Published:Updated:

பைசா செலவில்லாத பனங்கிழங்குச் சாகுபடி!

 பால்தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
பால்தங்கம்

மகசூல்

ச்சி முதல் வேர்வரை அனைத்து பாகங்களும் பலன் தரக்கூடியவை என்பதால்தான், பனை மரத்தை ‘பூலோகத்தின் கல்பதரு’ என்கிறார்கள் மக்கள். தமிழர்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது பனை. தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பரவலாகவும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் அதிக அளவு பனை மரங்கள் உள்ளன. `ஒரு பனையிலிருந்து 70 வகையான பொருள்கள் கிடைக்கின்றன’ என்கிறது ஓர் ஆய்வு. தைப்பொங்கல் என்றாலே கரும்பும் பனங்கிழங்கும்தான் நினைவுக்கு வரும்.

 பனங்கிழங்கு அறுவடை
பனங்கிழங்கு அறுவடை

பனைமரத்திலிருந்து பழுத்துக் கீழே விழும் பனம் பழங்கள் சேகரிக்கப்பட்டு, விதைகள் மண்ணில் அடுக்காக அடுக்கி வைக்கப்பட்டு பனங்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கரிசல் மண், செம்மண் ஆகிய இரு மண்ணிலும் இந்தக் கிழங்கு வளரும். இவற்றில் செம்மண்ணில் விளையும் கிழங்குக்குத் தனிச்சுவை உண்டு. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை வேம்பார், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் பனங்கிழங்கு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள வள்ளிவிளையில் செம்மண் கிழங்குச் சாகுபடி செய்துவருகிறார் பால்தங்கம் என்ற பெண்மணி. பனங்கிழங்கு அறுவடைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பனங்கிழங்குகளை அடுக்கி வைத்தபடியே நம்மிடம் பேசத் தொடங்கினார், “எனக்குச் சொந்த ஊர் இந்த வள்ளிவிளை கிராமம்தான். இந்தப் பகுதி முழுக்க வாழை விவசாயம்தான். என் கணவர் நாலு ஏக்கர்ல ஏத்தன், நாடன், கற்பூரவள்ளி ரக வாழைகளை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கார். விவசாய நிலத்துக்குள்ளயும், வேலி ஓரங்கள்லயும் நிறைய பனைமரங்கள் இருக்கு.

 பால்தங்கம்
பால்தங்கம்

இந்தப் பனைகளிலிருந்து பதநீர் இறக்குறதில்லை. ஆனா, ஒவ்வொரு வருஷமும் கீழே விழும் பனம்பழங்களைச் சேகரிச்சு பனங்கிழங்கு விதைப்பு செய்வோம். இதுல தண்ணி தெளிக்கிறது மட்டும்தான் வேலை. மத்தபடி எந்தப் பராமரிப்பும் தேவையில்லை” என்றவர் பனங்கிழங்குச் சாகுபடி பாடம் எடுத்தார்.

பனங்கிழங்கு விதைப்பு இப்படித்தான்“ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கும் பழங்களைச் சேகரித்து நிழலான பகுதியில் குவித்துவைக்க வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதை நடவு செய்தால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும். தரைக்குக் கீழ் கால் அடி முதல் அரையடி ஆழத்தில் குழி தோண்டி விதைகளை அடுக்கலாம். இந்த முறையில் கிழங்குகளைப் பிடுங்கி எடுப்பதில் சிரமம் இருந்தாலும் பெரும்பாலானோர் இந்த முறையைத்தான் பின்பற்றி வருகின்றனர்.

இதைத்தவிர்த்து இன்னொரு முறையும் இருக்கிறது அதுதான் மேட்டுப்பாத்தி முறை. 10 அடி நீளம், சுமார் 5 அடி அகலம், ஒரு அடி உயரத்தில் பாத்தி அமைக்க வேண்டும். பாத்தியின் மீது மட்கிய தொழுவுரத்தைப் பரவலாகத் தூவலாம். இதனால், கிழங்குகளின் பருமன் அதிகரிக்கும்.

 பனங்கொட்டை -  பாத்தியில் அடுக்குதல்.... -  முளைத்து நிற்கும் கிழங்கு -  பனம் பழம்
பனங்கொட்டை - பாத்தியில் அடுக்குதல்.... - முளைத்து நிற்கும் கிழங்கு - பனம் பழம்

பாத்தியின் மீது விதைகளை நெருக்கமாக அடுக்க வேண்டும். இதன்மேல் இன்னொரு அடுக்கும் அடுக்கலாம். கூடுதலாக அடுக்குவதால் இரண்டு பாத்திக்குச் செலவாகும் தண்ணீர் மிச்சமாவதுடன், கிழங்கு அறுவடையின்போது ஆழமாகத் தோண்ட வேண்டியதில்லை. குறைந்தபட்சம் ஒரு அடி உயரத்தில் பாத்தி அமைத்தால்தான் கிழங்கு ஆழமாக வேரூன்றி வளரும். அறுவடையின்போது பிடுங்கி எடுக்கவும் சுலபமாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விதை ஊன்றும் அன்று பழங்களின் சதைப் பகுதியை கையால் பிதுக்கி விதைகளைத் தனித்தனியே எடுத்துவிட வேண்டும். பனம்பழங்களில் குறைந்தபட்சம் ஒரு விதையும், அதிகபட்சமாக மூன்று விதைகளும் இருக்கும். இதில் வண்டு துளைத்த கொட்டைகள், மிகச் சிறிய கொட்டைகள் எனச் சேதாரமான கொட்டைகளைக் கழித்துவிட வேண்டும். பாத்தியின்மீது ‘கண் பாகம்’ கீழ்நோக்கி இருக்கும்படி நெருக்கமாக அடுக்க வேண்டும். அடுக்கிய பிறகு அதன்மீது லேசாக மண்தூவி, பாத்தி ஓரங்களில் மண் அணைத்துவிட்டு, பாத்தி முழுவதும் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றும்போது மேலுள்ள மணல், இரண்டு அடுக்குப் பனை விதைகளின் இடுக்குகளில் சென்று சேரும். மேற்பகுதியில் மண் குறையும். மண்ணைத் தூவி மீண்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு நாள் இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் தெளித்துவர வேண்டும். அதற்குப் பிறகு ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் தெளிக்கலாம். பாத்திகளின் மீது பனை ஓலைகளை மூடாக்காகப் பயன்படுத்தினால், நீர் ஆவியாவது தடுக்கப்படும். கோழிகளும் பாத்திகளைக் கிளறாது.

20-ம் நாளுக்கு மேல் முளைக்கத் தொடங்கும். 40-ம் நாளுக்கு மேல் வேர்பிடித்து வளரும். இதன் வேர்ப் பகுதி, மாவுப் பொருளைச் சேகரித்துக் கிழங்காகிறது. 60-ம் நாளுக்கு மேல் கிழங்கு பருமனாகத் தொடங்கும். 90 முதல் 110-ம் நாளுக்குள் அறுவடை செய்யலாம்.

90-ம் நாளுக்கு மேல் பாத்திகளின் மேல் பகுதியில் ஆங்காங்கே வெடிப்பு காணப்படும். அப்போது ஒரு கிழங்கைத் தோண்டிப் பார்த்தால், தோல் வெடித்த நிலையில் காணப்படும். அதிகபட்சமாக 120-ம் நாளுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். அதற்குமேல் சென்றால், கிழங்கிலிருந்து பச்சை நிறத்தில் ‘பீலி’ வெளிப்படும். இதனால் கிழங்கு சுவையாக இருக்காது. 140-ம் நாளுக்கு மேல் சென்றுவிட்டால், கிழங்கு தன் பதத்தை இழந்து, சுருங்கி பீலி நீண்டு இளம் குருத்துப் பனையாக வளர ஆரம்பித்துவிடும்.

இதில் வேறெந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. கிழங்குகளைப் பறித்த பிறகு தொங்கும் கொட்டையை வெட்டிவிட வேண்டும். இதற்குள் வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்று தவின் இருக்கும். இனிப்புச் சுவையுடன் இருக்கும் இந்தத் தவினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஆசைப்படுவார்கள். இந்தத் தவினை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனையும் செய்கிறார்கள்” என்றவர் நிறைவாக வருமானம் குறித்துப் பேசினார்.

ஒரு கிழங்கு 4 ரூபாய்க்கு விற்பனையாகுது. அந்தக் கணக்கில 18,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். முற்காலத்தில் கடலுக்குள் நாள் கணக்கில் தங்கி மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், கருப்பட்டியையும் பனங்கிழங்கையும் உணவுக்காகக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

“ஒரு பாத்தியில் 500 பனங்கொட்டைகள்னு 10 பாத்திகள்ல 5,000 கொட்டைகளை ஊன்றினேன். இதில் வளர்ச்சியில்லாத கிழங்குகள், அரைகுறையாக வளர்ந்த கிழங்குகள்னு 500 கிழங்குகள்வரை போயிடும். 4,500 கிழங்குகள் கிடைக்கும். ஒரு கிழங்கு 4 ரூபாய்க்கு விற்பனையாகுது. அந்தக் கணக்குல 18,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதுல பனைவிதைச் சேகரிப்பு, பறிப்புக்கூலிக்கு 2,000 ரூபாய் செலவாகும். அதைக் கழிச்சிட்டா மிச்சமிருக்கிற 16,000 ரூபாய் வருமானம்தான். கிழங்கு பிரிச்செடுத்த கொட்டையிலிருந்து பிரிக்கும் தவினை சொந்தக்காரர்களுக்குக் கொடுத்திடுவோம். வெட்டப்பட்ட கொட்டையை அடுப்பெரிக்கப் பயன்படுத்திக்குவோம்” என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,

பால்தங்கம்,

செல்போன்: 95438 44600.

மருந்தாகும் பனங்கிழங்கு!

பனங்கிழங்கின் மருத்துவ குணம் குறித்த திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவிடம் பேசினோம், “பனங்கிழங்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள். அதிக நார்ச்சத்து உள்ளதால், இது சிறந்த மலமிளக்கி. வாத நோய்களைக்கூடக் குணமாக்கும் தன்மை உண்டு. கிழங்குகளில் பனங்கிழங்கும் கருணைக்கிழங்கும் மட்டுமே வாயுவை உருவாக்காதவை. முற்காலத்தில் ‘தங்குகடல்’ எனச் சொல்லப்படும் கடலுக்குள் மீன் பிடிக்க நாள் கணக்கில் செல்லும் மீனவர்கள், கருப்பட்டியையும் பனங்கிழங்கையும் உணவுக்காகக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

தமிழகத்தில் வட மாவட்டங்களில் இந்தக் கிழங்கைத் தீயில் சுட்டும், தென் மாவட்டங்களில் அவித்தும் சாப்பிடுகிறார்கள். அவித்த கிழங்குகளை நெடுக்குவாட்டில் இரண்டாக வெட்டி நிழலில் இரண்டு நாள் காயவைத்தால் கடினமாகிவிடும். இதை ‘ஒடியல்’ என்பார்கள்.

இதை ஒடித்து, துண்டுகளாக்கி, இடித்து மாவாக்கினால் கிடைக்கும் பனங்கிழங்கு மாவுடன் மிளகு, பனங்கற்கண்டு கலந்து உருண்டை பிடித்தும் சாப்பிடலாம். இதே மாவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, உளுந்து, உப்பு சேர்த்து ‘உப்புமா’வாகவும், அடை தோசையாகவும் சாப்பிடலாம். பனங்கொட்டைக்குள் இருக்கும் தவின் வயிற்றுப்புண், வயிற்றுவலி, ஒற்றைத்தலைவலியைக் குணமாக்கும்” என்றார்.

வேலையே இல்லாமல் வருமானம்!

பனங்கிழங்குச் சாகுபடி
பனங்கிழங்குச் சாகுபடி

தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் அரியநாராயணபுரத்தைச் சேர்ந்த இளம் விவசாயி அகஸ்டின், “நான் பி.பி.ஏ படிச்சிருக்கேன். படிச்சு முடிச்சதும் விவசாயத்துல இறங்கிட்டேன். தாத்தா பனைத்தொழில் பண்ணிட்டிருந்தாங்க. அதுக்கப்புறம் அப்பா விவசாயம் பண்ண ஆரம்பிச்சாங்க, இப்போ அப்பாவோடு சேர்ந்து நானும் விவசாயம் பண்ணிட்டிருக்கேன். மொத்தம் நாலரை ஏக்கர் நிலம் இருக்கு. ரெண்டரை ஏக்கர்ல அரை ஏக்கர் மா, பனங்கிழங்குகள் பயிரிட்டுருக்கோம். ரெண்டு ஏக்கர் நிலத்துல சுழற்சி முறையில் நெல், வாழைச் சாகுபடி செய்யறோம். எங்க நிலத்துல 80 பனை மரங்கள் இருக்கு. பனை மரங்களை வேலிப்பயிராகப் பயன்படுத்துறோம். இதுல கிடைக்கும் பனம் பழங்கள் மூலமா 12,000 கிழங்குகள் வரை சாகுபடி செய்யலாம். ஆனா நாங்க, 4,000 கிழங்குகள்தான் சாகுபடி செய்யறோம். கழிவுகள் போக 3,800 கிழங்குகள் வரை கிடைக்கும். ஒரு கிழங்கு 4 ரூபாய் வரை விலை போகும். செலவெல்லாம் போக, 10,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். எந்த முதலீடும் இல்லாம பகுதி நேர வேலையாக செய்யறதால இது எங்களுக்கு நல்ல லாபம்தான்” என்றார் மகிழ்ச்சியுடன்.

அகஸ்டின், செல்போன்: 99436 11272

- மு.செல்வம்