Published:Updated:

ஏக்கருக்கு ரூ. 52,000 வருமானம்! - இயற்கை விவசாயத்தில் விதைநெல் உற்பத்தி!

நெல்லுடன் சாமிநாதன்
பிரீமியம் ஸ்டோரி
நெல்லுடன் சாமிநாதன்

மகசூல்

ஏக்கருக்கு ரூ. 52,000 வருமானம்! - இயற்கை விவசாயத்தில் விதைநெல் உற்பத்தி!

மகசூல்

Published:Updated:
நெல்லுடன் சாமிநாதன்
பிரீமியம் ஸ்டோரி
நெல்லுடன் சாமிநாதன்
மிழக வேளாண்மைத் துறைக்கு விதைநெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்யும் விவசாயிகள், பெரும்பாலும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம், ‘அரசாங்கத்துக்குத்தானே கொடுக்கப்போகிறோம்... இயற்கை விவசாயத்தில் விளைவித்தால் கூடுதல் விலையா கிடைக்கப்போகிறது?’ என நினைப்பார்கள்.
விருதுகளுடன்
விருதுகளுடன்

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள ஏரகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாமிநாதன், கடந்த 12 ஆண்டுகளாக இயற்கை முறையில் விதைநெல் உற்பத்தி செய்து வருகிறார். ஒரு பகல் பொழுதில் அவரைச் சந்தித்தோம். அங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தனது நெல்லை விற்பனை செய்வதற்காகக் காத்திருந்த சாமிநாதன் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். “நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எஸ்.எஸ்.எல்.சி முடிச்சிட்டு, தனியார் நிறுவனங்கள்ல வேலைபார்த்தேன். அது எனக்கு மனசுக்கு நிறைவாக இல்லை. அதனால 1982-ம் வருஷம் விவசாயத்துக்கு வந்தேன். இது களிமண் பூமி. மொத்தம் 15 ஏக்கர். தமிழக வேளாண்மைத் துறையில விதைப்பண்ணை விவசாயியா பதிவு பண்ணிக்கிட்டு, பல வருஷமா ரசாயன முறையிலதான் விதைநெல் உற்பத்தி செஞ்சு கொடுத்துக்கிட்டு இருந்தேன். அதிகபட்சம் ஏக்கருக்கு 1,500-1,750 கிலோவுக்கு மேல் மகசூல் தாண்டலை. கோடை நெல் சாகுபடியில புகையான் தாக்குதலும், சம்பா, தாளடி பட்டத்துல குருத்துப்பூச்சி, இலைசுருட்டுப்புழுத் தாக்குதலும் அதிகமாச்சு. அதைக் கட்டுப்படுத்த பூச்சி மருந்துக்கு நிறைய செலவு செஞ்சோம். பயிரோட தண்டும் வளப்படலை. தண்டு உறுதி இல்லாம இருந்ததால், கதிர் வரும் நேரத்துல லேசான புயல் காத்து அடிச்சாலே பயிர் கீழே சாய ஆரம்பிச்சுது.

இந்த நிலையிலதான், பசுமை விகடன் நடத்தின இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்புல கலந்துகிட்டேன். அதுக்குப் பிறகு தொடர்ச்சியா பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்சேன். உடனடியாக இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு முடிவெடுத்தேன். விதைநெல்லை அரசாங்கத்துக்குக் கொடுத்தாலும் கூட, அதுவும் ரசாயன, நச்சுத்தன்மை இல்லாத ஆரோக்கியமான உணவுப் பொருளுக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கட்டுமேனு நினைச்சேன். இயற்கை விவசாயம் செஞ்சா, நம்மோட நிலமும் ஆரோக்கியமாக மாறும், செலவுகளும் குறையும்னு தோணுச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2008-ம் வருஷத்துல இருந்து இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். இதுக்காக 2 நாட்டு மாடுகளை வளர்க்குறேன். மூணு வருஷத்துக்கு ஒரு முறை ஏக்கருக்கு 15 கிலோ தக்கைப்பூண்டு விதைச்சி, 45 நாள்ல பூப்பூக்குற தருணத்துல மடக்கி உழுவுறோம். பஞ்சகவ்யா வையும் கடலைப்பிண்ணாக்கையும் ஒண்ணா கலந்து செயலூக்கம் செஞ்சு, வாய்மடையில ஊற்றித் தண்ணீர்ப் பாய்ச்சுவோம். பூப்பூக்கும் தருணத்துல புளித்த மோர் கரைசல் தெளிப்போம். இயற்கை விவசாயத்துக்கு மாறுன அடுத்த சில ஆண்டுகள்லயே நுண்ணுயிரிகள் பெருக்கம் அதிகமாகி, மண்ணோட தன்மைல மாற்றம் தெரிய ஆரம்பிச்சுது. சேத்து வயல்ல கால் வெச்சோம்னா, மண்ணு நல்லா வெண்ணெய் மாதிரி கால்ல ஒட்டிக்கிட்டு வரும். நிலம் காய்ஞ்ச நிலையில் இருக்கும்போது, பஞ்சு மெத்தை மாதிரி மெது மெதுனு இருக்கும். செயலூக்கம் செஞ்ச பஞ்சகவ்யாவ பாசனநீர்ல கலந்து விடுறதுனால, நுண்ணுயிரிகள் பெருக்கம் ரொம்பச் சிறப்பாக இருக்கு. குறிப்பாக, மண்புழுக்களோட எச்சம், பயிரோட வேர் பகுதியைச் சுற்றிலும் புத்து மாதிரி கட்டியிருக்கும். இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சதுமே படிப்படியாகப் பூச்சி, நோய்த்தாக்குதல்களும் குறைய ஆரம்பிச்சுது.

ஏக்கருக்கு ரூ. 52,000 வருமானம்! - இயற்கை விவசாயத்தில் விதைநெல் உற்பத்தி!

பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 15 இடத்துல ‘T’ வடிவ பறவைத் தாங்கிகள் அமைப்போம். கரிச்சான் குருவி, சிட்டுக்குருவி, நார்த்தம்பிள்ளை, ஆந்தைகள் உள்ளிட்ட பறவைகள் எல்லாம் இதுல வந்து உட்கார்ந்து புழு, பூச்சிகளைப் புடிச்சி சாப்பிட்டுடுது. பெரும்பாலும் பூச்சித்தாக்குதல்கள் ஏற்படுறதே இல்லை. எப்பயாவது லேசான அறிகுறிகள் தெரிஞ்சா, வேப்ப எண்ணெய் கரைசல் தெளிப்போம். படிப்படியாக மகசூல் அதிகமாகி, 2014-ம் வருஷத்துல இருந்து ஏக்கருக்கு 2,100 கிலோ மகசூல் கிடைச்சிக்கிட்டு இருக்கு. கோடை, சம்பா ரெண்டு போகம் விதைநெல் சாகுபடி செஞ்சு வேளாண்மைத்துறைக்குக் கொடுத்துக்கிட்டு இருக்கோம்’’ என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வருமானம்

