Published:Updated:

`வெட்டுக்கிளி தாக்குதலைக் கட்டுப்படுத்த கலவைக்கரைசல்!' - இயற்கை விவசாயியின் தீர்வு

பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம்
பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம்

பயிர்களில் பாலைவன வெட்டுக்கிளிக் கூட்டங்களின் தாக்குதலைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், கட்டுப்படுத்திடவும் இயற்கைமுறைப் பூச்சிவிரட்டியான ’கலவைக்கரைசலை’த் தெளிக்கலாம் என முன்னோடி இயற்கை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அந்த அச்சத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில், தற்போது விவசாய விளைநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் புகுந்து பயிர்களை நாசமாக்கி வருகின்றன. பாலைவன வெட்டுக்கிளிகள் என்பது வெட்டுக்கிளியின் ஒரு இனமாகும். இது குறுகிய கொம்புடையது. ஒவ்வோர் ஆண்டும் பாகிஸ்தானின் எல்லையோர மாநிலங்களில் தாக்குதலை ஏற்படுத்தும் இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது பலமடங்கு எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

பாலைவன வெட்டுக்கிளி
பாலைவன வெட்டுக்கிளி

அதுமட்டுமல்லாமல், இவை ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குள் புகுந்து பருத்திப் பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. `நான்கு கோடி வெட்டுக்கிளிகளைக் கொண்ட கூட்டம், 35,000 மக்களுக்குப் போதுமான உணவை அழித்துவிடும்” என, ஐக்கியநாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது.

பல மாநிலங்களில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கிறார்கள். அத்துடன் விவசாயிகள் மேளம் அடித்தும், பலவித ஒலிகளை எழுப்பியும், வெடி வெடித்தும் விரட்ட முயன்று வருகிறார்கள். தமிழகத்தில் கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வயல்வெளிகள், வாழைத்தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் காணப்படுவதாக விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதையடுத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அவை பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை உள்ளூர் வெட்டுக்கிளிகள்தான் எனத் தெரியவந்தது.

பாலைவன வெட்டுக்கிளிகள்
பாலைவன வெட்டுக்கிளிகள்

தமிழக வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, “பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு. இதன் தாக்குதல் வரும் ஜூலை வரை இருக்கும். ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநில எல்லைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 250 வகையான வெட்டுக்கிளிகளில், சில மாவட்டங்களில் காணப்பட்டது உள்ளூர் வெட்டுக்கிளிதான். இதுகுறித்து விவசாயிகள் கவலைகொள்ளத் தேவையில்லை” என்றார். இதையடுத்து விவசாயிகள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், காற்றின் திசைவேகத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும் வேளாண் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெட்டுக்கிளிகளின் தாக்குதலைத் தவிர்க்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக இயற்கை விவசாய முறைகளில் தெளிக்கப்படும் கலவைக்கரைசலை தெளிக்கலாம் எனத் தமிழகத்திலுள்ள பல முன்னோடி இயற்கை விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம், விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயியான ஏகாம்பரத்திடம் பேசினோம்.

“இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரையில் நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த மூலிகைப் பூச்சிவிரட்டி, ஐந்திலைகரைசல், பத்திலைக்கசாயம், கலவைக்கரைசல், இஞ்சி-பூண்டு-மிளகாய்க்கரைசல், அக்னி அஸ்திரம், தேமோர்க்கரைசல் போன்ற பலவகைக் கரைசல்களைத் தெளிப்பது வழக்கம்.

ஏகாம்பரம் - இயற்கை விவசாயி
ஏகாம்பரம் - இயற்கை விவசாயி

இவற்றில், தற்போது பயிர்களை நாசம் செய்துவரும் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த கலவைக்கரைசலைத் தெளிக்கலாம். அடுப்புச் சாம்பல் 2 கிலோ, வேப்பங்கொட்டை 2 கிலோ, ஆட்டுச்சாணத்தூள் 2 கிலோ, மிளகாய்த்தூள் 250 கிராம், மஞ்சள்தூள் 500 கிராம், பெருங்காயத்தூள் 50 கிராம், வசம்புத்தூள் 50 கிராம், இஞ்சி 200 கிராம், வெள்ளைப்பூண்டு 200 கிராம், சின்ன வெங்காயம் 500 கிராம், சோற்றுக்கற்றாழை 7 மடல் (துண்டுதுண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்), பசுமாட்டுச் சிறுநீர் 15 லிட்டர் ஆகியவற்றை பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு ஒருநாள் முழுவதும் வைத்திருந்து அடுத்தநாள் வடிகட்டி, அந்தக் கரைசலை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் கலவைக்கரைசல்.

இந்தக் கலவைக் கரைசல் தயாரிக்க கூறப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தும் ஒரு ஏக்கர் பரப்பில் தெளிப்பதற்கான அளவு. 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் கலவைக்கரைசலை ஊற்றி, நன்கு கலக்கி, மாலை நேரத்தில் கைத்தெளிப்பானால் (ஸ்பிரேயர்) தெளிக்க வேண்டும். மாலை நேரத்தில் தெளிப்பதால், இக்கரைசல் துளிகள் பயிர்களில் நன்றாக ஒட்டிக்கொள்ளும். காய்கறிகள், பழப் பயிர்கள், நெல், வாழை, பூக்கள் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் இக்கரைசலைத் தெளிக்கலாம். 7 நாள்களுக்கு ஒருமுறை தெளித்து வர வேண்டும். இக்கரைசல் தெளிக்கப்பட்டவுடன் பயிர்களின் இலை, தண்டு, காய் என அனைத்துப் பாகங்களின் சுவையும் கசப்பு மற்றும் காரத்தன்மையாக மாறிவிடுவதால், இச்சுவையின் தாக்கம் தாங்காமல் பயிர்களைத் திண்ணாது. அப்படியே கடித்து சாப்பிட்டாலும், கார, கசப்புத்தன்மையால் செரிமானப் பிரச்னை ஏற்பட்டு அவை உயிரிழக்கும்.

ஒலி எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்டும் விவசாயிகள்
ஒலி எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்டும் விவசாயிகள்
User
ரயில்கள் மூலம் தமிழகத்துக்குப் படைவெட்டுக்கிளிகள் பரவ வாய்ப்புண்டா?

இதனால், வெட்டுக்கிளிகள் முட்டை உற்பத்தி முதல் இனவிருத்தி வரைக் கட்டுப்படும். கடந்த ஆண்டு, மக்காச்சோளப் பயிர்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய படைப்புழுக்களின் தாக்குதலை இக்கரைசலைத் தெளித்துதான் கட்டுப்படுத்தினோம். விவசாயிகள், தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இக்கரைசலைத் தெளிக்கலாம். இக்கரைசலைத் தயாரிக்கும் செலவு மிகக்குறைவுதான். இது எவ்வித ரசாயனக் கலப்புமில்லாத, முற்றிலும் இயற்கையான கரைசல் என்பதால், ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப்போல பயிர்களுக்கு எந்தப் பாதிப்புமில்லை. இந்தப் பயிர்கள் வெட்டுக்கிளித் தாக்குதலை மட்டுமல்ல... தீமை செய்யும் பூச்சிகள், புழுக்களையும் இதனால் கட்டுப்படுத்தலாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு