Published:Updated:

ரூ. 1,00,000 ஊரடங்கிலும் உன்னத வருமானம் கொடுத்த இயற்கைத் தர்பூசணி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அறுவடை செய்யப்பட்ட தர்பூசணியுடன் செந்தில்குமார்
அறுவடை செய்யப்பட்ட தர்பூசணியுடன் செந்தில்குமார்

மகசூல்

பிரீமியம் ஸ்டோரி
‘பருவத்தே பயிர் செய்’ என்பதைப் புரிந்துகொண்டு, பருவத்துக்கு ஏற்ற பயிர்களைப் பயிர்செய்ய வேண்டும். கோடைக்காலத்தைப் பொறுத்தவரை உடலில் உஷ்ணத்தை நீக்கி, நீர்ச்சத்தை அதிகரிக்கும் பழங்களில் தர்பூசணிக்குச் சிறப்பான இடம் உண்டு.

அதனால் கோடையில் அதிக தேவையும் வரவேற்பும் இருக்கும். கொரோனா ஊரடங்கு நேரத்திலும் தர்பூசணிச் சாகுபடியில் கணிசமான வருமானம் ஈட்டியிருக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த இயற்கை விவசாயி செந்தில்குமார்.

வண்டியில் ஏற்றப்படும் தர்பூசணி
வண்டியில் ஏற்றப்படும் தர்பூசணி

திருநெல்வேலி மாவட்டம், முனைஞ்சிப்பட்டியிலிருந்து 4 கி.மீ தொலைவிலுள்ள பருத்திப்பாடு கிராமத்தில் இருக்கிறது செந்தில்குமாரின் தர்பூசணித் தோட்டம். அறுவடை செய்த பழங்களை விற்பனைக்காக மினி வேனில் ஏற்றிக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். “தேனி மாவட்டம், போடிதான் என்னோட சொந்த ஊரு. நெல்லைக்கு வந்து 30 வருஷத்துக்கு மேல ஆகுது. ஐ.டி.ஐ-ல ஃபிட்டர் படிப்பு படிச்சேன். 23 வருஷமா பைக், கார், லாரி பேட்டரி விற்பனை, சர்வீஸ் கடைவெச்சு நடத்திட்டு வந்தேன். இன்வெர்ட்டர் பேட்டரி விற்பனை உச்சத்துக்குப் போய், ஒரு கட்டத்துல இறங்கிப் போச்சு. அதன் பிறகு வியாபாரமும் சுமாரா இருந்ததுனால, `வேற ஏதாவது தொழில் செய்யலாமா’னு யோசிச்சேன். சென்னையில இருக்கும் என்னோட சகோதரி ராஜலெட்சுமி, வீட்டுலேயே பாரம்பர்ய அரிசி, சிறுதானிய வகைகள், இயற்கைக் கீரைகள், காய்கறிகளை விற்பனை செய்யறாங்க. அதுக்கு அந்த ஏரியாவுல நல்ல வரவேற்பு இருந்துச்சு. `நாமும் இதே மாதிரி வீட்டுலவெச்சு விற்பனை செஞ்சு பார்க்கலாமே...’னு யோசனை தோணிச்சு.

சாணக்கலவையுடன்
சாணக்கலவையுடன்

ஆறு மாசத்துல நானும் அதே மாதிரி வீட்ல வியாபாரத்தை ஆரம்பிச்சேன். கொஞ்சநாள்ல நிறைய பேர் பொருள் வாங்க வர ஆரம்பிச்சாங்க. ‘அரிசி, சிறுதானியம்னு பாக்கெட்ல அடைக்கப்பட்ட பொருளாத்தான் இருக்கா, காய்கறி, கீரைகள் இல்லையா?’னு கேட்க ஆரம்பிச்சாங்க. அந்த நேரத்துலதான் இயற்கை விவசாயி சுப்பிரமணியனின் அறிமுகம் கிடைச்சுது. அவர், ‘நெல்லை மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்க விவசாயிகளை அறிமுகப்படுத்திவெச்சார். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அவங்ககிட்ட இருந்து வாங்கி விற்பனை செஞ்சேன். ரெண்டு வருஷத்துல வீட்டுப் பக்கத்துலேயே தனியா இயற்கை விளைபொருள் கடையை ஆரம்பிச்சேன். தமிழ்நாடு முழுக்கச் சுத்தி 30-க்கும் மேற்பட்ட விவசாயிகளோட பண்ணைகளைப் பார்த்து, அவங்க அனுபவங்களைக் கேட்டுக்கிட்டேன்.

‘பருவமும் தேவையும் தெரிஞ்சு சாகுபடி செய்யணும்’னு நம்மாழ்வார் ஐயா சொன்னதைப்போல, கோடைக்காலத்துல தேவையிருக்கிற தர்பூசணியைச் சாகுபடி செய்ய முடிவெடுத்தேன். ஒன்றரை ஏக்கர்ல முதல்முறையா வீரியரகத் தர்பூசணியைச் சாகுபடி செஞ்சேன். நல்ல மகசூல் கிடைச்சிருக்கு” என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

அறுவடை செய்யப்பட்ட தர்பூசணியுடன் செந்தில்குமார்
அறுவடை செய்யப்பட்ட தர்பூசணியுடன் செந்தில்குமார்

“ஒன்றரை ஏக்கர் தர்பூசணிச் சாகுபடியில, மூணு அறுவடையில 17,050 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு. இதுல 1,000 கிலோ பழங்கள் சேதமாகிடுச்சு. மிச்சமிருந்த 16,050 கிலோவுல 10,000 கிலோவை மொத்த வியாபாரிக்கு ஒரு கிலோ ரூ.6-க்கும் (ரூ.60,000), 4,000 கிலோவை சின்னப் பழக்கடைகளுக்குக் கிலோ ரூ.8-க்கும் (32,000), மிச்சமிருந்த 2,050 கிலோவை என்னோட இயற்கை அங்காடியில கிலோ ரூ.10-க்கும் (20,500) விற்பனை செஞ்சுட்டேன். இந்த வகையில் மொத்தம் ரூ.1,12,500 வருமானமா கிடைச்சிருக்கு. கடைசிப் பறிப்பா இன்னும் 500 கிலோ பறிக்கலாம். கிலோ ரூ.10-க்கு விற்றாலும் ரூ.5,000 கூடுதலாகக் கிடைக்கும். அந்த வகையில மொத்த வருமானம் ரூ.1,17,500. தோட்டத்துல மயில் தொல்லையால 2,000 கிலோ வரைக்கும் செடியிலேயே பழங்கள் சேதமாகிடுச்சு. உழவு, தொழுவுரம், விதை, களை, இடுபொருள், அறுவடைன்னு மொத்தம் ரூ.28,000 வரைக்கும் செலவாகிடுச்சு. மீதமுள்ள ரூ.89,500 லாபம்தான்’’ என்றவர் நிறைவாக,

‘‘கோடைக்காலத் தேவையை மனசுலவெச்சு தர்பூசணிச் சாகுபடி செஞ்சேன். கொரோனா ஊரடங்கால மத்த விவசாயிகளுக்கு விளைபொருள் விற்பனை பாதிக்கப்பட்டதைப் போல நமக்கும் விற்பனை பாதிச்சுடுமோன்னு பயந்தேன்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சில நாள்களிலேயே பழக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதாலயும், சாலையோரங்கள்ல தர்பூசணி விற்பனைக்கு எந்தத் தடையும் இல்லாததுனாலயும் எனக்கு விற்பனைக்கு வில்லங்கமில்லாமப் போச்சு” என்று சந்தோஷம் பொங்கச் சொன்னார்.

தொடர்புக்கு, செந்தில்குமார், செல்போன்: 90423 19396

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ன்றரை ஏக்கரில் தர்பூசணிச் சாகுபடி செய்வது குறித்து செந்தில்குமார் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

ரூ. 1,00,000 ஊரடங்கிலும் உன்னத வருமானம் கொடுத்த இயற்கைத் தர்பூசணி!

தர்பூசணியைப் பொறுத்தவரை கார்த்திகை மாதத்திலிருந்தே சாகுபடி செய்யலாம். தேவையும் சந்தை வாய்ப்பும் கோடைக்காலமான பங்குனி முதல் ஆனி மாதம் வரையிலும் அதிகம் என்பதால், இந்தப் பட்டங்களில் அறுவடை செய்வதைப்போலச் சாகுபடியைத் தொடங்க வேண்டும். எந்தப் பட்டத்தில் விதை ஊன்றுகிறோமோ, அதற்கு முந்தைய மாதத்தில் நிலத்தைத் தயார்படுத்த வேண்டும். 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை நிலத்தை நன்கு உழவு செய்துவிட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு நான்கு டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி, பரவலாக்கி உழவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை ஏழு அடி இடைவெளிவிட்டு, அரையடி உயரத்தில் மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். உடனே நீர்ப்பாசனத்துக்குச் சொட்டு நீர் அல்லது வடிகால் வசதி ஏற்படுத்தி, நடவுக்கு முந்தைய நாள் மாலையில் தண்ணீர்ப் பாய்ச்சி மண்ணை ஈரப்பதமாக்க வேண்டும்.

ஒரே வரிசையில், ஓரடி இடைவெளியில் வரிசையாக ஐந்து விதைகள் ஊன்ற வேண்டும். பிறகு, ஐந்தடி இடைவெளிவிட்டு மீண்டும் ஓரடி இடைவெளியில் வரிசையாக ஐந்து விதைகள் ஊன்ற வேண்டும். இந்த இடைவெளியால் கொடிகள் நன்கு வீசிப் படரும். இவ்வாறு நட்டால், ஏக்கருக்கு 250 கிராம் விதைகள் தேவைப்படும். தேவைப்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மி.லி பஞ்சகவ்யா கலந்து விதைநேர்த்தி செய்து 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்திவிட்டு ஊன்றலாம். இப்படிச் செய்வதால் வேர் அழுகல், வேர்த்தாக்குதல் தொடர்பான நோய்கள் வராது. விதை ஊன்றிய மூன்று முதல் ஐந்தாம் நாளில் முளைப்பு தெரியும். தொடர்ந்து ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்துவந்தால் போதும். ஏழு முதல் 10-ம் நாளுக்குள் முதல் களையும், 15 முதல் 20-ம் நாளுக்குள் இரண்டாவது களையும் எடுக்க வேண்டும். 20-ம் நாளுக்கு மேல் கொடி வீசத் தொடங்கும். அந்த நேரத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இலைகளில் துளை துளையாகக் காணப்படுவதே இதன் அறிகுறி.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி பஞ்சகவ்யா அல்லது 200 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் (10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர்) கலந்து சுழற்சி முறையில் தெளித்து வர வேண்டும். 25 முதல் 30-ம் நாளில் பூப்பூக்கும். 30-ம் நாளுக்கு மேல் பிஞ்சு பிடிக்கும். 40-ம் நாளுக்கு மேல் பழங்கள் பருமனாகும். முதல் களைக்குப் பிறகு மற்றும் பூப்பூக்கும் நேரத்தில் ஒரு கொடிக்கு 100 கிராம் வீதம் செறிவூட்டப்பட்ட சாணக்கலவையை வேரிலிருந்து அரையடி தூரத்தில் நான்கு இன்ச் ஆழத்தில் வைக்க வேண்டும்.

35 முதல் 40-ம் நாள், 40 முதல் 45-ம் நாள் என இரண்டு முறை 10 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி மீன் அமிலம் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இதனால் காய்கள் பருமனாவதுடன், இனிப்புச்சுவையும் கூடும். 55 முதல் 60-ம் நாளுக்குள் அறுவடையைத் தொடங்கலாம். தொடர்ந்து ஐந்து முதல் எட்டு நாள்களுக்கு ஒரு முறை என்ற கணக்கில் மூன்று முதல் நான்கு முறை அறுவடை செய்யலாம். பழத்தைத் தட்டிப் பார்க்கும்போது ‘கணீர் கணீர்...’ எனச் சத்தம் கேட்டால் பழம் பழுக்கவில்லை என்றும், மந்தமான சத்தம் கேட்டால் பழம் முதிர்ந்துவிட்டது என்றும் தெரிந்துகொள்ளலாம்.

காய்களின் எடை அதிகரிக்க, பிஞ்சு உதிர்க்க வேண்டும்!

சிறிய, நடுத்தர மற்றும் பெரிய பழங்கள் என ஒரு பழம் குறைந்தபட்சம் மூன்று கிலோ முதல் அதிகபட்சமாக 10 கிலோ வரை எடை இருக்கும். பிஞ்சு பிடித்த நேரத்தில் ஒரு செடியில், உதாரணமாக நான்கு கொடி படர்ந்திருந்தால், ஒவ்வொரு கொடியிலும் இரண்டு பிஞ்சுகளை விட்டுவிட்டு மற்ற பிஞ்சுகளையும், அதிலிருந்து வளரும் பக்கக்கிளைக் கொடிகளையும் வெட்டிவிட வேண்டும். இதனால் காய்கள் பருமனாகவும், தரமானதாகவும் இருப்பதுடன் பழத்தின் எடை 12 முதல் 14 கிலோ வரை அதிகரிக்கும். தேவைப்பட்டால் அறுவடை செய்த பழங்களை அதிகபட்சமாக 15 நாள்கள்கூட இருப்பு வைக்கலாம்.

செறிவூட்டப்பட்ட சாணக்கலவை!

ரு ஏக்கருக்கு சாணக்கலவை தயார் செய்ய... ஒரு பிளாஸ்டிக் தாளை விரித்து பசுஞ்சாணம் 700 கிலோ, வண்டல் மண் 5 கிலோ, கடுக்காய்த்தூள் ஒரு கிலோ, கோரைக்கிழங்குத்தூள் ஒரு கிலோ, ஹியூமிக் அமிலத் தூள் 500 கிராம், அதிமதுரத்தூள் 250 கிராம், அறுகம்புல் சாறு ஒரு லிட்டர், இளநீர் ஒரு லிட்டர் ஆகியவற்றைப் பிசைந்து கலவையாக்கி ஒரு வாரம் நிழலில் வைத்திருந்தால் செறிவூட்டப்பட்ட சாணக்கலவை தயார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு