Published:Updated:

புரட்டாசிப் பட்டத்துக்கு ஏற்ற துவரை!

நீங்கள் கேட்டவை
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் கேட்டவை

நீங்கள் கேட்டவை

புரட்டாசிப் பட்டத்துக்கு ஏற்ற துவரை!

நீங்கள் கேட்டவை

Published:Updated:
நீங்கள் கேட்டவை
பிரீமியம் ஸ்டோரி
நீங்கள் கேட்டவை

‘‘புரட்டாசிப் பட்டத்துக்கு ஏற்ற துவரை ரகம் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் விளக்கமாகச் சொல்லுங்கள்?’’

கே.சுகுமார், ஓமலூர்.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பயறு வகை பயிர்கள் துறை விஞ்ஞானி பதில் சொல்கிறார். ‘‘பயறுவகைகளில் அவரைக் குடும்பத்தைச் சார்ந்த பயிர்கள் அதிக அளவு புரதச்சத்து மிகுந்தவை. பயறு வகைப் பயிர்களில் உள்ள புரதத்தின் அளவு, தானியப் பயிர்களின் புரதத்தை ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், பயறு வகைகளை உண்பதன் மூலம் தானியப் பயிர்கள் மட்டும் சாப்பிடுவதால் ஏற்படும் அமினோ அமிலக் குறைபாடுகளை நிவர்த்திச் செய்யலாம். தற்போது பயறு வகைகளைச் சாகுபடி செய்யும் பரப்பளவானது குறைந்துகொண்டே வருகிறது. அதனால், உற்பத்தித் திறனும் குறைகிறது. எனவே, நம் விவசாயிகள் பயறு வகைப்பயிர்களைச் சாகுபடி செய்ய முன்வர வேண்டும். பயறு வகைகளில் துவரை நல்ல விற்பனை வாய்ப்பு கொண்டது.

புரட்டாசிப் பட்டத்துக்கு ஏற்ற துவரை!

தமிழ்நாட்டில் ஆடி, புரட்டாசி மற்றும் தைப்பட்டத்தில் துவரை பயிரிடப் படுகிறது. இந்தப் பருவகாலங்களில் பயிர் செய்வதற்கு ஏற்ற குறுகியகால துவரை ரகம் கோ (ஆர்.ஜி)-7. இந்த ரகம் பி.பி-9825 மூலம் தனிவழித் தேர்வு மூலம் உருவாக்கப் பட்டது. 120 முதல் 130 நாள்கள் வயதுடைய இந்த ரகம் கோவை, சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, சிவகங்கை, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள மானாவாரி மற்றும் இறவை நிலங்களில் பயிரிட ஏற்றது. கோ-5 மற்றும் ஏ.பி.கே-1 ரகங்களைவிட 25 சதவிகிதம் அதிக விளைச்சல் தரவல்லது. இது அதிக புரதச்சத்து (23.5 சதவிகிதம்) கொண்டது. கருஞ்சிவப்பு நிற விதைகளுடன் இருக்கும் இதில் மலட்டுத் தேமல் நோய் மற்றும் காய் ஈ தாக்குதல் குறைவு. எல்லாப் பருவத்திற்கும் ஏற்றது. ஆடிப் பட்டம், புரட்டாசிப் பட்டம் மற்றும் தைப்பட்டங்கள் மிகவும் ஏற்றது. ஹெக்டேருக்கு 25 கிலோ விதை தேவைப்படும். பெரும்பாலும் துவரை மானாவாரியாகப் பயிரிடப்படுவதால் பாத்திகள் அமைத்துப் பயிரிடலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் டிரைக்கோடெர்மா விரிடியைக் கலந்து 24 மணி நேரம் கழித்து விதையுடன் 3 பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் உரத்தைக் கலந்து விதைநேர்த்தி செய்யலாம். இறவை நிலங்களில் விதைத்த 3-ம் நாளில், மொட்டு உருவாகும் தருணம், 50 சதவிகிதம் பூக்கும் தருணம், காய் வளர்ச்சியடையும் தருணங்களில் தண்ணீர் பாசனம் செய்ய வேண்டும்.

புரட்டாசிப் பட்டத்துக்கு ஏற்ற துவரை!

பயிர் பாதுகாப்பு என்று பார்த்தால், பச்சைக்காய்ப்புழுத் தாக்குதல் ஏற்படும். இதன் அறிகுறிகள் காய்களில் வட்ட வடிவ துளைகள் போடப்பட்டிருக்கும். காய்ப்புழுவின் வளர்ப் பருவங்களும் மொட்டு, பூ, காய், விதைகளைத் துளையிட்டு உண்ணும் புழுக்கள் தலையை மட்டும் காய்க்குள் நுழைத்து உடல் பகுதி வெளியே இருக்கும். இந்தத் தாக்குதலில் பொருளாதாரச் சேத நிலை என்பது பத்துச் சதவிகிதமாகும். இதற்கு மேல் சேதம் ஏற்பட்டால் உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.புள்ளிக்காய்ப்புழுத் தாக்குதலும் ஏற்படும். இலை, பூ, மொட்டுகளைப் பிணைத்து சேதப்படுத்தும். காய்கள் துளையுடன், பசுமை கலந்த வெண்மையான புழுக்கள் திட்டாக இருகரம் புள்ளிகளுடன் காணப்படும். செடிக்கு மூன்று புழுக்கள் இருந்தால் பொருளாதாரச் சேதநிலை எனக் கணக்கில் கொண்டு, தகுந்த பயிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றலாம்.

காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த பூக்கும் பருவத்திலிருந்து இனக்கவர்ச்சிப் பொறியை ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். பறவை தாங்கிகள் ஹெக்டேருக்கு 50 எண்ணிக்கையில் வைக்கலாம். காய்த் துளைப்பான் புழு, பூ வண்டுகளைக் கைகளினால் சேகரித்தும் அழிக்கலாம். வயலில் 80 சதவிகித காய்கள் முற்றியவுடன் பயிரை அறுவடை செய்யவும்.

அறுவடை செய்த துவரைச் செடிகளை ஓரிரு நாள்களில் அடுக்கி, பின் காய வைத்துத் தட்டி எடுக்கலாம். அறுவடை செய்து பிரித்தெடுத்த விதைகளை 10 சதவிகித ஈரப்பதத்திற்கு வரும் வரை காய வைக்க வேண்டும். இறவை நிலத்தில் ஹெக்டேருக்கு 1,000 கிலோவும், மானாவாரியில் 900 கிலோவும் மகசூல் கிடைக்கும். அறுவடைக்குப் பின் வண்டுகள் தாக்காமலிருக்க 100 கிலோ விதையுடன் ஒரு கிலோ வேப்ப எண்ணெய் கலந்து சேமிக்க வேண்டும்.’’

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், பயறுவகை பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003.

தொலைபேசி: 0422 2450498.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

புரட்டாசிப் பட்டத்துக்கு ஏற்ற துவரை!

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.