Published:Updated:

ஆடு, மாடு, கோழி, முயல், வெண்பன்றி; ஒரே நாளில் 4 கால்நடைகள்; பங்கெடுத்தவர்களைப் பரவசமாக்கிய பயிற்சி!

பயிற்சியில்
பிரீமியம் ஸ்டோரி
பயிற்சியில்

பயிற்சி

ஆடு, மாடு, கோழி, முயல், வெண்பன்றி; ஒரே நாளில் 4 கால்நடைகள்; பங்கெடுத்தவர்களைப் பரவசமாக்கிய பயிற்சி!

பயிற்சி

Published:Updated:
பயிற்சியில்
பிரீமியம் ஸ்டோரி
பயிற்சியில்

“வகுப்பறையில எப்படி மாணவர்களுக்கு விளக்கமா பாடம் எடுப்பாங்களோ அதுமாதிரி இந்தப் பயிற்சி வகுப்புல பேராசிரியர்கள் பாடம் எடுத்தாங்க. நிறைய அறிவுபூர்வமான தகவல்கள தெரிஞ்சுக்க முடிஞ்சது. ஒரே நாள்ல ஆடு, மாடு, கோழி, முயல், வெண்பன்றி பத்தி தெரிஞ்சுகிறது அபூர்வம். அந்த வாய்ப்பை பசுமை விகடன் ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு நன்றி.”

“கே.வி.கே என்னமாதிரி பணிகள செஞ்சுகிட்டு வருது, அங்கபோனா விவசாயம், கால்நடை வளர்ப்பு பத்தி என்ன தெரிஞ்சுக்க முடியும்னு பல விஷயங்கள இந்தப் பயிற்சி மூலமா தெரிஞ்சுக்க முடிஞ்சது. ஒவ்வொரு மாவட்டத்துலயும் கே.வி.கே இருக்கு. அங்க தொழில்நுட்ப தகவல்கள சொல்லிக் கொடுக் கிறாங்கங்கற விஷயமே இங்க வந்துதான் தெரிஞ்சுகிட்டோம்.”

நிகழ்வில் விமலாராணி, சித்தார்த், தேவகி
நிகழ்வில் விமலாராணி, சித்தார்த், தேவகி

பசுமை விகடன் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ‘லாபகரமான கால்நடைப் பண்ணை’ என்ற தலைப்பில் நேரடி பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் முடிவில் சென்னையைச் சேர்ந்த வெங்கடசுப்ர மணியன் தம்பதி, மதன் தம்பதி உதிர்த்த வார்த்தைகள்தான் மேற்சொன்னவை. இந்தப் பயிற்சிக்கு மயிலாடுதுறை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு என்று தமிழகம் முழுவதுமிருந்து விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டோர்
கலந்துகொண்டோர்

பயிற்சியில் சிறப்புரை ஆற்றிய காட்டுப் பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் முனைவர் சித்தார்த், “கால்நடை, விவசாயம், வீட்டுத்தோட்டம் என அனைத் துக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலேயும் வேளாண் அறிவியல் நிலையங்கள் இருக்கின்றன. அந்த வேளாண் அறிவியல் நிலையங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேளாண் அறிவியல் நிலையம் சார்பாகவும் வாட்ஸ்அப் குழுக்கள் இருக்கின்றன. அதில் இணைந்து கே.வி.கே மூலம் நடைபெறும் பயிற்சிகளை அறிந்துகொள்ளலாம். அதேபோல விவசாயம், கால்நடை சம்பந்தமான அனைத்து சந்தேகங் களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

பங்குபெற்றோர்
பங்குபெற்றோர்

மாடு, கோழிகள் பற்றிய வகுப்பெடுத்த முனைவர் க.தேவகி, “கோழிகளை வளர்க்கும்போது முட்டைக்காக வளர்க் கிறோமா, இறைச்சிக்காக வளர்க்கிறோமா என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். முட்டைக்காக என்றால் வனராஜா, கிரிராஜா கோழிகளைத் தேர்ந்தெடுக்கலாம். இறைச்சிக் காக என்றால் பெருவிடை, சிறுவிடை கோழிகளைத் தேர்ந்தெடுக்கலாம். நல்ல சந்தை வாய்ப்பு தெரியுமென்றால் கடக்நாத் இறைச்சி, முட்டைக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல மாடுகளில் ஒரு மாடு அசை போடுவதை நிறுத்தினாலோ, மாட்டின் இரு நாசி துவாரங்களுக்கு இடையில் வியர்வை இல்லாமல் இருந்தாலோ அந்த மாட்டின் உடல்நிலை சரியில்லை என்று அறிந்து கொள்ளலாம்” என்றார்.

பயிற்சியில்
பயிற்சியில்

ஆடு வளர்ப்பு குறித்து முனைவர் அருள்பிரகாசம், “கொட்டகை அமைத்தல் கிழக்கை பார்த்துதான் அமைக்க வேண்டும். இது ஏதோ வாஸ்து சாஸ்திரமோ, மூட நம்பிக்கையோ அல்ல. மாறாக, கிழக்கு நோக்கி கொட்டகை அமைத்தால் வெயில், மழை, காற்றிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க முடியும்” என்றார்.

முயல் வளர்ப்பு குறித்து பேசிய முனைவர் பாரதிதாசன், “முயல் என்பது செல்லப்பிராணி கிடையாது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஒரு கால்நடைதான். மற்ற கால்நடைகளை போல முயலுக்கு அதிகம் நோய்கள் வராது. முயல் வாழும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால் போதும். மேலும், இறைச்சியில் முயல் கறியை அதிக விலைக்கு விற்கலாம்” என்றார்.

வெண்பன்றி குறித்து பேசிய முனைவர் முருகன், “பன்றி வளர்ப்பை கேவலமாகப் பார்க்கிறார்கள். ஆனால், உலக அளவில் அதிக அளவில் விற்பனையாகும் இறைச்சி வெண்பன்றிதான். வெண்பன்றிக்குத் தமிழகத்தைவிட கேரளாவில் நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

பயிற்சியில்
பயிற்சியில்

கோழி வளர்ப்பு குறித்து பேசிய காஞ்சிபுரம் மாவட்டம் ‘உத்தரமேரூர்’ விவசாயி பரத், “எங்கிட்ட 150 தாய்க் கோழிகள் வளர்த்துக் கிட்டு வர்றேன். முட்டை, இறைச்சி மூலமா மாசத்துக்கு 15,000 ரூபாய்க்கு குறையாம சம்பாதிச்சுகிட்டு வர்றேன். இவ்வளவுக்கும் கோழி வளர்ப்பு எனக்கு முதன்மையான தொழில் கிடையாது. இதையே முதன்மையான தொழிலா செய்றவங்களுக்கு மாசம் 30,000 ரூபாய்க்கு குறையாம சம்பாதிக்க முடியும். நானும் இது போன்ற பயிற்சி மூலம் உருவான விவசாயிதான்” என்றார்.

முருகன், பாரதிதாசன், அருள்பிரகாசம், பரத், கோட்டை முத்து
முருகன், பாரதிதாசன், அருள்பிரகாசம், பரத், கோட்டை முத்து

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கோட்டைமுத்து, மனையியல் துறை இணைப் பேராசிரியை முனைவர் விமலாராணி ஆகியோர் பயிற்சியில் பேசினர். நிகழ்வின் ஒரு பகுதியாக மாதிரி பண்ணையை பார்வையிட்டனர். அப்போது கால்நடைகளுக்கு எந்தெந்தத் தீவனத்தை எப்போது கொடுக்க வேண்டும் என்று முனைவர் சுகந்தி பேசினார். பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு, இரண்டு வேளை தேநீர், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைவரும் ஒரே பயிற்சியில் 4 கால்நடைகளைப் பற்றி தெரிந்துகொண்ட மனநிறைவோடு வீடு திரும்பினார்கள்.நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் அனுபவங்களைப் பார்க்க இந்த லிங்க்கில் செல்லவும். https://www.facebook.com/PasumaiVikatan/videos/5342484642455015