Published:Updated:

அங்ககக் காய்கறியில் அசத்தும் பெருநகர விவசாயி! - 80 சென்ட்.... 5 மாதங்கள்... ரூ.2 லட்சம்!

பாலசுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலசுப்பிரமணியன்

மகசூல்

  • முன்னோடி இயற்கை விவசாயி மது.ராமகிருஷ்ணன் பண்ணையில நடந்த களப்பயிற்சியில கலந்துக்கிட்டேன்.

  • எங்க பண்ணைக்கே வந்து காய்கறிகளைப் பறிக்கச் சொல்லி வாங்கிட்டுப் போற வாடிக்கையாளர்கள் அதிகமாகிட்டாங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

யற்கை வேளாண்மை தொடர்பான நேரடிக் களப்பயிற்சிகளை துறை சார்ந்த வல்லுநர்களைக்கொண்டு பல ஆண்டுகளாக நடத்திவருகிறது பசுமை விகடன். அந்தக் களப்பயிற்சிகளில் பங்கேற்று, பயிற்சி பெற்றவர்கள் ஏராளம். அவர்களில் பலர் தீவிர இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு முன்னோடி விவசாயிகளாக வலம் வருகிறார்கள். அந்த முன்னோடி இயற்கை விவசாயிகளில் ஒருவர்தான் கோயம்புத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்.

இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகள்
இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதி உடையாம்பாளையம் பகுதியில் மூன்று ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்து வருகிறார்.

சுற்றிலும் அடுக்குமாடிக் கட்டடங்கள் அரண்போல் காட்சியளிக்கும் பெருநகரின் பிரதான பகுதியில் பசுமையாகக் காட்சியளிக்கிறது அவரது காய்கறித் தோட்டம். தன் மனைவி சுந்தரியுடன் காய்கறி அறுவடையிலிருந்த பாலசுப்பிரமணியனைச் சந்தித்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘காங்கேயம் பக்கத்துல இருக்கிற அழகுகவுண்டன் வலசு கிராமம்தான் எங்க பூர்வீகம். அங்கே 30 ஏக்கர் விவசாய நெலம் இருக்கு. 35 வருஷமா கோயம்புத்தூர்ல அச்சகம்வெச்சு நடத்திக் கிட்டிருக்கேன். அடிப்படையில விவசாயக் குடும்பம்கிறதால அடிக்கடி ஊருக்குப் போய் விவசாயத்தையும் கவனிக்கும் வழக்கம் உண்டு. எங்க ஊரு வறட்சியான பகுதி.

‘‘மூணு ஏக்கரிலும் சுழற்சி முறையில காய்கறிச் சாகுபடி பண்றோம். அரை ஏக்கர்ல அறுவடை முடியும் நேரத்துல, அடுத்த அரை ஏக்கர்ல பறிப்புக்கு வந்துடும்.’’

30 ஏக்கர்ல விவசாயம் பண்ற அளவுக்குத் தண்ணீர் வசதி கிடையாது. கிடைக்கும் தண்ணிக்கு ஏற்ற மாதிரி சில ஏக்கர்ல விவசாயம் செஞ்சேன். குறிப்பா காய்கறி விவசாயம் செஞ்சு, பறிக்கும் காய்கறிகளை ஆட்களைவெச்சு திருப்பூர் தினசரி சந்தைக்குக் கொண்டுபோய் விற்பனை செஞ்சேன். 2009-ம் வருஷம் வரைக்கும் ரசாயன விவசாயம்தான். ஆனா, கடந்த 10 வருஷமா தீவிரமா இயற்கை விவசாயத்துல இறங்கி, என்னோட நெலத்தை வளமான மண்ணா மாத்தியிருக்கேன். அதுக்குக் காரணம் ஐயா நம்மாழ்வாரும் பசுமை விகடனும்தான்.

2009-ம் வருஷம் முன்னோடி இயற்கை விவசாயி மது.ராமகிருஷ்ணன் பண்ணையில நடந்த களப்பயிற்சியில கலந்துகிட்டேன். நம்மாழ்வார்தான் அந்தப் பயிற்சியை நடத்தினார். மூணு நாள்கள் அவர்கூட இருந்து மேட்டுப்பாத்தி, இருமடிப்பாத்தி, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மூலிகைப்பூச்சி விரட்டி, அசோலா உற்பத்தின்னு பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அந்தப் பயிற்சியில கற்றுக்கொண்ட தொழில் நுட்பங்களை, என்னோட பண்ணையில நடைமுறைப்படுத்தி, `வெற்றிகரமான இயற்கை விவசாயி’னு பேரெடுத்திருக்கேன்’’ என்றவர், சற்று இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

அறுவடை செய்த தக்காளியுடன் பாலசுப்பிரமணியன் தம்பதி
அறுவடை செய்த தக்காளியுடன் பாலசுப்பிரமணியன் தம்பதி

‘‘ஒருகட்டத்துல காங்கேயம் பகுதியில கடுமையான வறட்சி. விவசாயம் செய்ய முடியலை. அந்த நேரத்துலதான் நண்பர் ஒருத்தர் இந்த மூணு ஏக்கர் நெலத்தைக் குத்தகைக்குக் கொடுத்தார். தண்ணீர் வசதியுள்ள இந்த நெலம், இயற்கை விவசாயம் செய்ய ஏற்றதாக இருந்தது. சொந்த ஊர்ல விட்ட காய்கறி விவசாயத்தை இங்கே தொடர்ந்தேன். கடந்த மூணு வருஷமா இங்கே காய்கறி விவசாயம் செஞ்சுக்கிட்டிருக்கேன். மூணு ஏக்கரிலும் சுழற்சி முறையில காய்கறிச் சாகுபடி பண்றோம்.

அரை ஏக்கர்ல அறுவடை முடியும் நேரத்துல, அடுத்த அரை ஏக்கர்ல பறிப்புக்கு வந்துடும். கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய், கொஞ்சம் அவரைனு இப்போ காய்ப்புல இருக்கு. 40 சென்ட்ல தக்காளி, 30 சென்ட்ல வரிக் கத்திரி, 10 சென்ட்ல பவானி ரகக் கத்திரி, 10 சென்ட்ல குண்டு மிளகாய் நட்டிருக்கோம்’’ என்றவர், காய்கறிச் சாகுபடி தகவல்களை அடுக்கினார்.

கத்திரி வயலில் இனக்கவர்ச்சிப்பொறி
கத்திரி வயலில் இனக்கவர்ச்சிப்பொறி

‘‘காய்ப்பு முடிந்த நிலத்தை மண் பொலபொலவென ஆகும் வரை உழவு செய்ய வேண்டும். தொடர்ந்து அரை ஏக்கருக்குத் தேவையான செறிவூட்டப்பட்ட ஐந்து டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைக்க வேண்டும். அடுத்து இரண்டு முறை உழவு செய்தால், கொட்டி இறைத்த தொழுவுரம் மண்ணில் கலந்துவிடும். பிறகு இரண்டடி இடைவெளியில் பார் அமைத்து, காய்கறி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

செடிக்குச் செடி நான்கடி இடைவெளி வைத்து, கத்திரி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். கிளைகள் விரித்துப் படரும் செடி என்பதால், இந்த இடைவெளி அவசியம். தக்காளி நாற்றுகளைச் செடிக்குச் செடி மூன்றடி இடைவெளி வைத்தும், வெண்டை விதைகளைச் செடிக்குச் செடி ஒன்றரை அடி இடைவெளி வைத்தும் நடவு செய்ய வேண்டும். 15 நாள்கள் இடைவெளியில் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் இரண்டையும் மாற்றி மாற்றி வேர்வழி ஊட்டமாகக் கொடுக்க வேண்டும். கத்திரி, தக்காளி இரண்டிலும் காய்ப்புழுத் தாக்குதலுக்கு வாய்ப்பு அதிகம். அதைக் கட்டுப்படுத்த பொன்னீம், வேப்பெண்ணெய், காதி சோப் கரைசல் மூன்றையும் கலந்து தெளிக்க வேண்டும். பழ ஈ, அசுவினி, சாறு உறிஞ்சும் பூச்சிகளை சோலார் விளிக்குப்பொறிகளை வைத்து கவர்ந்து இழுத்து அழிக்க வேண்டும். மேலும், காய்கறி வயலில் இரண்டு, மூன்று இடங்களில் இனக்கவர்ச்சிப்பொறிகளையும் அமைக்க வேண்டும். பூச்சிகளை ஈர்க்கும்தன்மை மஞ்சள் நிறத்துக்கு உண்டு.

கொடித்தக்காளி வயல்
கொடித்தக்காளி வயல்

அதனால் காய்கறி வயலில் ஆறு இடங்களில் ஒட்டும் பசை பூசப்பட்ட மஞ்சள் அட்டைகளை நட்டு வைத்துவிட வேண்டும். வெள்ளைச்சுருள் ஈ, மாவுப்பூச்சி போன்றவை மஞ்சள் அட்டைகளில் ஒட்டிக்கொள்ளும். இதன் மூலமும் தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க முடியும். முட்டைப் பருவத்திலிருந்தே பூச்சிகளை அழிக்கும் ஒருவகை ஒட்டுண்ணிகள் வேளாண்துறை அலுவலகங்களிலும், வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் கிடைக்கின்றன’’ என்றவர், ‘‘ஒரு சொட்டு ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமல், பொன்னீம், பூச்சிவிரட்டி, இனக்கவர்ச்சிப்பொறி, விளக்குப்பொறி, மஞ்சள் அட்டைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் இவற்றைப் பயன்படுத்தி நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும்’’ என்று ஆணித்தரமாகப் பேசினார் பாலசுப்பிரமணியன்.

கூடவே, இயற்கை விவசாயிகளுக்கான ஆலோசனைகள் சிலவற்றைப் பதிவுசெய்தார். ‘‘இயற்கை விவசாயம் செய்ய நினைக்கம் பலரும் அவசரம் காட்டுறாங்க. என்னைப் பொறுத்தவரை இயற்கை விவசாயம் செய்ய, பொறுமை அவசியம். முன்னோடி விவசாயிகளின் பண்ணைகளைப் போய்ப் பார்வையிடணும். அவங்களின் சாகுபடி, இடுபொருள் நுட்பங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கணும். குறிப்பா, விதை தரமாக இருந்தால்தான் விளைச்சல் அதிகமாகக் கிடைக்கும். அதனால, விதைத்தேர்வுல ரொம்ப கவனமா இருக்கணும். நான் நாட்டுரகக் காய்கறி விதைகளை, முசிறி யோகநாதன் மாதிரியான இயற்கை ஆர்வலர்களிடமிருந்து வாங்கி விதைக்கிறேன். நோய்ப் பராமரிப்பில் முழுக்க முழுக்கப் பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்திச் சாகுபடி செஞ்சா, 100 சதவிகிதம் நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும்’’ என்றவர் விற்பனை விவரங்களைப் பட்டியலிட்டார்.

‘‘தக்காளி 40 சென்ட் நிலத்துல 4,200 கிலோவும், கத்திரி 30 சென்ட் நிலத்துல 2,500 கிலோவும், மிளகாய் 10 சென்ட் நிலத்துல 500 கிலோவும் நடப்பு போகத்துல மகசூலாகக் கிடைச்சிருக்கு.

விளக்குப்பொறி
விளக்குப்பொறி

கத்திரி கிலோ 50 ரூபாய், தக்காளி கிலோ 20 ரூபாய், மிளகாய் கிலோ 40 ரூபாய்னு சராசரி விலையா விற்பனை செய்யறேன். வெண்டை இன்னும் பறிப்புக்கு வரலை. உழவு, தொழுவுரம், விதை நடவு, தெளிப்பு, அறுவடைனு கொடித்தக்காளிக்கு 15,000 ரூபாயும், கத்திரி, மிளகாய் ரெண்டுக்கும் 10 ஆயிரம் ரூபாயும் செலவாகியிருக்கு. ஒரு போக வருமானம், 2,40,000 ரூபாய்.

‘‘முழுக்க முழுக்க நேரடி விற்பனைதான். எங்க முகவரி அச்சிடப்பட்ட தனித்தனி பைகள்ல காய்கறிகளைப் போட்டு விற்பனைக்குக் கொடுத்துடுவோம்.’’

கொடித் தக்காளிக்கு முதல் போகச் செலவு 15,000 ரூபாய் மட்டும்தான். அடுத்த போகம் முதல் வருஷத்துக்கு 5,000 ரூபாய்தான் உற்பத்திச் செலவு ஆகும். சாகுபடிச் செலவு 25,000 ரூபாய் போக, மூன்று காய்கறிகளிலும் சேர்த்து 2,15,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. அதுல குத்தகை 15,000 (6 மாதங்கள்) ரூபாய் போக, அஞ்சு மாசத்துல 80 சென்ட் நிலத்துல கிடைச்ச லாபம் 2,00,000 ரூபாய்’’ என்று வரவுச் செலவுக் கணக்கு சொன்ன பாலசுப்பிரமணியன் நிறைவாக,

‘‘நாங்க உற்பத்தி செய்யும் இயற்கைக் காய்கறிகளுக்கு முறைப்படி அங்ககச் சான்றிதழ் வாங்கியிருக்கோம். முழுக்க முழுக்க நேரடி விற்பனைதான். எங்க முகவரி அச்சிடப்பட்ட தனித்தனி பைகள்ல காய்கறிகளைப் போட்டு விற்பனைக்குக் கொடுத்துடுவோம். தேவைப்படுறவங்க தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க.

மஞ்சள் அட்டை
மஞ்சள் அட்டை

முகவரியைப் பார்த்து, எங்க பண்ணைக்கே வந்து காய்கறிகளைப் பறிக்கச் சொல்லி வாங்கிட்டுப் போற வாடிக்கையாளர்கள் அதிகமாகிட்டாங்க. எங்கள் வியாபாரமும் நல்லா நடக்குது. பசுமை விகடன் கொடுத்த களப்பயிற்சி அதுக்கு முக்கியக் காரணம்’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, என்.பாலசுப்பிரமணியன், செல்போன்: 98422 88221.