Published:Updated:

நம்மாழ்வாருக்குப் பிடித்த இலவம்பாடி கத்திரி!

brinjal
பிரீமியம் ஸ்டோரி
brinjal

நீங்கள் கேட்டவை

நம்மாழ்வாருக்குப் பிடித்த இலவம்பாடி கத்திரி!

நீங்கள் கேட்டவை

Published:Updated:
brinjal
பிரீமியம் ஸ்டோரி
brinjal

‘‘வேலூர், இலவம்பாடி முள்ளுக்கத்திரிச் சாகுபடி செய்ய விரும்புகிறோம். இதன் சிறப்புத் தன்மைகளைச் சொல்லுங்களேன்...’’

- ஆர்.வேலுமணி, வந்தவாசி.

‘‘வேலூர் பகுதியில் நடைபெறும் விழாக்களில் இலவம்பாடி முள்ளுக்கத்திரி சமையல் நிச்சயம் இடம்பெறும். அதிலும் பிரியாணியில் முள்ளுக்கத்திரி இருந்தால் அதன் சுவை அலாதியாக இருக்கும். இது இல்லாமல் விருந்து வைத்தால், விழா முழுமை பெறாது. ‘முள்ளுக்கத்திரிக்காய்கூட வைக்காமல் கல்யாணம் செய்கிறான்’ என்று விருந்துக்கு வருபவர்கள் சுட்டிக் காட்டுவதையும் பார்த்திருக்கிறேன்.

brinjal
brinjal

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் இதைப் பற்றி நிறைய பேசியிருக்கிறார். வேலூர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்த காலங்களில் ‘‘இலவம்பாடி முள்ளுக்கத்திரிக் காரக்குழம்பு சாப்பிட்டேன். அபரா ருசிய்யா...’’ என்று கூட்டங்களில் சிலாகித்துக் கூறியிருக்கிறார். ஒவ்வொரு கத்திரிக்கும் தனிச்சுவை உண்டு. அவற்றில் முள்ளுக்கத்திரியின் சுவை அற்புதமானது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இது அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இலை, தண்டு காய்களின் மேல் முட்கள் இருக்கும். இதனால், இதை `முள்ளுக்கத்திரி’ என்று அழைக்கிறார்கள். அனைத்துப் பருவங்களிலும் பயிரிடலாம். கொத்துக் கொத்தாகக் காய்க்கும். காய்கள் பளபளப்பான ஊதா நிறத்தில் முட்டை வடிவத்தில் காணப்படும்.

ஒரு காயின் எடை 300 கிராம் வரைகூட இருக்கும். சந்தையில் இந்தக் கத்திரிக்கு வரவேற்பு அதிகம். மற்ற ரகங்களைவிடக் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது. விரிஞ்சிபுரத்திலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 2010-ம் ஆண்டு, முள்ளுக்கத்தரியில் `வி.ஆர்.எம்-1’ என்ற ரகம் வெளியிடப்பட்டது. இது வேலூர் மாவட்டத்திலுள்ள இலவம்பாடி கிராமத்திலிருந்து தனிவழித் தேர்வு மூலம் வெளியிடப்பட்டது.

காய் சதைப்பற்று அதிகமாகவும், விதைகள் குறைவாகவும்கொண்டது. இது அனைத்து வகைச் சமையலுக்கும் ஏற்றதாக இருந்தாலும், பிரியாணிக்கும், எண்ணெய்க் கத்திரிக்காய், காரக் குழம்பு செய்ய மிகவும் ஏற்றது. பளபளப்பான ஊதா நிறம் கொண்டது; சமைக்கும்போது கரையாமல் திடமாகவும், நல்ல சுவையாகவும் இருக்கும். அதிக வறட்சி, வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது. நடவு செய்த 45-50 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம். காய்களைச் சரியான முதிர்ச்சிப் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். மிகவும் முற்றிய நிலையில் அறுவடை செய்யப்பட்ட காய்கள் விற்பனைக்கு ஏற்றதல்ல.

நம்மாழ்வாருக்குப் பிடித்த இலவம்பாடி கத்திரி!

5-7 நாள்கள் இடைவெளியில் 15 முறை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு சுமார் 40 டன் விளைச்சல் எடுக்கலாம். பாரம்பர்ய ரகம் தேவைப்பட்டால், இலவம்பாடிப் பகுதிக்குச் செல்லவும். பல்கலைக்கழகத்தின் ரகம் தேவைப்பட்டால், விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும்.’’

தொடர்புக்கு:

வேளாண்மை அறிவியல் நிலையம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விரிஞ்சிபுரம் - 632 104

வேலூர் மாவட்டம்.

தொலைபேசி: 0416-2273221, 2914453

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘எலுமிச்சை-முட்டைக் கரைசல் தயாரிப்பது எப்படி... அதை பயிர்களுக்கு எவ்வளவு கொடுக்கலாம்?’’

- தி.ஜானகிராமன், முசிறி.

“எலுமிச்சைப்பழ-முட்டைக் கரைசலை அனைத்துவிதமான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதைத் தயாரிக்க 25 எலுமிச்சைப் பழங்கள், 10 முட்டைகள், 250 கிராம் வெல்லம் அல்லது மொலாசஸ் (கரும்பு ஆலைக் கழிவு) ஆகியவை தேவை. முட்டைகளைப் பொறுத்தவரை கோழி, வாத்து என எல்லாப் பறவைகளின் முட்டைகளையும் உபயோகப்படுத்தலாம். அடைவைத்து குஞ்சு பொரிக்காத முட்டைகளையும்கூடப் பயன்படுத்தலாம். ஆனால், முட்டை ஓடு உடையாமல் முழுமையாக இருக்க வேண்டும். குறைவான விலையில் கிடைக்கும் கழிவு வெல்லத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் வாளி அல்லது டிரம் எடுத்துக்கொண்டு (உலோக வாளியைப் பயன்படுத்தக் கூடாது), அதனுள் முட்டைகளை உடையாமல் வைத்து, அவை மூழ்கும் அளவுக்கு எலுமிச்சைப் பழங்களின் சாற்றைப் பிழிந்து, காற்றுப் புகாமல் இறுக்கி மூடிவைக்க வேண்டும்.

நம்மாழ்வாருக்குப் பிடித்த இலவம்பாடி கத்திரி!

10 நாள்கள் ஆன பிறகு எலுமிச்சைச்சாற்றில் முட்டை ஓடுகள் கரைந்து, முட்டைகள் ரப்பர் பந்து போன்ற நிலையில் இருக்கும். அவற்றை நன்கு பிசைந்து கூழ்போல் ஆக்கி, அதனுடன் வெல்லம் அல்லது மொலாசஸைச் சேர்த்து, மீண்டும் காற்றுப்புகாமல் மூடிவைக்க வேண்டும். அடுத்த இருபது நாள்களில் பயன்பாட்டுக்கு ஏற்ற நிலையில் எலுமிச்சை-முட்டைக் கரைசல் தயாராக இருக்கும். இதை பாட்டில்களில் அடைத்து மூன்று மாத காலம் வரை வைத்திருந்தும் பயன்படுத்தலாம். பாட்டில் மூடிகளில் சிறிய துளை போட வேண்டியது அவசியம். அப்போதுதான் இதிலிருந்து வாயு எளிதாக வெளியேறும். பத்து லிட்டர் தண்ணீருக்கு, 150 மி.லி கரைசல் என்கிற விகிதத்தில் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். இது அனுபவ விவசாயிகளின் கருத்து. கூடுதலாகப் பயன்படுத்தினால், பயிர் கருகிவிடவும் வாய்ப்புகள் உள்ளன.”

நம்மாழ்வாருக்குப் பிடித்த இலவம்பாடி கத்திரி!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.