்பதுதான். அதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். பூச்சி, நோய் வந்த பிறகுதான் தெளிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் இயற்கை விவசாயத்தில் முழுமையான மகசூல் எடுக்க முடியும். தசகவ்யாவும் அப்படித்தான். ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்த வேண்டும். விதைத்த 15-ம் நாளிலிருந்து இதைப் பயன்படுத்தலாம். முதலில் ஏழு நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கலாம். அதன் பிறகு, மகசூல் முடியும் வரை 15 நாள் இடைவெளியில் தொடர்ந்து தெளிக்கலாம்.

விதை நேர்த்திக்குத் தசகவ்யா கரைசலை 3 சதவிகிதம் பயன்படுத்த வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருடன் 30 மி.லி என்ற அளவில் கலந்துகொள்ள வேண்டும்.

இதில் விதை நேர்த்தி செய்து நடும்போது வழக்கத்தைவிட இரண்டு நாள்களுக்கு முன்பாக முளைத்துவிடும்.

எட்டு நாளில் முளைக்கும் விதை ஆறு நாளில் முளைத்துவிடும். வளர்ச்சியும் சீராக இருக்கும். நாற்றுகளை நேர்த்தி செய்து வயலில் நடவு செய்யும்போது வேர் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கிளைகளின் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் பயிரின் மகசூல் அதிகரிக்கும். தசகவ்யா ஆரம்பத்திலிருந்து பயன்படுத்தும்போது கிளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கணுக்களின் இடைவெளியும் குறையும். கணுக்களின் இடைவெளி அதிகரித்தால் கிளைகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். கணுக்கள் இடைவெளி குறைந்து கிளைகள் அதிகரிக்கும்போதுதான் மகசூல் கூடும். இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்கிறது தசகவ்யா.

சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, இலைப்பேன் உள்ளிட்ட பூச்சித் தாக்குதல் குறையும். இலைக்கருகல் நோய், இலைப்புள்ளி நோய், இலை சாம்பல் நோய் ஆகியவற்றைத் தடுக்கும்.

காய்கறிப் பயிராக இருந்தால் 7 நாள் இடைவெளியில் கொடுக்கலாம். மலர்ப்பயிர்களுக்கு 10 நாள் இடைவெளி. ஆண்டுக்கு ஒருமுறை மகசூல் கொடுக்கும் பயிர்களுக்கு 15 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

பழப்பயிர்களுக்கு, பூக்கள் எடுப்பதற்கு முன்பு தொடங்கி, மகசூல் முடியும் வரை தெளிக்கலாம். இதைத் தெளிப்பதால் அகலமான இலைகள் உருவாகும். இலைகளின் மேல் தசகவ்யா தெளிக்கும்போது, இலை துவாரங்கள் கசப்புத்தன்மையை உள் வாங்கி வைத்துக்கொள்ளும். பூச்சி இலையில் அமரும்போது அந்தக் கசப்புத் தன்மை வெளிப்படும். இதனால் பூச்சிகள் அண்டாது. இலைகளில் கண்ணுக்குத் தெரியாத சுனை போன்ற நுண்ணிய ரோமங்களைத் தசகவ்யா உருவாக்குகிறது. இந்த மயிர்க்கால்கள் சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி அமர முடியாமல் விலகிச் சென்று விடுகின்றன. இது தசகவ்யாவின் சிறப்புக் குணம்.

இலைவழித் தெளிப்பைத் தாண்டிச் சிலர், சொட்டுநீர்ப் பாசனத்தில் கொடுக்கிறார்கள். அப்படிச் சொட்டு நீர்ப் பாசனத்தில் கொடுப்பவர்கள் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 50 லிட்டர் தண்ணீரில் ஒன்றரை லிட்டர் தசகவ்யா கலந்து கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பஞ்சகவ்யா அதிகம் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் வட மாநிலங்களில் தசகவ்யா அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அங்கு ஒவ்வொரு பயிரிலும் இதைப் பயன்படுத்தி, அதன் ஆய்வு முடிவுகளை வைத்திருக்கிறார்கள். மேம்படுத்தப்பட்ட பஞ்சகவ்யாதான் தசகவ்யா என்பதை வட மாநில விவசாயிகள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

வளரும்

மேம்படுத்தப்பட்ட தசகவ்யா!

சகவ்யா என்பது பத்துப் பொருள்களைக்கொண்டு உருவாக்கப்படும் கரைசல். தசகவ்யா தயாரிப்பில் பஞ்சகவ்யாவில் (மாட்டுச்சாணம், மாட்டுச்சிறுநீர், பால், தயிர், நெய்) உள்ள ஐந்து பொருள்களுடன் 5 தெரிவு செய்யப்பட்ட தாவரக்கரைசலைச் சேர்த்து மொத்தமாக 10 பொருள்களைக் கொண்டதால் இதைத் தசகவ்யா என்கிறோம். மேம்படுத்தப்பட்ட தசகவ்யாவில் பஞ்சகவ்யாவை ஒரு பொருளாகவும் இதனுடன் நம்மால் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பூச்சி நோய் ஒவ்வாமை தாவரக் கரைசல்களையும் சேர்த்து மொத்தமாகப் பத்து பொருள் கரைசலைச் சேர்த்தால் அது ‘மேம்படுத்தப்பட்ட தசகவ்யா’.

இயற்கை வேளாண்மை - 12: பயிர்களின் தற்காப்பு கவசம் தசகவ்யா!

இந்த மேம்படுத்தப்பட்ட தசகவ்யாவை அதிகமான அளவில் பூச்சி நோய்த்தாக்குதலுக்கு உட்படுத்தப்படும் பயிர்களுக்கு 10 முதல் 15 நாள் இடைவெளியில் பயிர்காலம் முடியும் வரை தெளித்துவந்தால் பயிர் பூச்சி நோய்ப் பாதிப்பிலிருந்து பெருமளவில் விடுபட முடியும். ரகங்களுக்கான தகுதியான மகசூலைப் பெற முடியும்.

பக்தி பிரசாதம்... பயிர்களுக்குக் கிடைத்தது!

ஞ்சகவ்யா என்பது நம் மண்ணில் பலநூறு ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்தது. ஆனால், அதன் பயன்பாடு ஒரு கட்டத்தில் விடுப்பட்டுப்போனது. பாரம்பர்ய விவசாயத்தின் ஆணிவேராகத் திகழ்ந்துவரும் பஞ்சகவ்யாவை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்... ஆரம்பக் காலத்தில் அநேகம் பேர் பாடுபட்டுள்ளார்கள். அவர்களில் முக்கியமானவர், முதன்மையானவர் ‘பஞ்சகவ்யா சித்தர்’ என்று அழைக்கப்படும் ‘கொடுமுடி’ டாக்டர் கே.நடராஜன், எம்.பி.பி.எஸ். காலங்காலமாகக் கோயில்களில் வழங்கப்படும் பக்தி பிரசாதம்தான் பஞ்சகவ்யா. இதைக் கொஞ்சம் மாற்றி, பாரம்பர்ய விவசாயத்துக்குக் கொண்டு சேர்த்ததில் நடராஜனின் பங்கு அலாதியானது. இதன் பிறகுதான் ஆராய்ச்சி நிலையங்களும், பல்கலைக்கழகங்களும் பயிர்களுக்குப் பஞ்சகவ்யா பயன்பாடு பற்றி ஆய்வு செய்யத் தொடங்கின. பஞ்சகவ்யாவைப் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் வைக்கும் அளவுக்கு உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு