Published:Updated:

இயற்கை வேளாண்மை 6: கோடை உழவு... கோடி நன்மை!

ஆய்வுப் பார்வையும் அறிவியல் உண்மையும்!

பிரீமியம் ஸ்டோரி
இயற்கை விவசாயம், செயற்கை விவசாயம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது மண். அந்த மண்ணைக் கிளறிவிடுவதுதான் உழவு. அதுதான் விவசாயத்தின் அடிப்படை. ஒரு விதையை மண்ணுக்குள் விதைக்கிறோம்.

விதை என்பது உயிருள்ள பொருள். அது முளைக்க ஊடகமாக இருப்பது மண். ஒரு விதையை நிலத்தில் விதைத்தவுடன், அது முதலில் வேரை உருவாக்கி, மண்ணுக்குள் அனுப்பும். `இது நாம் வாழத் தகுந்த இடமாக இருக்கிறதா?’ என்பதை வேர் மூலம் ஆய்வு செய்யும். கீழே போகும் வேர், மண்ணில் வாழப் போதுமான குறைந்தபட்ச சத்துகள், அடிப்படைச்சூழல் (20-30 சதவிகிதமாவது) இல்லை எனத் தெரிந்தால் முளைத்தண்டை மேலே அனுப்பாது. மேலும், மண்ணில் அதிப்படியான வேதி நச்சுகள் இருந்தாலும், அதன் வாழ்க்கையை வேர்விட்டதோடு முடித்துக்கொள்ளும்.

இயற்கை வேளாண்மை 6: கோடை உழவு... கோடி நன்மை!

வெப்பம், குளுமை இரண்டும் கிடைக்கும்!

பொதுவாகத் தரமான விதைகளைத்தான் விதைக்கிறோம். ஆனால், சில நிலங்களில் விதை முளைக்காமல் போகிறது. அதற்குக் காரணம் மண்ணின் அதிகப்படியான இறுக்கம் மற்றும் மண்ணுக்குள் நிலவும் சூழல்தான். அதனால்தான் விதைப்பதற்கு முன்பாக, உழவு மூலம் மண்ணைப் பொலபொலப்பு தன்மைக்கு மாற்றுகிறோம். பொதுவாக, விவசாயிகள் விதைப்பதற்கு முன்பாகத்தான் உழுகிறார்கள். கோடை உழவு என்பதைப் பெரும்பாலும் செய்வதில்லை. மழைக்காலத்தில் செய்யும் உழவைவிட, கோடைக்காலத்தில் செய்யும் உழவுதான் முக்கியமானது. மழைக்காலத்தில் போதுமான ஈரம் இருக்கும். அந்த ஈரத்தில் உழவு செய்யும்போது, மண்ணுக்குள் குளுமையான தன்மைதான் உருவாகும். ஆனால் கோடைக்காலத்தில் உழவு செய்யும்போது, வெப்பம், குளுமை இரண்டும் மண்ணுக்குக் கிடைக்கும். `இப்படி இரண்டும் கிடைக்கும்போதுதான் மண்ணின் கட்டுமானம் பலப்படும்’ என்கிறது அறிவியல்.

நீண்டகாலத்துக்குப் பிறகு பெய்யும் முதல் மழையில் அந்தச் சத்துகள் கலந்து பூமிக்கு வரும்.

மண்ணைப் புரட்டிவிடும் போது, முதலில் மண் வெப்பமாகி, பிறகு குளிர வேண்டும். இதுதான் உழவியல் முறையின் அடிப்படை. கோடை உழவின் சூத்திரமும் அதுதான். அதாவது காய்ந்து குளிர்தல். அந்த நிலைக்கு மண்ணைக் கொண்டு செல்வதுதான் கோடை உழவு. அப்படிப் பதப்படுத்திய மண்ணில்தான் பயிர்கள் செழிப்பாக வளரும். மண்ணைக் கிளறிவிடுகிறோம். வெயிலில் காய்ந்து, பிறகு தந்தூகிக் கவர்ச்சியில் அதாவது உழவுக்குக் கீழுள்ள ஈரம் மேல் மண்ணுக்குப் பயணமாகி உழவிடப்பட்ட மண் ஈரமாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மண்புழுக்கள் செய்த வேலை!

ஆனால், மழைக்காலத்தில் செய்யும் உழவில் ஈரம் மட்டுமே கிடைக்கும். கோடை உழவில் மண்ணின் இறுக்கமான நிலையை உடைத்து தூள்தூளாக மாற்றுகிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த வேலையை மண்புழுக்கள் செய்துகொண்டிருந்தன. அதனால்தான் மண்புழுவை ‘உழவனின் நண்பன்’ என்கிறோம். முன்காலத்தில், `கோடை உழவு’ என்று தனியாக ஒன்று இல்லை. ஆனால், பயிர்கள் செழிப்பாக விளைந்தன. மேல் மண்ணையும், கீழ் மண்ணையும் புரட்டி மண்ணுக்குள் ஒரு பொலபொலப்பு தன்மையை மண்புழுக்கள் உருவாக்கின. காலப்போக்கில் வேதியியல் உரங்கள் பயன்பாடு அதிகரித்தது. மண்புழுக்கள் மறைந்துபோயின. மண்புழுக்களின் எண்ணிக்கை மண்ணில் குறையக் குறைய மண் இறுக்கமாகிவிட்டது. அந்த இறுக்கத்தைக் குறைக்கக் கோடை உழவு தேவைப்படுகிறது. மண்புழுக்கள் செய்த வேலையைத் தற்போது மனிதர்கள் செய்கிறார்கள்.

உழவே செய்யாத நிலத்தில் டன் டன்னாக மண்புழு உரத்தைக் கொட்டினாலும் மண்புழுக்களைப் பார்க்க முடியாது.

அந்தக் காலத்தில் ஒரு பயிர் முடிந்தவுடன், அடுத்த பயிர் செய்ய ஆறு மாதங்கள் ஆகும். அதுவரை நிலம் பயிரில்லாமல் இருக்கும். அப்படிக் காலியாக இருக்கும் நிலத்தில் நிறைய நுண்ணுயிர்கள் உருவாகியிருக்கும். குறிப்பாக, தை மாதம் அறுவடை முடிந்த பிறகு ஆடிப்பட்டம் வரை இந்த இடைவெளி இருக்கும். தொடர்ந்து பயிர் செய்தால் மகசூல் குறையும் என்பதாலும், மண்ணை ஊட்ட மேற்றுவதற்காகவும் இந்த இடைவெளிவிட்டார்கள். தற்போது தொடர்ந்து பயிர் செய்வதால் இடைவெளியே இல்லாமல் போய்விட்டது. வறட்சி காரணமாக மூன்று மாதம் நிலத்தைப் பயிர் செய்யாமல் வைக்கவேண்டிய சூழல் உருவானதால், நிலத்துக்குச் சற்று ஓய்வு கொடுக்கிறோம். ஆக, இந்த நேரத்தில் மண்புழுக்கள் செய்த வேலையை நாம் செய்ய வேண்டும்.

கோடை உழவு செய்யும் முறை!

நிலத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவு, குறுக்கு வசத்திலிருக்க வேண்டும். இப்படி நான்கு உழவு செய்ய வேண்டும். குறுக்கு உழவு செய்யாமல் நேர்கோடாக உழவு செய்தால், மழை பெய்யும்போது மேட்டுப் பகுதியில் இருக்கும் சத்துகள் தாழ்வான பகுதிக்குப் போய்விடும். குறுக்கு உழவு இருந்தால் சத்துகள் ஆங்காங்கே தடுக்கப்படும்; மழைநீரும் பூமிக்குள் இறங்கும். கோடையில் இரண்டு மழை கிடைக்கும். முதல் மழையிலேயே உழவு செய்துவிட வேண்டும். அப்போதுதான் இரண்டாவது மழை நீரை மண்ணுக்குள் சேமிக்க முடியும்.

கோடை உழவு
கோடை உழவு

தரிசாக இருக்கும் நிலத்தில் கோடை வெப்பம் காரணமாக மண் சூடாகும். தோசைச் சட்டி அதிக சூடானால், தோசையில் ஆங்காங்கே ஓட்டை உருவாவதுபோல் சூரிய வெப்பத்தால் மண்ணின் மேற்பகுதியில் ஆங்காங்கே வெடிப்புகளும் ஓட்டைகளும் ஏற்படும். வெப்பம் அதிகமாக அதிகமாக மேல் மண்ணிலுள்ள ஈரப்பதமும், சத்துகளும் அந்த ஓட்டைகள் வழியே வெளியேறி ஆவியாகிவிடும். கோடை உழவு செய்தால், இந்த ஓட்டைகள் அடைக்கப்பட்டு, மண் பொலபொலப்பாகும். பயிர்களின் வேர் செல்லும் ஆழத்தில் ஈரம் காக்கப்படும். அதனால் கோடை உழவுக்கு அடுத்து சாகுபடி செய்யும் பயிர்களுக்குத் தேவையான சத்துகளையும் ஈரப்பதத்தையும் நிலைநிறுத்த முடியும்.

‘‘எந்தக் கலப்பையைப் பயன்படுத்தினாலும் ‘ஆழ உழவு செய்யுங்கள். அதையும் கோடைக்காலத்தில் செய்யுங்கள்.’ ’’

மண் கட்டமைப்பு சீராகும்!

உதாரணமாக, சாக்பீஸை தண்ணீரில் போட்டால் குமிழ் குமிழாக வரும் அல்லவா... அதே நேரம் சாக்பீஸை உடைத்துப் பொடியாகப் போட்டால் அது தண்ணீரை உறிஞ்சி, தண்ணீரில் கலந்துவிடும். நிலமும் சாக்பீஸ்போலத்தான். அதைப் பொடியாக்கும் செயல்தான் கோடை உழவு. இதனால் குளிர்ச்சி, வெப்பம் இரண்டும் கிடைக்கும் நிலையில் சீர்கெட்டுப்போன மண் கட்டமைப்புகள் சீராகும். கோடை உழவு செய்த பிறகு, உடனே மழை வந்து விடாது. அந்தக் காலகட்டத்தில் வெயில் மண்ணில்படும். காற்றிலிருக்கும் வெப்பத்தைவிட, காற்றுவெளிக்கும் மண்ணுக்கும் இடையே ஓரடி இடைவெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும். அங்கு மண் சூடாக இருக்கும். இரவு நேரத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாகும். சூரிய வெப்பம் மறைந்த பிறகு, காற்றுவெளியில் வெப்பம் குறைந்த பிறகு காற்றில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜன், நைட்ரஜன் உள்ளிட்ட சத்துகள் பூமியை நோக்கி இறங்கும். அப்போது அந்தச் சத்துகளை மண் உள்வாங்கிக்கொள்ளும். உழவு இல்லாமல் மண் கட்டாந்தரையாக இருந்தால், காற்றிலுள்ள சத்துகள் மண்ணுக்குள் போக வாய்ப்பில்லாமல் போய்விடும். எனவே, பூமியைக் கிளறிவிட்டு, மண்ணைப் பொலபொலப்பாக்கி, காற்றிலுள்ள சத்துகளை மண்ணில் நிலைநிறுத்துவதுதான் கோடை உழவிலுள்ள அறிவியல்.

மண்ணைக் கிளறிவிட்டவுடன் மண்ணின் ஆழத்திலுள்ள சத்துகள் மேல் மண்ணுக்கு வருகின்றன. காற்றிலுள்ள சத்துகளும் உறிஞ்சப்பட்டு உள்ளே போகின்றன. இதனால் மண் ஊட்டமேற்றப்படுகிறது. அடுத்து, சாகுபடி செய்யும் பயிரில் நல்ல மகசூல் கிடைக்கிறது. உழவு செய்வதால் அங்கக கரிமச் சிதைவு நடக்கும். மண்ணில் இருக்கக்கூடிய கார்பன், நைட்ரஜன் எல்லாம் சிதைந்து பயிர் எடுக்கும்விதத்தில் சேகரமாகும். இதற்கு முன்பாகச் செய்த பயிர்களுக்குக் கொடுத்த இடுபொருள்களின் வேதியியல் தேக்கம், பூச்சிக்கொல்லிகளின் நச்சுகள், பயிர்கள் வெளியேற்றும் நச்சுகள் ஆகியவை பயிரின் அடிப்பகுதியில் அல்லது மண்ணில் இருக்கும். பல நிலங்களில் விதை முளைக்காமல் போக அந்த நச்சுகளும் ஒரு காரணம். ஆக, அந்த நச்சுகளை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம்தான் கோடை உழவு. மண்ணைக் கிளறிவிடும்போது வெப்பமும் குளுமையும் மாறி மாறி நிகழும் சூழலில், மேலே வரும் நச்சுகள் மேல் மண்ணின் தொடர்பைத் துண்டித்து, காற்றுவெளியில் கலந்துவிடும்.

