Published:Updated:

பனை சீசனைப் பாதித்த ஊரடங்கு... கருப்பட்டி தேக்கத்தால் கலங்கும் உற்பத்தியாளர்கள்!

கருப்பட்டி
கருப்பட்டி

”பனை சீசன் காலத்திலும் தற்போதைய ஊரடங்கால் உற்பத்தி செய்த கருப்பட்டிகளை விற்பனை செய்ய முடியாமலும், விற்பனைக்கு அனுப்ப முடியாமலும் திண்டாடிவருகிறோம்” என்று கலங்குகின்றனர், கருப்பட்டி உற்பத்தியாளர்கள்.

உச்சி முதல் அடி வரையிலும் அனைத்து பாகங்களும் பலன் தருவதால்தான் பனைமரத்தை ’பூலோகத்தின் கற்பகத்தரு’ என்கிறார்கள். தமிழகத்தில் சுமார் 5 கோடி பனைமரங்கள் உள்ளன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில்தான் பனைமரங்கள் அதிகம் காணப்படுகின்றன. பனைமரத்தொழிலை நம்பி நேரடியாக சுமார் 2 லட்சம் குடும்பங்களும், மறைமுகமாக சுமார் 1 லட்சம் குடும்பங்களும் உள்ளன.

தேக்கம் அடைந்த கருப்பட்டி
தேக்கம் அடைந்த கருப்பட்டி

பதனீரைக் காய்ச்சி கருப்பட்டி, கல்கண்டு, சில்லுக்கருப்பட்டி, சுக்குக்கருப்பட்டி ஆகியவை உற்பத்தி செய்யபடுகிறது. கருப்பட்டியைப் பயன்படுத்தி கருப்பட்டி அல்வா, கருப்பட்டி பால்கோவா ஆகிய இனிப்பு பாதார்த்தங்களும் மதிப்புக்கூட்டி தயார் செய்யப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, அடைக்கலாபுரம், பரமன்குறிச்சி ஆகிய பகுதிகளில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனைத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

பனை சீசன் முடிந்ததும், பனை உற்பத்திப் பொருள்களின் விலை அதிகமாவது வழக்கம்தான். ஆனால், நாளுக்குநாள் குறைந்து வரும் பனைமரங்களின் எண்ணிக்கையால் கருப்பட்டி விலை நிலையாகவே இருந்துவந்தது. தற்போதைய ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களில் பனைத்தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த பனைத்தொழில் செய்துவரும் ஆண்டோ பிரைட்டனிடம் பேசினோம்.

கருப்பட்டி உற்பத்திக்காக ஊற்றப்பட்டுள்ள பதனீர்
கருப்பட்டி உற்பத்திக்காக ஊற்றப்பட்டுள்ள பதனீர்

"எங்க பகுதியில் பெரும்பாலான மக்கள் பனைத்தொழிலை நம்பியே வாழ்கின்றனர். தாத்தா, அப்பா காலத்துல இருந்து சுமார் 50 வருஷமாவே பனைத்தொழிலை குலத்தொழிலாகச் செய்துட்டு வர்றோம். எங்க பனைத் தோட்டத்தில் 500 பனைகள் இருக்கு.

இதுல 300 பனைகள் பலன் தரும் நிலையில் இருக்கு. பனைத்தொழிலைப் பொறுத்தவரை மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்கள்தான் பனைமரத்துல பதனீர் கிடைக்கும். தினமும் பதனீர் இறக்கிக் காய்ச்சி கருப்பட்டியாக்குவோம். இந்த 6 மாதங்களை பனை சீசன்னு சொல்லுவோம். மீதமுள்ள 6 மாசம் வேற ஏதாவது வேலைகளைச் செய்வோம்.

கருப்பட்டி காய்ச்சுதல்
கருப்பட்டி காய்ச்சுதல்

சீசன் நேரங்களில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் பிள்ளைகளின் படிப்புச் செலவு, கல்யாணம், கடன் அடைத்தல் போன்றவற்றை பூர்த்திசெய்வோம். மீதமுள்ள பணத்தை வச்சுதான் அடுத்த 6 மாசத்தை ஓட்டுவோம். தற்போது கொரோனா ஊரடங்கினால் எங்களோட வாழ்வாதாரம் மிகவும் கடுமையா பாதிக்கப்பட்டுள்ளது. பனை சீசன் தொடங்கியபோதே ஊரடங்கும் தொடங்கிவிட்டது. உள்ளூரிலுள்ள பனைத்தொழிலாளர்கள் தவிர்த்து நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்தும் கேரளாவில் இருந்தும் பனையேற ஆட்கள் வருவாங்க.

ஊரடங்கினால் அவர்களும் வர முடியாத நிலையில், ஆட்கள் பற்றாக்குறையால் பதனீர் இறக்க முடியலை. உள்ளூரில் கிடைத்த ஆட்களை வைத்து பதனீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சுறோம். சீசன்களில் தினமும் 150 கிலோவிற்கு மேல் உற்பத்தி செய்துவந்த நிலையில், தற்போது 40 முதல் 50 கிலோ வரை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. ஊரடங்கு தொடங்கியது முதல் தற்போதுவரை என்னிடம் ஒரு டன் கருப்பட்டி தேக்கம் அடைந்துள்ளது. ஒவ்வொரு கருப்பட்டி உற்பத்தியாளர்களிடமும் கருப்பட்டி இருப்பு நிலையைக் கணக்கெடுத்தால் எத்தனை டன்கள் தேக்கமடைந்திருக்கும்?

கருப்பட்டி உற்பத்தி
கருப்பட்டி உற்பத்தி

போக்குவரத்து பாதிப்பால் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாததாலும் வருமானமின்றித் தவிக்கிறோம். ”அழுதுக்கிட்டிருந்தாலும் உழுதுக்கிட்டிரு”ன்னு விவசாயியைச் சொல்லுவாங்க. அதேபோல, தொழிலை விட்டுடக்கூடாதுன்னு கடன் வாங்கி, தொழிலாளிகளுக்கு கூலி கொடுத்து கருப்பட்டியை உற்பத்தி செய்து இருப்பு வைச்சுட்டு வர்றோம்.

தினமும் பதனீரை இறக்கி, காய்ச்சி, கருப்பட்டியாக்கி, இருப்பு பாதுகாத்தா மட்டும் போதுமா? எப்போ விற்பனை செய்யுறது? எங்களைப் போன்ற கருப்பட்டி உற்பத்தியாளர்களிடம் கருப்பட்டியை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்யலாம் என ஏற்கெனவே அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தக் கோடையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க சாலையோரங்களில் பதனீர், நுங்கு விற்பனை செய்வோம். சாலைகளில் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு பதனீர் குடித்துச் செல்வார்கள்.

பதனீர் இறக்குதல்
பதனீர் இறக்குதல்

இதுதவிர, பெண்களும் பஸ் ஏறி அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்று பதனீர்க் குடங்களை தலையில் சுமந்து வீடுவீடாகவும் விற்பனை செய்துவிட்டு வருவார்கள். தற்போது அதற்கும் வழியில்லாததால் நுங்குகளை வெட்டாமல் மரத்திலேயே விட்டுவிட்டோம். இதனால், நுங்கு பழமாகிப் பழுத்து கீழே விழுந்து கொண்டிருக்கிறது. 25 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு 125 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். தற்போது 70 ரூபாய்னு சொல்லியும் யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால், கிழங்குகளைப் பிடுங்காமல் அப்படியே விட்டுவிட்டோம்” என்றார் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு