பிரீமியம் ஸ்டோரி
சுமை விகடன், வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சார்பில் ஆகஸ்ட் 13-ம் தேதி, ‘வருமானம் கொடுக்கும் எண்ணெய்வித்து மரங்கள்’ என்ற நேரலைப் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தைச் சேர்ந்த முதுநிலை விஞ்ஞானி ஆனந்த லஷ்மி கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

“எண்ணெய்வித்து மரங்களில் வேம்பு, புன்னை, புங்கன், இலுப்பை போன்றவைதான் அதிகமாக நம் நாட்டில் இருக்கின்றன. ஆண்டுக்கு 3.5 மில்லியன் டன் எண்ணெய் வித்துக்களைச் சேகரிக்கும் ஆற்றல் வளம் நம்மிடம் இருக்கிறது. ஆனால், வெறும் 0.5 மில்லியன் டன் மட்டுமே சேகரிக்கப்படுகிறது.

புன்னை மரத்தின் விதைப்பிருப்பில் 55 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. உயிர்ம எரிபொருளாகவும், மருத்துவ எண்ணெயாகவும், பிண்ணாக்காகவும் பயன்படுகிறது. புன்னை மரம் ஆற்றோரப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். 1,000 மி.மீ. மழைப்பொழிவு கொண்ட இடங்களில் வளரும். மணல், களிமண், சுண்ணாம்பு, பாறை நிலப்பகுதிகளில் வளரும். போதிய வெளிச்சம் இருந்தால் காய்கள் அதிகமாக இருக்கும். நாங்கள் ஐந்து ஆண்டுகளிலிருந்தே மரங்கள் காய்க்கும்படி மரக்கன்றுகளை உருவாக்கிக் கொடுக்கிறோம்.

நன்றாக வளர்ந்த 25 வயது மரத்திலிருந்து 300 கிலோவுக்கு மேல் மகசூல் எடுக்கலாம். பழம் முதிர்ந்தவுடன் தானாக உதிர ஆரம்பிக்கும். மீண்டும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய விதைகளின் மேல்தோலை நீக்கிவிட்டு, விதைக்கவும். 30 நாள்களில் முளைப்பு விட்ட பிறகு, கன்றுகளைப் பைகளுக்கு மாற்றலாம். பைகளில் செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, தொழு உரம் 1 பங்கு என்ற விகிதத்தில் நிரப்பிக்கொள்ள வேண்டும். பிறகு 3 முதல் 4 மாதங்கள் பராமரித்துப் பிறகு நடவு செய்யலாம்.

நேரலையில் ஆனந்த லஷ்மி
நேரலையில் ஆனந்த லஷ்மி

ஒரு லிட்டர் புன்னை எண்ணெய் 450 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரைக்கும் விலை போகிறது. சராசரியாக 1 கிலோ விதையிலிருந்து 700 மி.லி எண்ணெயும், 400 கிராம் பிண்ணாக்கும் கிடைக்கும். ஏற்றுமதி வாய்ப்பும் உள்ளது” என்றவர், விவசாயிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் உதவி தலைமைத் தொழில்நுட்ப அலுவலர் பழ.சந்திரசேகரன் பேசும்போது, “சில மரங்கள் கூழ் மற்றும் இதரப் பயன்பாடுகளுக்காக வளர்க்கக் கூடியவை. அவை மட்டும்தான் அதிக லாபம் கொடுக்கிறது என்று நினைக்கிறார்கள் விவசாயிகள். ஆனால், எண்ணெய்வித்து மரங்களிலும் நல்ல லாபம் கிடைக்கும் மரங்கள் இருக்கின்றன. அவற்றை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் நிறுவனத்தை அணுகினால் வழிகாட்டுவோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு