Published:Updated:

இயற்கை வேளாண்மை 14 : வேப்ப எண்ணெய்... பூச்சிகளுக்கு வில்லன் பயிர்களுக்கு நண்பன்!

பூச்சி வருவதற்கு முன்பு 15 நாள்களுக்கு ஒருமுறையும், வந்துவிட்டால் வாரம் ஒருமுறையும் பயன்படுத்த வேண்டும்.

பிரீமியம் ஸ்டோரி
டந்த இதழில் வேம்பு பற்றியும் அதில் உள்ள சத்துகள் பற்றியும் பார்த்தோம். அதன் தொடர்ச்சி யாக வேப்ப எண்ணெய் கரைசல், வேப்பங்கொட்டை கரைசல், வேப்பிலை கரைசல் ஆகியவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெயைப் பிரித்தெடுக்க எந்திர அழுத்த பிரித்தெடுப்பு, நீராவி வடிகட்டிப் பிரித்தெடுப்பு, கரைப்பான் பிரித்தெடுப்பு, அதிமுக்கிய கரைசல் பிரித்தெடுப்பு, நீர்ச்சுழல் பிரித்தெடுப்பு எனப் பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், எந்திர அழுத்த பிரித்தெடுப்பு முறை, நீர்ச்சுழல் பிரித்தெடுப்பு முறை இரண்டு மட்டுமே விவசாயி களால் அதிகம் பயன்படுத்த முடியும். இதில் நீர்ச்சுழல் பிரித்தெடுப்பு முறைக்கு இயந்திரம் தேவையில்லை. மற்ற தொழில்நுட்பங்கள் பெரிய நிறுவனங்கள் பயன் படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள்.

இயற்கை வேளாண்மை 14 : வேப்ப எண்ணெய்... பூச்சிகளுக்கு வில்லன் பயிர்களுக்கு நண்பன்!

விதையிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்க, செக்கைப் பயன்படுத்துவதுதான் எந்திர அழுத்த பிரித்தெடுப்பு முறை. இந்த முறையில் வேப்பங் கொட்டையில் உள்ள 43 சதவிகித எண்ணெயைப் பிரித்தெடுக்கலாம். மின்சார வசதியுடன் உள்ள எந்திர எண்ணெய் பிரித்தெடுப்பான்களில் ‘138 பார்’ அழுத்தத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த அழுத்தத்தை செட் செய்துகொள்ள வேண்டும். இதற்கு மேலேயும் போகக் கூடாது. கீழேயும் போகக் கூடாது. இதைவிட அதிகமாக இருந்தால் எண்ணெய் சூடாகிவிடும். அதனால் உள்ளே உள்ள இரண்டாம்நிலை வேதிப்பொருள்களின் வீரியம் குறைந்துவிடும். அழுத்தம் குறைவாக இருந்தால் முழுமையான எண்ணெய் கிடைக்காது. இதன்மூலம் 25 நிமிடத்தில் எண்ணெய் வெளியே வந்துவிடும். ஒரு பெரிய டிரம்மில் சேகரித்துத் தேவைப்படும்போது வடிகட்டிப் பயன்படுத்தலாம்.

ஆனால் பெரும்பாலும், நாட்டுச்செக்கில் ஆட்டி எடுப்பவர்கள் 25 சதவிகிதத்திற்கு மேல் எண்ணெய் எடுப்பதில்லை. ஒரு கிலோ விதை போட்டால் 430 மி.லி எண்ணெய் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போது 250 மி.லிக்கும் குறைவாகத்தான் கிடைக்கிறது. மீதி எண்ணெய் பிண்ணாக்குடன் போய்விடுகிறது. இதற்குக் காரணம், செக்கின் அழுத்தத்தைச் சரியாகப் பயன்படுத்தாததுதான். உலக்கையின் எடையும் இதில் முக்கியப் பங்காற்றுகிறது. செக்கில் கீழே உள்ள பாகத்தின் எடையில் மூன்றில் ஒரு பங்கு எடையில் உலக்கை இருக்க வேண்டும்.

வேப்ப எண்ணெய் பயன்பாடு

வேப்ப எண்ணெய் பயன்படுத்தும்போது, அது பயிரில் ஒட்டுவதற்காகக் காதி சோப் கரைசல் கலந்துகொள்ள வேண்டும். 1 லிட்டர் தண்ணீரில், 5 மி.லி வேப்ப எண்ணெய், 2 மி.லி காதி சோப் கரைசல் கலந்து பயன்படுத்த வேண்டும். பொதுவாக, மருந்து தெளிக்கும் டேங்க் முழுவதும் தண்ணீர் நிறைத்துக்கொண்டு, அதில் வேப்ப எண்ணெய் கரைசலை ஊற்றுவது வழக்கமாக இருக்கிறது. இது தவறு. அடர்த்தியான பொருளில்தான், அடர்த்திக் குறைந்த பொருளைச் சிறிது சிறிதாகக் கலக்க வேண்டும். அதுதான் அறிவியல். இப்படிச் செய்தால்தான் தண்ணீரின் அனைத்து மூலக்கூறுகளிலும், நாம் பயன்படுத்தும் கரைசல் கலக்கும்.

இயற்கை வேளாண்மை 14 : வேப்ப எண்ணெய்... பூச்சிகளுக்கு வில்லன் பயிர்களுக்கு நண்பன்!

வேப்ப எண்ணெயை நேரடியாக டேங்கில் ஊற்றுவதைவிட, 2 மி.லி காதி சோப் கரைசல் ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து முதலில் சோப்பு கரைசலைத் தனியே தயார்செய்து கொள்ள வேண்டும். பிறகு, இந்தக் கரைசலை ஏற்கெனவே ஒரு டேங்குக்குத் தேவையான வேப்ப எண்ணெய் வைக்கப்பட்ட பாத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கலக்கிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, முழுமையாகக் கரைக்கப்பட்ட இந்தக் கரைசலை டேங்கில் முதலில் ஊற்ற வேண்டும். பின்பு தண்ணீரை வைத்து நிரப்பிக் கொள்ளலாம். இப்படிச் செய்தால் தண்ணீரின் அனைத்து மூலக்கூறுகளிலும் கரைசல் கலந்து முழுமையான பலனைத்தரும்.

பயிர்களுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை வேப்ப எண்ணெயைத் காலை மற்றும் மாலை வேளைகளில் தெளிக்கலாம். பொதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 0.5 சதவிகிதம் பயன்படுத்த வேண்டும். பாதிப்பு இருந்தால், 1 சதவிகிதமாகப் பயன்படுத்தலாம். பூச்சி வருவதற்கு முன்பு 15 நாள்களுக்கு ஒருமுறையும், வந்துவிட்டால் வாரம் ஒரு முறையும் பயன்படுத்த வேண்டும். அந்தச் சிக்கல் தீரும் வரை பயன்படுத்த வேண்டும். பிரச்னை தீர்ந்தவுடன் தெளிப்பு இடைவெளியை 15-20 நாள்களுக்கு மாற்றிவிட வேண்டும்.

‘‘வேப்ப எண்ணெயை 20-25 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து பயன்படுத்தினால் தீமை செய்யும் பூச்சிகளால் ஏற்படும் பயிர்சேதம் குறைந்து நிறைந்த மகசூலைப் பெற முடியும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேப்பங்கொட்டை கரைசல்

நீர்ச்சுழல் பிரித்தெடுப்பு முறையில் வேப்பங்கொட்டை கரைசல் தயார் செய்ய, 2 கிலோ வேப்பங்கொட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டுக் குறுணைபோலப் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். தூளாக்கப்பட்ட பொடியை, மஸ்லின் துணியில் கொட்டி, பொட்டலம்போலக் கட்டிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 10 லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் அந்தப் பொட்டலத்தைக் கட்டித் தொங்கவிட வேண்டும். வெந்நீர் தயார் செய்ய வாளியில் மேலே குச்சியைக் குறுக்காக வைத்து ‘வாட்டர் ஹீட்டர்’ தொங்க விடுவோம் அல்லவா? அதைப்போல, மஸ்லின் துணி பாத்திரத்தின் தரையைத் தொடாமல் வைக்க வேண்டும்.

இயற்கை வேளாண்மை 14 : வேப்ப எண்ணெய்... பூச்சிகளுக்கு வில்லன் பயிர்களுக்கு நண்பன்!

இது 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வேண்டும். அதில் உள்ள இரண்டாம் நிலை வேதிப்பொருள்கள் வெளியேறித் தண்ணீரில் கரைந்துவிடும். இந்தத் தண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் நாள் அதே துணி முடிப்பை, 5 லிட்டர் தண்ணீரில் தொங்கவிட்டு ஊறவிட வேண்டும். 24 மணி நேரம் கழித்து அந்தத் தண்ணீரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவது நாள் மீண்டும் 5 லிட்டர் தண்ணீரில் அந்தத் துணி முடிப்பை ஊற வைக்க வேண்டும். இந்த மூன்று நாள் கரைசலையும் மொத்தமாகக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசலைப் பயிருக்குப் பயன்படுத்தலாம்.

இயற்கை வேளாண்மை 14 : வேப்ப எண்ணெய்... பூச்சிகளுக்கு வில்லன் பயிர்களுக்கு நண்பன்!

வேப்பிலை கரைசல்

வேப்பங்கொட்டையைப் போலவே, வேப்பிலையையும் பயன்படுத்தலாம். இலையை ஒன்றிரண்டாக இடித்து, கொட்டையைச் செய்ததுபோல் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதிலிருந்து 18 முதல் 22 சதவிகிதம் இரண்டாம் நிலை வேதிப்பொருள்களின் கலவை கிடைக்கும். ஒரு கிலோ வேப்பிலையில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

இயற்கை வேளாண்மை 14 : வேப்ப எண்ணெய்... பூச்சிகளுக்கு வில்லன் பயிர்களுக்கு நண்பன்!

ஒரு ஹெக்டேருக்கு 80 கிலோ இலை தேவைப்படும். இதையும் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். விதை, இலை இரண்டு கரைசலும், கடித்து உண்ணும் பூச்சிகளுக்கு எதிரானது. பூச்சிகளில் உருமாற்றம் உண்டாக்கும் ஹார்மோன் உற்பத்தியாகாமல் போய்விடும்.

வேப்பங்கொட்டை கரைசல் அல்லது இலைக்கரைசலாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருந்தால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மி.லி பயன்படுத்த வேண்டும். பூச்சிகளின் பாதிப்பு இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5% வேப்பங்கொட்டை கரைசல் பயன்படுத்தலாம்.

வேப்ப எண்ணெயைப் போல் அல்லாமல் இந்தக் கரைசலைப் பலநாள்கள் சேமித்து வைக்கக் கூடாது. தயார் செய்தவுடன் பயன்படுத்திவிடுதல் நல்லது. தொழில்நுட்பம் எளிது என்பதால் தேவைப்படும்போது தயார் செய்துகொள்ள வேண்டும்.

வளரும்.

நல்லவனுக்கு நல்லவன்

பூச்சிகளுக்குச் சூனியம் வைக்கும் வேம்பின் இயற்கைப் பொருள்கள் எளிதில் மட்கக்கூடியது. மண், மனிதன் மற்றும் பயிருக்கு எந்த வகையிலும் துன்பம் விளைவிக்காது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நன்மை செய்யும் விவசாயத் தோழர்களான பறவைகள், அயல்மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள் வண்ணத்துப்பூச்சிகள், மண்புழுக்கள் ஆகியவற்றை எந்தத் தொந்தரவும் செய்யாது.

இதை அமெரிக்காவின் வாசிங்டன் மாநில பல்கலைக்கழகத்தின் தேசிய பூச்சிமருந்து தகவல் நிலையம் உறுதிசெய்துள்ளது. மேலும், வேம்பின் இயற்கைப் பொருள்கள் தீமை செய்யும் பூச்சிகளைத்தான் பாதிக்கும். இது பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவு. வேம்பு பொருள்களைப் பயிர் பாதுகாப்பில் பயன்படுத்தும்போது, பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி முழுக்கப் பாதிப்பை ஏற்படுத்தும்.

தீமை செய்யும் ஆண், பெண் பூச்சிகளுக் கிடையே ஓர் ஒவ்வாமையை ஏற்படுத்தி இரண்டும் புணர்வதைத் தடுக்கும். மொத்தத்தில் தீமை செய்யும் பூச்சிகள் வாழ்வில் சூனியம் வைத்துவிடும். பூச்சிகள் இருந்தாலும் இல்லா விட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேப்ப எண்ணெயை 20-25 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து பயன்படுத்தும் தோட்டங்களில் தீமை செய்யும் பூச்சிகளால் ஏற்படும் பயிர்சேதம் குறைந்து நிறைந்த மகசூலைப் பெற முடியும். கொசுத்தொல்லை அறவே இருக்காது. பூச்சிகள் மட்டுமல்லாது கண்ணுக்குத்தெரியாத எதிர்வினையாற்றும் உயிர்களையும் இது பாதிக்கும். மற்ற தாவரப் பூச்சிவிரட்டிகள் போன்று நான்கு அல்லது ஐந்து நாள்கள் இடைவெளியில் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. குறைந்தது 12-15 நாள்கள் இடைவெளி நன்று. வேம்புப் பொருள்கள் பயிர்களுக்கு அமுதம் எனலாம். ஆனால், அளவு மீறக் கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு