Published:Updated:

ஆறு மாதங்களில் அறுவடைக்கு வரும் மரவள்ளி!

மரவள்ளி கிழங்கு
பிரீமியம் ஸ்டோரி
மரவள்ளி கிழங்கு

நீங்கள் கேட்டவை

ஆறு மாதங்களில் அறுவடைக்கு வரும் மரவள்ளி!

நீங்கள் கேட்டவை

Published:Updated:
மரவள்ளி கிழங்கு
பிரீமியம் ஸ்டோரி
மரவள்ளி கிழங்கு

‘‘மரவள்ளியில் எத்தனை ரகங்கள் உள்ளன. அதன் விவரங்களைச் சொல்லுங்கள்?’’

தி.நடராஜன், வேப்பந்தட்டை.

‘‘இந்திய அளவில் தமிழ்நாடுதான் மரவள்ளிச் சாகுபடியில் முதலிடத்தில் உள்ளது. அதிலும் `சேலம் மாவட்டத்தில்தான் மரவள்ளி அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது’ என அரசு புள்ளிவிவரம் சொல்கிறது. `குச்சிக்கிழங்கு’, `கப்பக்கிழங்கு’ `மரச்சீனிக்கிழங்கு’ என்று பல பெயர்களில் மரவள்ளி அழைக்கப்படுகிறது. மரவள்ளியை இறவையிலும், மானாவாரியிலும் சாகுபடி செய்யலாம். பொதுவாக மலைப்பிரதேசங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. மலைப்பகுதிகளில் மழை கிடைக்கும் காலங்களான செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் பயிர் செய்ய ஏற்றவை. இறவையில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடவு செய்யலாம். ஆண்டு முழுவதும் இந்தப் பயிரைப் பயிரிட முடிந்தாலும் அதிக மழை, வெயிலுள்ள காலங்களில் பயிரிட வேண்டாம்.

ஆறு மாதங்களில் அறுவடைக்கு வரும் மரவள்ளி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீர்ப்பாசன வசதியுள்ள சமவெளிப் பகுதிகளில் முள்ளுவாடி-1, கோ-2, கோ (டிபி)-4, குங்குமரோஸ் போன்ற ரகங்களும் நீர்ப்பாசனம் குறைவாக உள்ள பகுதிகளில் எச்-226 என்ற ரகமும் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மரவள்ளி, ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து `மரவள்ளி ஏத்தாப்பூர் - 1’ என்ற புதிய ரகம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரகம் இறவைச் சாகுபடிக்கு ஏற்றது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹெக்டேருக்கு 49 டன் மகசூல் கொடுக்கும், மாவுச்சத்தை 25-27 சதவிகிதம் கொடுக்கவல்லது. திருவனந்தபுரத்திலுள்ள மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் பி-165, பி-226 ஸ்ரீவிசாகம், ஸ்ரீசாகியா, ஸ்ரீரேகா, ஸ்ரீபிரபா, ஸ்ரீபிரகாஷ், ஸ்ரீஜெயா, ஸ்ரீவிஜயா, ஸ்ரீபத்மநாபா, ஸ்ரீஅபூர்வா, ஸ்ரீஅதுல்யா ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Cassava
Cassava

இவற்றில் பி-165 மலைப்பகுதிகளில் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. பி-226 என்ற ரகம் ‘வெள்ளை ரோஸ்’ என்ற பெயரில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெருவாரியாகப் பயிரிடப்பட்டுவருகிறது. ஸ்ரீஜெயா, ஸ்ரீவிஜயா ரகங்கள் ஆறு மாதங்களில் விளைச்சலைத் தரும் தன்மைகொண்டவை. வழக்கமாக 8-10 மாதங்களில்தான், மரவள்ளி அறுவடைக்கு வரும் என்பது கவனிக்கதக்கது. இந்த ரகத்தை சிப்ஸ் தயாரிக்க விரும்பி வாங்கிச் செல்கிறார்கள் வியாபாரிகள். மரவள்ளியில் விதைக் கரணைத் தேர்வு மிகவும் முக்கியமானது.

நன்கு வளர்ச்சி அடைந்த நோய் தாக்காத செடிகளிலிருந்து விதைக் கரணைகளைத் தேர்வுசெய்ய வேண்டும். தேர்வுசெய்யப்பட்ட விதைக் கரணைகளை விதைக்கரணை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

இறவையில் மரவள்ளி பயிரிடும்போது அதிக இடைவெளிவிட்டும் மானாவாரியில் குறைந்த இடைவெளிவிட்டும் நடவு செய்ய வேண்டும். இறவையில் வரிசைக்கு வரிசை 90 செ.மீ இடைவெளியிலும் செடிக்குச் செடி 90 செ.மீ இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 5,000 விதைக் கரணைகள் வரை தேவைப்படும்.

மானாவாரிப் பயிருக்கு வரிசைக்கு வரிசை 75 செ.மீ இடைவெளியும் செடிக்குச் செடி 75 செ.மீ நடவு செய்ய வேண்டும். மரவள்ளி ஒரு நீண்டகாலப் பயிர். எனவே, ஆரம்ப காலங்களில் ஊடுபயிர்ச் சாகுபடி செய்யலாம். ஊடுபயிராகச் சிறிய வெங்காயம், உளுந்து, பச்சைப்பயறு, கொத்தமல்லி போன்ற குறுகிய காலப் பயிர்களைச் சாகுபடி செய்யலாம். மரவள்ளிச் சாகுபடி குறித்துக் கூடுதல் விவரங்கள் பெற மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தை அணுகவும்.’’

தொடர்புக்கு:

மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர்,

சேலம் மாவட்டம் - 636 119

தொலைபேசி: 04282 293526/221901.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஹியூமிக் அமிலம் இயற்கையானதுதானா, இதைப் பயன்படுத்துவதால், என்னவிதமான நன்மை கிடைக்கும்?’’

கே.முத்துலட்சுமி, பெரியகவுண்டம்பாளையம்.

‘‘தாவர மட்குகளைத்தான் `ஹியூமிக்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் புதைந்துபோன தாவரங்கள்தான் காலமாற்றத்தில் நிலக்கரியாக உருமாறுகின்றன. அத்தகைய தாவரங்களின் மட்குகள் (ஹியூமிக்) நிலக்கரியில் இருக்கின்றன. அவற்றில் பயிர் வளர்ச்சிக்கு உதவும் பொருள்களும் உள்ளன. ஆனால், நேரடியாக நிலக்கரித்தூளை பயிர்களுக்குக் கொடுக்கும்போது. அதிலுள்ள சத்துகளைப் பயிர்கள் எடுத்துக்கொள்ள அதிக நாள்கள் பிடிக்கும். அதனால், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் நீர்ம வடிவில் ஹியூமிக் அமிலமாக மாற்றிக்கொடுத்தால், பயிர்களில் உடனடியாகப் பலன்கள் தெரியும். பயிர்களில் இந்த அமிலத்தின் பயன்பாடுகள் பற்றி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திலுள்ள ‘சென்டர் ஃபார் அப்ளைடு ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட்’ அமைப்பு விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். விளைபொருளின் சுவை கூடுவதோடு, நிலத்தில் ஈரப்பதமும் காக்கப்படும். நெல்லுக்குப் பயன்படுத்தும் விதத்தை உதாரணத்துக்குச் சொல்கிறேன். ஏக்கருக்கு ஏழு லிட்டர் ஹியூமிக் அமிலத்தை, 200 லிட்டர் நீரில் கலந்து, இலைவழித் தெளிப்பாக நெல் வயலில் தெளிக்கலாம்.

மரவள்ளி
மரவள்ளி

ஏக்கருக்கு 25 லிட்டர் அமிலத்தை, பாசனம் மூலமாகவும் கொடுக்கலாம். 15 நாள்கள் இடைவெளியில் இதைக் கொடுத்து வரலாம். நெல் தாள்கள் நல்ல பச்சை நிறத்தில் இருந்தால்... இந்த அமிலத்தைப் பயன்படுத்தக் கூடாது. தழைச்சத்து அதிகமாக இருக்கும்போது இந்த அமிலமும் சேர்ந்தால் கூடுதல் பச்சை நிறம் கிடைத்துவிடும்.

அதனால், பச்சை பிடிக்காமல் இருக்கும் வேளையில்தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல, கதிர்பிடிக்கத் தொடங்கியவுடன் அமிலம் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். இந்தத் தொழில்நுட்பத்தின்படி ஒரு தனியார் நிறுவனம் வணிகரீதியாக இந்த அமிலத்தைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது.’’

ஆறு மாதங்களில் அறுவடைக்கு வரும் மரவள்ளி!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism