Published:Updated:

வீட்டில் மழைநீர்ச் சேகரிப்பு, கழிவு நீரில் இயற்கை விவசாயம்!

நீர் மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
நீர் மேலாண்மை

நீர் மேலாண்மை

வீட்டில் மழைநீர்ச் சேகரிப்பு, கழிவு நீரில் இயற்கை விவசாயம்!

நீர் மேலாண்மை

Published:Updated:
நீர் மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
நீர் மேலாண்மை
டந்த மூன்று வருடங்களாக, தமிழகத்திலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக மாறியிருக்கிறது, கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி. இங்குள்ள மக்கள் குடிநீர் கிடைக்காமல் அல்லாடி வருகிறார்கள். இத்தகைய பூமியில், தனது வீட்டில் மழைநீர் சேமிக்கும் அமைப்பை ஏற்படுத்தி, ஒரு லட்சம் லிட்டர் நீரைச் சேமித்து அசத்தி வருகிறார், பாலசுப்ரமணியன்.

சமையலறை, குளியலறைகளில் பயன்படுத்திய பிறகு, வீணாகும் நீரை இயற்கை முறையில் சுத்திகரித்து, அந்த நீர் மூலம் வீட்டைச் சுற்றி இரண்டரை ஏக்கர் நிலத்தில் மரங்கள், பழ மரங்கள், காய்கறிச் சாகுபடி செய்து வருகிறார். தனது வீட்டைச் சுற்றியுள்ள தென்னை மரங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த பாலசுப்ரமணியனை, ஒரு காலைப் பொழுதில் சந்தித்துப் பேசினோம். ``எங்களுக்கு மொத்தம் 27 ஏக்கர் நிலமிருக்கு. அப்பா, தாத்தானு பரம்பரையா விவசாயம்தான் தொழில். இருந்தாலும், நான் ஆரம்பத்துல வழக்கறிஞராகணும்னு ஆசைப்பட்டு, பி.எல் படிச்சேன். ஆனால், படிப்பு முடிஞ்சதும், வழக்கறிஞராகும் ஆசை போயிடுச்சு. `சொந்தமா தொழில் பண்ணுவோம்’னு நினைச்சு, டெக்ஸ்டைல்ஸ் தொழில்ல இறங்கினேன். அதுல வெற்றியும் அடைஞ்சேன். பிறகு, `இயற்கை விவசாயம் பண்ணணும், தற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்பணும்’னு ஆசை வந்தது.

வீட்டின் மழைநீர் சேகரிக்கும் அமைப்புடன் பாலசுப்ரமணியன்-யசோதா தம்பதி
வீட்டின் மழைநீர் சேகரிக்கும் அமைப்புடன் பாலசுப்ரமணியன்-யசோதா தம்பதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த ஆசையை எனக்குள் விதைச்சதுல, பசுமை விகடனுக்குப் பெரிய பங்கு இருக்குது. எட்டு வருஷத்துக்கு முன்னாடி, ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் நடத்திய ஐந்து நாள்கள் பயிற்சியில கலந்துகிட்டேன். பிறகு, வீட்டைச் சுற்றி இருக்கும் இந்த ஏழு ஏக்கர் நிலத்தில, ரெண்டு ஏக்கர்ல மட்டும் சப்போட்டா, தென்னை, கொய்யா, மாதுளைனு பழ மரங்களையும், பயன்தரக்கூடிய மரக்கன்றுகளையும் வளர்த்தேன். அதுல கிடைச்ச பழங்களையும், தேங்காய்களையும் விற்பனை செய்யலை. வீட்டுப் பயன்பாட்டுக்கு மட்டுமே வைத்துக்கொண்டேன். தவிர, உறவினர்கள், நண்பர்கள்னு பலருக்கும் கொடுத்தேன். `இயற்கையில் விளைந்த பழங்கள் அற்புதமா இருக்கு’னு அவங்க பாராட்டுனாங்க. தொழில்ல கவனம் செலுத்தினதுனால, அப்போதைக்கு வேற எந்த விவசாய முயற்சிகளையும் செய்யலை’’ என்றவர் மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பு பற்றிப் பேசத்தொடங்கினார்.

மாடியிலிருந்து வரும் குழாய்
மாடியிலிருந்து வரும் குழாய்

``இந்தச் சூழலில்தான், என்னோட கனவு வீட்டை இந்த ஏழு ஏக்கர் நிலத்தோட மையத்தில, ரெண்டரை வருஷத்துக்கு முன்ன கட்டி முடிச்சேன். வீட்டு கட்டுமான வேலையை ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே, மழைநீர்ச் சேகரிப்பை ஏற்படுத்தணும்னு நினைச்சேன். காரணம், இந்தப் பகுதியில உள்ள மண் சுண்ணாம்பு மண். இங்க கிடைக்குற தண்ணியைக் குடிக்க முடியாது. அந்தத் தண்ணியை எடுக்கவும், குறைஞ்சது 1,000 அடிவரை போர் போடணும். இன்னொரு பக்கம், காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் எங்க பகுதிக்குக் குடிநீர் கிடைச்சது. அந்த நீரையும் ஆர்.ஓ. பண்ணிதான் குடிச்சிட்டு வந்தோம். அப்படிக் குடிக்கிறதுல எனக்கு உடன்பாடில்லை. உடல் நலனுக்கு ஊறு செய்யாத, இயற்கை முறையில மழைநீரைச் சேமிச்சு, அதைக் குடிக்கப் பயன்படுத்தணும்னு நினைச்சேன். அதனால, 20 சென்ட் நிலத்துல கட்டப்பட்ட இந்த வீட்டுல மழைநீர்ச் சேமிப்பை ஏற்படுத்தினேன். மொட்டை மாடியில விழும் மழைநீரை, ஒரு குழாய்மூலம் கொண்டு வரணும். தரையில் அமைக்கப்பட்டுள்ள சாண்டு ஃபில்டரில் அந்தக் குழாய் போய்ச் சேரும். நீர் வடிகட்டியை இயற்கை முறையிலேயே அமைச்சோம். ஒன்றரை ஜல்லி, முக்கால் ஜல்லி, அரை ஜல்லி போட்டு, கடைசியா ஜிப்ஸ் ஜல்லியைப் போட்டு, அதைத்தான் வடிகட்டியாக அமைச்சோம். அப்படி வடிக்கட்டப்படுற நீர், பூமிக்குள் அமைக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சேமிப்புத் தொட்டியில் போய்ச் சேகரமாகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத்தவிர, முதல் மழையில இருக்கும் அமிலத்தன்மையை நீக்க ஏதுவா, அந்த முதல் மழைநீரை வெளியில் திறந்துவிடணும். அதுக்காக, மொட்டை மாடியிலிருந்து கீழே வர்ற பைப்பில, ஒரு கேட் வால்வு வெச்சிருக்கோம். பூமிக்கடியில சேகரமாகும் மழைநீரை மோட்டார் மூலமா எடுத்து, குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்துற மாதிரி அமைப்பை ஏற்படுத்தினோம். எங்க மொட்டை மாடியின் பரப்பளவு, 4,000 சதுர அடி. இதில், ஒரு மழைக்கே குறைஞ்சது 30,000 லிட்டர் வரைக்கும் மழைநீரைச் சேகரிக்கலாம். க.பரமத்தி வறட்சியான பகுதிதான். ஆனால் இங்க வருஷம் முழுக்கப் பெய்யும் மழையின் சராசரி அளவு 500 மில்லி மீட்டர். இதனால, மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை நிறுவிய இந்த ரெண்டரை வருஷத்துல 4 முறை, முழுக் கொள்ளளவு தண்ணியில நிரம்பிவிட்டது தொட்டி. 15 தினங்களுக்கு முன்ன பெய்த மழையில்கூட, முழுக் கொள்ளளவில் சேமிப்புத் தொட்டியில் மழைநீர் நிரம்பியிருக்கிறது’’ என்றவர் வீட்டைச் சுற்றி நடக்கும் விவசாயப் பணிகள் குறித்தும் பேசினார்.

ஃபில்டர்
ஃபில்டர்

``மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்தியபோதே, வீணாகும் தண்ணீரைச் சுத்திகரிச்சு வீட்டைச் சுற்றி மரங்கள், பழத்தோட்டம், காய்கறித்தோட்டம் சார்ந்த இயற்கை விவசாயம் செய்யணும்னு முடிவெடுத்தேன். வீட்டைச் சுற்றி இருக்க இடங்கள்ல ஏற்கெனவே தென்னை, கொய்யா மரங்களை நட்டிருந்தோம். தவிர, 2 ஏக்கர் நிலத்தில புங்கன், வேம்பு, பூவரசு, வாகை, இலுப்பை, மகோகனி, குமிழ், ஏழிலைப் பாலை, சொர்க்க மரம், மரமல்லி, மூங்கில், புத்தா மூங்கில்னு 15 வகையான, 300 மரங்களை வளர்க்கத் தொடங்குனேன். இதைத்தவிர, வீட்டைச் சுற்றி 8 சப்போட்டா மரங்கள், 20 தென்னை மரங்கள், 4 சீத்தா மரங்கள், 6 பப்பாளி, 3 ஆரஞ்சு, 2 எலுமிச்சை, 5 மாதுளைனு பழ மரங்களையும் வளர்க்கத் தொடங்கினேன். அதோடு, 10 சென்ட் இடத்தில வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை விளைய வெச்சேன். சுரை, புடலை, வெண்டை, முருங்கை, தக்காளி, கத்திரி, வாழை, பாகல், பீர்க்கன், பூசணி, அவரை, கொள்ளு, கொத்தவரைனு பலவகையான காய்கறிகளையும் இயற்கை முறையில விளைய வெச்சோம்.

கழிவுநீர்ச் சுத்திகரிக்கும் இடம்
கழிவுநீர்ச் சுத்திகரிக்கும் இடம்

கூடவே, செங்கீரை, அகத்தி, தண்டுக்கீரைனு பலவகைக் கீரைகளையும் பயிர் பண்ணினோம். போன சித்திரை மாசம், காய்கறித் தோட்டம் சரியா வரலை. மறுபடியும், வர்ற ஆடிப் பட்டத்துல நாட்டுக்காய்கறி வகைகளை வெள்ளாமை செய்யலாம்னு இருக்கிறோம். இங்கயிருக்கப் பயிர்களுக்கு இயற்கை உரங்கள், ஜீவாமிர்தம் மட்டும்தான் பயன்படுத்துறோம். மூலிகைப் பூச்சிவிரட்டிப் பயன்படுத்துறோம். எல்லா மரங்களுக்கும் மூடாக்குப் போடுறோம். இந்த வேலைகளைச் செய்றதுக்காக ஒருவரை நியமிச்சிருக்கேன். ஜீவாமிர்தம் தயாரிக்க, 3 காங்கேயம் மாடுகளை வளர்க்குறேன்’’ என்றவர் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் முறைபற்றி விளக்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சமையலறை, குளியலறையில தினமும் 1,000 லிட்டர் வரை தண்ணீர் வீணாகும். அந்தக் கழிவுநீரைக் குழாய்மூலம் வெளியில் கொண்டு வந்து, நான்கு நிலைகளில் அடுத்தடுத்து உள்ள தொட்டிகள் வழியாகக் கொண்டு வரணும். அந்தக் கழிவுநீரைச் சுத்திகரிக்க இ.எம். பயன்படுத்துறோம். பாத்ரூமில் அதைக் கரைத்துவிட்டால், வெளியேறும் கழிவுநீரோடு கலந்து, கழிவுநீரை நல்ல நீராகச் சுத்திகரித்துவிடும். அதைக் கடைசித் தொட்டிக்குப் பக்கத்துல, ஒரு மோட்டார் மூலமா எடுத்து, சொட்டு நீர்ப் பாசனம் மூலமா, மரங்கள், கொய்யா தோட்டத்துக்குப் பாசனம் செய்றோம். 1,000 லிட்டர் தண்ணீர் மொத்த விவசாயத்துக்கும் போதாது. அதனால, ஒரு கிணறும் வெட்டியிருக்கிறோம். அதன்மூலம், அதிகளவுல பாசனம் நடக்குது. 4 இடங்கள்ல பெட்டி வெச்சு, தேனீக்களை வளர்க்கிறேன். இதனால, என் தோட்டத்தில மகரந்தச் சேர்க்கை நன்றாக நடக்குது. 20-க்கும் மேற்பட்ட பறவையினங்களும், பத்து வகைப் பட்டாம்பூச்சிகளும் என் தோட்டத்துக்கு வருதுங்க. தோண்டுற இடத்தில எல்லாம் மண்புழுக்கள் நெளியுது’’ என்றவர், நிறைவாக, ``எங்க வீட்டுல பெய்யுற மொத்த மழை நீரையும் சேகரிச்சு, அதைப் பயன்படுத்திய பிறகு வீணாகும் கழிவுநீரில், ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்காமல் பயன்படுத்துறோம். எங்க ஊரே கிட்டத்தட்ட ஒரு பாலைவனம் போல் வறண்டு கிடக்கும். ஆனால், இந்தப் பகுதியில, நீர் மேலாண்மை மூலமா, வீட்டைச் சுற்றி இயற்கை சூழலைக் கட்டமைக்க முடிஞ்சது. அதோட, வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பழங்களைச் சுயமாக உற்பத்தி செய்ய முடியுது. இதன் மூலம், தற்சார்பு வாழ்வியலுக்கு நான் வந்துட்டேன். என்னைப் பார்த்து, நண்பர்கள் சிலரும் தற்சார்பு வாழ்வியலுக்கு மாறிக்கிட்டு இருக்காங்க.

சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் செழிக்கும் தோட்டம்
சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் செழிக்கும் தோட்டம்

தினமும் தொழிற்சாலையால் ஏற்படும் வேலைப்பளு, மன அழுத்தம் இந்த இயற்கை கட்டமைப்பைப் பார்த்துப் போக்கிக்கொள்ள முடியுது. மண் சார்ந்து இயங்கினால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும்னு சொல்வாங்க. அதற்காகவும், இந்த முயற்சி பயன்படுது. என் மனைவி யசோதாவும், மகன் யதுநந்தனுக்கும் இந்த லாக்டெளன் காலத்துல, பொழுதுபோக்கு அம்சமே இந்தச் சூழலியல் காடும், உணவுக்காடும்தான். மீதமிருக்கிற 20 ஏக்கர் நிலத்தில் போதிய தண்ணீர் வசதியைப் ஏற்படுத்தி, மரப்பயிர் பண்ணலாம்னு இருக்கிறேன்” என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பாலசுப்ரமணியன், செல்போன்: 98946 34751.

மழைநீர்ச் சேமிக்க எவ்வளவு செலவாகும்?

``மாடியிலிருந்து இயற்கை ஃபில்டர் அமைப்புவரை கட்டமைக்க, ரூ.12,000 வரை செலவாச்சு. பூமிக்கடியில் நீர் சேகரிக்கும் சிமென்ட் தொட்டி அமைக்க ரூ.5 லட்சம் வரை செலவாச்சு. அதேபோல, நீர் சேமிப்புத் தொட்டியிலிருந்து தண்ணீரை மோட்டார்மூலம் மேல்நிலைத் தொட்டிக்குக் கொண்டு போய், அதை வீட்டுக்குள் பயன்படுத்த, கொண்டு செல்லப் பயன்படும் அமைப்புகள் அனைத்தையும் செய்ய, ரூ.10,000 வரை செலவானது.

குளியலறை, சமையலறை உள்ளிட்ட இடங்களில் வீணாகும் தண்ணீரைச் சுத்திகரித்து, மோட்டார் மற்றும் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் மரங்கள், காய்கறித் தோட்டங்களுக்குக் கொண்டு போய்ப் பயன்படுத்த, ரூ.30,000 வரை செலவு பிடித்தது. நான் ஒரு லட்சம் லிட்டர் வரை மழைநீரைச் சேமிக்க அமைப்பு ஏற்படுத்தினேன். அதனால், இவ்வளவு செலவானது. ஆனால், ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, ஒருநாள் பயன்பாட்டுக்கு 300 லிட்டர் வரை தண்ணீர் போதும். அப்படிப் பார்த்தால், ஒரு வருடத்துக்கு சுமார் 1,00,000 லிட்டர் தண்ணீர் இருந்தால் போதும். அதாவது, நான் சேமிக்கும் மழைநீர் அளவிலிருந்து பத்தில் ஒரு பங்கு நீர் போதும். அப்படிப் பார்த்தால், மழைநீர் சேமிக்கும் அமைப்பை ஏற்படுத்த, எனக்கான செலவில், பலமடங்கு அவங்களுக்குக் குறையும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism