Published:Updated:

மாதம் ரூ. 40,000... பப்பாளி கொடுக்கும் பலே வருமானம்!

ரெட்லேடி பப்பாளித் தோட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெட்லேடி பப்பாளித் தோட்டம்

மகசூல்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை பிரிவில் சுமார் 2 ஏக்கர் 20 சென்ட் நிலத்தில் பப்பாளிச் சாகுபடி செய்துள்ளார் பங்களாப்பட்டியைச் சேர்ந்த ரவி. பப்பாளியோடு கொய்யா, தென்னையும் ஊடுபயிராகப் பயிரிட்டுள்ளார். இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வத்தில், இன்று பப்பாளியில் நல்ல லாபம் பார்த்துவருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.
மாதம் ரூ. 40,000... பப்பாளி கொடுக்கும் பலே வருமானம்!

“பெங்களூரில் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தேன். வேலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லைங்கிறதால, விவசாயம் செய்யலாமென நினைச்சேன். அதுக்காகச் சொந்த ஊர்ல 4 ஏக்கர் நிலம் வாங்கினேன். முழுக்க இயற்கை முறையில விவசாயம் செய்யணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. அதனால, அதுக்கான தேடல்ல இறங்குனேன். பிறகு, முதல்கட்டமா 2.20 ஏக்கர் நிலத்தில போன டிசம்பர் முதல் வாரத்துல பப்பாளி நட்டேன். 2,000 ரெட்லேடி ரகப் பப்பாளிக் கன்றுகளை வாங்கிக்கிட்டு வந்து 7 அடி இடைவெளியில நடவு செஞ்சேன். அதே நிலத்துல தென்னை, கொய்யாவையும் ஊடுபயிரா நடவு செஞ்சேன். யாழ்ப்பாண ரகத் தென்னையை 20 அடி இடைவெளியில 200 கன்றுகளையும், 12 அடி இடைவெளியில கிருஷ்ணகிரி சிவப்புக்கொய்யா 1,200 கன்றுகளையும் நடவு செஞ்சிருக்கேன்’’ என்றவர், ‘‘இங்க மோட்டார் மூலமா கிணற்றுல தண்ணீர் எடுத்து வாய்க்கால்ல மூலமாத்தான் பாசனம் செய்றேன். நடவு செஞ்சு 5 மாசம் ஆச்சு. ஒரு தடவை அறுவடை செய்திருக்கேன். 2.20 ஏக்கருக்கு மொத்தம் 2 டன் பழங்கள் கிடைச்சது. வழக்கமா கிலோ 20 ரூபாய் போகும். கொரோனா ஊரடங்குனால விலை கிடைக்கலை. கிலோ 10 முதல் 14 ரூபாய் வரைதான் விலை கிடைச்சது. ‘இது களிமண் கலந்த நிலம். வாழையைத் தவிர எது போட்டாலும் லாபம் வராது’னு சொன்னாங்க. ஆனா, எனக்குப் பப்பாளி நடவு செய்யணும்னு ஆசை. என்ன ஆனாலும் பரவாயில்லை, பப்பாளிதான் நடவு செய்யணும்னு உறுதியா இருந்தேன். உடனே, ‘ரசாயன உரம் போட்டால்தான் விளைச்சல் இருக்கும்’னு பயமுறுத்துனாங்க. அதையும் பார்த்துவிடுவோம்னு முழுக்க இயற்கை உரம் போட்டு வளர்த்து மகசூலும் எடுத்துட்டேன்” எனப் பெருமையாகச் சொன்னார்.

தொடர்ந்து தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டவர், “பப்பாளிச் சாகுபடி செஞ்சிருக்கிற சில விவசாயிககிட்ட பேசினேன். அவங்க எல்லோரும் ‘ரெட்லேடி ரகம்தான் அதிக மகசூல் கொடுக்கும்’னு சொன்னாங்க. ‘பழம் பெருசாகவும் எடை அதிகமாகவும் இருக்கும்; சுவையும் நன்றாக இருக்கும்’னு சொன்னாங்க. அதனாலதான் நானும் ரெட்லேடியைத் தேர்வு செஞ்சேன். அடிப்படையில எனக்கு இயற்கை விவசாயம் பற்றி எதுவுமே தெரியாது. முருகன் என்பவர்தான் எனக்கு முழுக்க ஆலோசனை சொன்னார். அவர் நேரடியா நிலத்துக்கு வந்து, பஞ்சகவ்யா, மீன் அமிலம் உட்பட இயற்கை விவசாயத்துக்குத் தேவையான இடுபொருள்கள் தயாரிப்பு முறைகளைச் சொல்லிக்கொடுத்தார். என்கிட்ட நாட்டு மாடுகள் இல்லை. அதனால சாணம், கோமியத்தை வெளியிலிருந்துதான் வாங்குறேன்’’ என்றவர் ரெட்லேடி சாகுபடி மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“சாகுபடி நிலத்தை நன்றாக உழவு செய்து தயார் செய்துகொள்ள வேண்டும். பிறகு, 7 அடி இடைவெளியில் 1 அடி அகலம், 2 அடி ஆழத்தில் குழியெடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஊட்டமேற்றிய தொழுவுரம் அரைக்கிலோ கொட்டி, கன்றுகளை நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து தேவையான அளவுக்கு மட்டும் பாசனம் செய்ய வேண்டும்.

ரெட்லேடி பப்பாளித் தோட்டம்
ரெட்லேடி பப்பாளித் தோட்டம்

கன்று நடவு செய்ததிலிருந்து 30-ம் நாள், செடி நன்கு வேர் பிடிக்க உதவியாக, தலா 1 கிலோ சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு செடிக்கு ஒரு லிட்டர் வீதம் செடியின் அடிப்பகுதியில் ஊற்ற வேண்டும். எத்தனை செடிகள் இருக்கிறதோ, அதற்கு ஏற்ப இந்தக் கரைசலைத் தயார் செய்துகொள்ள வேண்டும். 45-ம் நாள், 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கரைசலை ஒரு செடிக்கு 3 லிட்டர் வீதம் ஊற்ற வேண்டும். 60-ம் நாள் மேலே சொன்ன அதே அளவு தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமிலத்தைக் கலந்துகொள்ள வேண்டும். அதைச் செடிக்கு ஒரு லிட்டர் ஊற்ற வேண்டும். செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். தொடர்ந்து, ஆட்டுப்புழுக்கையுடன் கலந்த கம்போஸ்ட் உரத்தைச் செடிக்கு அரைக்கிலோ கொடுக்க வேண்டும்.

பப்பாளித் தோட்டத்தில் ரவி
பப்பாளித் தோட்டத்தில் ரவி

70 நாள்களுக்கு மேல் சில பகுதிகளில் மாவுப்பூச்சிகள் தாக்குதல் இருக்கும். அப்போது பிரம்மாஸ்திர கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். அதில் சிறிது கட்டுப்படும். தொடர்ந்து, தண்ணீரை வைத்து அடித்து இலைகளைக் கழுவிவிட வேண்டும். ஒரு வார இடைவெளியில் மீண்டும் பிரம்மாஸ்திரம் தெளிக்க வேண்டும். அப்போதும் மாவுப்பூச்சி இருந்தால், சுண்ணாம்பு கப்பியைத் தண்ணீரில் கரைத்துத் தெளித்தால் போதும். அதன் பிறகு மாவுப்பூச்சி தாக்குதல் இருக்காது. அடுத்த 85-ம் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கொடுக்க வேண்டும். 5-ம் மாத தொடக்கத்தில், நுண்ணூட்டச் சத்துகளுக்காக, நுண்ணூட்டக் கரைசலைக் கொடுக்க வேண்டும். 200 லிட்டர் தண்ணீரில் 40 லிட்டர் கரைசல் அதாவது, 5 மடங்கு தண்ணீரில் 1 மடங்கு நுண்ணூட்டக் கரைசலைக் கலந்துகொள்ள வேண்டும். அந்தக் கரைசலைப் பாசன நீரில் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து விட வேண்டும்’’ என்றவர், நிறைவாக,

பப்பாளி
பப்பாளி

வாரம் ஒரு டன்

‘‘இதுவரை மூன்று முறை களை எடுத்துள்ளேன். அவ்வளவுதான் நான் செய்தது. இனி பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. 15 நாள்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தமும் பஞ்சகவ்யாவும் சுழற்சி முறையில் கொடுக்கலாம். அதுவும் தேவைப்படாது என்றே நினைக்கிறேன். இதனால், தென்னங்கன்றிலும் பூச்சித் தாக்குதல் இல்லை. கொய்யாவும் நன்கு வளர்ந்து வருகிறது. இந்த 2 ஏக்கர் 20 சென்ட் நிலத்தில் இதுவரை 65,000 ரூபாய் செலவு செய்திருக்கிறேன். இனி பெரிதாகச் செலவு இருக்காது. நான் செலவு செய்த அனைத்தும் பப்பாளிக்கு மட்டுமல்ல, கொய்யா மற்றும் தென்னைக்கும் சேர்த்துதான். அப்படிப்பார்த்தால் எனக்கு மும்மடங்கு லாபம். இப்போது ஒரு அறுவடையில் 2 டன் பப்பாளி மூலம் 20,000 ரூபாய் கிடைத்துள்ளது. இனி, வாரம் ஒருமுறை ஒரு டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். ஆறு மாசம் இதே அளவு மகசூல் கிடைக்கும். ஊரடங்கு முடிந்த பிறகு நல்ல விலை கிடைக்கும். இந்த விலைக்கே விற்றாலும் மாதம் 40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். 6 மாதத்தில் 2,40,000 ரூபாய் கிடைக்கும். அதில் செலவுத் தொகையாக ஒரு லட்ச ரூபாய் கழித்தாலும் 1,40,000 லாபமாகக் கையில் நிற்கும்’’ என்றார்.

பப்பாளியில் ஊடுபயிராகக் கொய்யா, தென்னை
பப்பாளியில் ஊடுபயிராகக் கொய்யா, தென்னை

தொடர்புக்கு, ரவி, செல்போன்: 93600 28170. முருகன், செல்போன்: 84389 46525..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நுண்ணூட்டக் கலவை!

200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டிரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், தலா 2 கிலோ தட்டைப்பயறு மாவு, பாசிப்பயறு மாவு, கொண்டைக்கடலை மாவு, கானப்பயறு மாவு, உளுந்து மாவு ஆகியவற்றைப் போட்டு, அவற்றோடு தலா 100 கிராம் இரும்பு ஆணி, காப்பர் கம்பி போட வேண்டும். பிறகு, கடலை, எள்ளு, கடுகு, இலுப்பை, சூரியகாந்தி ஆகிய ஐந்துவகைப் பிண்ணாக்குகளைத் தலா 2 கிலோ போட்டு, டிரம் நிறையும் வரை தண்ணீர் ஊற்றி 7 நாள்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு, அந்தக் கரைசலை வடிகட்டி எடுத்துக்கொண்டால் நுண்ணூட்டக் கரைசல் தயாராகிவிடும்.

இரண்டு டன் மகசூல்!

விக்குப் பயிற்சி அளித்த முருகனிடம் பேசினோம். “தேனி மாவட்டத்தில் இயற்கை விவசாய கள ஆய்வாளராக இருக்கிறேன். 15 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன். இதுவரை 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றியுள்ளேன். ரவி என்னைத் தொடர்புகொண்டு பேசினார். நிலத்தை வந்து பார்த்தேன். இயற்கை இடுபொருள்கள் செய்யக் கற்றுக்கொடுத்தேன். அனைத்தையும் நன்கு கற்றுக்கொண்டார். ரசாயன உரங்களில் மட்டுமே நல்ல விளைச்சலைக் கொடுக்கும் எனச் சொல்லப்படும் ரெட்லேடி ரகப் பப்பாளியை இயற்கை முறையில் சாகுபடி செய்து முதல் எடுப்பிலேயே 2 டன் பழங்கள் மகசூல் எடுத்திருக்கிறார். ஆரம்பத்திலேயே மண்ணுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் கொடுத்ததால், இனி பெரிதாக எந்தச் செலவும் இருக்காது. ரெட்லேடி ரகம் நல்ல பராமரிப்பில் 2 முதல் 4 வருடங்கள்வரை விளைச்சல் கொடுக்கக்கூடியது. வாராவாரம் நல்ல லாபம் கிடைக்கும். மாவுப்பூச்சிகள் வந்தன. அதையும் கட்டுப்படுத்திவிட்டார். வேற எந்தப் பூச்சித் தாக்குதலும் இல்லை’’ என்றார்.