Published:Updated:

கார் வாங்கிய வெங்காய விவசாயி... பஞ்சகவ்யா கொடுத்த பரிசு!

 டாக்டர் கே.நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் கே.நடராஜன்

நிகழ்ச்சி

பசுமை விகடன் சார்பில் ஆகஸ்ட் 6-ம் தேதி, ‘விளைச்சலைக் கூட்டும் சூத்திரம் பஞ்சகவ்யா: தயாரிப்பு முதல் பயன்பாடுவரை’ நேரலைப் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர் கே.நடராஜன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“1998-ம் ஆண்டு மகாசிவராத்திரி அன்று கொடுமுடி ஈஸ்வரன் கோயிலுக்குப் போயிருந்தேன். அங்கே கோயில் குருக்கள் பஞ்சகவ்ய பிரசாதம் கொடுத்தார். அப்போது நடந்த உரையாடலில் உதயமானது பஞ்சகவ்யா தயாரிப்பு எண்ணம்’’ என்றவர் பஞ்சகவ்யா தயாரிப்பில் தனது அனுபவங்களை விளக்கினார்.

“சுமார் 20 லிட்டர் பஞ்சகவ்யா தயார் செய்ய, சாணம் 5 கிலோ, மாட்டுச் சிறுநீர் 3 லிட்டர், பால் 2 லிட்டர் (காய்ச்சி ஆற வைத்தது), தயிர் 2 லிட்டர், அரைக்கிலோ நெய், சர்க்கரை கரைசல் (1 கிலோ சர்க்கரை-3 லிட்டர் தண்ணீர்) 1 லிட்டர், 3 லிட்டர் இளநீர், 10 கனிந்த வாழைப்பழங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். சாணியையும், நெய்யையும் பிசைந்து 3 நாள்கள்வரை வைத்திருக்க வேண்டும். 4-ம் நாளில் எல்லாவற்றையும் ஒன்றாகப் பிளாஸ்டிக் டிரம்மில் போட்டுக் கலக்கிவிடலாம். தினமும் 2 வேளை கலக்கி விட வேண்டும். அடுத்த 18-ம் நாளில் பஞ்சகவ்யா தயாராகிவிடும். பஞ்சகவ்யா தயாராகும் காலகட்டத்தில் கொசுவலை அல்லது துணியைப் போட்டு டிரம்மை மூடி வைக்க வேண்டும்’’ எனத் தயாரிப்பு முறையை விளக்கினார்.

“பஞ்சகவ்யாவை விதைநேர்த்தி, தெளிப்பு, பாசன வாய்க்கால் எனப் பல வழிகளிலும் பயிருக்கு விடலாம். 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்கலாம். மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போகும் இடங்களெல்லாம் பஞ்சகவ்யாவைப் பரப்பினார். பஞ்சகவ்யாவைக் கால்நடைகளுக்குக் கொடுப்பதால், செரிமானக் கோளாறுகள், தோல் நோய்கள், எடை கூடுதல் எனப் பல பயன்களைப் பஞ்சகவ்யா கொடுக்கிறது.

 டாக்டர் கே.நடராஜன்
டாக்டர் கே.நடராஜன்

ஒரு முறை தாராபுரம் பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் புதிய கார் எடுத்துக்கொண்டு, என்னைப் பார்க்க வந்தார். மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, ‘இந்த கார் வாங்குவதற்கு, நீங்கள் கண்டுபிடித்த பஞ்சகவ்யாதான் காரணம். இந்த ஆண்டு சின்ன வெங்காய சாகுபடியின்போது பஞ்சகவ்யா தெளித்தேன். வழக்கத்தைவிட கூடுதலான மகசூல். அந்த பணத்தில்தான் புதிய கார் வாங்கினேன். வாங்கியவுடன், உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன்’ என நெகிழ்ச்சியாகச் சொன்னார். இப்படி நிறைய வெற்றி கதைகள் உள்ளன” என்ற நடராஜன், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, கத்தார் , மலேசியா... போன்ற நாடுகளிலிருந்தும் வாசகர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

தொடர்புக்கு, டாக்டர் கே.நடராஜன், செல்போன்: 94433 58379.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஜீவாமிர்தம் சிறந்ததா, பஞ்சகவ்யா சிறந்ததா?’’

“ஜீவாமிர்தம் சிறந்ததா, பஞ்சகவ்யா சிறந்ததா?’’

‘‘ இரண்டின் தரத்தையும் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தினால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்’’

‘‘அமெரிக்காவில் உள்ளோம். இங்கு ஜெர்ஸி மாடுகள்தான் உள்ளன. இதன் பொருள்களை வைத்து பஞ்சகவ்யா தயார் செய்யலாமா?’’

‘‘நிச்சயமாகச் செய்யலாம். ஆனால், நம் நாட்டு மாடுகளில் கிடைக்கும் பலனில் 30 சதவிகிதம் குறைவாகக் கிடைக்கும்.’’

‘‘பஞ்சகவ்யாவை எத்தனை மாதங்களுக்குச் சேமித்து வைக்கலாம்?’’

‘‘தயார் செய்தவுடன் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை சேமித்துப் பயன்படுத்தலாம்.’’

‘‘நெல் வயலில் வறட்சி ஏற்படும்போது பஞ்சகவ்யா தெளிக்கலாமா?’’

‘‘பஞ்சகவ்யாவைத் தெளித்துக் காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பஞ்சத்திலும் பாதி வெள்ளாமை வீடு வந்து சேரும். இவ்வளவு சிறப்புகள் உள்ளதால், ஆரம்பத்தில் பஞ்சகவ்யாவைப் புறக்கணித்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இன்று பஞ்சகவ்யா தயாரித்து விவசாயிகளுக்குச் சலுகை விலையில் விற்பனை செய்கிறது. மாணவர்களுக்கும் பஞ்சகவ்யா தயாரிப்பு முறையைக் கற்றுக்கொடுக்கிறது. அதன் தொடர்ச்சியாக வளம் குன்றா அங்கக வேளாண் துறை என்கிற தனித்துறையும் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலும் பஞ்சகவ்யாவைச் சேர்த்துள்ளார்கள்.’’