Published:Updated:

நெல் + கடலை 5 ஏக்கர்... ரூ. 1,44,000 லாபம்!

நெல் வயலில் லோகேஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
News
நெல் வயலில் லோகேஸ்வரன்

மகசூல்

பாரம்பர்ய நெல் ரகங்களில் மருத்துவக் குணங்கள் நிறைந்திருப்பதால், அதன் மீதான ஆர்வம் மக்களுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

உண்பவர்களுக்கு மட்டுமல்ல; சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் களைக் கட்டுப்பாடு, பூச்சி நோய் எதிர்ப்புத்திறன் எனப் பல வகைகளிலும் சாகுபடிக்கு உறுதுணையாக இருக்கின்றன. அதேபோல ரசாயன உரங்களுக்கு ஆகும் செலவுகளைவிட இயற்கை உரங்களுக்குக் குறைவாகவே செலவாவதால் நாளுக்கு நாள் பாரம்பர்ய நெல் ரகங்களை விதைக்கும் விவசாயிகளும் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வரிசையில் பாரம்பர்ய நெல் ரகங்களை விதைப்பதோடு, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த இயற்கை விவசாயி லோகேஸ்வரன்.

நிலக்கடலைச் சாகுபடி
நிலக்கடலைச் சாகுபடி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் எஸ்.வி நகரம் கிராமத்தில் இருக்கிறது, லோகேஸ்வரனின் தோட்டம். பராமரிப்புப் பணிகளில் இருந்தவரைச் சந்தித்துப் பேசினோம். “பரம்பரையா விவசாயக் குடும்பம். அப்பா, அம்மா ரெண்டு பேருமே டீச்சர் வேலைக்குப் போனதால விவசாயம் செய்யாம நிலம் சும்மா இருந்தது. நான் பி.எட் படிச்சு முடிச்சு ஆசிரியர் வேலைக்காகக் காத்துக்கிட்டிருந்தேன். அப்போதான் நாம ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சா என்னனு ஒரு யோசனை தோணுச்சு. வீட்ல சொன்னவுடனே, சம்மதம் சொல்லிட்டாங்க. நானும் 20 பேரை வெச்சு ஒரு நர்சரி ஸ்கூல் ஆரம்பிச்சேன். அப்புறமா சும்மா கிடந்த நிலத்துல விவசாயம் செஞ்சா என்னனு தோணிச்சு. அப்பா நிறுத்துன விவசாயத்தை நான் கையில எடுத்தேன். நிலம் தரிசா கிடந்தது. நிலத்தை மொத்தமா சீர் செஞ்சு ஒருங்கிணைந்த பண்ணையம் வைக்கலாம்னு முடிவு பண்ணினேன்.

முதல்ல இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சேன். 2017-ம் வருஷம் முதன்முதலா நெல் நடவு செஞ்சேன். ஏக்கருக்கு 4 மூட்டை நெல்தான் மகசூல் கிடைச்சது. கொஞ்சம் மனசுக்குக் கஷ்டமாத்தான் இருந்துச்சு. திரும்பவும் ஒரு வருஷம் நிலத்தைத் தரிசா விட்டுட்டேன். அதுக்குப் பிறகு, ஒரு ஏக்கர்ல விவசாயம் செஞ்சு பார்ப்போம்னு முடிவு பண்ணி, ஒரு ஏக்கர்ல மட்டும் சீரகச் சம்பா நெல் விதைச்சேன். ஏக்கருக்கு 12 மூட்டை நெல் கிடைச்சது. அது பெருசா லாபம் இல்லைனாலும், நஷ்டம் ஏதும் இல்லைங்குறது கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்துச்சு. பிறகு, வெள்ளைப்பொன்னி, அறுபதாம் குறுவை, பூங்கார், கறுப்புக்கவுனி, மாப்பிள்ளைச் சம்பா மாதிரியான நெல் ரகங்களை விதைச்சேன். நெல் பயிர்களை அறுவடை செஞ்சு விற்பனை செய்யும்போதுதான் ஒரு விஷயம் கத்துக்கிட்டேன்.

நெல் வயலில் லோகேஸ்வரன்
நெல் வயலில் லோகேஸ்வரன்

நான் முதல்ல சீரகச் சம்பா பயிர் செய்யுறப்போ, விதைநெல் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு வாங்குனேன். ஆனா, என்கிட்ட சீரகச் சம்பா நெல்லை கிலோ 15 ரூபாய் விலையிலதான் வியாபாரிகள் வாங்குனாங்க. அதனால அரிசியா கேட்குறவங்களுக்கு அரிசியா கொடுக்கணும். மீதம் இருக்குற நெல்லை விதைநெல்லா மட்டும்தான் கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். விவசாயத்துக்காக நான் எங்கேயும் போயி பயிற்சி எடுக்கலை. பக்கத்துல இருக்குற இயற்கை விவசாயி பார்த்தசாரதிகிட்ட கேட்பேன். அதுபோகப் பசுமை விகடனைப் பார்த்துக் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க ஆரம்பிச்சு, இப்போ 3 வருஷம் முடிஞ்சுபோச்சு.

மொத்தமுள்ள 10 ஏக்கர் நிலத்துல 5 ஏக்கர்ல நெல்லும், 1 ஏக்கர்ல சவுக்கும், 4 ஏக்கர்ல தென்னை அதுல ஊடுபயிரா மா, சப்போட்டானு போட்டிருக்கேன். வீட்டுக்குக் கொஞ்சம் காய்கறிகள் பயிர் செய்றேன். அதுல மிச்சமாகுறத நண்பர்களுக்குக் கொடுக்குறேன். மரப்பயிர்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனம் பண்றேன். ஒருங்கிணைந்த பண்ணையம்னாலே கால்நடைகள் முக்கியம். அதனால கொரோனோ தடைக்காலம் முடிஞ்ச உடனே மாடு, கோழிகளை வாங்கணும். பண்ணையோட ஓரத்துல 30 அடி நீளம், 30 அடி அகலம்னு பண்ணைக்குட்டை வெட்டியிருக்கேன். அதுலதான் மீன் வளர்க்கபோறேன்” என்றவர் பழக் கன்றுகள் நடவு மற்றும் பராமரிப்பு முறைகளைப் பகிர்ந்துகொண்டார்.

சவுக்கு
சவுக்கு

“தென்னை, மா, நெல்லி, சப்போட்டா, கொய்யா மற்றும் சீதாவை இளங்கன்றுகளாகவே நடவு செய்யலாம். புரட்டாசியில் ஓர் உழவு செய்து, தென்னைக்கு 30 அடி இடைவெளியிலும், நெல்லி, சப்போட்டாவுக்கு 8 அடி இடைவெளியிலும் குழிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் இரண்டு கூடை அளவுக்குச் செம்மண் கொட்டி, ஒரு வாரம் வரை ஆற விட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை ஆட்டுப்புழுக்கை மற்றும் மாட்டுச்சாணத்தைப் போட்டு வைத்தால், ஐப்பசி மாதம் மழை பெய்ய சரியா இருக்கும். நடவு செய்த மூணாவது நாள் உயிர் தண்ணீர் விட வேண்டும். முதல் மூன்று மாதங்கள்வரை வாரம் ஒரு தண்ணீர் விட வேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர்ப் பாய்ச்சலாம். முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு செடிக்கு அரைக்கூடை அளவில் ஒவ்வொரு செடிக்கும் தொழுவுரம் கொடுக்க வேண்டும். முழுமையான இயற்கை வழி விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதில்லை’’ என்றவர்,

தேக்கு
தேக்கு

“மா, நெல்லி, சப்போட்டா, கொய்யா இப்ப காய்ப்புல இருக்கு. தோட்டத்தைச் சுற்றிலும் ரெண்டு அடுக்கா 1,000 தேக்கு மரங்களை வேலிப்பயிரா நடவு செஞ்சிருக்கேன். அதே மாதிரி நெல் விதைக்குற நிலத்துல கடலை, எள்னு பயிர் சுழற்சி முறையிலதான் விவசாயம் செய்றேன். என் தோட்டத்துலயே பழக் கரைசல், பூச்சிவிரட்டி, பஞ்சகவ்யானு இயற்கை இடுபொருள்களைத் தயார் செய்றேன்” என்றவர் தொடர்ந்தார்.

தென்னை, மா, நெல்லி, சப்போட்டா கூட்டணி
தென்னை, மா, நெல்லி, சப்போட்டா கூட்டணி

“எனக்குப் பக்கத்துல இருக்குற மார்க்கெட்ல விற்பனை செய்ய விருப்பமில்லை. பெரும்பாலும் என்னோட நெல்லை சமூக வலைதளங்கள் மூலமாத்தான் விற்பனை செய்துகிட்டு வர்றேன். பசுமை விகடன் பசுமை சந்தை மூலமாவும் அதிகமா நெல் விற்பனை செய்திருக்கேன். என்கிட்ட கடலூர், தஞ்சாவூர், விருதாச்சலம், சேலம்னு பல ஊர்களிலிருந்தும் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்காங்க. தோட்டத்துக்கே வந்தும் வாங்கிட்டுப் போறாங்க. அதில்லாம, இப்பத்தான் பக்கத்துல இருக்குற வாடிக்கையாளர்களும் என்கிட்ட அரிசி வாங்க ஆரம்பிச்சிருக்காங்க” என்றவர் வருமானம் பற்றிப் பேசினார்.

“ஒன்றரை ஏக்கர்ல அறுபதாம் குறுவை, ரெண்டரை ஏக்கர்ல பூங்கார் நெல் ரகங்கள் அறுவடை முடிஞ்சிருக்கு. மொத்தமா 4 ஏக்கர்ல 50 மூட்டை (80 கிலோ) நெல் கிடைச்சிருக்கு. இதை அரிசியாக்குனா 30 மூட்டை (2,400 கிலோ அரிசி) கிடைக்கும். கிலோ 60 ரூபாய்னு விற்பனை செய்றேன். அதுமூலமா எனக்கு 1,44,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கர்ல ஜி.ஜே.20 என்கிற குஜராத் ரக கடலை அறுவடை முடிஞ்சிருக்கு. மொத்தம் 14 மூட்டை (40 கிலோ) மகசூல் கிடைச்சிருக்கு. மொத்தம் 560 கிலோ கடலையை கிலோ 80 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 44,800 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுபோக 40 மரங்கள்ல கொய்யா இப்பத்தான் காய்க்க ஆரம்பிச்சிருக்கு. கடலை வருமானம் செலவுக்குச் சரியாப்போச்சு. நெல் மூலமாக் கிடைச்ச வருமானம் 1,44,000 ரூபாய் லாபமா நிக்குது’’ என்றபடி விடைகொடுத்தார் லோகேஸ்வரன்.

தொடர்புக்கு, லோகேஸ்வரன், செல்போன்: 80720 07192