Published:Updated:

இயற்கை வேளாண்மை : 7 மண்ணை வளமாக்கும் மண்புழு!

தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

ஆய்வுப் பார்வையும் அறிவியல் உண்மையும்!

இயற்கை வேளாண்மை : 7 மண்ணை வளமாக்கும் மண்புழு!

ஆய்வுப் பார்வையும் அறிவியல் உண்மையும்!

Published:Updated:
தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
மாட்டுச் சாணம், பண்ணைக் கழிவுகளைக் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் மூலம் மட்கவைத்துக் கிடைப்பது தொழுவுரம்.

நுண்ணுயிரிகளுக்கு பதிலாக மண்புழுக்களை வைத்து உரமாக்குவது மண்புழு உரம். உலகம் முழுவதும் 3,200 வகை மண்புழுக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப வகை மாறுபடும். இந்தியாவைப் பொறுத்தவரை நான்கு வகையான மண்புழுக்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. இயற்கையாக மண்ணிலுள்ள மண்புழுக்கள் ஓரடிக்குக் கீழேதான் பெரும்பாலும் இருக்கும். காய்கறிப் பயிர்களின் வேர் அதிகபட்சம் ஒன்றரை அடி ஆழம் போகும். அந்த ஆழத்துக்குக் கீழேயுள்ள மண்புழுக்களை வைத்து உரம் தயாரிக்க அதிக காலமாகும். அதே நேரத்தில் ஓரடிக்குள் உள்ள மண்புழுக்களை உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், மண்புழு உரக்கூடங்கள் அமைத்து நம் பகுதிகளில் விரைவாக மண்புழு உரம் தயார் செய்வதற்காக ஐந்து வகையான மண்புழுக்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. ‘ஐசீனியா ஃபெடிடா’ (Eisenia Fetida) என்ற சிவப்பு வளையங்கள்கொண்ட மண்புழு. ‘ஐசீனியா ஹார்ட்டன்ஸிஸ்’ எனும் ஐரோப்பிய வகை மண்புழு, ‘யூடிரிலஸ் யூஜீனியே’ (Eudrilus Eugeniae) எனும் ஆப்பிரிக்க வகை. ‘லும்பிரிகஸ் டெரஸ்ரிஸ்’ எனும் கனடா வகை மண்புழு.

மண்புழு உருவாகுதல்...
மண்புழு உருவாகுதல்...

‘பெரியானிக்ஸ் எஸ்கவேட்டஸ்’ எனும் ‘புளூ வார்ம்’ ஆகியவைதான் அந்த ஐந்து வகை மண்புழுக்கள். மற்ற மண்புழுக்கள் மண்ணில் மேலே, கீழே சென்று வரும். ஆனால், இந்த ‘புளூ வார்ம்’ மேலே, கீழே மட்டுமல்லாமல், பக்கவாட்டிலும் போய் வரும். இதன் மூலம் தயாராகும் உரத்தின் வேகம் அதிகம். தொட்டியில், திறந்தவெளியில் என அனைத்துச் சூழலிலும் சிறப்பாகச் செயல்படுவது ‘ஐசீனியா ஃபெடிடா’ வகை மண்புழுக்கள்தான். சில வகை மண்புழுக்கள் நான்கு முதல் எட்டு ஆண்டுகள் வரை உயிரோடிருக்கும். அதே நேரம் அவை வாழத் தகுந்த சூழ்நிலைகள் இல்லையென்றால் விரைவில் இறந்துவிடும். ஆனால், ஐசீனியா ஃபெடிடா வகை மண்புழுக்கள் எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை உயிர் வாழும்; கழிவுகளை விரைவில் உரமாக்கும். எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த வகை மண்புழுக்கள்தான் உரம் தயாரிக்கச் சிறந்தவை. இதற்குச் சமமான திறனுடையவை ‘லும்பிரிகஸ்’ ரக மண்புழுக்கள். இவை ஆறு ஆண்டுகள் வரை உயிர் வாழும். இந்த வகை மண்புழுக்கள் தற்சமயம் அதிகம் கிடைப்பதில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மண்புழுக்கள் சாணம், இலைகளை அப்படியே உண்ணாது. ஓரளவு மட்க வைக்கப்பட்டவற்றைத்தான் உண்ணும். பலர் மண்புழு உரத்தொட்டியில், பண்ணையில் கிடைக்கும் குச்சி, மட்டைகள் அனைத்தையும் போடுகிறார்கள். அப்படிப் போடக் கூடாது. மட்கவைத்ததைக் கொடுத்தால்தான் மண்புழுக்கள் உணவாகக்கொண்டு அதன் எச்சம் மூலம் நல்ல உரம் கிடைக்கும்.

6 இன்ச் ஆழத்தில்தான் நன்றாக வளரும். அது நகர்ந்துகொண்டே போகும். எப்போதும் உணவெடுத்துக்கொண்டே இருக்கும். மண்புழு உறங்காது. இரவு நேரங்களில் உண்ணும் வேகம் குறையும். உணவு அதன் வயிற்றுக்குள் போய், கழிவாக வெளியே வரும். அதுதான் மண்புழு உரம். அது உள்ளே தள்ளும்போது, உடம்பிலிருந்து ஒரு திரவம் சுரக்கும். மண்புழுவின் உடலில் 120 முதல் 170 வளையங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு வளையத்திலும் உள்ளே போகும் உணவு, வளையங்களின் சுருங்கி விரிதல் செயலின் மூலம் உள்ளே நகரும். அப்போது அந்தத் திரவம் மூலமாக வேதியியல் மாற்றங்கள் நிகழும்.

இயற்கை வேளாண்மை : 7 மண்ணை வளமாக்கும் மண்புழு!

படுக்கைகள் ஈரமாக இருக்க வேண்டும்!

‘சாணத்தை மட்கவைத்து வயலுக்குப் போட்டால் போதுமே... மண்புழு உரத்துக்குத் தொட்டி கட்டி, 60 நாள்கள் காத்திருந்து எதற்காக மெனக்கெட வேண்டும்?’ என்ற கேள்வி எழும். சாணத்தை மட்கவைத்து அப்படியே பயிர்களுக்கு இடுவதைவிட, மண்புழு வயிற்றுக்குள் போய் வந்த பிறகு இடும்போது நுண்ணுயிரிகளின் ஆற்றல் பெருகுகிறது. அதனால் நீடித்த நிலைத்த ஆற்றலைக் கொடுக்கக்கூடிய சக்தியாக அந்த உரம் மாறுவது மண்புழு வயிற்றுக்குள் போய் வருவதால் நிகழ்கிறது. நாம் உரத்தை ஊட்டமேற்றுகிறோம் அல்லவா... அதுபோல, மட்கிய சாணத்தை மண்புழு தனது வயிற்றில் ஊட்டமேற்றி அனுப்புகிறது.

தண்ணீர் தெளிக்கப்படுகிறது...
தண்ணீர் தெளிக்கப்படுகிறது...

மண்ணிலுள்ள சத்துகள், பாக்டீரியா, நுண்ணுயிரிகள் அனைத்தும் அதிக வீரிய செயல்திறனைப் பெறுகின்றன. தொழுவுரங்களைவிட, மண்புழு உரம் போடுவதால் மண்ணில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் 10-20 மடங்கு பெருகும். மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கைகள் எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும். மண்புழு நகர்ந்து கொண்டே இருக்கும். அப்போது ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்திருந்தால் அதன் தோலில் பிரச்னை ஏற்படும்.

மண்புழுவுக்குக் கண் கிடையாது; நுரையீரல் கிடையாது; இதயம் கிடையாது.

ஆனால் ‘ஆர்கெஸ்’ எனும் உறுப்பு இதயத்தின் வேலையைச் செய்து உடல் முழுவதும் ரத்தத்தைச் செலுத்தும். மண்புழு தோல் மூலமாகத்தான் சுவாசிக்கும். அது நகரும் இடம் பொலபொலப்புடன் இல்லாமல் கடினமாக இருந்தால் தோல் காயப்படும். அதனால் அது இறந்துபோகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் எப்போதும் ஈரப்பதம் 40-60 சதவிகிதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் இருக்க வேண்டும் என்பதற்காக அதிக தண்ணீரும் மண்புழு உரத்தொட்டியில் இருக்கக் கூடாது. தண்ணீர் சொதசொதவென இருந்தால் ஆக்ஸிஜன் இல்லாமல் போய்விடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கண் இல்லாத மண்புழுக்கள் எப்படி நகர்ந்து போகின்றன?

ஒளியை உள்வாங்கும் தன்மையுள்ள திசுக்கள் மண்புழுவின் உடம்பில் இருக்கின்றன. அவை எந்த இடத்தில் அதிக இருட்டு இருக்கிறதோ, அதை நோக்கிப் பயணித்துப் பின் வெளிச்சத்தை நோக்கி நகரும். வாயில் சுரக்கும் பிசுபிசுப்பான ‘மியூகஸ்’ எனும் ஒரு திரவம் அதன் வழியாகத்தான் உள்ளே செல்லும் உணவைச் செரித்து, உரமாக வெளியேற்றுகிறது. மண்புழுவில் ஆண், பெண் கிடையாது. ஒரே புழுவில் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இரண்டும் இருக்கும். ஒரே புழு ஆணாகவும் இயங்கும், பெண்ணாகவும் இயங்கும். இது ஓர் இருபால் உயிரி. மண்புழுவின் உடலில் ‘மெட்டாமெரிசம்’ எனப்படும் 120 முதல் 170 வளையங்கள்வரை இருக்கும். அவற்றில் 14-வது வளையத்தில்தான் பெண் உறுப்பு இருக்கும். 15-வது வளையத்தில் ஆணுறுப்பு இருக்கும். ஒரே உடலில் இரண்டு உறுப்புகள் இருந்தாலும், அதனால் சுயமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது. மற்றொரு மண்புழுவுடன் இணைந்தால்தான் இனப்பெருக்கம் ஆகும். இதுதான் இயற்கையின் அற்புதம்.

மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டிகள்...
மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டிகள்...

இரண்டு புழுக்கள் இணையும்போது விந்தணுக்களை மாற்றிக்கொள்ளும். பெண் உறுப்பில் விந்தணுக்கள் சென்றவுடன் கக்கூன் (முட்டைக் கூடுகள்) உருவாகும். ஒரு கக்கூன் 3.2 முதல் 4 மில்லிமீட்டர் நீளம், 2 முதல் 2.7 மி.மீட்டர் அகலம் இருக்கும். ஒரு கக்கூன் 12.6 மில்லிகிராம் எடையில் இருக்கும். ஒரு கக்கூனுக்குள் இரண்டு முதல் ஐந்து முட்டைகள் வரை இருக்கும். இனப்பெருக்கம் நடந்ததிலிருந்து முட்டை உருவாக 27 நாள்கள் ஆகும். நன்றாக முதிர்ச்சியடைந்த ஒரு மண்புழு ஒரு வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று கக்கூன் வரை வெளியேற்றும். அப்படி வெளிவரும் ஒவ்வொரு கக்கூனுக்குள்ளிருந்தும் இரண்டு முதல் ஐந்து இளம் குட்டிப் புழுக்கள் வெளிவரும். முட்டை பொரிந்து மண்புழுக் குட்டிகள் வெளிவர இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும்.

சேகரிக்கப்படும் மண்புழுக் குளியல் நீர்...
சேகரிக்கப்படும் மண்புழுக் குளியல் நீர்...

இதன் பொரிப்புத் திறன் 73 சதவிகிதம். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் வெள்ளை நிறத்தில் அரை இன்ச் முதல் ஒரு இன்ச் நீளத்திலிருக்கும். உடலில் வளையங்கள் முழுமையாக உருவாகியிருக்காது. ஒரு புழு பிறந்ததிலிருந்து 60 முதல் 90 நாள்களில் பெரிய புழுவாக மாறிவிடும். ஆனால், முழுமையான செயல்பாட்டுக்கு வர ஓராண்டு ஆகும். அதே நேரம் 6 முதல் 10 வாரங்களில் இனப்பெருக்கத்துக்குத் தயாராகிவிடும். அதாவது வயதுக்கு வந்துவிடும்.

அதனால்தான் மண்புழுக்கள் 60-90 நாள்களில் தங்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குகின்றன.மண்புழு தன் எடையைவிட அதிகம் உண்ணும்.

மண்புழுக் குளியல் நீர்

மண்புழு உரம் தயாரிக்க அறிவியல் முறைப்படி தொட்டிதான் சரியான முறை. தொட்டி மூன்று மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் உயரத்தில் இருக்க வேண்டும். கீழ்ப்பகுதியில் ஒரு பக்கம் சாய்வாகத் தொட்டியை அமைக்க வேண்டும். சாய்வு சதவிகிதம் 2-4 ஆக இருத்தல் நல்லது. அப்படி அமைத்தால் அதிக தண்ணீர் இருந்தாலும் வழிந்தோடிவிடும். தொட்டியில் 40 முதல் 60 சதவிகிதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். தொட்டியின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் வெளியேறும் இடத்தில் ஒரு துளை வைக்க வேண்டும். அந்தத் துளையில் ஓட்டுத் துண்டை வைத்துவிட வேண்டும். அப்படி வைத்தால் ஒருவேளை தெரியாமல் அதிக தண்ணீர் ஊற்றிவிட்டாலோ அல்லது மழைச்சாரல் மூலம் தண்ணீர் விழுந்தாலோ தண்ணீர் மட்டும் கசிந்து வெளியே வரும். தொட்டியில் முதலில் மூன்று இன்ச் உயரத்துக்குத் தென்னைநார்க் கழிவைப் போட வேண்டும் (ரசாயனங்களை நீக்கிய கழிவு) அல்லது மரத்தூளை அதே உயரத்தில் போடலாம். அதற்கு மேல் முக்கால் இன்ச் ஜல்லிக் கற்களை மூன்று சென்டிமீட்டர் போட வேண்டும். அதற்கு மேல் பெருமணலைக் கொட்டி, ஜல்லிக் கற்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை மறைக்க வேண்டும். இவை மூன்றும் வடிகட்டியாகச் செயல்படும். இப்படி வடிகட்டி வெளியேவரும் நீர்தான் மண்புழுக் குளியல் நீர் (வெர்மி வாஷ்). இதையும் இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தலாம். இப்படி வடிகட்டும் முறையில் வருவதுதான் முறையான மண்புழு உரக்குளியல் நீர். இதைச் செய்யாமல் அப்படியே கழிவுகளைப் போட்டால், அந்தத் தொட்டியில் தெளிவான முறையான மண்புழு உரக்குளியல் நீர் கிடைக்காது.

இயற்கை வேளாண்மை : 7 மண்ணை வளமாக்கும் மண்புழு!

பசும் இலைதழைகளைப் பயன்படுத்தக் கூடாது!

வடிகட்டுவதற்காகக் கொட்டிய மணலுக்கு மேல், இரண்டடி உயரத்துக்கு மட்கிய தொழுவுரத்தைப் போட வேண்டும். அதற்கு மேல்தான் மண்புழுக்களைவிட வேண்டும். இப்படித் தயார் செய்த தொட்டியில் இரண்டு கிலோ மண்புழுக்களை விட வேண்டும். அதற்கு மேல் புழுக்கள் மறைவதற்காகத் தொழுவுரத்தைப் பரப்பிவிட வேண்டும். பல விவசாயிகள் தொழுவுரம் போடாமல் நேரடியாகப் பண்ணைக் கழிவுகளை அள்ளி உள்ளே போட்டு விடுகிறார்கள். புழுவுக்கு வாய் கிடையாது. பல் கிடையாது. பலர், `பண்ணைக் கழிவுகளை அள்ளிப்போட்டு, அதில் தண்ணீர் தெளித்தால் போதும்; மண்புழு பெருகிவிடும்’ என்று நினைக்கிறார்கள். அறிவியல் புரிந்துணர்வு இல்லாமல், தொழுவுரம் போடாமல், பண்ணைக் கழிவுகளை மட்டும் போட்டு அதில் மண்புழுவை விடுகிறார்கள். உள்ளே போகும் புழுக்களால் இலைதழைகளைக் கடித்து உண்ண முடியாது.

அதே நேரம் தொழுவுரம் இருந்தால் அதை உண்டு, தங்கள் பணியைச் செய்யத் தொடங்கும். பண்ணைக் கழிவுகள் போடுவதாக இருந்தால் ஓரடிக்குத் தொழுவுரம் போட்டு, அதற்கு மேல் பண்ணைக் கழிவுகளைப் போட வேண்டும். பசும் இலைதழைகளாக இல்லாமல், காய்ந்த இலைதழைகளாக இருக்க வேண்டும். இவை நாம் தினமும் ஊற்றும் நீரில் நனைந்து சிதையும்போது மண்புழுக்களுக்கு உணவாக்கப்படும். முறையாக அமைத்த தொட்டியில் 60 நாள்களில் உரம் தயாராகிவிடும். அதே நேரம் உள்ளேவிடும் இரண்டு கிலோ புழுக்கள் நான்கு கிலோ புழுக்களாகப் பெருகிவிடும்.

மண்புழு உரத்திலுள்ள சத்துகள், அவற்றால் மண்ணில் ஏற்படும் நன்மைகள் குறித்து அடுத்த இதழில்...

வளர்ச்சி ஊக்கியாகும் மண்புழு உரக் குளியல் நீர்!

ஞ்சகவ்யாவைப்போல மண்புழு உரக் குளியல் நீரையும் செடிகளுக்குத் தெளிக்கலாம். வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்துவதாக இருந்தால், ஒரு லிட்டர் மண்புழு உரக் குளியல் நீரில், ஒன்பது லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்துவதாக இருந்தால், ஒரு லிட்டர் மண்புழுக் குளியல் நீருடன், ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், எட்டு லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம்.

10 அடி நீளமான மண்புழு

ண்புழுவின் அகலம் ஒரு மி.மீ., நீளம் 10 செ.மீ இருக்கும். டெரிஸ்வாக்கரிஸ், ஜெயன்ட் ஜிப்ஸ்லாண்ட் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஜெயன்ட் ஆகிய மண்புழுக்கள் ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் மூன்று மீட்டர் (10 அடி) நீளம் வரை வளர்கின்றன. அவ்வளவு நீளமான மண்புழுக்கள் நம் நாட்டில் இல்லை. அமேசஸ் வகை மண்புழு, உலகிலேயே நீளமான மண்புழு. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மேகாங்கு ஆற்றுப் படுகையில் இவை அதிகம் இருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism