Published:Updated:

50 சென்ட்... 44,000 ரூபாய் - சொல்லி அடிக்கும் கில்லி சொர்ணமயூரி!

வயலில் அஸாருதீன்
பிரீமியம் ஸ்டோரி
வயலில் அஸாருதீன்

மகசூல்

50 சென்ட்... 44,000 ரூபாய் - சொல்லி அடிக்கும் கில்லி சொர்ணமயூரி!

மகசூல்

Published:Updated:
வயலில் அஸாருதீன்
பிரீமியம் ஸ்டோரி
வயலில் அஸாருதீன்

சாயன முறையில் சாகுபடி செய்யப்படும் நவீன நெல் ரகங்கள், அதிக விளைச்சலைக் கொடுக்கும். ஆனால் இயற்கை இடர்ப்பாடுகளோ, பூச்சி நோய்த்தாக்குதலோ ஏற்பட்டால், அதிக அளவு மகசூல் இழப்பு ஏற்பட்டு, நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் பாரம்பர்ய நெல் ரகங்கள் அப்படியல்ல... அபரிமிதமான மகசூல் கிடைக்காவிட்டாலும்கூட, இயற்கை இடர்ப்பாடுகளையும், பூச்சி நோய்த்தாக்குதல்களையும் எதிர்கொண்டு, நீடித்த நிலைத்த வருமானம் கொடுக்கும்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் உள்ள கோயில்வெண்ணி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இந்த ஆண்டு, கோடைப்பட்டத்தில் ரசாயன முறையில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் களில் கதிர் நாவாய் பூச்சித்தாக்குதல் அதிகமாக இருந்தது. அதனால், கணிசமான மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த அஸாருதீன் இயற்கை முறையில் சாகுபடி செய்த, சொர்ணமயூரி, கதிர் நாவாய் பூச்சித்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு நிறைவான மகசூலைக் கொடுத்து இப்பகுதி விவசாயி களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

முதல் முயற்சியிலேயே முத்தான லாபம்

ஒரு பகல் பொழுதில் அஸாருதீனை சந்திக்கச் சென்றோம். அறுவடை செய்த நெல்லை, காயவைத்துச் சுத்தம் செய்துகொண்டிருந்தவர் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார். ‘‘அரை ஏக்கர்ல சொர்ணமயூரி சாகுபடி செஞ்சிருந்தேன். 16 மூட்டை மகசூல் கிடைச்சிருக்கு. இது கர்நாடக மாநில ரகம். நிறைய பேரு சொர்ணமசூரினு நினைப்பாங்க. சொர்ணமசூரி வேறு, சொர்ணமயூரி வேறு. இது சன்ன ரகம். நெல்மணிகள் நல்லா திரட்சியா இருக்கும்.

அறுவடையான சொர்ணமயூரி நெல்
அறுவடையான சொர்ணமயூரி நெல்


இயற்கை விவசாயம், பாரம்பர்ய ரகச் சாகுபடி... இந்த ரெண்டுமே எனக்கு இதுதான் முதல் அனுபவம். ரசாயன விவசாயம் செஞ்சிக்கிட்டு இருந்த நிலத்தை இயற்கை விவசாயத்துக்கு மாற்றினால், சில ஆண்டுகள் கழிச்சுதான், நிறைவான மகசூல் கிடைக்கும். குறிப்பா பாரம்பர்ய நெல் ரகங்கள்ல குறைவான மகசூல்தான் கிடைக்கும்னு சொல்வாங்க. ஆனால், என்னோட அனுபவம் அதைப் பொய்யாக்கி இருக்கு. முதல் வருஷத்துலயே நிறைவான மகசூல் கிடைச்சிருக்கு. இதை மற்ற விவசாயிகள் எல்லாரும் ஆச்சர்யமா பார்க்குறாங்க’’ என்று மகிழ்ச்சியை வெளிப் படுத்தியவர் தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

‘‘நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சிக்கிட்டு இருந்தப்ப அப்பா இறந்துட்டார். அப்பெல்லாம் எனக்கு விவசாயத்துல ஆர்வம் கிடையாது. ஆனால், எங்க குடும்பத்துல வேற ஆள் இல்லாததுனால, படிச்சிக்கிட்டே வேண்டா வெறுப்பாக, விவசாயத்தையும் பார்த்துக்கிட்டேன். படிச்சு முடிச்ச பிறகு, முழுநேரமாக நான் இதைக் கவனிச்சிக்கிட்டாலும் கூட, என்னோட மனசு இதுல ஒன்றவே இல்லை. படிப்புக்கேத்த வேலை பார்க்கணும்னு ஏக்கமா இருந்துச்சு. வெளிநாடு போக ஆசைப்பட்டேன்.

எங்க அப்பாவோட நெருங்கிய நண்பர் சச்சிதானந்தம் பொறுப்புல நிலங்களை விட்டுட்டு, சவுதி அரேபியா போயிட்டேன். சில வருஷம் வேலைபார்த்தேன். அங்க போனதுக்குப் பிறகுதான், சொந்த ஊர்ல இருந்து, விவசாயம் செய்றதோட அருமையை உணர முடிஞ்சது. மறுபடியும் சொந்த ஊருக்கே வந்து 5 வருஷமா விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன்’’ என்றவர், நெல் நன்றாக உலர்வதற்கு கிளறிவிட்டு வந்தார்.

நெல் வயல்
நெல் வயல்


மகசூலைக் குறைத்த ரசாயனம்

‘‘எங்களுக்கு 20 ஏக்கர் நிலம் இருக்கு. இது வண்டல் மண் பூமி. நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சிக்கிட்டு இருக்கேன். 15 வருஷத்துக்கு முன்னாடியெல்லாம், எங்க பகுதியில ஏக்கருக்கு 40 - 45 மூட்டை (60 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சிக்கிட்டு இருந்துச்சு. நாளடைவுல, ரசாயன உரங்கள், களைக்கொல்லி, பூச்சிமருந்துகளோட பயன்பாடு படிப்படியாக அதிகரிக்க ஆரம்பிச்சது. கடந்த 10 வருஷமா ஏக்கருக்கு 30 - 35 மூட்டைதான் மகசூல் கிடைச்சுக்கிட்டு இருக்கு. அதிகபட்சம் 35 மூட்டை விளைஞ்சு, மூட்டைக்கு 1,150 ரூபாய் விலை கிடைச்சா, மொத்தம் 40,250 ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். அதுல செலவுபோக, 10,000 ரூபாய் லாபம் கிடைச்சாலே பெரிய விஷயம்.

இயற்கை இடர்ப்பாடுகள், பூச்சித்தாக்குதல் ஏற்பட்டால், இதுவும்கூடக் கிடைக்காது. முதலுக்கே மோசம் வந்துடும். இந்த வருஷம் எங்க பகுதியில, கோடைப்பட்டத்துல சாகுபடி செஞ்ச நெற்பயிர்கள்ல, ஆரம்பத்துல குருத்துப்பூச்சித்தாக்குதல் அதிகமா இருந்துச்சு. கதிர் வந்த பிறகு, கதிர் நாவாய் பூச்சித்தாக்குதல் ரொம்ப அதிகம். ஏகப்பட்ட செலவு செஞ்சு, பல தடவை பூச்சிக்கொல்லி அடிச்சும்கூட, அதைக் கட்டுப்படுத்தவே முடியல. இதனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 24 - 30 மூட்டைதான் மகசூல் கிடைச்சது. செலவும் அதிகமானதால், நஷ்டம் ஏற்பட்டிருக்கு. ஆனால், நான் அரை ஏக்கர்ல இயற்கை முறையில் சாகுபடி செஞ்ச, பாரம்பர்ய நெல் ரகமான சொர்ணமயூரியில, கதிர்நாவாய் பூச்சிகளோட நடமாட்டம் ரொம்பக் குறைவாகத்தான் இருந்துச்சு.

‘‘கதிர்நாவாய்ப் பூச்சிகளை சாயந்தர நேரத்துல சாம்பிராணி புகை மூட்டம் போட்டு விரட்டிட்டேன்.’’


கதிர்நாவாய்ப் பூச்சிகளை விரட்டிய புகை

அதையும்கூட, சாயந்திர நேரத்துல சாம்பிராணி புகை மூட்டம் போட்டு விரட்டிட்டேன். எனக்கு இந்த அரை ஏக்கர்ல 16 மூட்டை மகசூல் கிடைச்சிருக்கு. இயற்கை இடுபொருள்களுக்கு நான் 3,000 ரூபாய் செலவு செஞ்சிருக்கேன். ரசாயன விவசாயமாக இருந்தால், உரங்கள், பூச்சிக்கொல்லிக்கு மட்டுமே, 8,000 ரூபாய்க்கு மேல செலவாகி இருக்கும்’’ என்றவர், இயற்கை விவசாயம் மற்றும் சொர்ணமயூரி சாகுபடி அனுபவம் குறித்து விரிவாகப் பேசத் தொடங்கினார்.

‘‘எங்க அப்பா இருந்தவரைக்கும், எங்க வீட்டுல 25 - 30 மாடுகள் இருந்துச்சு. அதுல பெரும்பாலானவை நாட்டு மாடுகள். ரசாயன விவசாயம் செஞ்சாலும்கூட, வயலுக்கு நிறைய எரு போடுவாங்க. அதோட அருமை தெரியாமல் நான்தான் எல்லாத்தையும் விற்பனை செஞ்சேன். அது எல்லாமே நல்லா திடகாத்திரமான மாடுகள். அதை நினைச்சு நான் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன். இப்ப நான் ரெண்டு மாடுகள் மட்டும் வளர்த்துக்கிட்டு இருக்கேன்.

நெல்
நெல்


ஒவ்வொரு வருஷமும் கோடை சாகுபடி, குறுவைச் சாகுபடிக்கு முன்னாடி, எங்க வயல்ல, மலை மாடுகளைக் கொண்டு கிடை போடுவோம். திருவண்ணாமலையில இருந்து, இதுக்குனு சிலர் மலைமாடுகளை இங்க ஓட்டிக்கிட்டு வருவாங்க. ஒரு ஏக்கருக்கு 250 - 300 மாடுகளைக் கொண்டு கிடை போட, 1,500 ரூபாய்ச் செலவாகும். மாட்டுக்கிடை போட வாய்ப்பு கிடைக்கலைன்னா, ஆட்டுக்கிடை போடுறதை வழக்கமாக வெச்சிருக்கோம். இந்த வருஷம் கோடைப்பட்டத்துக்கு முன்னாடி ஆட்டுக்கிடை போட்டோம்.

குறைந்த பரப்புல, முழுமையாக 100 சதவிகிதம் இயற்கை விவசாயம் செஞ்சிப் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். ஆட்டுக்கிடை கட்டப்பட்ட நிலத்துல 40 சென்ட்ல எள்ளு, 50 சென்ட்ல சொர்ணமயூரி சாகுபடி செஞ்சேன்.

40 சென்ட்... எள் சாகுபடி

எள்ளுக்கு ரெண்டு தடவை மீன் அமிலம் கொடுத்தேன். அவ்வளவுதான் வேற எந்த இடுபொருளும் கொடுக்கல. 40 சென்ட்ல ஒன்றரை குவிண்டால் மகசூல் கிடைச்சது. ரசாயன முறையில் செய்தால், ஒரு குவிண்டால்தான் மகசூல் கிடைக்கும். அதுல செலவும் அதிகம்.

50 சென்ட்... சொர்ணமயூரி

பாரம்பர்ய நெல் சாகுபடியைப் பொறுத்தவரைக்கும்... மாட்டுச் சிறுநீரில் கலந்து மேம்படுத்தப்பட்ட ஆட்டு எரு, உயிர் உரம், மீன் அமிலம், பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டிப் பயன்படுத்தினேன். இதைத் தவிர, கடலைப்பிண்ணாக்கு, தேங்காய் பிண்ணாக்கு, தோலுடன் காய வைக்கப்பட்டுப் பொடியாக்கப்பட்ட வேப்பங்கொட்டைத்தூளும் கொடுத்தேன். அதுக்கு கண்கூடாகப் பலன் தெரிஞ்சது. பயிர் நல்லா ஊக்கமா வளர்ந்ததோடு மட்டுமல்லாம, பூச்சி, நோய் எதிர்ப்புத்திறனும் அதிகமாக இருந்துச்சு. தண்டு நல்லா திடகாத்திரமா இருந்துச்சு. தூர்களும் அதிக என்ணிக்கையில வெடிச்சிருந்துச்சு. ரசாயன உரங்கள் பயன்படுத்தாதனால, பயிர்கள்... நல்லா கிளிப்பச்சை நிறத்துல பச்சை பிடிச்சு கடைசி வரைக்குமே பசுமையா இருந்துச்சு. ரசாயன உரங்கள் பயன்படுத்திச் சாகுபடி செய்யக்கூடிய நவீன நெல் ரகங்கள்ல, நடவுல இருந்து அடுத்த ஒரு மாசம் வரைக்கும் பயிர்கள் கரும்பச்சை நிறத்துல இருக்கும். அதுக்குப் பிறகு பச்சை மாறி வெளுத்துப்போயிடும். தாள்களோட நுனிப்பகுதி சிவக்க ஆரம்பிக்கும்.

இந்த முறை எங்க பகுதியில ரசாயன விவசாய நெல் வயல்கள்ல குருத்துப்பூச்சி, இலைச்சுருட்டுப்புழுத்தாக்குதல் அதிகம். கதிர் வந்த பிறகு, கதிர்நாவாய் பூச்சித்தாக்கு தலும் அதிகமாக இருந்துச்சு. ஆனால், என்னோட 50 சென்ட் சொர்ணமயூரி நெல் வயல்ல, கொஞ்சம்கூடக் குருத்துப்பூச்சி, இலைச்சுருட்டுப்புழுத் தாக்குதல்களே இல்ல. கதிர் வந்த பிறகு, கதிர்நாவாய் பூச்சிகளோட நடமாட்டம் லேசா தென்பட்டுச்சு. ரெண்டு, மூணு நாள்கள் கழிச்சுதான் அதை நான் கவனிச்சேன். மூலிகைப் பூச்சிவிரட்டியோடு வேப்ப எண்ணெய் கலந்து தெளிச்சேன்.ஆனால், கட்டுப்படல. அதுல காதி சோப்பு கரைசல் கலக்காமல் தெளிச்சதுனால, அது பலன் கொடுக்காமல் போயிருக்க வாய்ப்பிருக்குனு, இயற்கை விவசாய நண்பர்கள் சொன்னாங்க.

சாம்பிராணி புகை கவனம்

கதிர்நாவாய் பூச்சிகளை விரட்டியடிக்க, மண் சட்டியில நெருப்பு மூட்டி, அதுல சாம்பிராணி தூளைப் போட்டு, புகை மூட்டம் உருவாக்கி சாயந்திரம் 4 - 6 மணிக்கு வயலோட வரப்புல நாலு பக்கமும் சுத்தி வந்தேன். இது மாதிரி தொடர்ச்சியாக மூணு நாள்கள் செஞ்சேன். சாம்பிராணி புகை வாசம் பிடிக்காததுனால, கதிர்நாவாய் பூச்சிகளோட நடமாட்டம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுச்சு. இதை ரொம்ப எச்சரிக்கையாகக் கையாளணும். நெருப்புப் பொறி எதுவும் பயிர்கள்ல பட்டுடக் கூடாது.

சொர்ணமயூரியோட சாகுபடி காலம் 135 நாள்கள். 15 நாள்கள் நாற்றங்கால்ல போயிடும். நாற்று நடவு செஞ்சதுல இருந்து, 120-ம் நாள் கதிர்கள் முழுமையாக முற்றி அறுவடைக்கு வந்துச்சு. அரை ஏக்கர்ல 16 மூட்டை மகசூல் கிடைச்சிருக்கு’’ என்றவர் நிறைவாக வருமானம் குறித்துப் பேசினார்.

செலவு, வரவு கணக்கு
செலவு, வரவு கணக்கு


50 சென்ட்... 44,150 ரூபாய்

‘‘நிறைய விவசாயிகள் விதைநெல் கேட்டிருக்காங்க. 6 மூட்டையை விதைநெல்லாக விற்பனை செய்யப்போறேன். கிலோவுக்கு 50 ரூபாய் வீதம் 360 கிலோவுக்கு 18,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 10 மூட்டை நெல்லை, அரிசியாக்கி சொந்த உபயோகத்துக்கும் விற்பனைக்கும் பயன்படுத்தப்போறேன். 600 கிலோ நெல்லுல இருந்து 350 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 65 ரூபாய் வீதம், 22,750 ரூபாய் வருமானம். 120 கிலோ தவிடு, 40 கிலோ குருணை இதோட விலைமதிப்பு 2,400 ரூபாய். வைக்கோலோட விலைமதிப்புக் குறைந்தபட்சம் 1,000 ரூபாய்.

எல்லாம் சேர்த்து மொத்தமாகக் கணக்குப் பார்த்தால் இந்த அரை ஏக்கர் சொர்ணமயூரி சாகுபடி மூலமாக, எனக்கு 44,150 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல சாகுபடி செலவு, நெல் அரவைக்கூலி 14,000 ரூபாய் போக, மீதி 30,150 ரூபாய் லாபமாகக் கையில மிஞ்சும்’’ என்றார்.தொடர்புக்கு,

அஸாருதீன்,

செல்போன்: 93445 18849

அரை ஏக்கரில் சொர்ணமயூரி சாகுபடி செய்வதற்கு அஸாருதீன் சொல்லும் தொழில்நுட்பம் இங்கே...

விதை நேர்த்தி

10 கிலோ விதைநெல்லை, சணல் சாக்கில் கட்டி, 12 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, தண்ணீரிலிருந்து விதைநெல் மூட்டையை வெளியில் எடுத்து வைக்க வேண்டும். தண்ணீர் வடிந்த பிறகு... தனியாக ஒரு பாத்திரத்தில் 5 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி சூடோமோனஸ் கலந்து, விதைநெல் மூட்டையின் மீது ஊற்ற வேண்டும். சணல் சாக்கில் உள்ள துளைகள் வழியாக, சூடோமோனஸ் கரைசல் உள்ளே இறங்கி, விதைநெல்லோடு கலந்துவிடும். விதைநெல் மூட்டையை, பல பக்கங்களிலும் புரட்டி, சூடோமோனஸ் கரைசலை ஊற்ற வேண்டும். சணல் சாக்கு மூட்டையைப் பிரிக்காமல் இதுபோல் மூடிய நிலையிலேயே இருந்தால், புழுக்கத்தில் விரைவாக முளைப்பு வரும். விதைநெல் மூட்டையின் மீது படுதாவைப் போட்டு மூடி வைக்க வேண்டும். 12 மணிநேரத்துக்குப் பிறகு விதைக்கலாம்.

வயலில் அஸாருதீன்
வயலில் அஸாருதீன்


நாற்றங்கால்

ஆட்டுக்கிடை அல்லது மாட்டுக்கிடை போடப்பட்ட வயலில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நன்கு சேற்றுழவு செய்து, மண்ணைச் சமப்படுத்தி, ஏற்கெனவே விதைநேர்த்தி செய்து தயாராக வைக்கப்பட்டுள்ள விதைநெல்லை, நாற்றங்காலில் பரவலாகத் தூவ வேண்டும். ஒரு வாரம் கழித்து, 3 கிலோ ஆட்டு எருவை நன்கு தூளாக்கி, அதனுடன் 1 லிட்டர் மாட்டுச் சிறுநீரைக் கலந்து, நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். 12-ம் நாள் 30 மி.லி மீன் அமிலத்தை, 16 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நாற்றுகள் நன்கு வாளிப்பாக வளர்ந்து, 17-ம் நாள் நடவுக்குத் தயாராக இருக்கும். பொதுவாக, இதுபோல் இளம் நாற்றாக நடவு செய்தால், விளைச்சல் சிறப்பாக இருக்கும்.

சாகுபடி நிலம்

ஆட்டுக்கிடை அல்லது மாட்டுக்கிடை போடப்பட்ட நிலத்தில், 2 சால் சேற்றுழவு செய்ய வேண்டும். தலா 5 கிலோ ஆட்டு எரு, ஈர சாணம், தோலுடன் பொடியாக்கப்பட்ட 7 கிலோ வேப்பங்கொட்டைத்தூள்... இவற்றோடு, ஏற்கெனவே தண்ணீரில் ஊற வைக்கப்பட்டு, நொதித்தல் ஏற்பட்டு தயாராக வைத்துள்ள 10 கிலோ கடலைப்பிண்ணாக்கு, 7 கிலோ தேங்காய்ப் பிண்ணாக்கு இவற்றை ஒன்றாகக் கலக்க வேண்டும். அதை நிலம் முழுக்கத் தூவி, மீண்டும் உழுது, மண்ணை லேசாகக் கிளறிவிட்டுச் சமப்படுத்த வேண்டும். தலா 1 அடி இடைவெளியில் குத்துக்குக் குத்து 3 நாற்றுகள் நடவு செய்ய வேண்டும்.

15-ம் நாள் 1.2 லிட்டர் மீன் அமிலத்தை 80 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 22-ம் நாள் கோனோவீடர் மூலம் களையெடுக்க வேண்டும். 25-ம் நாள் 12 கிலோ வேப்பங்கொட்டைத்தூள், 25 கிலோ ஆட்டு எரு தூள், மாட்டுச் சிறுநீர் 5 லிட்டர், மாட்டுச் சாணம் 10 கிலோ, 250 மி.லி வேப்பெண்ணெய், இவற்றோடு ஏற்கெனவே ஊற வைக்கப்பட்டுத் தயாராக உள்ள 10 கிலோ கடலைப் பிண்ணாக்கு இவற்றை ஒன்றாகக் கலந்து நிலம் முழுக்கத் தூவ வேண்டும். 40 மற்றும் 60-ம் நாள் பாசனநீரில் 6 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து, தண்ணீர் கட்ட வேண்டும். இதுபோல் வேர்களுக்கு ஊட்டம் அளித்தால், நீடித்து நிலைத்து பலன் தரும். அடுத்த மூன்று நாள்களில் மண்ணில் பச்சை படிந்திருக்கும். அதன் பிறகு, தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

70-ம் நாள் 1.2 லிட்டர் மீன் அமிலத்தை 80 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 75 நாள்களுக்குப் பிறகு, குருத்துப்பூச்சிகள் ஏதேனும் தென்பட்டால் 1.2 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை, 80 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்கள்மீது தெளிக்க வேண்டும். 90-ம் நாள் 12 கிலோ வேப்பங்கொட்டைத்தூள், 25 கிலோ ஆட்டு எரு தூள், மாட்டுச் சிறுநீர் 5 லிட்டர், மாட்டுச் சாணம் 10 கிலோ, 250 மி.லி வேப்ப எண்ணெய், இவற்றோடு ஏற்கெனவே ஊற வைக்கப்பட்டுத் தயாராக உள்ள 10 கிலோ கடலைப்பிண்ணாக்கு இவற்றை ஒன்றாகக் கலந்து நிலம் முழுக்கத் தூவ வேண்டும். கதிர்நாவாய் பூச்சித்தாக்குதல் தென்பட்டால், மிகவும் எச்சரிகையுடன் சாம்பிராணி புகை மூட்டம் போடலாம்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பறவைத்தாங்கி

கதிர் நாவாய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பறவைத் தாங்கிகள் அமைக்கலாம். இது கண்கூடான பலன் கொடுக்கும். குறிப்பாக, கரிச்சான் குருவிகள் கதிர் நாவாய்ப் பூச்சிகளை மிகவும் விரும்பிச் சாப்பிடும். ஒரு ஏக்கருக்கு தலா 5 கிலோ வசம்பு, சாம்பல் இவற்றை ஒன்றாகக் கலந்து தூவுவதன் மூலமாகவும் கதிர் நாவாய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.