“15 ஏக்கர்லயும் நெல் சாகுபடி செய்றதுதான் வழக்கம். இந்த ஆண்டு கோடைப் பருவத்துல... தண்ணீர்ப் பற்றாக்குறையால, 10 ஏக்கர்ல மட்டும் கோ-51 ரக நெல் சாகுபடி செஞ்சேன். மொத்தம் 21 டன் மகசூல் கிடைச்சுது. 18 சதவிகிதம் ஈரப்பதம் இருந்துச்சு. விதைநெல்லுங்கறதுனால, இதை நல்லா வெயில்ல காயப்போட்டு 12 சதவிகித ஈரப்பதத்துக்குக் கொண்டு வந்து தூத்தினேன். கருக்கா, கண்ணுக்குத் தெரியாத இழப்பு போக 20,500 கிலோ தேறிச்சி. சாக்கோட்டை சுத்திகரிப்பு நிலையத்துல, சுத்தம் செஞ்சதுல, அரை நெல், முக்கால் நெல்லாக 500 கிலோ ஒதுங்கிச்சு. அதை கிலோ 10 ரூபாய்னு மாட்டுத்தீவனம் தயாரிக்குற கம்பெனிக்கு விற்பனை செஞ்சதுல 5,000 ரூபாய் வருமானம் கிடைச்சுது. தரமான விதைநெல்லாக, 20 டன் தேறிச்சு.

நெல்லுடன் சாமிநாதன்
நெல்லுடன் சாமிநாதன்

கொரோனா ஊரடங்கு காரணமா, 15 டன் விதைநெல்லை மட்டும் சாக்கோட்டை விதைப் பண்ணையில கொள்முதல் செஞ்சிக்கிட்டாங்க. கிலோவுக்கு 28 ரூபாய் வீதம் 4,20,000 ரூபாய் வருமானம் கிடைச்சுது. 3,500 கிலோ நெல்லை, கொள்முதல் நிலையத்துல விற்பனை செய்றது மூலமாக, கிலோவுக்கு 19.05 ரூபாய் வீதம், 66,675 ரூபாய் வருமானம் கிடைக்குது. சொந்த தேவைக்கு எடுத்து வெச்சிருக்குற 1,500 கிலோவுக்கு அரசாங்க விலைப்படி கணக்குப் போட்டால், கிலோவுக்கு 19.05 ரூபாய் வீதம் 28,575 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக மொத்தம் 10 ஏக்கர் நெல் சாகுபடி மூலம் 5,20,250 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஒரு ஏக்கருக்கு 52,025 ரூபாய் வருமானம் கிடைக்குது. எல்லாச் செலவும் போக, இதுல நிகரலாபமாக ஏக்கருக்கு 35,925 ரூபாய் கையில மிஞ்சும்” என்றார்.

தொடர்புக்கு, சாமிநாதன், செல்போன்: 94433 95721

விதைநெல் உற்பத்தி விவசாயி

மிழக வேளாண்மைத்துறையில் பதிவு செய்துகொண்டு விதைநெல் உற்பத்தி செய்து கொடுத்தால், விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். இதில் ஆர்வமுள்ள விவசாயிகள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் தங்களிடமிருந்து எவ்வளவு விதைநெல் தேவைப்படும் என்பது குறித்தும், விதிமுறைகள் குறித்தும் வேளாண் அலுவலர்கள் தெரிவிப்பார்கள். அதற்கேற்ப உற்பத்தி செய்து கொடுக்கலாமென மற்ற விவசாயிகளுக்கு வழிகாட்டுகிறார் சாமிநாதன்.

ஏக்கருக்கு ரூ. 52,000 வருமானம்! - இயற்கை விவசாயத்தில் விதைநெல் உற்பத்தி!

செயலூக்கம் செய்யப்பட்ட பஞ்சகவ்யா!

180 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ கடலைப்பிண்ணாக்கைக் கலந்து 3 நாள்களுக்கு ஊற வைத்துத் தினமும் இருவேளை கலக்கி விட வேண்டும். கடலைப்பிண்ணாக்கு நன்கு ஊறிப் புளித்த வாடை வந்த பிறகு, இதில் 20 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலக்க வேண்டும். 2 நாள்களுக்குப் பிறகு பார்த்தால், நன்கு நுரை பொங்கி வரும். இதில் நுண்ணுயிரிகள் அதிகளவில் பெருகி இருக்கும்.

நாற்று உற்பத்தி!

ரு ஏக்கரில் இயந்திர நடவு செய்ய, 2 சென்ட் நிலத்தில் பாய் நாற்றங்கால் அமைத்து, தேவையான அளவு சேறு தயார் செய்ய வேண்டும். அதனுடன் 2 லிட்டர் பஞ்சகவ்யா ஊற்ற வேண்டும். நாற்றங்கால் தயார் செய்த பிறகு, விதைநேர்த்தி செய்யப்பட்ட 20 கிலோ விதைநெல்லைத் தெளிக்க வேண்டும். இதன் மீது வைக்கோல் போட்டு மூடி, காலை, மாலை இருவேளை தண்ணீர் தெளிக்க வேண்டும். 7-ம் நாள் வைக்கோலை நீக்க வேண்டும். முளைப்பு வந்திருக்கும். அதன் பிறகு, தேவைக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும். 15-17-ம் நாள் நாற்றுகள் நடவு தயாராக இருக்கும்.

இயந்திர நடவு முறை!

ந்தப் பகுதியில் நாற்று நடவு செய்ய வேலையாள்கள் கிடைக்குறது ரொம்பக் கஷ்டம். அப்படியே கிடைச்சாலும் ஏகப்பட்ட செலவு ஆகும். இதைச் சமாளிக்க 6 வருஷமா இயந்திர முறையில் நடவு செஞ்சிக்கிட்டு இருக்கேன். இதுக்கு 2,200 ரூபாய்தான் செலவாகுது. இயந்திர முறையில் நாற்றுகளை நடவு செய்யும்போது, ஒரு ஏக்கரை ஒரு மணிநேரத்துல நடவு செஞ்சி முடிச்சிடலாம். நாற்றுகள் மேலோட்டமாகவும், செங்குத்தாகவும் நடவு செய்யப் படுறதுனால, நல்லா வேர் பிடிச்சு, ஒரு நாற்றுக்கு 50-60 தூர்கள் வரைக்கும் வருது. வரிசைக்கு வரிசை இடைவெளியும் சீராக இருக்கும். இதனால் கோனோவீடர் மூலம் களை ஓட்டுறதும் எளிதாக இருக்கும். இயந்திர நடவுக்கு ஏற்ற வகையில், பாய் நாற்றங்கால் அமைச்சு, நாற்றுகள் உற்பத்தி செய்வோம்.

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் நன்கு உழவு ஓட்டி, நிலத்தைச் சமப்படுத்திய பிறகு, இயந்திரம்மூலம் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 1 அடி. குத்துக்குக் குத்து 23 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். ஒரு குத்துக்கு 2-3 நாற்றுகள் இருக்கும். 15-ம் நாள் கோனோவீடர் மூலம் களைகளை ஓட்டி, மண்ணுக்குள் புதைக்க வேண்டும். 10, 25, 40 மற்றும் 55 ஆகிய நாள்களில் ஏற்கெனவே செயலூக்கம் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 15 லிட்டர் பஞ்சகவ்யாவை வாய்மடையில் பாசனநீரோடு கலந்து தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். இதனால் மண் வளமாவதோடு மட்டுமல்லாமல், இதிலிருந்து வீசும் வாடையால் எலித் தொல்லையும் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்படும்.

55-60-ம் நாள்கள்ல பூப்பூத்த தருணத்தில் 150 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் புளித்த மோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் நெல் மணிகள் திரட்சியாக உருவாகும். கருக்கா தவிர்க்கப்படும். நெல்மணிகள் நன்கு பளபளப்பாகவும், பொன் நிறத்திலும் காணப்படும். பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 15 இடங்களில் பறவைத் தாங்கிகள் அமைக்க வேண்டும். பூச்சித்தாக்குதல் ஏதேனும் தென்பட்டால், 150 லிட்டர் தண்ணீரில் 450-750 மி.லி வேப்பெண்ணெய்க் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். தேவைக்கு ஏற்பக் காய்ச்சலும் பாய்ச்சலுமாக அவ்வப்போது தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism