Published:Updated:

ஒரு ஏக்கர் ரூ. 40,000 - இயற்கை எள்... இனிக்கும் லாபம்!

எள் வயலில் கனகவள்ளி
பிரீமியம் ஸ்டோரி
News
எள் வயலில் கனகவள்ளி

மகசூல்

கிராமப்புறப் பெண்களில் பெரும்பாலானோர் விவசாயத்தில் ஆண்களுக்கு நிகராக வேலை செய்து வருகிறார்கள். வயலில் இறங்கி வேலை செய்வதோடு மட்டு மல்லாமல், கணக்கு வழக்குகள் உட்பட, விவசாயத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பெண்களும் இருக்கிறார்கள்.

அதிலும், இயற்கை விவசாயத்தைப் பெண்கள் ஆர்வமுடன் முன்னெடுத்து வருகிறார்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கனகவள்ளி. இயற்கை விவசாயத்தின் மீதான ஈடுபாடு காரணமாக, குத்தகை நிலம் பிடித்து, தனது சொந்த முயற்சியில், 3 ஏக்கரில் எள், 1 ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்து வருகிறார். ஒரு பகல் பொழுதில் இவரைச் சந்தித்தோம்.

கனகவள்ளி
கனகவள்ளி

சுமார் 5 அடி உயரத்தில் செழிப்பாக விளைந்திருந்த எள் செடிகளில், காய்கள் முற்றி அறுவடை தருணத்திலிருந்தது. நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்ற கனகவள்ளி, “மண்ணுக்குக் கனஜீவாமிர்தம் கொடுத்ததுனாலயும், மேலுரமாக பஞ்சகவ்யா, இ.எம், மீன் அமிலம் கலந்து தெளிச்சதுனாலயும் பயிர் எவ்வளவு ஊக்கமா வளர்ந்திருக்குப் பாருங்க” என உற்சாகமாகப் பேசியவாறே, ஒரு செடியைப் பிடுங்கி, “காய்ப்பும் அருமையா இருக்கு. இதோ எண்ணிப்பாருங்க... ஒரு செடிக்கு 150-லிருந்து 200 காய்கள் இருக்கு. இந்தப் பகுதியைப் பொறுத்தவரைக்கும், எள் சாகுபடியில, கொண்டைப்பூச்சித் தாக்குதல்தான் சவாலானது. ஆனால், என்னோட எள் செடிகள்ல அந்தப் பிரச்னையே இல்லை. இதுமட்டுல்ல; இயற்கை விவசாயத்துல நான் கடைப்பிடிக்கிற சில தனித்துவமான வழிமுறைகளால, இன்னும் பலவிதமான பலன்களைக் கண்கூடாக உணர்ந்துக்கிட்டு இருக்கேன்’’ என்றவர், தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

எள்
எள்

இயற்கை கொடுத்த குழந்தைப் பேறு

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம், தஞ்சாவூர்-திருவாரூர் வழியில இருக்கப் பூண்டி கிராமம். என்னோட அப்பா, தாத்தா எல்லாம் விவசாயம்தான் செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. ஆனா என்னமோ தெரியலை… அப்ப எனக்கு விவசாயத்துல கொஞ்சம்கூட ஆர்வம் ஏற்பட்டதே இல்லை. அங்க என்னதான் நடக்குதுனு சும்மா தெரிஞ்சிக்கக்கூட நினைச்சதில்லை. முதுகலை அறிவியல் பட்டபடிப்புப் படிச்சேன். 2016-ம் வருஷம் திருமணமாகி, இங்க வந்தேன். என்னோட கணவரும் விவசாயிதான். இயற்கை விவசாயத்துல ஈடுபாடு கொண்டவர். இதைப் பத்தி என்கிட்ட அடிக்கடி பேசுவார். ஆனால், காது கொடுத்துக்கூட கேட்க மாட்டேன்.

எள் வயலில் கனகவள்ளி
எள் வயலில் கனகவள்ளி

‘இயற்கை முறையில விளைவிச்ச உணவுப்பொருள்களைச் சாப்பிட்டால், உடம்புக்கு நல்லது’னு சொல்வார். ஆனால், நான் கடைகள்ல வாங்கக்கூடிய அரிசி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இதுமாதிரிதான் விரும்புவேன். இதுக்கிடையில எங்களுக்குக் குழந்தைப் பேறு தள்ளிப் போயிக்கிட்டே இருந்துச்சு. ‘உடல்ல போதுமான அளவுக்குச் சத்துகள் இல்லை’னு டாக்டருங்க சொன்னாங்க. என் கணவரோட நண்பர்கள் நிறைய பேர் இயற்கை விவசாயிகள். ‘இயற்கை முறையில் விளைவிச்ச பாரம்பர்ய அரிசி, கடலை எண்ணெய், நல்லெண்ணெய்… இதெல்லாம் சாப்பாட்டுல சேர்த்துங்க’னு சொன்னாங்க. இதெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சேன். அடுத்த சில மாதங்கள்ல, குழந்தைப் பேறு உண்டாகி, சுகப் பிரசவம் ஆச்சு. குழந்தை நல்லா ஆரோக்கியமாகவும் இருந்துச்சு. தடுப்பூசிகளே போடலை. இதனால் இயற்கை விவசாயத்து மேல எனக்கு மிகப்பெரிய மதிப்பும் ஈடுபாடும் ஏற்பட்டுச்சு.

இயற்கை இடுபொருள்
இயற்கை இடுபொருள்

சொந்தக் காலில் வெள்ளாமை

என் கணவர் 8 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கார். பசுமை விகடனின் பசுமை ஒலி குரல் பதிவுகளைக் கேட்டு, நான்தான் அவருக்கு, பஞ்சகவ்யா, தேமோர் கரைசல், கனஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்டி உள்ளிட்ட இடுபொருள்களைச் செஞ்சிக் கொடுக்க ஆரம்பிச்சேன். இதுல நான் அதிக கவனம் செலுத்தி, தயார் செஞ்சிக் கொடுக்குறதுனால, ‘இந்த இடுபொருள்கள் எல்லாமே தரமா இருக்கு’னு என் கணவர் சொல்வார். இதுக்கிடையில வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பசுமை விகடனும் படிப்பேன். இதனால இயற்கை விவசாயம் மீதான தாக்கம் எனக்கு இன்னும் அதிகமாச்சு. நானே தனியாக, என்னோட சொந்த முயற்சியில இயற்கை விவசாயம் செய்யணும்னு ஆசைப்பட்டேன். என்னோட கணவரும் இதுக்கு ரொம்பவே ஒத்துழைச்சார். குத்தகைக்கு 4 ஏக்கர் நிலம் பிடிச்சோம். இதுல கடந்த 2 வருஷமா, பாரம்பர்ய நெல், எள், உளுந்து பயிர் பண்ணிக்கிட்டு இருக்கேன். எங்ககிட்ட நாட்டு மாடுகள் 6 இருக்கு. இதனால, போதுமான அளவுக்கு இயற்கை இடுபொருள்கள் தயார் செஞ்சி பயன்படுத்த முடியுது. கோடைப் பட்டத்துல 3 ஏக்கர்ல எள்ளும் 1 ஏக்கர்ல உளுந்தும் சாகுபடி செஞ்சிருக்கேன்” என்றவர், எள் சாகுபடி அனுபவங்களை விவரிக்கத் தொடங்கினார்.

நாட்டு மாடுகளுடன்
நாட்டு மாடுகளுடன்

‘‘நாட்டு எள்ளுதான் சாகுபடி செய்யணும்னு ஆசைப்பட்டேன். அதுலதான் எண்ணெய் பிழித்திறன் அதிகமாக இருக்கும். அதை மாசிப்பட்டத்துல விதைப்புச் செஞ்சாதான் செழிப்பாக விளையும். பட்டம் தவறக்கூடாதுனு இந்தப் பகுதியில உள்ள பெரியவங்க சொன்னாங்க. சரியான தருணத்துல எனக்கு நாட்டு எள் கிடைக்காததாலயும், சில சொந்த காரணங்களாலயும், எள் விதைப்புக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தள்ளிப்போனது. அதனால நவீன ரகமான திண்டிவனம்-7 விதைச்சேன். இதுல அதிக மகசூல் கிடைக்கும்னு சொன்னாங்க. புழுதி உழவு ஒட்டி, ஏக்கருக்கு 150 கிலோ கன ஜீவாமிர்தம் போட்டு, தண்ணீர் விட்டு, 3-ம் நாள் மறுபடியும் உழவு ஓட்டி, விதையைத் தூவி விட்டோம். அடியுரமாகக் கனஜீவாமிர்தம் போட்டதுனால, மண்ணு நல்லா வளமாச்சு. விதையை, பஞ்கவ்யா, இ.எம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, ரைசோபியம் கலந்த கலவையில விதைநேர்த்தி செஞ்சதுனால, விதைகளோட முளைப்புத்திறன் அதிகரிச்சி, பயிரோட வளர்ச்சி வேகமாக இருந்துச்சு.

ஒரு ஏக்கர் ரூ. 40,000  - இயற்கை எள்... இனிக்கும் லாபம்!

விதைப்பு செஞ்ச அடுத்த சில வாரங்கள்லயே பயிர் உயரமாக வளர்ந்து நிலத்துல நிழல் விழுந்தது.அதனால, களைகள் அதிகமாக உருவாகலை. களை எடுக்குற செலவு மிச்சமாச்சு. விதைகளை விதைநேர்த்தி செஞ்சதுனால, இன்னொரு கூடுதல் பலன் என்னென்னா, பயிரின் பூச்சி, நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாச்சு. இதனால் கொஞ்சம்கூட வேர் பூச்சித்தாக்குதலே ஏற்படலை. பூப்பூத்து, பிஞ்சு விடும் தருணத்துல கொண்டைப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டால், காய்களின் எண்ணிக்கை குறைஞ்சி மகசூல் பாதிக்கும். இதைத் தவிர்க்க, வரும் முன் காப்போம் நடவடிக்கையா, தேமோர் கரைசல்ல, வசம்பு, மஞ்சள் தூள் கலந்து, பூக்கும் தருணத்துல தெளிச்சோம். இதனால் கொண்டை பூச்சித்தாக்குதலே இல்லை.

300 கிலோ மகசூல்

பஞ்சகவ்யா, இ.எம், மீன் அமிலம் கலந்த கரைசல்ல, இரண்டு முறை மட்டும் வேப்பெண்ணெய், புங்கன் எண்ணெய் கலந்து தெளிச்சோம். பூச்சி நோய்த்தாக்குதல் ஏற்படாமல் இருக்க இதுவும் ஒரு முக்கியக் காரணம். இதனால இயற்கைப் பூச்சிவிரட்டியே தேவைப்படல. பொதுவாக எள் சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் 75-85 நாள்கள்ல அறுவடை செஞ்சிடுவாங்க. ஆனால், இந்த ரகம் இரண்டு முறை பூத்து, அதிகமாகக் காய் வெச்சதுனால, ஒரே சீராக முதிர்ச்சி அடைஞ்சி, அறுவடைக்கு வர 90 நாள்களுக்கு மேல ஆயிடுச்சு. இன்னும் சில நாள்கள்ல அறுவடை செஞ்சிடுவேன். ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 300 கிலோ மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். இதை எண்ணெயாக ஆட்டினால், 150 லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும். இயற்கை முறையில் உற்பத்தி செஞ்சதுனால, எங்களோட குடும்ப நண்பர்கள், உறவினர்கள் எல்லாருமே இதை விலைக்கு வாங்க ஆர்வமாக இருக்காங்க.

ஒரு லிட்டருக்கு, 325 ரூபாய் வீதம் 48,750 ரூபாய் வருமானம் கிடைக்கும். 150 கிலோ எள்ளுப் பிண்ணாக்கையும் எங்களோட மாடுகளுக்குத் தீவனமாகப் பயன் படுத்திக்குவோம். இதோட விலை கிலோவுக்கு 35 ரூபாய் வீதம் 5,250 ரூபாய். ஆக மொத்தம் ஒரு ஏக்கர் எள் சாகுபடி மூலமாக 54,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லாச் செலவுகளும் போக, நிகர லாபமாக, சுமார் 40,000 ரூபாய் கிடைக்கும்” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு, கனகவள்ளி, செல்போன் 95853 34234

இயற்கை எள் சாகுபடி!

ரு ஏக்கரில் எள் சாகுபடி செய்வதற்கான செயல்முறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் புழுதி உழவு ஓட்டி, ஏக்கருக்கு 150 கிலோ வீதம் கனஜீவாமிர்தம் போட்டு, தண்ணீர் விட வேண்டும். மீண்டும் உழவு ஓட்டி, நிலத்தைத் தயார் செய்ய வேண்டும். விதைநேர்த்தி செய்து ஏற்கெனவே தயாராக வைத்துள்ள, 2 கிலோ விதையைத் தூவ வேண்டும். இவற்றை மண் மூடும் அளவுக்கு, ரோட்டோவேட்டர் மூலம் மண்ணை மேலோட்டமாக உழவு ஓட்டி, கிளறிவிட வேண்டும். 5-ம் நாள் விதைகளிலிருந்து முளைப்பு வரும். 21-ம் நாள் தண்ணீர் விட வேண்டும். 24-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் தலா 2.5 லிட்டர் பஞ்சகவ்யா, இ.எம் கரைசல், 500 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 32-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில், தலா 3 லிட்டர் பஞ்சகவ்யா, இ.எம் கரைசல், 500 மி.லி மீன் அமிலம், தலா 250 மி.லி வேப்பெண்ணெய், புங்கன் எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். பொதுவாகவே, இடுபொருள்களை மாலை நேரத்தில் தெளிப்பது நல்லது. 40-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் தலா 3 லிட்டர் பஞ்சகவ்யா, இ.எம் கரைசல், 500 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும்.

47-ம் நாள் 5 லிட்டர் மோரில், 4 தேங்காய்களிலிருந்து துருவப்பட்ட துருவல்களைப் போட்டு, ஒரு வாரம் புளிக்க வைத்து, இதனுடன் தலா 50 கிராம் வசம்பு, மஞ்சள்தூள் கலந்து நன்கு கலக்கிவிட்டு, 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 54-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில், தலா 3 லிட்டர் பஞ்சகவ்யா, இ.எம் கரைசல், 500 மி.லி மீன் அமிலம், தலா 250 மி.லி வேப்பெண்ணெய், புங்கன் எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப அவ்வப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

விதை நேர்த்தி

லா 250 மி.லி பஞ்சகவ்யா, இ.எம் கரைசல், தலா 50 கிராம் அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் இவற்றை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசல் தயார் செய்ய வேண்டும். 2 கிலோ எள் விதையைக் காட்டன் துணியில் மூட்டையாகக் கட்டி, கரைசலில் அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு நிழலில் உலர்த்தி விதைப்புச் செய்ய வேண்டும்.