Published:Updated:

ஆரோக்கியம்+வருமானம் கொடுக்கும் இயற்கை விவசாயம்!

பசுமை விகடன் புத்தகங்களுடன்...
பிரீமியம் ஸ்டோரி
பசுமை விகடன் புத்தகங்களுடன்...

நெகிழும் 80 வயது இளைஞர்

ஆரோக்கியம்+வருமானம் கொடுக்கும் இயற்கை விவசாயம்!

நெகிழும் 80 வயது இளைஞர்

Published:Updated:
பசுமை விகடன் புத்தகங்களுடன்...
பிரீமியம் ஸ்டோரி
பசுமை விகடன் புத்தகங்களுடன்...

மகசூல்

“பணி ஓய்வுக்குப் பிறகு என் வாழ்க்கையைப் பயனுள்ளதாகக் கழிக்க, ‘பசுமை விகடன்’தான் உதவி வருகிறது” என்று நெகிழ்ச்சியாகச் சொல்கிறார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி முஸ்தபா. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடலாக்குடி கிராமத்தில்தான் முஸ்தபாவின் வீடு இருக்கிறது. ஒரு காலைவேளையில், முஸ்தபாவைச் சந்திக்கச் சென்றோம். அவரது வீட்டின் வரவேற்பறையில், இதுவரை வெளிவந்த பசுமை விகடன் இதழ்களை அடுக்கி வைத்திருந்தார்.

ஆரோக்கியம்+வருமானம் கொடுக்கும் இயற்கை விவசாயம்!

மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்த முஸ்தபா, “எனக்குச் சொந்த ஊர் இதுதான். பி.யூ.சி படிச்சிட்டு சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி, மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் கிராமப் பணியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். அடுத்து விருத்தாசலத்தில் 10 வருஷம் வேலை. அப்புறம் ஊரக நல அலுவலராகப் பதவி உயர்வு பெற்று நாகர்கோவிலுக்கு வந்தேன். மொத்தம் 33 வருஷம் சர்வீஸ் பண்ணிட்டு 1997-ம் வருஷம் ஓய்வு பெற்றேன். ஓய்வுக்குப் பிறகு, பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்யலாம்னு முடிவு செய்தேன்.

நாகர்கோவிலிலிருந்து 9 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற ஈசாந்திமங்கலம் கிராமத்தில் எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. அதைக் குத்தகைக்கு விட்டிருந்தோம். அதுல விவசாயத்தை ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் ரசாயன உரம்தான் பயன்படுத்தினேன். ஒருமுறை மண் பரிசோதனை செஞ்சப்போ, சுண்ணாம்புச்சத்து குறைவாகவும், கார அமிலத்தன்மை அதிகமாகவும் இருக்கிறதா சொன்னாங்க. திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கொடுத்த அறிவுரைப்படி தக்கைப்பூண்டு, சணப்பு, கொழுஞ்சினு விதைச்சு மடக்கி உழுது மண்ணை வளப்படுத்தினேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து 2 வருஷம் அதேமாதிரி பசுந்தாள் விதைச்சதுக்கப்புறம் நெல் சாகுபடியை ஆரம்பிச்சேன். தொழுவுரத்தை அதிகமாவும், ரசாயன உரங்களைக் குறைவாவும் பயன்படுத்தினேன்.

  வயலில் முஸ்தபா...
வயலில் முஸ்தபா...

ஒருமுறை நாகர்கோவிலில் நடந்த இயற்கை விவசாய நிகழ்ச்சிக்கு நம்மாழ்வார் வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். இயற்கை விவசாயம் குறித்து அவர் பேசினப்போதான், பசுமைப்புரட்சிக்கு முந்தைய நமது பாரம்பர்ய விவசாய முறை எனக்கு நினைவுக்கு வந்தது. அவரது பேச்சு, இயற்கை விவசாயத்தின் மீது நம்பிக்கையையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து வானகம் பண்ணைக்குப் போய்ப் பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

மண்வளம், விதைப்பு, பராமரிப்பு, இடுபொருள் தயாரிப்பு, அறுவடை எல்லாத்தையும் பத்தி நல்லாத் தெரிஞ்சிக்கிட்டேன். பயிற்சி முடிஞ்சு வந்ததுக்கப்புறம், பலதானிய விதைப்பு மூலம் மண்ணை வளப்படுத்தி முழுமையான இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். நான், ஆரம்பத்திலிருந்தே பசுமை விகடனைப் படிச்சிட்டிருக்கேன்.

ஒருசில இதழ்களைத் தவிர ஆரம்பம் முதல் இப்போ வரை வெளிவந்த எல்லா இதழ்களையும் வருஷம் வாரியா பண்டல்களாகக் கட்டி வெச்சிருக்கேன். விவசாயிகளின் அனுபவப் பாடத்திலிருந்து புதுசுபுதுசாகக் கத்துக்கிட்டேன். இயற்கை விவசாயத்தில் இப்போ வரைக்கும் எனக்குப் பசுமை விகடன்தான் பாதை காட்டுது” என்ற முஸ்தபா பசுமை விகடன் இதழ்களை எடுத்துக் காட்டினார்.

தொடர்ந்து பேசிய முஸ்தபா, “கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அதிக அளவில் வீட்டுமனைகளாக மாறி வந்ததை நம்மாழ்வார்கிட்ட சொன்னப்போ, அவர் இங்க உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். ‘நமது நெல்லைக் காப்போம்’ அமைப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் தொடங்கப்பட்டது. இங்க ராஜேந்திர ரத்னு கலெக்டரா இருந்தப்போ, நம்மாழ்வாரை அழைச்சிட்டு வந்து இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்தார். அந்த கலெக்டர்தான் தமிழகத்தில் முதல் முறையா, காலையில் இயற்கை விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தையும், மாலையில் ரசாயன விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தையும் நடத்தினவர்.

ஆரோக்கியம்+வருமானம் கொடுக்கும் இயற்கை விவசாயம்!

எங்க மாவட்டத்தில், ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான ‘கன்னிப்பூ’ பருவத்திலும், நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான ‘கும்பைப்பூ’ பருவத்திலும் நெல் சாகுபடி செய்வோம். 2 பருவங்களிலுமே, 1 ஏக்கர் நிலத்தில் கட்டிச்சம்பா ரகத்தையும், 4 ஏக்கர் நிலத்துல அம்பை-16 ரகத்தையும் சாகுபடி செய்திட்டு வர்றேன். கடந்த 9 வருசமா முழுமையா இயற்கை விவசாயம் செய்றேன். இப்போ நடவுக்காக நாற்றுப் பாவியிருக்கேன்” என்ற முஸ்தபா வருமானம்குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“போன பருவத்துல 1 ஏக்கர் நிலத்தில் 2,112 கிலோ கட்டிச்சம்மா நெல் கிடைச்சது. இதில், 1,000 கிலோ நெல்லை அரிசியாக்கி வீட்டுத் தேவைக்கு வெச்சிக்கிட்டேன். மீதமுள்ள 1,112 கிலோ நெல்லை, ஒரு கிலோ 30 ரூபாய்னு விற்பனை செய்ததுல 33,360 ரூபாய் கிடைச்சது. 4 ஏக்கர் நிலத்துல அம்பை-16 ரகத்தில் 12,560 கிலோ நெல் கிடைச்சது. அதை நாகர்கோவில், வடசேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரு கிலோ 23 ரூபாய்னு விற்பனை செய்ததுல 2,88,880 ரூபாய் கிடைச்சது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 10,000 ரூபாய் செலவாகும். அதுபோக மீதி எல்லாம் லாபம்தான்” என்ற முஸ்தபா நிறைவாக,

“எனக்கு இப்போ 80 வயசாகிடுச்சு. அதனால, நெல்லை அரிசியாவோ, அவலாவோ மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய முடியலை. இப்போ நெல்லாவே விற்பனை செய்திட்டு வர்றேன். வருமானம் எடுக்கிறது மட்டும் என்னுடைய நோக்கம் இல்லை. இயற்கை விவசாயத்தைப் பரப்பணும்கிறதும் என்னோட ஆசை. இந்த வயசிலும் நான் ஆரோக்கியமா இருக்கிறதுக்குக் காரணம், இயற்கை விவசாயம்தான்” என்று சொல்லிச் சிரித்தபடி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு: முஸ்தபா, செல்போன்: செல்போன்: 94889 41180

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ரு ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யும் முறைகுறித்து முஸ்தபா சொன்ன தகவல்கள், பாடமாக இங்கே…

தேர்வு செய்த 1 ஏக்கர் நிலத்தில் ஓர் உழவு செய்து, 2 டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி நன்கு உழ வேண்டும். ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 4 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் விதைப்புக்கு 15 கிலோ விதைநெல் தேவை. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் 15 கிலோ விதை நெல்லைக் கொட்டி குச்சியால் கிளற வேண்டும். பிறகு மேலே மிதக்கும் பொக்கு, தூசி ஆகியவற்றை அப்புறப்படுத்திவிட்டு, தண்ணீரை வடித்து அதில், 100 கிராம் சூடோமோனஸைத் தூவி அரை மணிநேரம் வரை அப்படியே வைக்க வேண்டும். பிறகு, விதைநெல்லை ஒரு சணல்சாக்கில் போட்டுக் கட்டி, தண்ணீரில் 24 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். தண்ணீரை வடித்துத் தனியே வைத்தால் விதைகள் முளைவிடும்.பிறகு நாற்றங்காலில் விதைக்க வேண்டும். விதைத்த 5-7-ம் நாளில் முளைப்பு தெரியும். விதைத்த 5 நாள்களுக்கு, இரவில் தண்ணீர்கட்டி மறுநாள் காலையில் வடித்துவிட வேண்டும். விதைத்த 20 முதல் 25-ம் நாளுக்குள் நாற்றுகளை எடுத்து வயலில் நடவு செய்யலாம்.

நடவு செய்த 15, 30 மற்றும் 60-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். நடவு செய்த 15-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி மீன் அமினோ அமிலம் எனக் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து வர வேண்டும். இலைச்சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் ஏற்பட்டால், 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதிசோப் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். நெல் கதிர்கள் முற்றியதைத் தெரிந்துகொண்டு அறுவடை செய்யலாம்.