‘‘நெல் தரிசில் விதைக்க ஏற்றப் பயறு வகைகளைப் பற்றிச் சொல்லுங்கள்?’’
கே.குணசீலன், கடாரம்கொண்டான்.
‘‘பாசனப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு முன்பு, மெழுகு பதத்தில் பயறு வகைகள் விதைக்கப்படுகின்றன. இதற்கு நெல் தரிசுப் பயிர்கள் அல்லது மிதி உளுந்து என்று சொல்வார்கள். நெல் தரிசின் ஈரம் மற்றும் சத்துகளைப் பயன்படுத்திப் பயிரிடுவதால், செலவின்றிக் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் 5.94 லட்சம் ஹெக்டேரில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு, 3.10 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. பயறுவகை உற்பத்தி இந்தியாவில் ஹெக்டேருக்கு 623 கிலோவும் தமிழகத்தில் 516 கிலோவும் கிடைக்கிறது.

பயறு வகைகளை விதைக்கக் களிமண் கலந்த குறுமண் நிலம் மிகவும் உகந்தது. களர் மற்றும் உவர் நிலத்தில் பச்சைப் பயறு நன்கு விளையும். ஏடிடீ-3, 5, டி.எம்.வி-1, கோ-4 ஆகிய உளுந்து வகைகளும், ஏடிடீ-3, கே.எம்-2 ஆகிய பாசிப்பயறு வகைகளும் நல்ல விளைச்சலைத் தரும். சான்றுபெற்ற விதைகளை விதைக்க வேண்டும்.
பயறுச் சாகுபடிக்குத் தைப்பட்டம் மிகவும் ஏற்றது. எனவே, ஜனவரி 15 தொடங்கி, பிப்ரவரி 15-ம் தேதிக்குள் விதைத்து விடவேண்டும். ஏனெனில், அந்த நாள்களில் வயலில் காணப்படும் ஈரப்பதமும், பனிஈரமும் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும். ஏக்கருக்கு 10 கிலோ விதை போதும். இயந்திரம் மூலம் அறுவடை நடக்கும் இடங்களில் 12 கிலோ விதைகளை விதைக்க வேண்டும். ஆறிய அரிசிக் கஞ்சியில் விதைகளுடன், ஒரு பொட்டலம் ரைசோபியம், ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா, 100 கிராம் சூடோமோனாஸ் ஆகியவற்றைக் கலந்து விதைநேர்த்தி செய்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி, 24 மணி நேரத்திற்குள் விதைத்து விடவேண்டும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பா, தாளடி அறுவடை, ஆள்கள் மூலம் நடக்கும் இடங்களில் அறுவடைக்கு 7-10 நாள்களுக்கு முன்பும், இயந்திரம் மூலம் அறுவடை நடக்கும் இடங்களில் 4-6 நாள்களுக்கு முன்பும், நிலம் மெழுகு பதத்தில் இருக்கும்போது, பயறு வகைகளை விதைக்க வேண்டும். இந்தப் பதம் இல்லையெனில் பாசனம் செய்து பதம் வந்ததும் விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்க வேண்டும். விதைகள் முளைக்காத இடங்களில் முளைக்கட்டிய விதைகளை மீண்டும் விதைத்துப் பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.
80 சதவிகிதத்துக்கு அதிகமான காய்கள் முற்றியதும் தரைமட்டத்துக்குச் சற்று மேலே செடிகளை அறுவடை செய்ய வேண்டும். இதனால் மண்ணுக்குள் இருக்கும் வேர் மண் வளத்தைப் பெருக்க உதவும். அதாவது, காற்றில் உள்ள தழைச்சத்தைப் பயறு வகைப்பயிர்களில் உள்ள பாக்டீரியாக்கள் இழுத்துக்கொண்டு மண்ணை வளமாக மாற்றும்.’’
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS‘‘நாவலில் எத்தனை ரகங்கள் உள்ளன. என்ன வகையான நிலத்தில் இதைச் சாகுபடி செய்யலாம்?’’
கு.பரமசிவம், ஒடுக்கத்தூர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பழப்பயிர்கள் துறை பேராசிரியர் பதில் சொல்கிறார்,
‘‘இந்தியாவைத் தவிர இந்தப் பழம் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மடகாஸ்கர், மேற்கிந்திய தீவுகள், கிழக்கு மற்றும் மேற்கு ஆப்ரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் வளர்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் நாவல் தனிப்பயிராக வணிகரீதியாகப் பயிரிடப்படுவதில்லை. பூங்காக்களிலும், சாலை ஓரங்களிலும், காற்றுத் தடுப்பான்களாக வளர்க்கப்படுகிறது.

பசுமைமாறா வெப்பமண்டல மரமான நாவல், பூக்கும் குடும்பமான ‘மிர்டேசியே’ (Myrtaceae) சார்ந்ததாகும். இப்பழத்தில் இரும்பு மற்றும் வைட்டமின் ‘சி’ சத்துகள் நிறைந்துள்ளதால், இதயம் மற்றும் கல்லீரல் நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
நாவல் விதையில் ‘ஜம்போசின்’ மற்றும் கிளைகோசைட் ‘ஜம்போலின்’ போன்ற மூலக்கூறுகள் உள்ளடங்கி உள்ளதால், கார்ச்சத்துகள் (Carbohydrates) சர்க்கரையாக மாறுவதை நிறுத்தும் தன்மை படைத்துள்ளது.வட இந்தியாவில் ‘ராஜாமுன்’ பொதுவாக வளர்க்கப்படுகிறது. முழுமையாகப் பழுக்கும் பொழுது பெரிய அளவில், நீண்ட சதுர வடிவ பழங்கள், அடர் ஊதா அல்லது கருநீல நிறமாக, நிறைந்த பழச்சாற்றுடன் பழங்கள் சுவையாக இருக்கும். பழத்தினுடைய கொட்டை மிகச் சிறியதாக இருக்கும். ஜூன் - ஜூலை மாதங்களில் பழுக்கும் இப்பழங்கள், நகரம் மற்றும் கிராமப்புறச் சந்தைகளில் கிடைக்கும். ராஜாமுனைவிடச் சற்றுத் தாமதமாக முதிர்ச்சி அடையும் மற்றொரு ரகம் சுவை குறைந்தும், சிறியளவு உருண்டை வடிவ பழத்தையும், அடர் ஊதா அல்லது கருமை நிற பழங்களையும் நன்கு பழுக்கும் நிலையில் கொண்டிருக்கும். விதைகள் பெரியதாகவும் இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் பழுக்கின்றன. குஜராத்தில் ‘பராஸ்’ என்னும் மற்றொரு நாவல் ரகம் பெரியளவு பழத்தினைக் கொண்டிருக்கும்.
நரேந்திர நாவல்-6 உத்திரப்பிரதேசத்தில் உள்ள நரேந்திர தேவ் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டது. ராஜேந்திர நாவல்-1 பகல்பூர், பீகார் வேளாண்மை கல்லூரி யால் வெளியிடப்பட்டது. கொங்கன் பகதோலி என்ற ரகம் மண்டல பழ ஆராய்ச்சி நிலையம், வெங்குர்லா, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உருவாக்கப்பட்டது.
கோமா பிரியங்கா ரகம் மத்திய தோட்டக்கலைப் பயிற்சி நிலையம், கோத்ரா, குஜராத்திலிருந்து வெளியிடப்பட்டது. நாவல் சராசரி மண் மற்றும் மோசமான கால நிலையையும் தாங்கி வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலத்தில் வளரும்.
பூ மலரும் நேரத்திலும், காய் பிடிக்கும் நேரத்திலும் வறண்ட வானிலை தேவைப்படும். நாவல் மரங்கள் களர் நிலத்திலும், உவர் மற்றும் சதுப்பு நிலத்திலும் வளர்க்கலாம். வடிகால் வசதியுள்ள வண்டல் மண் மிகவும் உகந்ததாகும். மணற்பாங்கான மற்றும் அடர்த்தியான மண் வகைகளில் இந்த மரம் வளராது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.’’
தொடர்புக்கு, பழப்பயிர்கள் துறை, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3. தொலைபேசி: 0422 6611269.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.