Published:Updated:

பதநீர் விற்பனை... பனை மரம் ஏற பயிற்சி... நிதி ஆய்வாளரின் முயற்சி!

பதநீர் இறக்குதல்
பிரீமியம் ஸ்டோரி
பதநீர் இறக்குதல்

பனை

பதநீர் விற்பனை... பனை மரம் ஏற பயிற்சி... நிதி ஆய்வாளரின் முயற்சி!

பனை

Published:Updated:
பதநீர் இறக்குதல்
பிரீமியம் ஸ்டோரி
பதநீர் இறக்குதல்

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் 300 பனை மரங்களைக் குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகிறார் விஸ்வ நாதன். தனியார் நிறுவனமொன்றில் நிதி ஆய்வாளராக (Financial Analyst) பணியாற்றி வரும் இவர், பனை மீதுள்ள ஆர்வத்தால் இதைத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார். பதநீர் இறக்கிக்கொண்டிருந்த ஒரு காலை வேளையில் அவரைச் சந்தித்தோம்...

“பனை மேல ஆர்வம் வரக் காரணமா இருந்தது கள்ளுதான். என்னோட சின்ன வயசுல என் அப்பா எனக்குக் கள்ளு வாங்கிக் கொடுப்பாரு. கள் உணவுப் பொருள்தானே தவிர, போதைப்பொருள் கிடையாது. போதைப்பொருளா இருந்தா எந்தப் பெத்த வங்களும் குழந்தைக்குக் கொடுக்க மாட்டாங்க. பனையேறிகளோட வாழ்வாதாரமே கள்ளை நம்பித்தான் இருக்கு. கள் தடைக்கப்புறம்தான் அவங்க வேற வேலை தேடிப்போனாங்க. நிறைய பனை மரங்கள் அழிக்கப்பட்டுச் செங்கல் சூளை களுக்கு அனுப்பப்பட்டுச்சு. நீண்ட காலமாகவே பனையேறிகளோட வாழ்வு சார்ந்தும், கள்ளுக்கான அனுமதி சார்ந்தும் சில அமைப்புகளோட சேர்ந்து வேலை செஞ்சுகிட்டு வர்றேன்.

பதநீர் வடிகட்டுதல்
பதநீர் வடிகட்டுதல்

கள் தடைக்கு அரசு சொன்ன காரணம், அதுல கலப்படம் நடக்குதுன்னு. இன்னிக்கு எத்தனையோ விஷயங்கள்ல முன்னுதாரண மான மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கு. இப்படியிருக்கும்போது கலப்படம் இல்லாத கள் உற்பத்தியை அரசால கண்காணிக்க முடியாதா? வருவாய் இல்லாததால நம்மளோட மாநில மரம் இன்னிக்கு அழிஞ்சுகிட்டிருக்கு. பனை பாதுகாப்பு இயக்கங் களோட சேர்ந்து சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடற்கரை யோரங்கள்ல பனை நடுற பணியில என்னையும் இணைச்சுக்கிட்டேன்.

பனை மரங்களுக்கும், மரமேறிகளின் வாழ்வாதாரத்துக்கும் ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. அப்பதான் இந்த 300 பனை மரங்களைக் குத்தகைக்கு எடுத்தேன். பதநீருக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கு. அதனால பதநீர் இறக்கலாம்னு முடிவு பண்ணிணேன். இத்தனைக்கும் நான் பனையேறும் சமூகத்தைச் சேர்ந்தவன் கிடையாது” என்றவர், தொடக்கத்தில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்துப் பேசினார்.

பதநீர் இறக்குதல்
பதநீர் இறக்குதல்

“இந்த வருஷம் ஜனவரியிலதான் குத்தகைக்கு எடுத்தேன். பனையேறியும் நண்பருமான மார்க்தான் முதல்ல வந்தாரு. மார்ச் 15-ம் தேதியிலிருந்து ஜூன் 15-ம் தேதி வரைக்குமான 3 மாசம்தான் பதநீருக்கான ‘சீஸன்.’ இந்த 3 மாசத்துல பதநீர் இறக்குறதுக் கான என்னென்ன தேவைகள் இருக்கோ அதையெல்லாம் செய்ய ஆரம்பிச்சோம். இப்போதான் இன்னும் இரண்டு பனையேறிகள் வந்தாங்க. பதநீர் இறக்கி வைக்கவும், இளைப்பாறவும் ஓலைக் கொட்டகை போட்டிருக்கேன். பதநீரைப் பதப்படுத்தி வைக்குறதுக்காக ‘ஃப்ரீசர்’ வாங்கியிருக்கேன். இந்தப் பனைமரங் களுக்கான ஓராண்டு குத்தகை, பனையேறி களோட சம்பளம்னு இதுவரைக்கும் மூன்றரை லட்சம் ரூபாய்க்கும் மேல செலவாகியிருக்கு. மார்ச் மாசம் 300 மரங்கள் இருக்கத் தோப்புல 3 பேர் ஏறினா சராசரியா 100 - 150 லிட்டர் பதநீர் கிடைக்கணும். ஆனா இந்த முறை 80 லிட்டர்தான் கிடைச்சது. அதுல 10 லிட்டர் சுண்ணாம்புல போய்டும். ஆக 70 லிட்டர் பதநீர்தான் கிடைச்சது.

பதநீர் இறக்குதல்
பதநீர் இறக்குதல்
பதநீர் இறக்குதல்
பதநீர் இறக்குதல்

மார்ச் மாசத்துல பனி இருந்ததால உற்பத்தி குறைஞ்சிடுச்சு. ஏப்ரல் - மே இந்த ரெண்டு மாசங்கள்லதான் பதநீர் வரத்து நல்லா இருக்கும். மே மாசம் உச்சத்துல இருக்கும்ங்கிற நம்பிக்கை இருக்கு. மூன்றரை லட்சத்துக்கு மேல செலவு பண்ணி இதுவரைக்கும் 80,000 ரூபாய்தான் எடுத்திருக்கேன். இந்த மாசமும் அடுத்த மாசமும் வர்ற பதநீர்ல போட்ட முதலை எடுக்கிறதோடு கணிசமான லாபமும் பார்த்துடுவேன்” என்றவர், பதநீர் கேட்டு வந்த வாடிக்கையாளருக்குக் கொடுத்து விட்டு வந்து பேச்சைத் தொடர்ந்தார்.

பதநீர் இறக்குதல்
பதநீர் இறக்குதல்

“பதநீரை நேரடியா எங்க இடத்துக்கே வந்து வாங்கிட்டுப் போறவங்களுக்கு லிட்டர் 120 ரூபாய்க்கு விற்கிறோம். குன்றத்தூரை சுத்தியிருக்கிற பகுதிகளுக்கு ‘டோர் டெலிவரி’ பண்றோம். அதுக்குத் தனிக் கட்டணம். விற்பனைக்காகச் சில கடைகளுக்கும் பதநீர் தர்றோம். இப்படித் தினசரி இறக்குற பதநீருக்கான தேவை இருக்கு. அது போக எஞ்சுறது ரொம்பவும் குறைவுதான். அப்படி எஞ்சுற பதநீரைக் காய்ச்சி கருப்பட்டியாக்க பெரிய வாணலி, அடுப்பு தயார் பண்ணி வெச்சிருக்கேன்” என்றவர், தனது பனை இல்லத்தில் பனை சார் தொழிற்பயிற்சிகளையும் வழங்குவதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

பனைமரம் ஏறுபவர்களுடன் விஸ்வநாதன்
பனைமரம் ஏறுபவர்களுடன் விஸ்வநாதன்

“தனியார் நிறுவனத்துல வேலைபார்த்துச் சம்பாதிக்கிறேன். இந்தப் பனந்தோப்பை குத்தகைக்கு எடுத்ததுக்கான நோக்கம் வருவாய் ஈட்டலாம்ங்கிறதைத் தாண்டியும் பனையேறி களோட வாழ்வாதாரத்துக்காக ஏதாவது செய்யணும்ங்கிறதுதான். மரமேற விரும்புற வங்களுக்கு இங்க பயிற்சி கொடுக்கிறோம். பனை ஓலையை வெச்சுக் கூடை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்குற பயிற்சி, பனங்கிழங்கிலிருந்து ‘மில்க்‌ஷேக்’, ‘ஜாம்’, பனம்பழத்திலிருந்து ‘மில்க்‌ஷேக்’, அல்வா, பதநீரிலிருந்து கொழுக்கட்டை, பொங்கல்னு பனைமரம் சார்ந்த மதிப்புக்கூட்டு பயிற்சிகளை அளிக்கிற இடமாகவும் இதை மாத்தணும்ங்கிறதுதான் என்னோட குறிக்கோள்” என்று சொல்லி விடைக்கொடுத்தார் விஸ்வநாதன்.

தொடர்புக்கு, விஸ்வநாதன்,

செல்போன்: 98849 48045.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism