Published:Updated:

சிறுதானிய ஐஸ்க்ரீம் தயாரிக்க எங்கு பயிற்சி பெறலாம்?

நீங்கள் கேட்டவை

பிரீமியம் ஸ்டோரி

‘‘சிறுதானியத்தில் ஐஸ்க்ரீம் தயாரிக்க விரும்புகிறோம். அதற்கான விவரங்களையும், எங்கு பயிற்சி பெறலாம் என்பதையும் சொல்லுங்களேன்?’’

ஆர்.காளீஸ்வரி, திருச்சி.

‘‘சிறுதானிய உணவுகளுக்கு வரவேற்பு அதிகமாகிவரும் இந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் சிறுதானியங்களைக்கொண்டு ஐஸ்க்ரீம் தயாரித்திருக்கிறது.

மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் இந்த நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சி.அனந்தராமகிருஷ்ணன் தலைமையில் பணியாற்றிய குழு, சிறுதானியங்களில் செய்யப்படும் ஐஸ்க்ரீம் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது.

சிறுதானிய ஐஸ்க்ரீம் பயிற்சி
சிறுதானிய ஐஸ்க்ரீம் பயிற்சி

பால் சேர்க்கப்படாமல் சிறுதானிய ஐஸ்க்ரீம் தயாரிக்க முடியும் என்பதை இதிலிருந்து கவனிக்க வேண்டும். இதில் மூளை வளர்ச்சிக்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. இந்த ஐஸ்க்ரீமைச் சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்தை அளிக்கும் வகையில் பலாப் பழத்தாலான கோன்களை உருவாக்கும் ஆராய்ச்சியும் நடைபெற்றுவருகிறது. இந்தச் சிறுதானிய ஐஸ்க்ரீம் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை, தொழில்நுட்பக் கழகத்தில் கட்டணம் செலுத்தி பெற்று, பயன்பெறலாம்.

அடுத்து சென்னை, கொடுவள்ளியிலுள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் விவசாயிகள், தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன. சிறுதானிய ஐஸ்க்ரீம், சாக்லேட், யோகர்ட் பானம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டும் பொருள்கள் தயாரிப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

சிறுதானிய ஐஸ்க்ரீம் தயாரிக்க எங்கு பயிற்சி பெறலாம்?

இவை, கல்லூரியிலுள்ள விஞ்ஞானிகள் மூலம் நேரடிச் செய்முறைகளாக அளிக்கப்படுகின்றன.இலவசப் பயிற்சியாகவும், சூழ்நிலைக்குத் தக்கப்படி கட்டணப் பயிற்சியாகவும் நடத்தப்படுகின்றன. பால் பொருள்கள் மூலம் தொழில்செய்ய விரும்புபவர்களுக்கு, இந்தக் கல்லூரி சிறந்த வழிகாட்டி. எனவே, சிறுதானியத்தில் ஐஸ்க்ரீம் தயாரிப்புப் பயிற்சியை இங்கும்கூட நீங்கள் பெறலாம்.’’

தொடர்புக்கு,

1.இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகம்,

தஞ்சாவூர்.

தொலைபேசி: 04362 226676.

2. உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி,

கொடுவேளி, திருவள்ளூர் மாவட்டம்.

தொலைபேசி: 044 27680218.

செல்போன்: 94451 99034.

‘‘கொத்தவரையில் நல்ல விளைச்சல் கிடைக்கும் ரகம் எது?’’

‘‘ `கொத்தவரை’ என்றும் `சீனி அவரைக்காய்’ என்றும் அழைக்கப்படும் இது, அற்புதமான காய்கறிப் பயிர். இதில், ஊட்டச்சத்துகள், புரதம், நார்ச்சத்து மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் நிறைந்து காணப்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதன் விதைகளில் காணப்படும் வேதிப்பொருளான ‘கேலக்டோமேனன்’ (Galactomannan) என்ற பிசின் பல்வேறு தொழிற்சாலைகளில் (எ.கா ஜவுளித் தொழிற்சாலை), தபால்துறையில் பயன்படுத்தப்படுகிறது.

சிறுதானிய ஐஸ்க்ரீம் தயாரிக்க எங்கு பயிற்சி பெறலாம்?

தபால் தலையை ஒட்டும் பிசினாகவும், மருந்து தொழிற்சாலைகளில் பிணைப்பு பொருளாகவும், பெட்ரோலியம் எடுக்கும் கனிமத் தொழிற்சாலையில் துளையிடும்போது பிசினாகவும், உணவுத் தொழிற்சாலையில் ஐஸ்க்ரீம், பாலாடைக் கட்டி, வெண்ணெய் போன்றவற்றைக் கெட்டியாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

`எம்.டி.யு.1’ என்ற புதிய ரகம் தோட்டக்கலைத்துறை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்) மதுரையிலிருந்து, ஜனவரி 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. நல்ல வடிகால் வசதியுடைய மணற்பாங்கான நிலம் சாகுபடிக்கு ஏற்றது. வண்டல் மண் உடைய நிலப்பகுதியும் மிகவும் உகந்தது. மண்ணின் அமிலகாரத் தன்மை 7.5 - 8.5 (அதிக காரத் தன்மையைத் தாங்கி வளரக்கூடிய) வரை இருக்கலாம். மேலும், உவர் நிலங்களிலும் சாகுபடி செய்யலாம்.

கொத்தவரை ஒரு வெப்ப மண்டலப் பயிர், இது அதிக அளவிலான வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது. இருந்தபோதிலும் விதைப்பதற்கு ஜூன் - ஜூலை மற்றும் அக்டோபர் - நவம்பர் மாதங்கள் ஏற்றவை. பயிர்களுக்கிடையிலான இடைவெளியாக வரிசைக்கு வரிசை 45 செ.மீ., செடிக்குச் செடி 30 செ.மீ என்ற அளவில் விதைக்க வேண்டும்.

ஒரு ஹெக்டேருக்கு நன்கு முற்றிய, சிறந்த விதைகளாக 10 - 15 கிலோ தேவைப்படும். ஆறிய அரிசிக் கஞ்சியில் 600 கிராம் `ரைசோபியம்’ (Rhizobium) என்ற பாக்டீரியா நுண்ணுயிர் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். நுண்ணுயிர் நேர்த்தி செய்த விதையை 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்த வேண்டும். விதையை நன்கு கலவையோடு கலந்து, உலர்ந்த பிறகு விதைப்புக்கு எடுத்துச் செல்ல வேண்டும். விதைப்புக்கு ஒரு நாள் முன்பு, நிலத்துக்கு லேசாக நீர் பாய்ச்ச வேண்டும். விதைப்பு முடிந்தவுடன் உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும்.

விதைத்த மூன்றாவது நாளில் உயிர் நீர் பாய்ச்ச வேண்டும், அதன் பிறகு செடியின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, பருவநிலையைக் கருத்தில் கொண்டும், நிலத்தின் தன்மை அறிந்தும் நீர் பாய்ச்சுதல் வேண்டும். கொத்தவரை குறைந்த மழையுள்ள பகுதிகளில், நன்கு வளரக்கூடியது.

30-வது நாள் களை எடுத்து இயற்கை உரமிட்டு மண் அணைக்க வேண்டும். 35-40-வது நாளில் பூக்கள், இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்க ஆரம்பிக்கும். அப்போது பயிரை கவனமாக பூச்சி, நோய் தாக்காதவாறு பார்த்துக்கொள்ள வெண்டும். 50-வது நாளிலிருந்து காய்கள் அறுவடைக்கு வர ஆரம்பித்துவிடும். இந்த ரகம் ஹெக்டேருக்கு 15 டன் வரை மகசூல் கொடுக்கும் தன்மை கொண்டது.’’

தொடர்புக்கு,

காய்கறிப் பயிர்கள் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3,

தொலைபேசி: 0422 6611283

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார்.

சிறுதானிய ஐஸ்க்ரீம் தயாரிக்க எங்கு பயிற்சி பெறலாம்?

உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு