Published:Updated:

மாடித்தோட்டம் அமைக்க ஏற்ற மாதம் எது? - வழிகாட்டிய ‘பசுமை’ நேரலை பயிற்சி!

பசுமை நேரலை பயிற்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை நேரலை பயிற்சி!

பயிற்சி

மாடித்தோட்டம், இன்று நகரவாசிகளின் விவசாயக் கனவை நிறைவேற்றி வரும் ஓர் அற்புத பொக்கிஷம். மன அழுத்தத்தைக் குறைப்பது, வீட்டின் காய்கறித் தேவையை வெகுவாகக் குறைப்பது, உடற்பயிற்சி, கண்ணுக்குக் குளிர்ச்சி என மாடித்தோட்டத்தின் பயன்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். மாடித்தோட்டத்துக்கான முதலீடு என்பது ஆர்வமும் முயற்சியுமே ஆகும்.

இதனடிப்படையில் மாடித்தோட்டம் அமைப்பது எப்படி என்பது குறித்து பசுமை விகடன் கடந்த ஜூன் 6-ம் தேதி ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்ற தலைப்பில் நேரலை ஆன்லைன் கருத்தரங்கை நடத்தியது. இதில் 350 பேர் கலந்துகொண்டனர். இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மாடித்தோட்ட ஆலோசகர் சி.பி.அனூப்குமார் வகுப்பெடுத்தார். அப்போது பேசிய அவர்,

“அன்று காடுகளில் சிறிய அளவில் தோட்டத்தை அமைத்து மனிதன் வாழ்ந்தான். இன்று தனது வீட்டுக்குத் தேவையான காய்கறியைச் சிறிய இடத்தில் விளைவிக்கிறான். இதன் மூலம் வீட்டுத்தோட்டம் என்பதே மனிதகுலத்தோடு ஒன்றியதுதான் என்று தெரியவருகிறது. மனிதனுக்கு இன்றியமையாத தேவை காய்கறிகள். இன்றைய நகரமயமாதலில் இடம் குறுகிவிட்ட காரணத்தால் வீட்டுத்தோட்டம் பெரும்பாலான இடங்களில் இல்லாமல் போனது. அதனால் வீட்டின் மொட்டைமாடியில் தோட்டம் அமைக்கும் முறை பிரபலமானது. இது கடந்த பத்து வருடங்களில் பெருமளவில் பெருகிவிட்டது. முதலில் பூந்தோட்டமாக வளர்ந்த காலகட்டம் போய், இன்றைக்கு அனைத்து வகையான காய்கறிகளையும் விளைவித்து வருகின்றனர்.

நேரலையில் சி.பி.அனூப்குமார்
நேரலையில் சி.பி.அனூப்குமார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாடித்தோட்டத்தில் இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் வெயில்படுமாறு மாடிப்பகுதி இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். வெயில்படும் இடங்களில்தான் செடிகள் வளரும். இரண்டாவது, மாடியின் தண்ணீர் வீட்டுக்குள் புகாதவாறு மாடித்தோட்டம் அமைக்க வேண்டும். மூன்றாவது, மாடித்தோட்டம் அமைத்த பிறகு செடிகள் வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாடித்தோட்டத்தில் பைகள், வாளிகள் என எல்லாவற்றிலும் செடிகளை வளர்க்கலாம். ஆனால் அதற்கென உருவாக்கப்பட்ட பைகளில் வளர்ப்பது நன்மை தரும். தொட்டியை வைக்கும்போது முக்கால் அடிக்கு முக்கால் அடி இடைவெளி விட்டு வைக்கலாம். விதைகள் தேர்வு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை நாட்டு ரகங்களை விதைக்கலாம், மகசூல் அதிகமாகக் கிடைக்க வீரிய ரகங்களை விதைக்கப் பயன்படுத்தலாம். மண் வகைகளில் செம்மண்ணில் பயிர்கள் நன்றாக வளரும் என்பதால் மாடித்தோட்டத்திற்கு ஏற்றது. அதிகமான காய்கறிப் பயிர்களை பயிரிடலாம். தக்காளி, மிளகாய், வெங்காயம், முட்டைகோஸ், காலிஃபிளவர் ஆகிய பயிர்களை நாற்றுவிட்டு நட வேண்டும். மண்ணுடன் மண்புழு உரம், தொழுஉரம் கலந்து விதைகளை நட வேண்டும். தண்ணீர் ஊற்றும்போதுதான் நிறைய பேர் தவறு செய்து விடுகின்றனர். அதிக தண்ணீர் ஊற்றினால் அதிகமாகச் செடிகள் வளரும் என்ற தவறான நோக்கில் தண்ணீரை அதிகமாக ஊற்றுகிறார்கள். இடுபொருள்களைப் பொறுத்தவரையில் மண்புழு உரம், அமுதக்கரைசல், மீன் அமிலத்தை அளவாக இடலாம். மேலும், நோய்த்தாக்குதலுக்கு இஞ்சி-பூண்டுக் கரைசல், பஞ்சகவ்யா, வேப்பெண்ணெய், பூந்திக் கொட்டை கரைசல் ஆகியவற்றைப் பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தலாம்” என்றவர் வாசகர்களின் பல கேள்விகளுக்கு விடையளித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“மாடித்தோட்டத்தில் தக்காளியில் மகசூலை அதிகப்படுத்த வழிகள் என்ன?”

“செடிகள் வைக்கும் தொட்டிகளை பெரிதாக வைக்க வேண்டும். ஒரே தொட்டியில் பல செடிகள் வைப்பதையும் தவிர்க்கலாம். செடிகள் குறைவாகவும், வீரிய ரக தக்காளிச் செடிகளையும் நடலாம்.”

பசுமை நேரலை பயிற்சி!
பசுமை நேரலை பயிற்சி!

“நர்சரிகளில் வாங்கும் சில செடிகள் வளரவில்லை, என்ன காரணம்?”

“நர்சரிகளில் பராமரிக்கும் முறை வேறு, அதை வாங்கி வந்து நாம் பராமரிக்கும் முறை வேறு. அங்கே என்ன மாதிரி பராமரிக்கிறார்கள் என்று கேட்டு அறிந்துகொண்டு அதன்படி செடிகளை வைத்தால், மகசூல் நன்றாகக் கிடைக்கும்.”

“மாடித்தோட்டத்தில் பழ மரங்களை வளர்க்கலாமா?”

“நிச்சயமாக வளர்க்கலாம். சென்னையிலேயே நிறைய பேர் தொட்டிகளில் வளர்க்கின்றனர். வாங்கி வைக்கும் பழ மரங்களை இரண்டரை அடிக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். தொட்டியின் உயரம் ஒன்றரை அடி முதல் 2 அடி வரை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.”

“எந்தெந்த மாதங்கள் மாடித்தோட்டம் அமைக்க ஏற்றவை?”

“வெப்ப நிலை குறைவாக உள்ள மாதங்கள் ஏற்றவை. இதன்படி ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சரியானது. பொதுவாக எல்லா மாதங்களிலும் மாடித்தோட்டம் அமைக்கலாம். பயிர்கள்தான் மாறுபடுமே தவிர, மற்ற எதுவும் மாறாது.”

பசுமை நேரலை பயிற்சி!
பசுமை நேரலை பயிற்சி!

“செடிகள் எல்லாம் வெளிர் பச்சையாக உள்ளதே என்ன காரணம்?”

“அதிக வெயிலுள்ள காலங்களில் இந்த மாதிரி வரத்தான் செய்யும். ஒரு வேளை நிழல்வலைக்குடில் அமைத்திருந்தால் இலைகள் வெயில் காலத்தில் பசுமையாக இருக்கும். இருந்தாலும், கடலைப் பிண்ணாக்கு கொடுத்தால் இலைகள் தானாகவே பசுமை நிறமாக மாறிவிடும்.”

“பூச்சிகளுக்கு என்ன மாதிரியான பூச்சிவிரட்டிகளைத் தெளிக்கலாம்?”

“வைரஸ் தாக்குதலுக்கு, மஞ்சள் தண்ணீரில் பூண்டைப் போட்டு ஊறவைத்து வரம் ஒரு முறை தெளித்தால் வைரஸ் நோய் குணமாகும். பூஞ்சாண நோய்க்கு டிரைக்கோடெர்மாவிரிடி, பஞ்சகவ்யா கரைசலைத் தெளிக்கலாம் பொதுவாக இஞ்சிப் பூண்டுக் கரைசலை 15 நாளைக்கு ஒருமுறை கொடுத்து வரலாம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“மாடித்தோட்டம் அமைக்க எவ்வளவு செலவாகும்?”

“மாடித்தோட்டம் அமைக்க ஆகும் செலவு அவரவர்களின் தேவையைப் பொறுத்தது. குறைந்த செலவிலேயே அதிகமான காய்கறிகள் கொண்ட தோட்டத்தை அமைக்கலாம். அதே நேரம் பெரிய தோட்டம் அமைக்க 50,000 ரூபாய் வரைக்கும்கூட செலவாகும்.”

“மாடித்தோட்டம் அமைத்தால் மொட்டை மாடியின் தளம் வீணாகுமா?”

“மொட்டைமாடியின் தளம் வீணாகும் என்ற கவலை வேண்டாம். கீழே பாலித்தீன் விரிப்பை விரித்து அதன்மீது வைக்கலாம். இது தவிர, பி.வி.சி குழாய்கள், கட்டையாலான பலகைகள் எனப் பல தீர்வுகள் இருக்கின்றன.”

“மாடித்தோட்டம் எங்கெங்கு அமைக்கலாம்?”

“இதற்கெனத் தனியாக ஓர் இடம் தேவையில்லை. மாடியில் காலியாக உள்ள இடங்கள், படிக்கட்டுகள், மாடிச் சுவர்கள் மற்றும் தொங்கு தொட்டிகள் என மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஏராளமான இடமும் வழியும் உள்ளன.”

“செடி வைக்கும் தொட்டியைத் தயார் செய்வது எப்படி?”

“தொட்டிகளில் செம்மண், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து அடியுரமாகக் கொடுக்க வேண்டும். தென்னை நார்க்கழிவு, மண்ணின் ஈரப்பதத்தை முழுமையாகத் தக்கவைத்துச் செடிகளைக் காக்கும். அளவுக்கு அதிகமாகப் போட்டால் செடிகளுக்கு வேர் அழுகல் நோய் ஏற்பட்டு பாதிப்படையும். செம்மண், மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்களும் பயிர்கள் வளர்வதற்குத் தேவையான சத்துகளைக் கொடுக்கும். வேப்பம் பிண்ணாக்கு பயிர்களுக்கு நோய்கள் வராமல் தடுத்து, கிருமிகளை அழிக்கும்.”

“மாடித்தோட்டத்தில் விதைகளை விதைப்பது எப்படி?”

“விதைகளைத் தேர்வு செய்யும்போதும், நடவு செய்யும்போதும் கவனம் தேவை. பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இடவேண்டும். தொட்டியில் நடும் விதைகளை முற்றிய காய்கறிகளிலிருந்து எடுக்கலாம். கடைகளில் வாங்கி வந்தும் நடவு செய்யலாம். விதைக்கும் விதை நாட்டு விதையாக இருத்தல் இன்னும் சிறப்பு. விதையின் உருவத்தைவிட இரண்டு மடங்கு ஆழத்தில் நடவுசெய்தால் போதுமானது. அதன்பின்னர், மண்ணால் மூடிவிட வேண்டும். கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் போன்ற பயிர்களை நாற்று விட்டு நடவுசெய்வது மிக அவசியம். வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும். விதை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். தொட்டியில் அதிகமான ஆழத்தில் நடக்கூடாது.”

“மாடித்தோட்டத்துக்குப் பயன்படும் இடுபொருள்கள் பற்றி சொல்லவும்?”

“மாடித்தோட்டத்துக்கு உபயோகப்படுத்தும் உரங்கள் உயிர் உரங்களாகவும், இயற்கை உரங்களாகவும் இருப்பது நல்லது. மாடித்தோட்டத்தில் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டால் மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்கலாம். செடிகளின் வளர்ச்சிக்குப் பஞ்சகவ்யா தெளிக்கலாம். வேரின் ஆழத்தில் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க, வேப்பெண்ணெய்க் கரைசலை நீரில் கலந்துவிடலாம்.”

“மாடித்தோட்டத்தில் எதையெல்லாம் தவிர்க்கலாம்?”

“கோடைக்காலத்தில் புதிதாகத் தோட்டம் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். காய்கறித் தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியைத் தேர்வுசெய்யக்கூடாது. பைகளை நேரடியாகத் தளத்தில் வைக்கக் கூடாது. பைகளைத் தயார் செய்தவுடன், விதைப்பு அல்லது நடவை மேற்கொள்ளக்கூடாது. பைகளை அடர்த்தியாக நெருக்கி வைக்கக் கூடாது.”

“பால்கனியில் செடிகள் வளர்க்கலாமா?”

“வளர்க்கலாம். பால்கனியில் ஒரு பக்கம் மட்டுமே வெயில் படும் என்பதால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது.”