Published:Updated:

1971-ல் 1.2% 2021-ல் 0.4% ரசாயனத்தால் சரிந்த மண்வளம்... இயற்கையால் சரிப்படுத்தும் மத்திய அரசு!

சோமசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
சோமசுந்தரம்

முயற்சி

1971-ல் 1.2% 2021-ல் 0.4% ரசாயனத்தால் சரிந்த மண்வளம்... இயற்கையால் சரிப்படுத்தும் மத்திய அரசு!

முயற்சி

Published:Updated:
சோமசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
சோமசுந்தரம்

யற்கை வேளாண்மை காலத்தின் கட்டாயம் என்பதை அரசாங்கமும் மக்களும் பரவலாக உணரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்) இயற்கை வேளாண்மை குறித்து புதிய பாடத் திட்டத்தை உருவாக்க 8 பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. பேராசிரியர் ஜெயசங்கர், தெலங்கானா மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிரவீன் தலைமையில் அந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை பேராசிரியர் சோமசுந்தரமும் இடம் பெற்றுள்ளார்.

இது தொடர்பாகப் பேராசிரியர் சோமசுந்தரத்திடம் பேசினோம். “கடந்த 30 வருஷமா நாடு முழுக்க அங்கக வேளாண்மை ஆராய்ச்சியில ஈடுபட்டிருக்கேன். விவசாயி களோடு தொடர்பில் இருக்கிறேன். என்னோட அனுபவத்தில இயற்கை வேளாண்மை பற்றிப் புத்தகங்கள் மூலமா தெரிஞ்சுகிட்டதைவிட, விவசாயிககிட்ட இருந்து கற்றுக்கொண்டதுதான் அதிகம். நேரடியாக வயலுக்குப் போய் அவங்க தேவைக்கேற்ப, என்னோட ஆராய்ச்சியை அமைச்சிக்குவேன்.

சோமசுந்தரம்
சோமசுந்தரம்

அடிப்படையில் மனிதன் இயற்கையின் அங்கம்தான். நமது வசதிகளுக்காகச் சில வேலைகளைச் செய்யும்போது அது இயற்கைக்கு எதிராகப் போயிடுது. நம்ம முன்னோர்கள் நல்ல உணவைச் சாப்பிட் டாங்க. அது அவங்களுக்கு நல்ல ஆற்றலைக் கொடுத்துச்சு. உடல் உழைப்பும் சிறப்பா இருந்தது. இயற்கை இடுபொருள்கள் சார்ந்த உணவால், பெரிய அளவுக்கு நோய் தாக்குதலும் இல்லை. இப்ப நல்ல உணவு இல்லை. சூரியஒளியில் நம்ம உடம்பு படுற நேரம் குறைஞ்சிடுச்சு. மண்ணும், தண்ணியும் தான் இயற்கை. அதை வீணடிக்காம பாதுகாப்பதுதான் முக்கியம். இயற்கை பன்முகச் சூழல் எந்த வகையிலும் பாதிக்காம பார்த்துக்கணும்.

நாங்க படிக்கும்போது மாவுப் பூச்சி, கள்ளி பூச்சிபற்றிப் பெருசா படிக்கவே மாட்டோம். ஆய்வகத்தில் மட்டும்தான் அதோட மாதிரிகள் இருக்கும். ஆனா, இப்ப மாவுப் பூச்சி இல்லாத இடமே இல்லை. அந்த அளவுக்கு எல்லாப் பயிர்கள்லயும் மாவுப்பூச்சி வந்துடுச்சு. மக்கள் இயற்கை வேளாண்மையில இருந்து விலகிப் போயிட்டாங்க. ஒரு காலத்தில பஞ்சத்தால அறுசுவை உணவு கிடைக்காம சிறுதானியங்களைச் சாப்பிட்டு வாழ்ந்தாங்க. ஆனா, பசுமைப் புரட்சி காரணமாக இப்ப பஞ்சம் போயிடுச்சு.

ஒரு விஞ்ஞானியாகப் பசுமை புரட்சிக்கு நான் தலை வணங்குறேன். ஆனா, நல்ல உணவு கேள்விக்குறி யாயிடுச்சு. நல்ல உணவுன்னு சொல்றது நஞ்சு இல்லாத உணவு. உணவுல கடின உலோகங்கள் இருப்பதைத்தான் நஞ்சுன்னு சொல்றோம். உணவு மற்றும் கால்நடைகள்ல ‘கேட்மியம்’, ‘லெட்’, ‘நிக்கல்’ மாதிரியான கடின உலோகங்கள் செயற்கை முறை விவசாயத்தால உணவுப்பொருள்ல கலந்திடுது. அதனால உடலுக்குக் கேடு உண்டாகுது.

இதைத் தடுக்க, கர்நாடக மாநிலத்தில் 2,000 ஹெக்டேர் பரப்பளவுல இயற்கை வேளாண்மை யைச் செயல்படுத்த ஓர் திட்டம் கொண்டு வந்திருக்காங்க. ஆந்திராவில் சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண்மை கொள்கையைச் செயல்படுத்திட்டு வர்றாங்க.

தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள்ல ஒரு லட்சம் விவசாயிகள் இயற்கை வேளாண்மையில் இருப்பதாக அறிக்கைகள் சொல்லுது. இமாசலப் பிரதேசத்தை இயற்கை விவசாய மாநிலமா மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்துகிட்டு இருக்கு.

சோமசுந்தரம்
சோமசுந்தரம்

பொதுவா, மண்ணின் அங்கக கரிமம், காடுகளில் குறைந்தது 3 சதவிகிதம் இருக்கும். 1971 காலகட்டத்தில் சராசரியா 1.2 சதவிகிதம் அங்கக கரிமம் இருந்திருக்கு. ஆனா, வேளாண் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆராய்ச்சி, அங்கக கரிமம் 0.4-க்குக் கீழ் வந்துவிட்டதுனு சொல்லுது. மண்ணில் போதுமான உயிர் சத்து இல்லைங்கிறதுதான் இதோட அர்த்தம்.

இந்த நிலமையிலதான் இயற்கை விவசாயம் குறித்தான முழுமையான புரிதலுக்கு ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சி எடுத்திருக்கு. நானும், அந்தக் குழுவுல இருக்கேன். இந்தப் பாடத்திட்டத்தில் அறிவியல் ரீதியாக ஊர்ஜிதப்படுத்தப் பட்டவை, பாரம்பர்யமாகப் பின்பற்றப் பட்டவைனு எல்லாத்தையும் சேர்க்கப் போறோம். விதை நேர்த்தி, தற்சார்பு விஷயங்களையும் பாடத்திட்டத்தில சேர்க்க திட்டமிட்டிருக்கோம். விதையிலிருந்து அறுவடை வரைக்கும் செய்முறை பயிற்சி உட்பட நம்பிக்கை கொடுக்குற விதமா இந்தப் பாடத்திட்டம் இருக்கும். வேளாண்மை மட்டுமல்லாம, இயற்கை சார்ந்த வாழ்வியலைப் புரிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை அமைக்கப்போறோம்.

இந்தப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசும் முனைப்போடு இருக்கு. இந்தப் பாடத் திட்டத்தை வடிவமைக்க ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்திருக்காங்க. இனி வரும் காலத்தில் வேளாண் மாணவ மாணவிகள் இயற்கை விவசாயத்தின் நுணுக்கங்களை அறிந்துகொள்வதே இந்தப் பாடத் திட்டத்தின் நோக்கமாகும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism