Published:Updated:

`வெற்றிலை, மிளகு, உப்பு சேர்த்து கொடுக்கலாம்!’ - மாடுகளைப் பாதிக்கும் பெரியம்மைக்கு இயற்கை நிவாரணம்

மாடுகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம்
மாடுகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம்

``பெரியம்மை பாதிக்கும் மாடுகளிடமிருந்து வெளியேறும் நச்சுயிரிகள் பல மாதங்களுக்கு கொட்டகையில் உயிர்ப்புடன் இருக்கும்’’ என்கிறார், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வசந்தநடை கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் ஏற்படாமல் தடுப்பது குறித்து சிறப்பு சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. முகாமை, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து கால்நடை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் தாது உப்புக்கலவை பாக்கெட்டுகளை வழங்கினார்.

அப்போது, ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசுகையில், ``கால்நடைகளுக்குப் பெரியம்மை பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடைபெறுகின்றன.

மாடுகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம்
மாடுகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம்

ஈ, கொசு, உண்ணிகள், ரத்தம் உறிஞ்சக்கூடிய கடிக்கும் பூச்சிகளால் மாடுகளுக்கு பெரியம்மை வைரஸ் பரவுகிறது. அதிக காய்ச்சல், உடல் முழுவதும் சிறுகட்டிகள், கால்களில் வீக்கம், பால் உற்பத்தி குறைதல், சினையுற்ற மாடுகளில் கருச்சிதைவு போன்ற அறிகுறிகளை வைத்து பெரியம்மை பாதித்த மாடுகளைக் கண்டறியலாம். அந்த நோய்களுக்கு வாய் வழியாக இயற்கை மருத்துவம் செய்யலாம்.

10 வெற்றிலை, 10 கிராம் மிளகு, 10 கிராம் உப்பு மற்றும் தேவையான அளவு வெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். மேற்கூறியவற்றை முதலில் அரைத்து விடவேண்டும். பின்னர், வெல்லம் சேர்த்து சிறிது சிறிதாக நாக்கில் தடவிக் கொடுக்க வேண்டும். முதல் நாள் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும். இரண்டாம் நாளிலிருந்து தினமும் மூன்றுமுறை வீதம் இரண்டு வாரங்களுக்குத் தரவேண்டும்.

தாது உப்புக்கலவை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
தாது உப்புக்கலவை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையிலிருந்து தனிமைப்படுத்தி முடிந்தவரை தனிநபர் மூலம் பராமரிக்கவேண்டும். பண்ணை கொட்டகையுடன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகளுக்குத் தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரமும் தனியாக இருக்க வேண்டும். மாடுகளிலிருந்து வெளியேறும் நச்சுயிரிகள் பல மாதங்களுக்கு அசுத்தமான கொட்டகையில் உயிர்ப்புடன் இருக்கும். எனவே, கிருமி நாசினியைக் கொண்டு கொட்டகையை முறையாகச் சுத்தம் செய்யவேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.

அடுத்த கட்டுரைக்கு