நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஒரு ஏக்கர், 5 மாதங்கள், ரூ. 1,28,000 நிறைவான லாபம் தரும் பப்பாளி!

பப்பாளித் தோட்டத்தில் கார்த்திகை முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
பப்பாளித் தோட்டத்தில் கார்த்திகை முருகன்

மகசூல்

குறைவான பராமரிப்பு, குறைவான தண்ணீர், சந்தையில் அதிக தேவை போன்ற காரணங்களால் பப்பாளிச் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், இயற்கை முறையில் ரெட்லேடி ரகப் பப்பாளியைச் சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த கார்த்திகை முருகன்.

விருதுநகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சூலக்கரையில் இருக்கிறது கார்த்திகை முருகனின் தோட்டம். பப்பாளிப் பழங்களை அறுவடை செய்துகொண்டிருந்தவரைச் சந்தித்தோம். பப்பாளிப் பழத் துண்டுகளைச் சாப்பிடக் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார். ‘‘நாங்க விவசாயக் குடும்பம்தான். நெல், வாழை, கரும்பு, சேனைக்கிழங்கு, கத்திரிதான் எங்களோட முக்கியப் பயிர்கள். முழுக்கவும் ரசாயன விவசாயம்தான். சின்ன வயசுல இருந்தே அப்பாவுடன் விவசாய வேலைகளைச் செஞ்சேன். டிப்ளோமா இன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி முடிச்சுட்டு 5 வருஷம் டிரேடிங் பிசினஸ் செய்துகிட்டு இருந்தேன்.

பப்பாளித் தோட்டத்தில் கார்த்திகை முருகன்
பப்பாளித் தோட்டத்தில் கார்த்திகை முருகன்

அதுல பெரிய அளவுல வருமானம் இல்லாததுனால வேற ஏதாவது தொழில் செய்யலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். ‘சொந்தமா விவசாய நிலம் இருக்கும்போது எதுக்குப்பா தெரியாத தொழில்களைச் செய்யணும். பாரம்பர்யமா விவசாயம் செஞ்சுட்டு வந்த நிலம் தரிசாக் கிடக்கிறதைப் பார்க்கும் போதெல்லாம் மனசுக்குச் சங்கடமா இருக்கு. தெரிஞ்ச விவசாயத்தைச் செய்ப்பா”ன்னு எங்கப்பா நம்பிக்கை கொடுத்துகிட்டே இருந்தார்.

அப்பா சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன். அதுவும் சரிதான்னு தோணுச்சு. விவசாயம் குறைஞ்சு நிலம் தரிசாப் போனதுக்குக் காரணமே அப்பா காலத்துல ரசாயன உரத்தை அளவில்லாமப் பயன் படுத்தியதுதான். அதே விவசாயத்தைச் செய்ய எனக்கு விருப்பமில்ல. அந்த நேரத்துல நண்பர்கள் சிலர், இயற்கை விவசாயத்தைப் பத்திச் சொன்னாங்க. பசுமை விகடனையும் அறிமுகப்படுத்துனாங்க. ‘உன் தாத்தா காலத்துல தொழுவுரத்தை மட்டும்தான் விவசாயம் செய்ய பயன்படுத்திக்கிட்டு வந்தோம். காலப்போக்குல ஊரு முழுக்க விவசாயிங்க ரசாயன உரம் பயன்படுத்தினப்போ, நானும் ரசாயன உரத்துக்கு மாறிட்டேன்டா’னு அப்பாவும் சொன்னார்” என்றவர் பப்பாளிச் சாகுபடிக்கு வந்ததைப் பற்றிப் பேசினார்.

குறைவான பராமரிப்பு

“5 வருஷம் விவசாயமே செய்யாததுனால, சீமைக்கருவேலமரம் சூழ்ந்து நிலமே புதர் மண்டிக் கிடந்துச்சு. நிலத்தைச் சீர்படுத்தினேன். பல தானியங்களை விதைச்சு நிலத்தை வளமாக்கினேன். ஆரம்பத்துல கத்திரி, தக்காளி, புடலை, பீர்க்கு, வெண்பூசணியைச் சாகுபடி செஞ்சேன். இயற்கை முறையில விவசாயம் செய்யுற எங்க ஊரைச் சேர்ந்த சில விவசாயிகளோட தோட்டங்களைப் போய்ப் பார்த்தேன். சீனியாபுரத்தைச் சேர்ந்த அழகர்சாமிங்குற விவசாயி, ரெட்லேடி ரகப் பப்பாளியைச் சாகுபடி செய்திருந்தார். ‘பப்பாளி, நல்ல லாபம் தரக்கூடிய பயிர். குறைவான பராமரிப்பு, தொடர் பறிப்பு, சந்தையில எப்போதும் தேவையிருக்கும். காய்கறியுடன் பப்பாளியையும் சாகுபடி செஞ்சுப் பாருங்க’னு சொல்லி ஊக்கம் கொடுத்தார்.

பப்பாளித் தோட்டம்
பப்பாளித் தோட்டம்

அவர் சொன்ன மாதிரியே முதல்ல 50 சென்ட்ல ரெட்லேடி ரகப் பப்பாளியைச் சாகுபடி செஞ்சேன். கணிசமான வருமானம் கிடைச்சுது. தொடர்ந்து பப்பாளியைச் சாகுபடி செஞ்சுகிட்டு வர்றேன். இது மொத்தம் 5 ஏக்கர். கரிசல் மண் நிலம். ஒரு ஏக்கர் பப்பாளில 5 மாச அறுவடை முடிஞ்சிருக்கு. இன்னும் 5 மாச பறிப்பு இருக்கு. ஒரு ஏக்கர்ல லக்னோ-47 ரகக் கொய்யா நட்டு 3 மாசம் ஆச்சு. ஒரு ஏக்கர்ல கத்திரி பூத்து நிக்குது. ஒரு ஏக்கர்ல சுரை, பீர்க்கு, வெண்பூசணி, புடலைனு படர்கொடிகள் பறிப்புல இருக்கு. இது தவிர, தனியா ஒரு ஏக்கர்ல பப்பாளிக் கன்றுகள் நடவு செஞ்சு 2 மாசம் ஆகுது” என்றவர், வருமானம் குறித்துப் பேசினார்.

வாரம் ஒரு அறுவடை

‘‘சந்தையில நல்ல தேவை இருக்குங்கிறதுக்காக ஏக்கர் கணக்குல பப்பாளியை மட்டுமே சாகுபடி செஞ்சாலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கு. அதனாலதான், ஒரு ஏக்கர்ல மட்டும் சாகுபடி செஞ்சுகிட்டு வர்றேன். வாரம் ஒரு முறை அறுவடை செய்யுறேன். தேவையைப் பொறுத்து ரெண்டு தடவையும் பறிப்பேன். விருதுநகர், அருப்புக்கோட்டை சந்தையிலதான் பழங்களை விற்பனை செய்யுறேன். இயற்கை முறையில விளைவிக்கப் பட்ட பழம்ங்கிறதுனால கூடுதல் விலை யெல்லாம் இல்ல. நஞ்சில்லாத விளைபொருளை விற்குறோம்ங்கிற ஆத்ம திருப்தி மட்டும்தான்.

குறிப்பு: அடிப்படைச் செலவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அடுத்து 5 மாதங்களுக்கு எதிர்பார்க்கப்படும் வருமானம் ரூ.1,28,000.
குறிப்பு: அடிப்படைச் செலவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அடுத்து 5 மாதங்களுக்கு எதிர்பார்க்கப்படும் வருமானம் ரூ.1,28,000.

நாங்க விளைவிக்குற பப்பாளில இருக்கிற சுவைதான் கடைக்காரங்களை எங்கிட்ட தொடர்ந்து பழம் வாங்கத் தூண்டுது. சந்தையில என்னோட பப்பாளிக்கு நல்ல தேவையும் இருக்கு. வாரம்தோறும் 800 கிலோ வரைக்கும் பழம் பறிக்கிறேன். அந்தக் கணக்குல 5 மாசத்துக்கு 16,000 கிலோ கிடைச்சிருக்கு. ஒரு கிலோ 7 ரூபாய்ல இருந்து 10 ரூபாய் வரைக்கும் விலை போச்சு. குறைந்த பட்சம் 8 ரூபாய்னு வச்சுக்கிட்டாலும், ரூ.1,28,000 வரை வருமானம் கிடைச்சிருக்கு. இன்னும் அஞ்சு மாச பறிப்பு பாக்கி இருக்கு. இதுல, களையெடுப்பு, இடுபொருள் தெளிப்பு, தொழுவுரம், பறிப்புக்கூலி, அறுவடை, போக்குவரத்துன்னு மொத்தம் ரூ.1,00,000 வரை செலவாகும். செலவு போக மீதமுள்ள ரூ.28,000 நிகர லாபமா நின்னுருக்கு. அடுத்து அஞ்சு மாசத்துக்கு கிடைக்கிறது முழுக்க லாபம்தான்” என்று விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, கார்த்திகை முருகன், செல்போன்: 94884 08018.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ரு ஏக்கரில் ரெட்லேடி ரகப் பப்பாளி சாகுபடி செய்ய கார்த்திகை முருகன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

ரெட்லேடி ரகப் பப்பாளி சாகுபடிக்கு ஆடி, கார்த்திகைப் பட்டங்கள் சிறந்தவை. தேர்வு செய்த பட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே உழவு செய்ய வேண்டும். 10 நாள் இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவுக்குப் பிறகு, 8 டன் மக்கிய தொழுவுரத்தை நிலத்தில் பரவலாகத் தூவி உழவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 8 அடி, குழிக்குக் குழி 8 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். (இந்த இடைவெளிக் கணக்கில் ஒரு ஏக்கருக்கு 680 குழிகள்வரை எடுக்கலாம்) 15 நாள்கள் குழியை ஆறவிட்டு கன்றுகளை நடவு செய்யலாம்.

நடவுக்கு முன்பு, ஒரு குழிக்கு 2 கிலோ மண்புழு உரம் போட்டு, 4 லிட்டர் தண்ணீரில் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றில் தலா ஒரு கிராம் கலந்து குழிக்குள் தெளித்துவிட்டு நடவு செய்ய வேண்டும். இதனால், வேர் அழுகல் நோய் வராது. 50 முதல் 60 நாள்கள் ஆன கன்றுகள் நடவுக்கு ஏற்றவை. ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் தெளிக்கலாம். 15-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா, 10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி மீன் அமிலம் ஆகியவற்றைச் சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

கன்று நட்ட 20, 40 மற்றும் 60-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். 3-ம் மாதம் ஒரு குழிக்கு, 3 கிலோ தொழுவுரம், 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றுடன் தலா 2 கிராம் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்தும் வைக்கலாம். இவ்வாறு 3 மாதத்துக்கு ஒருமுறை அடியுரம் வைக்க வேண்டும். 6-ம் மாதத்தில் பூக்கள் தோன்றும். 7-ம் மாதம் பிஞ்சு பிடித்து, காய்க்கத் தொடங்கும். 8-ம் மாதத்திலிருந்து காய் பறிக்கத் தொடங்கலாம். 10-ம் மாதத்திலிருந்து மகசூல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். தொடர்ந்து 2 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம். பப்பாளியைப் பொறுத்தவரையில் மாவுப்பூச்சிகளின் தாக்குதல்தான் அதிகம் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, தண்ணீரைப் பீய்ச்சித் தெளித்தாலே போதும். மாவுப்பூச்சி தென்படுவதைக் கண்காணித்துத் தண்ணீரைத் தெளிக்கலாம்.

சில நேரங்களில் பப்பாளி இலைகளில் மஞ்சள் தேமல், இலைச்சுருட்டு நோய் ஏற்படலாம். இவற்றைக் கட்டுப்படுத்த மூலிகைக்கரைசலை கைத்தெளிப்பானால் தெளித்தாலே போதும். வேம்பு, ஆடாதொடை, எருக்கு, ஆடுதின்னாப்பாளை, துளசி, நொச்சி ஆகியவற்றில் தலா 2 கிலோவைச் சிறியதாக நறுக்கி 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் போட்டு 5 நாள்கள் வரை ஊறவைத்து வடிகட்டினால் மூலிகைக் கரைசல் தயார்.

பப்பாளிச் சாகுபடி நிலத்தைச் சுற்றி அகத்தியை நடவு செய்தால், அசுவினிப்பூச்சிகள், வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். இதனால், அகத்தியிலிருந்து தனி வருமானமும் கிடைக்கும். இதைத் தவிர வேறெந்த பராமரிப்பும் தேவையில்லை.