பூச்சிகளைக் குறைக்கலாம்... களைகளை அழிக்கலாம்!

கடைசியாகப் பயிர் செய்த பயிரைத் தாக்கிய பல்வேறு பூச்சிகளின் புழுக்கள், முட்டைகள், கூட்டுப்புழுக்கள் அனைத்தும் மண்ணிலிருக்கும். கோடை உழவு செய்யும்போது, மண்கண்டம் புரட்டப்படும் போது அவை மேல்மண்ணுக்கு வரும். காலை அல்லது மாலை வேளையில்தான் உழவு செய்வோம். அப்போது கலப்பைக்குப் பின்னால் வரும் பறவைகள் அந்தப் புழு, பூச்சிகளை அழித்துவிடும். நூற்புழுக்களால் சாகுபடியில் பெரும் சிக்கலைச் சந்திக்கிறார்கள் விவசாயிகள். கோடை உழவு மூலமாக மண்ணில் மாறுபட்ட இரு வெப்பநிலைகளை உருவாக்குவதால் இந்த நிலைகளை எதிர்கொள்ள முடியாமல் நூற்புழுக்களும் அழியும். கடலைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பெரிய பிரச்னையாக இருப்பது சிவப்புக் கம்பளிப்புழு. அதன் கூட்டுப்புழு அனைத்தும் மண்ணில் இருக்கும். கோடை உழவு செய்யும்போது அவை அழிந்துவிடும். தற்போதைய இயற்கை விவசாயத்தில் நாம் களைகளைக் கட்டுப்படுத்த உற்பத்திச் செலவில் 18-20 சதவிகித செலவைச் செய்கிறோம். களைச்செடிகளின் விதைகள் போதுமான மண்ணின் ஈரப்பதம், தகுந்த சூழல் கிடைக்கும் வரை 12 ஆண்டுகள் கழித்துக்கூட முளைக்கும். கோடை உழவு செய்து மண்ணைக் கிளறிவிடாமலிருந்தால், மண்ணின் அடியில் நடுத்தர ஈரத்திலேயே அந்த விதைகள் உயிர்ப்போடு இருக்கும். அடுத்து மழை கிடைத்தவுடன் முளைக்கும். எந்த விதையும் உயிர்ப்போடு இருக்க 6 முதல் 10 சதவிகிதம் ஈரப்பதத்தை விதைகள் (விதை ஈரப்பதம்) கொண்டிருக்க வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் முளைக்காது. கோடை உழவு செய்யும்போது களைச் செடிகளின் விதை மண்ணின் மேற்பகுதிக்கு வந்து, வெயிலில் காய்ந்து, ஈரப்பதம் இரண்டு சதவிகிதத்துக்குள் அல்லது முற்றிலும் விதை ஈரப்பதம் குறைந்து போய்விடும். அதன் பிறகு அந்த விதைகள் முளைக்காது. இவை கோடை உழவினால் மட்டுமே கிடைக்கும் நன்மைகள்.

வளிமண்டலச் சத்துகளையும் அறுவடை செய்யலாம்!

கோடை மழை வழக்கமான மழைபோல் இருக்காது. பொதுவாக, காற்றுவெளியில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருக்கும். நீண்ட காலத்துக்குப் பிறகு பெய்யும் முதல் மழையில் அந்தச் சத்துகள் கலந்து பூமிக்கு வரும். கோடை உழவு செய்துவைத்த மண்ணில் இந்தச் சத்துகளைச் சேமிக்க முடியும். கோடை மழையையும் நிறைவாக அறுவடை செய்யலாம். முதல் நாள் கிடைக்கும் மழையைப் பயன்படுத்தி உழவு செய்துவிட வேண்டும். தொடர்ந்து அடுத்தடுத்து கிடைக்கும் மழையில் வளிமண்டலத்திலிருந்து மழையோடு பூமியில் இறங்கும் சத்துகளை மண்ணில் சேமிக்கலாம்.

கோடை உழவு
கோடை உழவு

கோடை உழவு செய்யாத நிலத்தில் மண்புழுக்கள் தங்காது!

மண்ணிலுள்ள சமையல்காரர்களான நுண்ணுயிர்களுக்குச் சிறந்த வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுக்கிறது கோடை உழவு. வேர்ப் பகுதியில் வாழக்கூடிய அத்தனை நுண்ணுயிர்களுக்கும் தேவையானவை கிடைத்துவிடும். கோடை உழவு, ஆழமான உழவு. உளிக்கலப்பை , சட்டிக்கலப்பை இவை இரண்டும்தான் கோடை உழவு செய்யும் கலப்பைகள். மழைக்காலத்தில் உழவு செய்யும்போது, ஈரப்பதம் இருப்பதால் சாதாரண உழவாக இருக்கும். கோடையில்தான் ஆழமாக உழ முடியும். ஒரு வயலில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கோடை உழவு செய்தால், அந்த நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். கோடை உழவே செய்யாத ஒரு நிலத்தில் டன் டன்னாக மண்புழு உரத்தைக் கொட்டினாலும் மண்புழுக்களைப் பார்க்க முடியாது.

கோடை உழவுக்கும் உண்டு வரலாறு!

`உழவியலின் தந்தை’ எனப்படுபவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஐட்ரோடெல் என்ற பீட்டர் டே க்ரேசீன்ஸீ (Pietro de Crescenzi). 1223-ம் ஆண்டுப் பிறந்தவர். இத்தாலியின் போலோக்னா (Bologna) பல்கலையில் விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். `கோடை உழவு மூலமாக மண்ணுக்குக் குளிர்ச்சியும் வெப்பமும் ஒரே நேரத்தில் கிடைக்கும்’ என்பதை முதன்முதலில் கண்டறிந்து உலகுக்கு உணர்த்தியவர். உழவியலின் சாராம்சங்களையும், அது மிக மிக முக்கியமான செயல் எனவும் பதிவுசெய்தவர்.

கோடை உழவு
கோடை உழவு

3,500 வருடங்களுக்கு முன்னர், `கோடைக்காலத்தில் மண்ணைக் கிளறிவிட வேண்டும்’ என்று சொன்னவர்கள் எகிப்தியர்கள். அவர்களுக்கு வெங்காயம்தான் முக்கிய உணவு. அதை விதைப்பதற்கு ஒரு குச்சியின் அடிப்பகுதியில் ஆப்பு மாதிரி ஒன்றை மரக்கட்டையில் செய்து பயன்படுத்தினார்கள். மழைக்காலத்தில் வெங்காயம் அழுகிவிடும் என்பதால், கோடைக்காலத்தில்தான் சாகுபடி செய்வார்கள். அவர்களில் ஒருவர் ஒவ்வொரு குழியாகக் குத்தி நடவு செய்வதற்கு பதிலாக, ஆப்பைவைத்து தள்ளுவண்டி தள்ளுவது போல, மண்ணில் நேர்கோடுபோல இழுத்துக்கொண்டு போயிருக்கிறார். அதில் வெங்காயத்தைவைத்து மண்ணைப் போட்டு மூடினார். அதன் பிறகு இழுக்கும்போது களைச்செடிகள் சாய்ந்தன. `குழியாகக் குத்தி நடுவதைவிட, இழுத்து நடவு செய்யும்போது அதிக வெங்காயமும் விதைக்கலாம்; களைகளும் கட்டுப்படும்’ என்பதைத் தெரிந்துகொண்டார்கள். பிறகு, அந்த முறையைப் பெரும்பாலானோர் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அது படிப்படியாக மேம்பட்டு, உழவு செய்யும் முறை உருவானதாகப் பதிவுகள் பல.

1,800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் சிந்துசமவெளிப் பகுதியில் கோடைக்காலத்தில் உழவைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். கி.மு.200 முதல் கி.பி.220-க்கு இடைப்பட்ட காலத்தில் நவீன உழவியல் முறைகள் சீனாவில் தொடங்கின. அதன் தொடக்கம்தான் அச்சுப் பலகைக் கலப்பை (Mouldboard Plough). மண்ணை வெட்டி நீளமாக இழுத்துச் செல்லும் முறை. இது மண்ணில் ரிப்பன் மாதிரி கரை உருவாக்கும். அந்தக் கரையில் விவசாயம் செய்வார்கள். அவர்களைப் பின்பற்றி ஐரோப்பாவுக்கும், அங்கிருந்து அமெரிக்காவுக்கும் சென்றது அந்த முறை. கிட்டத்தட்ட 18-ம் நூற்றாண்டில் இந்தத் தொழில்நுட்பம் அமெரிக்காவுக்குச் சென்றது.

கோடை உழவு
கோடை உழவு

1837-ம் ஆண்டு, திருந்திய கோடை உழவியல் முறைகளை இல்லினாய்ஸ் பிளாக்ஸ்மித் மற்றும் ஜான்டீர் ஆகிய இருவரும் உருவாக்கினார்கள். உடைந்துபோன இரும்புத் துண்டுகளை வாங்கி வந்து, அவற்றில் கட்டைகளைப்போல பிரம்பில் செய்த ஆப்பு சொருகி உழவுக்குப் பயன்படுத்தினார்கள். 1855-ம் ஆண்டு ஜான்டீர் முதன்முதலில் கலப்பைக்காக ஒரு கம்பெனியைத் தொடங்கினார். உளிக்கலப்பையை அந்த நிறுவனம் மூலம் விற்பனை செய்தார். 1856-ம் ஆண்டு மட்டும் 13 ஆயிரம் கலப்பைகள் விற்பனையாகின. கலப்பைகளை இழுத்துச் செல்ல முதலில் மாடுகளைப் பயன்படுத்தவில்லை. மனிதர்களைத்தான் பயன்படுத்தினார்கள். அதன் பிறகு குதிரையில் தொடங்கி கோவேறுக் கழுதை, கழுதை என இறுதியில் மாட்டில் வந்து முடிந்திருக்கிறது.

கோடை உழவு
கோடை உழவு

‘கோடை உழவு கோடி நன்மை’, ‘சித்திரை மாச உழவு பத்தரை மாசத் தங்கம்’ என்பது நம் முன்னோர் வாக்கு. அதைப் பெரும்பாலான விவசாயிகள் நடைமுறைப்படுத்துவதில்லை. `இந்தியாவின் நவீன உழவியலின் தந்தை’ எனப்படுபவர் நரேந்திர செளத்ரி. அவர் கண்டுபிடித்ததுதான் இன்றைக்கும் சிறு, குறு விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் ஒற்றை உளிக்கலப்பை. அந்தத் தொழில் நுட்பத்தைத்தான் நாம் நாட்டுக் கலப்பையின் மூலம் பயன்பெறக் கற்றுக்கொண்டோம்; மாட்டு உழவுக்குப் பயன்படுத்துகிறோம். `நாட்டுமரக்கலப்பை மூலம் உழவு செய்யலாம்’ என்று சொன்னது அவர்தான். அதன் பிறகு கலப்பையில் பல்வேறு விதங்கள் வந்துவிட்டன. எந்தக் கலப்பையைப் பயன்படுத்தினாலும் ‘ஆழ உழவு செய்யுங்கள். அதையும் கோடைக்காலத்தில் செய்யுங்கள்’ என்பதுதான் அவரது கோட்பாடு. இன்னும் கிராமங்களில் நாட்டுக் கலப்பைகளைத்தான் பயன்படுத்துகிறோம். குறிப்பாக, மேலூர் கலப்பைகள் அதிகம் பயன்பாட்டில் இருக்கின்றன. எனவே, ‘உழவர்களே... இயற்கை கொடுக்கும் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் கோடை உழவு செய்யுங்கள். அதையும் ஆழமாகச் செய்யுங்கள்.’

மண்ணை வளமாக்கும் மண்புழுக்கள் பற்றி அடுத்த இதழில்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு