Published:Updated:

பூங்கார், கறுப்புக்கவுனி..! நேரடி விற்பனையில் கல்லூரிப் பேராசிரியர்!

நெல் களையெடுக்கும் பணியில்
பிரீமியம் ஸ்டோரி
நெல் களையெடுக்கும் பணியில்

மகசூல்

பூங்கார், கறுப்புக்கவுனி..! நேரடி விற்பனையில் கல்லூரிப் பேராசிரியர்!

மகசூல்

Published:Updated:
நெல் களையெடுக்கும் பணியில்
பிரீமியம் ஸ்டோரி
நெல் களையெடுக்கும் பணியில்

பாரம்பர்ய ரக நெல்லை இயற்கை முறையில் சாகுபடி செய்தாலும் அரவை ஆலைகளில் அரிசியாக மதிப்புக்கூட்டினால், பாலிஷ் செய்யப்பட்ட அரிசியாகக் கிடைக்கிறது. உமி மட்டும் நீக்கப்பட்டு அதன் முழுச்சத்தும் அப்படியே கிடைக்கும்படி, சொந்த அரவை மிஷினில் தானாகவே அரிசியாக்கி நேரடியாக விற்பனை செய்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் விஸ்வநாதன்.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி யிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது நடுக்கல்லூர் கிராமம். இங்குதான் உள்ளது விஸ்வநாதனின் நெல் வயல். அருகிலேயே உள்ளது நெல் அரவைக்கூடம். அரவை மிஷினில் கறுப்புக்கவுனியை அரிசியாக்கிக் கொண்டிருந்தார் விஸ்வநாதன். நம்மை அறிமுகப்படுத்தியதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

நெல் வயலில் விஸ்வநாதன்
நெல் வயலில் விஸ்வநாதன்

“எனக்குப் பூர்வீகமே இந்த நடுக்கல்லூர்தான். ஆரம்பத்துல இருந்து விவசாயம்தான் எங்களுக்கு முக்கியத் தொழில். இந்தப் பகுதி முழுவதுமே பரவலா நெல் விவசாயம்தான். ஆடு, மாடுகளும் இருந்துச்சு. தாத்தா காலத்துல எந்தவித ரசாயன உரமும் பயன்படுத்தாமத்தான் விவசாயம் செஞ்சு கிட்டிருந்தாங்க. அப்பா காலத்துல, அதுவும் ‘பசுமைப்புரட்சி’க்குப் பிறகு ரசாயன விவசாயத்துக்கு மாறிட்டாங்க. ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே கிடைக்குற நாள்கள்ல விவசாய வேலைகளைச் செய்வேன். எனக்குச் சின்ன வயசுல இருந்தே ரசாயன உரம், பூச்சிமருந்தோட நாற்றம் பிடிக்காது.

நெல் வயலில் விஸ்வநாதன்
நெல் வயலில் விஸ்வநாதன்

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்துல உள்ள குமரகுருபரர் கலை அறிவியல் கல்லூரியில 25 வருஷமா இயற்பியல் துறைப் பேராசிரியரா பணி செய்துட்டு வர்றேன். மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்குறது இயற்பியலா இருந்தாலும், விவசாயம், மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்புல எனக்கு அதிக ஆர்வம் உண்டு. அதுமூலமாதான் ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் பயிர்களுக்கும் மண்ணுக்கும் என்னென்ன பாதிப்புகள்னு தெரிஞ்சுகிட்டேன்.

ஊருக்கு வரும்போதெல்லாம், இங்கவுள்ள விவசாயிகள்கிட்ட, ‘ரசாயன உரமெல்லாம் போடாதீங்க. பாரம்பர்யமா நம்ம செஞ்ச நஞ்சில்லா முறையில விவசாயம் செய்யுங்க’ன்னு சொல்வேன். ‘சார்வாள்... உரம் போடாம எந்தப் பயிர் முளைக்கும். களைச்செடிதான் உரம் போடாம முளைக்கும். மகசூல் எடுக்கணும்னா உரம் போட்டத்தான் கதையாகும்’னு சொன்னாங்க. ரசாயன உரம் இல்லேன்னா விவசாயமே இல்லங்குற அளவுக்கு அவங்களோட பேச்சுல அசைக்க முடியாத நம்பிக்கை தெரிஞ்சுது. அதைப் பார்த்து அதிர்ச்சியாகிப் போனேன்.

களையெடுக்கும் பணி
களையெடுக்கும் பணி

ரசாயன உரத்தோட பாதிப்புகளை உணர்த்தணும்னா நாம இயற்கை முறையில விவசாயம் செஞ்சாத்தான் மத்தவங்களுக்குப் புரிய வைக்க முடியும்னு இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட தகவல்களைத் திரட்ட ஆரம்பிச்சேன். அப்படியான தேடலில் நண்பர் ஒருவர் மூலம் எனக்கு அறிமுகமான விவசாய வழிகாட்டிதான் ‘பசுமை விகடன்.’ இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, ‘ஜீரோ பட்ஜெட் பிதாமகர்’ சுபாஷ் பாலேக்கரைப் பற்றிப் படிச்சேன். ‘இயற்கை விவசாயத்துல எடுத்ததுமே அகலக்கால் வைக்கக் கூடாது. ஏக்கர் கணக்குல இறங்காம, முதல்ல குறைவான பரப்பளவுல சாகுபடி செஞ்சுப் பார்த்துட்டு அதுல திருப்தி ஏற்பட்டதும் அதிக பரப்புல சாகுபடி செய்யலாம்’ங்கிற நம்மாழ்வார் ஐயாவின் கருத்து என்னை ஈர்த்தது.

தொடர்ந்து ஒவ்வொரு இதழையும் படிக்க ஆரம்பிச்சேன். மண்ணை வளப்படுத்துதல், இயற்கை இடுபொருள்கள், பூச்சிவிரட்டி தயாரித்தல் முறைகளைத் தெரிஞ்சுகிட்டேன். மகசூல் கட்டுரைகளில் விவசாயிகள் சொல்லும் சாகுபடிப் பாடம், பூச்சி, நோய்த்தாக்குதலுக்கு அவர்கள் பயன்படுத்தும் கரைசல்கள், அவர்களது அனுபவங்களை உன்னிப்பா கவனிச்சேன். பாரம்பர்ய நெல் ரகங்களின் சிறப்பையும், அதன் மருத்துவப் பயனையும் ‘பசுமை’ மூலமாத்தான் தெரிஞ்சுகிட்டேன். திருத்துறைப்பூண்டி, நெல்திருவிழாவுல கலந்துக்கிட்டு எங்க பகுதி பட்டத்துக்கு ஏத்த நெல் ரகங்களை வாங்கினேன். தாத்தா, அப்பா சொன்ன நெல் ரகங்களின் பெயர்களையெல்லாம் அங்கே நெல் மணிகளாகப் பார்த்தேன்.

நெல் அரைக்கும் பணி
நெல் அரைக்கும் பணி

ஊருக்கு வந்ததும் இயற்கை விவசாயம் செய்யணுங்கிற எண்ணம் எனக்குள் உறுதியானது. நிலத்தைப் பலதானிய விதைப்பு செஞ்சும், ஆட்டுக்கிடை போட்டும், செறிவூட்டப்பட்ட தொழுவுரம் போட்டும் வளப்படுத்தினேன். முதலில், ஒரு ஏக்கர்ல ஆத்தூர் கிச்சிலிச்சம்பா சாகுபடி செஞ்சேன். நாற்றங்காலில் நெல் விதையைத் தூவுவதற்கு முன்னாலயே ‘பசுமை’யில் வெளியான பாரம்பர்ய நெல் சாகுபடி கட்டுரைகளைப் படிச்சு குறிப்பெடுத்து வெச்சுகிட்டேன். அந்தக் குறிப்பு முறைகளின்படியே சாகுபடியைத் தொடர்ந்தேன். முதல் முறையிலேயே கணிசமான மகசூல் கிடைச்சது. ஊருலவுள்ள விவசாயிகளே ஆச்சர்யப்பட்டாங்க. தொடர்ந்து, கறுப்புக் கவுனி, பூங்கார், கருங்குறுவை, அறுபதாம் குறுவை, தங்கச்சம்பா, கொச்சிச்சம்பா, ஆத்தூர் கிச்சிலிச்சம்பான்னு 13 வகையான நெல்லைச் சாகுபடி செஞ்சேன். இது மொத்தம் நாலு ஏக்கர் நிலம். போன வருஷம் ஒரு ஏக்கர்ல பூங்காரும், ஒரு ஏக்கர்ல கறுப்புக் கவுனியும் சாகுபடி செஞ்சேன். இந்த முறை 2 ஏக்கர் கருங்குறுவை, ஒரு ஏக்கர் ஆத்தூர் கிச்சிலிச்சம்பா, ஒரு ஏக்கர்ல அறுபதாம் குறுவையும் நட்டு ரெண்டு மாசமாகுது” என்றார்.

இறுதியாக விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசியவர், “போன முறை பூங்காரில் 910 கிலோதான் நெல் கிடைச்சது. தட்பவெப்ப மாற்றமா என்னன்னு தெரியலை. அதே நேரத்துல கறுப்புக்கவுனி 1,260 கிலோ கிடைச்சது. 910 கிலோ பூங்காரை மதிப்புக் கூட்டியதில் 613 கிலோ அரிசி கிடைச்சது. 1,260 கிலோ கறுப்புக்கவுனியை மதிப்புக் கூட்டியதுல 806 கிலோ அரிசி கிடைச்சது. பூங்காரை கிலோ ரூ.70-க்கும், கறுப்புக்கவுனியை ரூ.150-க்கும் விற்பனை செஞ்சேன். அந்த வகையில பூங்கார் விற்பனை மூலம் ரூ.42,910-ம், கறுப்புக்கவுனி விற்பனை மூலம் ரூ.1,20,900-ம் வருமானமாக் கிடைச்சது. இதுல செலவுகள் பூங்காருக்கு ரூ.26,700-ம், கறுப்புக்கவுனிக்கு ரூ.27,000-ம் ஆச்சு. செலவுகள் போகப் பூங்காரில் ரூ.16,210-ம், கறுப்புக்கவுனியில் ரூ.93,900-ம் லாபமா கிடைச்சது.

செலவு வரவு கணக்கு
செலவு வரவு கணக்கு

இந்த முறை, பூங்காரைப் பொறுத்தவரைக்கும் வரவை விடச் செலவு அதிகமாயிடுச்சு. ஆனா, அதைக் கறுப்புக்கவுனி ஈடு கட்டிடுச்சு. நெல்லை, இயற்கை முறையில் சாகுபடி செஞ்சாலும், சாதாரண அரவை ஆலைகளில் அரிசியா மதிப்புக் கூட்டும்போது பட்டை தீட்டப் படாததாகத்தான் கிடைக்குது. அதுமட்டுமல்லா, மூட்டைக் கணக்குல மில்லுல இறக்குனாத்தான் அரிசியாக்குறதுல அக்கறை காட்டுறங்க மில்லுக்காரங்க. இப்படி, அரிசி பட்டை தீட்டியதைப்போல இருக்குறதுனால சந்தையில பாரம்பர்ய ரகத்துக்கான மவுசு குறையுது. ‘பாரம்பர்ய அரிசினு சொல்றீங்க. ஆனா, பார்க்க பாலிஷாத்தான சார் இருக்கு’னு எங்கிட்டயே நிறையபேரு கேட்டிருக்கங்க.

நெல் அரவை இயந்திரம்
நெல் அரவை இயந்திரம்

நாமளே சின்னதா ஒரு அரவை மெஷின் வாங்கிட்டா என்னன்னு எனக்குள்ள ஒரு யோசனை வந்துச்சு. பக்கத்தூருல உள்ள லேத் பட்டறையில நான் சொன்ன படியே சின்ன மெஷினை வடிவமைச்சுக் கொடுத் துட்டாங்க. மெஷினுக்கு 70,000 ரூபாய் செலவாச்சு. இதுல, ரப்பர் ஹெல்லர் பொருத்தியிருக்கிறதுனால நெல்லில் இருந்து உமி மட்டும்தான் நீங்கும். மற்ற சத்துகள் அப்படியேதான் இருக்கும். அரவை மில்களில் நெல்லை மொத்தமா அரிசியாக்கிட்டா, குறிப் பிட்ட நாள்களுக்குள்ள வித்தாகணும். ஆனா, இந்த மெஷின் இருக்குறதுனால எவ்வளவு தேவையோ அதை மட்டும் அரிசியாக்கி விற்பனை செய்யலாம். மெஷினுக்கான தொகையை ஒரே விவசாயி செலவழிக்கிறதவிட, 10 விவசாயிகள் ஒண்ணா சேர்ந்து இதே மாதிரி ஒரு மெஷினை வாங்கிட்டா, அவரவரோட விற்பனைத் தேவைக்கு ஏத்த மாதிரி அரிசியாக்கி வித்துக்கலாம்” என்றவர், இறுதியாக, “ஆரம்பத்துல சந்தைப்படுத்துறதுல ரொம்பச் சிரமப்பட்டேன். ‘பசுமை விகட’னில் வெளியாகுற `பசுமைச்சந்தை- வாங்க விற்க’ பகுதியில ஒரு முறை விளம்பரப் படுத்தினேன். அதுல இருந்து என்னிடமே நேரடியா போன் பண்ணி அரிசியை வாங்கிக்கிறாங்க. எனக்கு வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கிக் கொடுத்ததும், விற்பனையை எளிதாக்கியதும் பசுமைவிகடன்தான்” என்றார் மகிழ்ச்சி பொங்க.

தொடர்புக்கு,
விஸ்வநாதன்,
செல்போன்: 94425 82582

இயற்கை இடுபொருள்
இயற்கை இடுபொருள்

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

இயற்கை முறையில் ஒரு ஏக்கர் பரப்பில் பூங்கார், ஒரு ஏக்கர் பரப்பில் கறுப்புக்கவுனிச் சாகுபடி செய்வது குறித்துத் விஸ்வநாதன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

பூங்கார், கறுப்புக்கவுனி நெல் சாகுபடி செய்ய ஐப்பசி, கார்த்திகைப் பட்டம் ஏற்றது. பூங்காரின் வயது 110 நாள்கள், கறுப்புக் கவுனியின் வயது 150 நாள்கள். மூன்றாவது உழவின்போது ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி பரவலாக உழவு செய்ய வேண்டும். டிரம் சீடரில் விதைப்பதாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவை. நாற்றாக நடுவதாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 25 முதல் 30 கிலோ விதைநெல் தேவை.

உமி நீக்கப்பட்ட பூங்கார் அரிசி
உமி நீக்கப்பட்ட பூங்கார் அரிசி


விதைநெல்லைச் சணல் சாக்கினுள் போட்டுக் கட்டி, தண்ணீர் தொட்டிக்குள் 12 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர், 15 நிமிடங்கள் வரை தண்ணீரை வடியவிட்டு தனி அறையில் விதைநெல் சாக்கை வைத்து, அதை மற்றொரு சணல் சாக்கினால் மூடி வைக்கோலைப் பரப்ப வேண்டும். ஒருநாள் முழுவதும் வைத்தால், நெல்லில் முளைப்பு தெரியும். அதை அப்படியே நாற்றங்காலில் விதைக்க வேண்டும். 7 முதல் 10 நாள்களில் முளைப்பு தெரியும். 20 நாள்கள் வரை நாற்றங்காலிலேயே வளரவிட்டு வயலில் நடவு செய்துவிட வேண்டும். 25-வது நாளுக்கு மேல் சென்றுவிட்டால், நாற்று முதிர்ச்சி அடைந்துவிடும்.

உமி நீக்கப்பட்ட கறுப்புக்கவுனி அரிசி
உமி நீக்கப்பட்ட கறுப்புக்கவுனி அரிசி

நாற்றுக்கு நாற்று முக்கால் அடி, வரிசைக்கு வரிசை முக்கால் அடி இடைவெளியில் நாற்று நடவு செய்ய வேண்டும். நடவுக்கு முன்பாக நாற்றைப் பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்து (நாற்றுகளின் வேர்ப்பகுதியை மூழ்கச் செய்து எடுத்து நட வேண்டும்) இதனால், வேர் சம்பந்தமான நோய்கள் தாக்காது. நடவு செய்த அன்று முதல் நீரும் பின்னர் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தாலே போதும்.

நடவு செய்த 15, 30, 45-வது நாள்களில் களை எடுக்க வேண்டும். 15-வது நாளில் ஒரு ஏக்கருக்கு 250 கிலோ செறிவூட்டப்பட்ட தொழுவுரத்தைப் பரவலாகத் தூவ வேண்டும். 20-வது நாளில் இருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 25-வது நாளில் இருந்து 15 நாள்கள் இடைவெளியில் மீன் அமிலம் மற்றும் பஞ்ச கவ்யாவை (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) கலந்து சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். கதிர் பிடிக்கத் தொடங்கும் நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி தேமோர்க்கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

பாரம்பர்ய நெல் ரகத்தைப் பொறுத்தவரையில் பூச்சி, நோய்த்தாக்குதல்கள் பெரும்பாலும் இருக்காது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 30-வது நாளில் இருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை மூலிகைப்பூச்சிவிரட்டியை (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். பூங்காரை 100 முதல் 110-வது நாளிலும், கறுப்புக்கவுனியை 140 முதல் 150-வது நாளிலும் அறுவடை செய்யலாம்.

தொழுவுரம்
தொழுவுரம்

செறிவூட்டப்பட்ட தொழுவுரம்

ஒரு பிளாஸ்டிக் தாளை விரித்து, அதில், 250 கிலோ தொழுவுரத்தைக் கொட்டி அதில் ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றில் தலா 50 மி.லியைத்(பவுடர், திரவம் இரண்டு வடிவிலும் உயிர் உரங்கள் கிடைக்கும்) தெளித்து, நன்றாகக் கலந்து ஒரு வாரம் வரை வைத்திருந்தால் செறிவூட்டப்பட்ட தொழுவுரம் தயார்.