Published:Updated:

சிவகங்கை: `2 சுரங்க பாதை; பர்மா தேக்கு தூண்கள்’ - மிளிரும் வில்லிப்பட்டி நெற்களஞ்சியம்

நெற்களஞ்சியம்
நெற்களஞ்சியம்

பாட சாலை இல்லாத காலத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நெற்களஞ்சியம் ஏட்டுக் கல்வி படிக்க பயன்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கட்டடக்கலையில் தற்போதும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, 96 செட்டிநாடு கிராமங்களில் இருக்கும் வீடுகளில் நிலை, ஜன்னல், சுவர், அறைகள், தூண்கள் என ஒவ்வொன்றும் ரசனையாக வடிவமைப்பு பெற்றிருக்கும். சிவகங்கை அருகே உள்ள வில்லிப்பட்டி கிராமத்தில் அறிவியல் பூர்வமாகக் கட்டப்பட்டுள்ள பழைமையான நெற்களஞ்சியம் தற்போதும் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது.

நெற்களஞ்சியம்
நெற்களஞ்சியம்

இது குறித்து தொல்லியல் ஆர்வலர்கள், ``சிவகங்கை மாவட்டத்தில பல இடங்களில் நெற்களஞ்சியம் இருந்துள்ளது. ஆனால், வில்லிப்பட்டியில் இருக்க களஞ்சியம்தான் தற்போதும் திடமாவும் பொலிவாகவும் உள்ளது. இந்த நெற்களஞ்சியம் சிறப்புமிக்கது. மேல் தளத்தில் இருந்து தானியத்தைக் கொட்டி கீழ இருந்து எடுத்துக்கொள்ளலாம். தரையோட தளமே 3 அடிக்கு மேல இருக்கும். தளம் 100 அடி நீளம், 36 அடி அகலம் இருக்கும். களஞ்சியத்தில் கொட்டப்படும் தானியங்கள் கெட்டுப் போகாம இருக்க அந்தக் காலத்துலையே அறிவியல் முறையில் குளிர்சாதன தத்துவத்தக் கையாண்டுள்ளனர்.

களஞ்சியத்துக்கு கீழ 2 சுரங்கப் பாதை மாதிரி அமைச்சுருக்காங்க. இது வெயில், மழைனு எல்லா காலத்திலும் தானியங்கள கெட்டுப் போகாம இருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. 100 வருடத்தைக் கடந்த இந்த நெற்களஞ்சியம் ஜாமீன்தாரர் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது. நீர்த்த சுண்ணாம்பு, பனைவெல்லம், கலச்சிக்காய் உள்ளிட்ட பல்வேறு இயற்கை பொருள்களைப் பயன்படுத்தி பாரம்பர்ய முறையில கட்டிருக்காங்க.

நெற்களஞ்சியம்
நெற்களஞ்சியம்

ஓட்டு கையில் மூலம் அழகுபடித்தி மேற் கூரைகள் கட்டப்பட்டுள்ளது. 48 தூண்கள் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளன. ஒரே புள்ளியில் தென்படும்படியாகத் தூண்கள் ஒவ்வொரு பக்கமும் தெரியும். பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தேக்குகள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை ஆண்ட செல்வந்தர் யானை கட்டி போரடிக்கும் அளவுக்கு தானியங்களை சேமித்து வைத்துள்ளார். 1964-ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது இப்பகுதி மக்களுக்கு இந்த நெற்களஞ்சியம்தான் அட்சய பாத்திரமாக விளங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சரியாக மழைப் பொழிவு இல்லாததால் தற்போது பெரிய அளவில் இந்த நெற்களஞ்சியத்தை மக்கள் பயன்படுத்தவில்லை.

நெற்களஞ்சியம்
நெற்களஞ்சியம்

ஆண்டுகள் கடந்தாலும் இந்த நெற்களஞ்சியம் தன் கம்பீரத்தை இழக்காமல் அழகுற காட்சியளிக்கிறது” என்கின்றனர்.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முத்துக் கண்ணு, "இந்தக் கிராமத்தில் ஜமீன் பரம்பரையின் வம்சாவழிகள்தான் தற்போது நெற்களஞ்சியத்தைக் கவனித்து வருகிறோம். அதிக நிலப்பரப்பு கொண்டு விவசாயம் செய்துவந்துள்ளனர்.

40 ஏக்கருக்கு மேலே ஆடு, மாடுகள் வளர்ப்புகளைச் செய்துள்ளனர். கஷ்ட காலங்களில் இப்பகுதி மக்களுக்கு சமைத்து அன்னதானங்களும் கொடுத்துள்ளனர். பாட சாலை இல்லாத காலத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த குழந்தைகள் நெற்களஞ்சியத்தில் ஏட்டுக் கல்வி படித்துள்ளனர்.

நெற்களஞ்சியம்
நெற்களஞ்சியம்

மிகவும் பிரமாண்டமாக இருக்கும் இந்த நெற்களஞ்சியத்தைப் போல் தற்போதைய சூழலில் கட்டுவது சிரமம். நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கிய எங்கள் கிராமம் தற்போது நிலத்தடி நீருக்கு சிரமப்படுகிறோம். நெற்களஞ்சியத்தைப் பார்வையிட பலரும் வந்துசெல்கின்றனர். எனவே, இரவு நேரத்திலும் ஜொலிக்க உயர் மின் கோபுரம் எங்கள் கிராம பஸ்டாப் அருகே அமைக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு