பிரீமியம் ஸ்டோரி

‘‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சம்பந்தமான பயிற்சிகள் எங்கு நடத்தப்படுகின்றன. இதன் விவரங்களைச் சொல்லுங்கள்?’’

சி.வைதேகி, திருவெண்ணைநல்லூர்.


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப.சுப்பிரமணியன் பதில் சொல்கிறார்...

‘‘புதுடெல்லியிலுள்ள புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிதி யுதவியுடன், எங்களின் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறை 2020-21-ம் ஆண்டுக்கான பயிற்சிகளை நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சி மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இதன் மூலம் சுயதொழிலில் ஈடுபடவும், ஊரக வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமையும். ‘புதுபிக்கவல்ல ஆற்றல், வளங்குன்றா எரிபொருள் மற்றும் அங்கக உரத் தயாரிப்பில் கரிம எரிவாயு தொழில்நுட்பம்’ என்பதுதான் பயிற்சியின் தலைப்பு.

இந்தப் பயிற்சியில் வேளாண்மையில் பட்டயப் படிப்பு மற்றும் இதர பட்டயப் படிப்பு முடித்த அல்லது வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். பயிற்சிக் காலம் 15 நாள்கள்.

தினமும் சலுகைப்படி ரூ.300-ம் பயணப்படியும் வழங்கப்படும்.

அடுத்து சாண எரிவாயு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதில் விவசாயிகள் அல்லது பெண் தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ளலாம். கிராமங்களில் சாணத்தை வறட்டியாக்கி எரிபொருளாகப் பயன்படுத்துவார்கள் அல்லது அப்படியே உரமாகப் பயன்படுத்துவார்கள். இந்த இரண்டும் ஒன்றாக நமக்கு, சாண எரிவாயுக் கலன் மூலம் மட்டுமே கிடைக்கிறது.

கொள்கலன்
கொள்கலன்

சாண எரிவாயுக் கலனுக்குள் சாணத்தைச் செலுத்துவதன் மூலம் ‘மீத்தேன்’ என்ற எரிவாயு கிடைக்கிறது. அது நமக்குப் பெட்ரோலியம் வாயுவைப்போன்று சமையலுக்குப் பயன்படுகிறது.

சாண எரிவாயுக் கலனிலிருந்து எரிவாயு தயாரித்த பின் வெளிவரும் மீத கழிவான சாணம் நல்ல சத்துள்ள உரமாகப் பயன்படுகிறது. சாணத்தில் எரிவாயு எடுத்த பிறகு, தொற்று நோயை உண்டாக்கக் கூடிய ஈக்கள், கொசுக்கள் போன்றவை உற்பத்தி யாகாது. ‘மீத்தேன்’ வாயுவில் புகை இல்லை. சமையல் பாத்திரங்களில் கரிப்பிடிக்காது. இவ்வளவு சிறப்புமிக்கச் சாண எரிவாயு குறித்து 10 நாள்கள் பயிற்சி நடைபெறும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விவசாயிகளையும் பெண்களையும் அன்புடன் அழைக்கிறோம். கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், எங்கள் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தகவல்கள் பெறலாம்.’’

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

திட்ட ஒருங்கிணைப்பாளர்,

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறை,

வேளாண்மைப் பொறியியல் கல்லூரி

மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் - 641003.

தொலைபேசி: 0422 6611276, செல்போன்: 80567 56712.

‘‘தென்னையில் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்துள்ளோம். வாடல் நோய் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்துவது எப்படி?’’

சி.பழனியப்பன், செருவாவிடுதி.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைதுறை விஞ்ஞானிகளின் கள ஆய்வு மூலம் கிடைத்த தகவல் இங்கே இடம் பெறுகிறது.

அண்மையில் தமிழகத்தில் மிளகு பயிரிடப்படும் பகுதிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கள ஆய்வு செய்தோம். பெருவாரியான பகுதிகளில் வாடல் நோய் தாக்குதல் அதிகமாகக் காணப் படுகிறது. இந்த நோயானது ‘பைட்டோப் தோரா கேப்சிசி’ எனும் பூஞ்சை மூலம் ஏற்படுகிறது. இப்பூஞ்சை, இலை, தண்டு மற்றும் வேர் பகுதி போன்ற மிளகின் அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கும் தன்மையுடையது. பொதுவாக, நோயின் தொற்று வேர் பகுதிகளில் இருந்தே தொடங்கும். அறிகுறிகள் இலைப் பகுதியில் தெரிய ஆரம்பிக்கும், ஆரம்பத்தில் நீர் கோத்த அழுகல் போல் தோன்றி பின் பழுப்பு நிற திட்டு களாக மாறி உதிர்ந்துவிடும். நோய்த் தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து இலைகள் உதிர்வது இருக்கும். பின் கொடிக்கும் பரவி காய்ந்து விடுகிறது. மேலும், மிளகு சரம் (ஸ்பைக்) தாக்குதலால், காய்கள் உதிர்ந்து விடுகிறது. பொதுவாக, நோய் தொற்று மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து கொடி விரைவாக வாடிவிடுகிறது.

இந்த நோயைச் சரியான முறையில் நிர்வகிக்கத் தோப்பைச் சுத்தமாக வைத்து முறையான உழவியல் முறைகள் மற்றும் தேவையானபோது மருந்து தெளித்தல் முதலிய ஒருங்கிணைந்த முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். இந்நோயை நிர்வகிக்கக் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மிளகு சாகுபடி
மிளகு சாகுபடி

நோய் தாக்கிய கொடிகளை உடனடியாக அகற்றி எரித்துவிட வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட இடத்தின் மண்ணில் 1 கிலோ சுண்ணாம்பை இட வேண்டும். நோய் பாதிக்கப்பட்டுக் கொடி அகற்றிய இடத்தில், 1-2 மாதங்கள் கழித்துப் புதிய நடவு செய்யலாம். நாற்றுக்களில் நூற்புழு இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வயல்களில் போதுமான வடிகால் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். வேப்பம் புண்ணாக்கு 1 கிலோ ஒரு கொடிக்கு என்ற அளவில் இட வேண்டும். டிரைக்கோடெர்மா, பேசிலஸ் சப்டிலிஸ், பொக்கோமியா கிளாமிடோஸ்போரியா தலா 10 கிராம் வீதம் 5 கிலோ மட்கிய தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.

புறா பாண்டி
புறா பாண்டி

‘‘கடல் நீரில் மீன் வளர்க்க விரும்புகிறோம். இதற்கு எங்கு பயிற்சி கிடைக்கும்?’’

ந.சேதுராமன், மீஞ்சூர்.


‘‘சிங்கி இறால், கொடுவா மீன், பால் மீன், நண்டு... போன்றவற்றைக் கடல் நீரில் வளர்க்க முடியும். ஆனால், சட்டப்படி கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில்தான் பண்ணையை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடல் நீரைப் பயன்படுத்தி இறால் மட்டும்தான் வளர்க்கப்படுகிறது. பால் மீன், மடவை... போன்றவற்றைக் கேரளாவிலும், கொடுவா மீனை ஆந்திராவிலும் அதிகளவில் வளர்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் நீண்ட கடற்கரை பகுதி இருந்தும், கடல் நீரைப் பயன்படுத்தி மீன் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சென்னையில் உள்ள மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தில் இதற்கான ஆன்லைன் பயிற்சிகளும் நேரடி பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.’’

தொடர்புக்கு: இயக்குநர், மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையம், 75, சாந்தோம் நெடுஞ்சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600028. தொலைபேசி: 044 24618817, 24610565.

புறா பாண்டி பகுதிக்கான கேள்விகளை 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமும் அனுப்பி வைக்கலாம்.

நீங்கள் கேட்டவை: நிதி உதவியுடன் சாண எரிவாயு பயிற்சி!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும்,

pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு