Published:Updated:

குதிரை மசால்... மாடுகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும்!

குதிரை மசால்
பிரீமியம் ஸ்டோரி
News
குதிரை மசால்

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

‘‘மாட்டுப் பண்ணை வைத்திருக்கிறோம். குதிரை மசால் தீவனத்தைச் சாகுபடி செய்ய விரும்புகிறோம். அதன் சாகுபடி தொழில்நுட்பங்களையும் விதை எங்கு கிடைக்கும் என்ற விவரத்தையும் சொல்லவும்...’’

- கே.சிதம்பரம், இடையன் சாவடி.

‘‘குதிரைகளுக்குக் கொடுத்துவந்த தீவனப் பயிரான இதை ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் விரும்பி உண்கின்றன. இதனால், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் இதைச் சாகுபடி செய்துவருகின்றனர். தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் குதிரை மசால் சாகுபடியை மேற்கொள்ளலாம். ஏக்கருக்கு ஏழு கிலோ விதை தேவைப்படும். `கோ-1’ என்ற குதிரை மசாலைவிட,

2013-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தீவனப் பயிர்த்துறை வெளியிட்ட `கோ-2’ என்ற குதிரை மசால் ரகம் கூடுதல் விளைச்சல் கொடுக்கக்கூடியது. ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 60 டன் மகசூல் கொடுக்கும் தன்மைகொண்டது. இதில் புரதச்சத்தும் அதிகம் உள்ளது. குறைந்த நார்ச்சத்து இருப்பதால், விரைவில் செரிமானமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நுண்ணூட்டச் சத்துகளான இரும்பு, துத்தநாகம், தாமிரம் ஆகியவை உள்ளன. நல்ல சுவையுடன் இருப்பதால் கறவை மாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் ஆகியவை மிகவும் விரும்பி உண்கின்றன. ஆண்டு முழுவதும் விளைச்சல் கொடுக்கும். ஒரு முறை விதைத்து, தேவையான அளவுக்கு இயற்கை உரங்களைக் கொடுத்துவந்தால் விளைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

10 நாள்களுக்கு ஒரு முறை கட்டாயம் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். முதல் அறுவடையை 60 நாள்கள் கழித்து செய்யலாம். அதற்கடுத்து 25 நாள்களுக்கு ஒரு முறை தொடர்ந்து அறுவடை செய்துகொண்டே இருக்கலாம்.

குதிரை மசால்
குதிரை மசால்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நம் நாட்டில்தான் குதிரை மசாலை கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்கிறோம். ஆனால், வெளிநாடுகளில் மனிதர்களும் உண்கிறார்கள். சில மருந்து நிறுவனங்கள் அதிலிருந்து ஊட்டச்சத்து பானங்களையும் தயாரிக்கின்றன. ஹோமியோபதி மருத்துவத்திலும்கூடக் குதிரை மசாலைப் பயன்படுத்துகிறார்கள். தீவனத்துக்காக மட்டும் குதிரை மசாலைச் சாகுபடி செய்யாமல், மருந்துப் பொருளாகவும் சாகுபடி செய்யும் காலம் உருவாக வேண்டும். நல்ல விளைச்சல் தரும் கோ-2 குதிரை மசால் விதை மற்றும் சாகுபடி குறித்த கூடுதல் விவரங்களை கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்படும் தீவனப் பயிர்த்துறையைத் தொடர்புகொண்டு பெறலாம்.”

தீவனப் பயிர்த்துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்-641003

தொலைபேசி: 0422 6611228.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘மானாவாரியில் சாகுபடி செய்ய எந்த நெல் ரகம் ஏற்றது. டி.கே.எம்-9 ரகத்தைச் சாகுபடி செய்யலாமா?’’

- எம்.சி.பார்வதி, புன்னைநல்லூர்.

புறா பாண்டி
புறா பாண்டி

‘‘மானாவாரி நிலத்திலும், குறைந்த நீர்ப்பாசன வசதிகொண்ட நிலத்திலும் புழுதிக்கால் விதைப்பதற்கேற்ற நெல் ரகங்கள் நம் நாட்டில் நிறையவே உள்ளன. இவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சித்திரைக்கார், அரியான் போன்றவை பாரம்பர்ய நெல் ரகங்கள். 100-160 நாள்கள் வயதுகொண்டவை. அடுத்து, டி.கே.எம்-1, பி.எம்.கே-3, டி.கே.எம்-2 , டி.பி.எஸ்-1, டி.கே.எம்-9, ஏ.எஸ்.டி-17, ஆடுதுறை-36, ஆடுதுறை-37 போன்ற ரகங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வறட்சியைத் தாங்கி உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவை 95-115 நாள்கள்கொண்ட குறுகியகால ரகங்கள். பாரம்பர்ய ரகங்களைப்போல, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சில ரகங்களையும் விவசாயிகள் கொண்டாடி வருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான், டி.கே.எம்-9 ரகம். திருவள்ளூர் மாவட்டம், திரூர் குப்பம் பகுதியில் அமைந்துள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து இந்த ரகம் 1978-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்த ரகத்துக்கு மானாவாரிப் பகுதியைவிட டெல்டா பகுதியில் ஏக வரவேற்பு உண்டு. குறுவைச் சாகுபடிக்கு ஏற்றது, இந்த ரகம்.

105 நாள்கள் வயதுகொண்டதால், இதைச் சாகுபடி செய்தால், அடுத்த போகமான தாளடிக்குத் தயாராக முடியும். உவர், களர் நிலத்தில்கூட நன்றாக வளரும். பூச்சி, நோய்த் தாக்குதலும் குறைவாகத்தான் இருக்கும். எப்படிப் பார்த்தாலும் ஏக்கருக்கு 40 மூட்டை மகசூல் கிடைக்கும். ஆனால், இந்த ரகத்தை நம் மக்கள் விரும்பி வாங்க மாட்டார்கள்.

சிவப்பு நிறமாகவும், சத்து அதிகமாகவும் உள்ள இந்த ரகத்துக்கு, ‘மோட்டா’ என்று பெயர் சூட்டிவிட்டார்கள் மக்கள். இந்த ரக அரிசியை உணவில் விழிப்புணர்வுகொண்ட கேரள மக்கள் விரும்பி உண்கிறார்கள். கேரளாவுக்கு இங்கிருந்து நிறைய அனுப்பப்படுகிறது. தற்போது சிவப்பு அரிசியில் சத்திருக்கிறது என்ற விழிப்புணர்வு தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவருவதால், டி.கே.எம்-9 ரகத்துக்கும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு சாகுபடி செய்யுங்கள் பார்வதி.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

குதிரை மசால்... மாடுகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும்!