Published:Updated:

நேரடி விற்பனை... மாதம் ரூ.50,000 லாபம்! - நீலகிரியில் சிலிர்க்கும் ஜீரோபட்ஜெட் பண்ணை!

இயற்கை எழில் சூழ்ந்த பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை எழில் சூழ்ந்த பண்ணை

பண்ணை: உருளைக் கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி, கேரட்...

நேரடி விற்பனை... மாதம் ரூ.50,000 லாபம்! - நீலகிரியில் சிலிர்க்கும் ஜீரோபட்ஜெட் பண்ணை!

பண்ணை: உருளைக் கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி, கேரட்...

Published:Updated:
இயற்கை எழில் சூழ்ந்த பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை எழில் சூழ்ந்த பண்ணை

யற்கை வாழ்வியல் தேடல், இயற்கை விவசாயம் சார்ந்த வருமான வாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்குக் கைகொடுப்பது தற்சார்பு விவசாயம்தான். அதனாலேயே, நகர்ப் பகுதியில் கைநிறைய சம்பாதிப்பவர்கள்கூட, விவசாய வேலைகளில் களமிறங்குகிறார்கள். அந்த வகையில், ஐ.டி பணியிலிருந்து விலகி, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டாரத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் கணேசன் அருணாசலம்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஊதக்காத்து இதமாக வீச, வெயிலும் குளிரும் கரம் கோத்து ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற உணர்வைக் கொடுக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பகுதி மனதைக் கொள்ளை கொள்கிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் மலைப்பாதையின் இடையே அமைந்திருக்கிறது மாமரம் பகுதி. அங்கிருந்து வலதுபுறமாகக் காட்டுப் பாதையில் 6 கிலோமீட்டர் தொலைவில் செம்மநாரை கிராமத்தில் அமைந்திருக்கிறது கணேசனின் ‘வைல்டு ஈடன்’ இயற்கை விவசாயப் பண்ணை. விவசாயப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்த கணேசன், நம்மை இன்முகத்துடன் வரவேற்று தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கனடாவில் விவசாயத் தேடல்

“என்னோட அப்பா நீலகிரி மாவட்டத்துல வனத்துறை அதிகாரியா வேலை செஞ்சார். அப்போ வீட்டுத்தோட்டம் வெச்சிருந்தோம். அதனாலயும், இயற்கை சூழல்லயே வாழ்ந்ததாலயும் இளமைப் பருவத்துலயே எனக்கு விவசாய ஆர்வம் ஏற்பட்டுச்சு. கல்லூரிப் படிப்பு முடிச்சதும் திருச்சியில பெரியப்பா மகனுடன் இணைஞ்சு ஒரு வருஷம் விவசாயம் செஞ்சேன். பிறகு, குடும்பப் பொருளாதாரச் சூழலால பல்வேறு ஊர்கள்ல வேலை செஞ்சேன். இந்த நிலையில, பொறியாளரான என் மனைவியும் நானும் வேலைக்காகக் கனடா நாட்டில் குடியேறினோம்.

கணேசன்
கணேசன்

இந்த இடைப்பட்ட காலங்கள்ல எனக்கு விவசாய ஆர்வம் மேலும் அதிகரிச்சது. அந்த நாட்டுல நயாகரா நீர்வீழ்ச்சி சுற்றுவட்டாரப் பகுதிகள்ல திராட்சை, ஆப்பிள், காய்கறி, மலர் சாகுபடியெல்லாம் சிறப்பா நடக்கும். விடுமுறை நாள்கள்ல அந்தப் பகுதிகளுக்கெல்லாம் போய் விவசாயிகள்கிட்ட நிறைய அனுபவங்களைக் கத்துகிட்டேன். கூடவே வீட்டுத்தோட்டத்துல நிறைய பயிர்களை வளர்த்தேன். ஒருகட்டத்துல நம்ம நாட்டு வாழ்க்கை முறைதான் சிறந்ததுனு புரிஞ்சது. 10 வருடங்கள் வெளிநாட்டுல இருந்த நிலையில, 2016-ம் வருஷம் இந்தியா வந்தோம்.

மும்பை, பெங்களூருல மறுபடியும் ஐ.டி வாழ்க்கையைத் தொடர்ந்தேன். நிறைவான வருமானம் கிடைச்சாலும், அந்த வாழ்க்கை முறை மனசுக்கு நிறைவு தரல. இந்த வாழ்க்கை முறை இனியும் ஒத்துவராதுனு தோணவே வேலையை விட்டுட்டேன். நம்மாழ்வாரின் வானகம் பண்ணை உட்பட பல இடங்கள்லயும் விவசாய அனுபவங்கள கத்துக்கிட்டேன். கத்தார்ல இருந்து இந்தியா திரும்பிய மைத்துனர் கிருஷ்ணகுமாரும் என்னுடன் விவசாய வேலைகள்ல இணைஞ்சார்” என்று முன்கதையை விவரித்தவர், தோட்டத்தைச் சுற்றிக்காட்டியபடியே தொடர்ந்தார்.

6 ஏக்கரில் முன்னோட்டம்

“‘தற்சார்பு விவசாயம் செய்யக் கத்துக்கணும்னா, காடு எப்படி விவசாயம் செய்யுதுனு அங்க போய்ப் பார்க்கணும்’னு நம்மாழ்வார் ஐயா சொல்வார். அதன்படி, நான் வளர்ந்த நீலகிரியிலேயே விவசாயம் செஞ்சு, மக்களுக்கு நல்ல உணவுப் பொருள் களைக் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா, இந்த மாவட்டத்துல வந்து களநில வரத்தைத் தெரிஞ்சுகிட்டப்போ அதிர்ச்சியா இருந்துச்சு. அதிக ரசாயன உரப் பயன்பாடு களால இந்தப் பூமி மிக மோசமா பாதிக்கப் பட்டிருப்பது தெரிஞ்சது. ஆனாலும், இந்தப் பகுதியை விட்டுட்டு வேறு பகுதிக்குப் போகும் எண்ணம் இல்ல. சுற்றுவட்டாரத்துல எங்கயுமே ரசாயன உரம் பயன்படுத்தாத இந்த நிலத்தை ஒரு வருஷத் தேடலுக்குப் பிறகு கண்டுபிடிச்சோம். இந்த 15 ஏக்கர் நிலத்துல நிறைய மரங்கள் இருந்துச்சு. அவை பாதிக்காத வகையில, ரெண்டு வருஷத்துக்கு முன்பு விவசாய வேலைகளை ஆரம்பிச்சோம்.

பண்ணையில்
பண்ணையில்

குமிழ், அகத்தியை உயிர்வேலியா வளர்க்கிறோம். ஏற்கெனவே, இருந்த மரங்களுடன் அவகடோ, ரம்புட்டான், லிச்சி, மாதுளை, பலா, வாழை, சப்போட்டா, கொய்யா, மா, சீத்தா, ஆரஞ்சு உட்பட நூத்துக்கணக்கான பழ மரங்களுடன் சந்தனம், ஈட்டி, மலை வேம்பு உள்ளிட்ட மரங்களையும் அதிகளவுல வெச்சிருக்கோம்.

இந்தப் பகுதி, கடல் மட்டத்துல இருந்து சுமார் 800 மீட்டர் உயரத்துல இருக்கு. அதனால, வெயிலும் குளிரும் சரிவிகிதத்துல இருக்கும். இங்கே நிலவும் பருவநிலை, இந்த நிலத்தின் தன்மைக்கு எந்தெந்தப் பயிர்கள் நல்லா விளையும்னு தெரிஞ்சுக்க முதல்கட்டமா 6 ஏக்கர்ல மட்டும் மலைப்பயிர்களைப் பயிரிட் டோம். அதுல சாதக, பாதக அனுபவங்கள் தெரிஞ்சது. உருளைக்கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி, கேரட் உள்ளிட்ட கிழங்கு வகைப் பயிர்களின் வேரானது மண்ணைப் பொலபொலப்பாக்கும் தன்மை கொண்டது. அதனால, அதையெல்லாம்தான் ஆரம்பத்துல அதிகம் பயிரிட்டோம்.

சிறந்த விவசாயி விருது

ஒருசில பயிர்களை மட்டுமே மொத்தமா பயிரிட்டு, சில நேரங்கள்ல விலை வீழ்ச்சியால விலை கிடைக்காமப் போகும் சிக்கலைத் தவிர்க்க ‘பாலிகிராப்பிங்’ முறையில என்னோட தோட்டத்தை வடிவமைச் சிருக்கேன். குறிப்பிட்ட பரப்புல மட்டும் ஒரு பயிரை வளர்த்து, அறுவடை முடிஞ்சதும் அந்த நிலத்துல வேறு பயிரைப் பயிரிடுவோம்.

உருளைக்கிழங்கு அறுவடை
உருளைக்கிழங்கு அறுவடை

நூல்கோல் (நூக்கல்), புரக்கோலி, பூண்டு, பச்சைப்பட்டாணி, லெட்யூஸ், செலரி, பீட்ரூட், பீன்ஸ், முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலிஃப்ளவர் போன்ற மலைப் பயிர்களும், பஜ்ஜி மிளகாய், செளசெள, பாகல், பீர்க்கன், சுரைக்காய், பரங்கிக்காய், புடலை மாதிரி கொடி வகைகளும், தண்டுக்கீரை, செடி முருங்கை, பொன்னாங்கண்ணி, பசலை, புதினா உள்ளிட்ட பல்வேறு கீரைகளையும் சுழற்சி முறையில பயிரிடுறேன். மரவள்ளிக் கிழங்கு, ஜாதிக்காய், கடுக்காய், பிரியாணி இலை, நெல்லி, மூலிகைச் செடிகளும் அதிகளவுல இருக்கு’’ என்றவர் தனது ஜீரோபட்ஜெட் விவசாயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

‘‘சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் விவசாயக் கருத்தரங்கில் கிடைச்ச அனுபவத்துல, தோட்டத்துக்குள்ளேயே கிடைக்கும் பொருள்களைக் கொண்டே எல்லாத் தேவையையும் பூர்த்தி செஞ்சுக்கிறேன். ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மீன் அமிலம் ஆகிய இடுபொருள்களை மட்டுமே சுழற்சி முறையில கொடுக்கிறேன். தீமை செய்யும் பூச்சிகளைக் கவர, நிலத்தைச் சுற்றியும் செண்டுமல்லி, ஆமணக்கு, துவரைப் பயிர்களை போட்டிருக்கோம். அதையும் மீறிப் பூச்சித்தாக்குதல் இருந்தா பூச்சிவிரட்டி, அக்னியஸ்திரக் கரைசலைப் பயன்படுத்துவோம். வேப்பம் புண்ணாக்கு, டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் ஆகியவற்றைத் தொழுவுரத்துடன் சேர்த்து மண்ணுல கலந்து நிலத்தை உழுத பிறகுதான் கிழங்கு வகை பயிர்களை விதைப்போம். அதனால, பனிக்காலத்துல வேர் அழுகல் நோய் பாதிப்புகள் அதிகம் வர்றதில்லை.

‘‘ ‘தற்சார்பு விவசாயம் செய்யக் கத்துக்கணும்னா, காடு எப்படி விவசாயம் செய்யுதுனு அங்க போய்ப் பார்க்கணும்’னு நம்மாழ்வார் ஐயா சொல்வார்.’’

மாவட்டத் தோட்டக்கலைத்துறை சார்புல ‘கண்டுணர்வு சுற்றுலா’ பயிற்சி வகுப்பை நடத்திட்டு இருக்காங்க. இயற்கை வேளாண்மை நல்லா நடக்கிறதால, அந்தப் பயிற்சி வகுப்பை என்னுடைய தோட்டத்துலயும் நடத்துறாங்க” என்று பெருமையுடன் சொன்னார். நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் இந்த ஆண்டுக்கான அங்கக வேளாண்மை பண்ணை நிர்வகிப்புக்கான ‘சிறந்த உழவன்’ விருது இவருக்குக் கிடைத்திருக்கிறது.

மேய்ச்சலில் மாடுகள்
மேய்ச்சலில் மாடுகள்

மாதம் 50,000 ரூபாய்

விற்பனை வாய்ப்புகள் குறித்துப் பேசிய கணேசன், “கடந்த வருஷம் லாக்டௌன் சமயத்துலதான் எங்க தோட்டத்துல முதல் முறையா அறுவடை நடந்துச்சு. அப்போ பெருசா லாபம் நிக்காட்டியும், விளைபொருளை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்த நிறைவுடன், வாடிக்கையாளர்களுடன் நல்ல நட்பு ஏற்பட்டுச்சு. மலைப் பயிர்களுக்கான மார்க்கெட் தேவை, கோயம்புத்தூரில் அதிகளவுல இருக்கு. எனவே, அங்குள்ள மக்கள்தாம் என்னுடைய பிரதான வாடிக்கையாளர்கள். அறுவடை செய்யவிருக்கும் காய்கறிகள் பத்தி ஒரு வாரத்துக்கு முன்பே என்னோட வெப்சைட்டிலும் மென்பொருள் செயலியிலும் (ஆப்) தகவல் தெரிவிச்சுடுவேன். பலரும் ஆர்டர்கள் கொடுப்பாங்க. அதுக்கேற்ப, அறுவடை முடிஞ்சு சில மணிநேரத்துக்குள் வாடிக்கையாளர்களுக்கு நேர்ல கொண்டுபோய் காய்கறிகளைக் கொடுத்துடுவோம்.

காய்கறிகள், கீரைகள் சேர்த்து 17 வகையான பயிர்களைத் தற்சமயம் பத்து நாளைக்கு ஒருமுறை அறுவடை செய்றோம். பூண்டு, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பச்சை முட்டைக்கோஸ், சிவப்பு முட்டைக்கோஸ், புரக்கோலி, செளசெள ஆகிய காய்கறிப் பயிர்கள்ல தலா 15 கிலோ வரை விற்பனை செய்வோம். அந்த வகையில, கேரட், பீட்ருட், பச்சை முட்டைக்கோஸ், சிவப்பு முட்டைக்கோஸ், செளசெள ஆகியவை ஒரு கிலோ ரூ.80 வீதம், 75 கிலோ வரை விற்பனை செய்வோம். இந்த அஞ்சு காய்கறிகள் மூலமா பத்து நாளைக்கு 6,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதேபோல ஒரு கிலோ பூண்டு 250 ரூபாய்க்கும், புரக்கோலி ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் கொடுக்கிறேன். பத்து நாளைக்கு இந்த ரெண்டு பயிர்களில் தலா 15 கிலோ வீதம் 6,750 வருமானம் கிடைக்கும். ஒரு கிலோ உருளைக்கிழங்கு 100 ரூபாய் வீதம் 15 கிலோ விற்பனையில பத்து நாளைக்கு 1,500 ரூபாய் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு

லெட்யூஸ், நூல்கோல் மற்றும் செலரி ஆகிய மூன்றும் தலா 80 கட்டுகள் என மொத்தம் 240 கட்டுகள, ஒரு கட்டு 90 ரூபாய் விற்பனை மூலமா 21,600 ரூபாய் பத்து நாள்கள்ல கிடைக்கும். 250 கிராம் பிரியாணி இலை பாக்கெட் 50 ரூபாய் வீதம் 15 பாக்கெட் விற்பனையில பத்து நாளைக்கு 750 ரூபாய் கிடைக்கும். ஒரு கட்டு 25 ரூபாய் வீதம், தண்டுக்கீரை, வல்லாரைக்கீரை, நாட்டுக்கொத்தமல்லி, பொன்னாங்கன்னிக்கீரையை தலா 90 கட்டுகள் விற்பனையில 9,000 ரூபாய் பத்து நாள்கள்ல கிடைக்கும். ஒரு கட்டு 50 ரூபாய் வீதம் 90 கட்டு லெமன் கிராஸ் விற்பனையில பத்து நாளைக்கு 4,500 ரூபாய் கிடைக்கும்.

மொத்தமா 17 பயிர்கள் விற்பனை மூலமா பத்து நாளைக்கு 50,100 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல போக்குவரத்து, அறுவடை, இதச் செலவுகள் போக பத்து நாளைக்கு 15,000-20,000 ரூபாய் லாபம் நிக்கும். இதையே மாசத்துக்குனு கணக்குப் போட்டா சராசரியா 50,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஒவ்வொரு முறையும் 60-100 வீடுகளுக்குப் பல்வேறு அளவுகள்ல விற்பனை செய்றோம். சந்தை நிலவரத்தைப் பொறுத்து, என்னுடைய விளைபொருள்களுக்கு 10-20 சதவிகிதம் கூடுதலாகவோ குறைவாகவோ விலை நிர்ணயம் செய்றேன். வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே கொண்டுபோய் காய்கறிகளை விற்பனை செய்றது சவாலான வேலையா இருந்தாலும்கூட, இதன் மூலம் கட்டுப்படியான விலை கிடைக்குது’’ என்றவர் நிறைவாக,

பண்ணையில் எழில் தோற்றம்
பண்ணையில் எழில் தோற்றம்

நிறைவான வாழ்க்கை

‘‘தோட்டத்துக் காய்கறிகள் எங்க வீட்டுத் தேவைக்கும் உதவுது. வாரத்துல மூணு நாள்கள் விவசாய வேலைகளைக் கவனிச் சுப்பேன். வார இறுதியில என் மனைவி, குழந்தைகளும் இங்க வந்து ரெண்டு நாள்கள் தங்கி, என்னோட விவசாய வேலைகளை ஊக்கப்படுத்துவாங்க. இந்த வேலையால, மன அழுத்தம் கணிசமா குறைஞ்சு, உடல் எடை குறைஞ்சு, மன நிறைவு ரொம்பவே அதிகரிச்சிருக்கு.

தற்சார்பு வாழ்வியல் முறை பத்தின அனுபவம் கத்துக்கவும், பயிற்சி எடுத்துக்கவும் விரும்புவோர் எங்க பண்ணைக்கு வரலாம்” என்று உற்சாகமாகக் கூறும் கணேசன், மகிழ்ச்சிப் பொங்க விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

கணேசன்,

செல்போன்: 99303 90161

தற்சார்பு மண் வீடு
தற்சார்பு மண் வீடு

இருளர்கள் கட்டிக்கொடுத்த

தற்சார்பு வீடு

“சுற்றுவட்டாரத்துல இருளர்கள் அதிகம் வசிக்கிறாங்க. காட்டுக்குள்ள கிடைக்கும் கல், செம்மண் கொண்டே வீடு கட்டி வாழ்ற அந்தப் பழங்குடி மக்கள்ல சிலர், அதே முறையில எனக்கும் இந்த வீட்டைக் கட்டிக்கொடுத்தாங்க. வெப்பத்தால அவ்வப்போது சுவர்ல வெடிப்பு வரும். அப்போ சாணக்கரைசலைப் பூசிவிட்டாலே வெடிப்பு சரியாகிடும். யானை முட்டினால்கூட இந்த வீடு எதுவும் ஆகாத அளவுக்கு உறுதியானது. இந்த வீடு, தற்சார்பு வாழ்வியலை அடையாளப்படுத்தும். ஒவ்வொரு பயிரோட அறுவடை சமயத்துலயும் அடுத்த போகத்துக்கான விதைகளையும் சேகரிச்சு, அதை இந்த வீட்டுல பாதுகாத்து வெச்சிருப்பேன். குடும்பத்துடன் தங்குவதற்கு, பாக்கு மரத்துலயும் மூங்கிலாலும் தனித்தனி வீடுகளைக் கட்டியிருக்கேன். இங்க சோலார் மின்சாரம்தான் பயன்படுத்துறோம்” என்று புன்னகைக்கிறார் கணேசன்.

ஒருங்கிணைந்த பண்ணை

கால்நடை வளர்ப்பு குறித்துப் பேசியவர், “கிர், சாகிவால், காங்கேயம் இனத்துல அஞ்சு நாட்டு மாடுகள் இருக்கு. தலைச்சேரி ரகத்துல 10 ஆடுகள் இருக்கு. சிறுவிடை ரகத்துல 15 நாட்டுக்கோழிகள் இருக்கு. சுத்தியும் காடுகளா இருக்கிறதால, கால்நடைகள் மேய்ச்சல் முறையிலதான் வளருது. சாணத்தை சேகரிச்சு தொழுவுரமா மாத்துவோம். ஊத்துல இருந்து வரும் தண்ணீரைக் குட்டையில சேகரிச்சு, மைக்ரோ ஸ்பிரிங்ளர் சிஸ்டம் மூலம் பாசனம் செய்றேன். குட்டையில, சில மாசத்துக்கு முன்பு ஆயிரம் சாதா கெண்டை மீன் குஞ்சுகளை விட்டேன். பஞ்சகவ்யா, தவிடு, பிண்ணாக்கு, முருங்கைக்கீரையைத்தான் மீன்களுக்குத்

தீவனமா கொடுப்பேன். தோட்டக்கலைத் துறையில மானியமா கிடைச்ச 6 தேனீப் பெட்டிகளையும் தோட்டத்துல வெச்சிருக்கேன். எங்க நிலத்தை முழுமையான ஒருங்கிணைந்த பண்ணையா மாத்தும் முயற்சியில அதிக கவனம் செலுத்துறேன்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism