Published:Updated:

அசோலா... மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் உணவு!

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

பிரீமியம் ஸ்டோரி

``அசோலா வளர்க்க விரும்புகிறோம். இதை எதற்குப் பயன்படுத்தலாம் என்று சொல்லுங்கள்?’’

- சி.மூகாம்பிகை, சிதம்பரம்.

‘‘ `மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது’ என்பது அசோலாவுக்கும் பொருந்தும். அசோலா வளர்ப்பை அறிமுகப்படுத்திய பெருமை கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தையே சேரும். முதலில் இது மனிதர்களுக்கு எப்படிப் பயன்படுகிறது என்று பார்க்கலாம். நீரில் கரைந்திருக்கும் உப்புகளை கிரகித்து, தழைச்சத்தை ஆகாயத்திலிருந்து கிரகித்துக் கொள்ளும் சிறப்புத் தன்மை உடையது இது. நீரில் நன்றாகப் பசுமையாக வளரும் அசோலாவைச் சேகரித்து உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கலாம். பூச்சிக்்கொல்லி மருந்துகள், உரங்கள் பயன்படுத்தும் நெல் வயலில் வளரும் அசோலாவை உணவுக்குப் பயன்படுத்தக் கூடாது. இயற்கை விவசாயம் செய்யும் வயலிலுள்ள அசோலோவைப் பயன்படுத்தலாம். வாய்ப்பிருந்தால் உணவுக்குப் பயன்படுத்தும் அசோலாவைத் தனியாக வளர்த்துப் பயன்படுத்தலாம்.

அசோலா... மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் உணவு!

அசோலாவை நன்றாகக் கழுவி எடுத்து வாணலியில் போட்டு, அத்துடன் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சிறிது எண்ணெய்விட்டு நன்கு வதக்கி, உப்பு கலந்து கீரையாகச் சாப்பிடலாம்.

அடுத்து, அசோலாவைக் கடலை மாவில் 4:1 என்ற அளவில் கலந்து தண்ணீர்விட்டு, வேண்டிய அளவு உப்பு சேர்த்து, நன்றாக எல்லாவற்றையும் கலந்து எண்ணெயில் போட்டு பக்கோடா தயாரிக்கலாம். அசோலாவை உளுந்து மாவுடன் வேண்டிய அளவு கலந்து வெங்காயம் போட்டு வடை தயாரிக்கலாம். அசோலாவில் தயாரித்த வடை மிகச் சுவையாகவும், நல்ல மணம் நிறைந்ததாகவும் இருக்கும். அசோலாவை விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி நடைபெறும்போது, அசோலாவில் வடை, பக்கோடோ தயாரித்துக் கொடுப்பார்கள். கண்காட்சியில்கூட, `அசோலோ பலகாரங்கள் செய்வது எப்படி?’ என்பதைச் செயல்விளக்கமாகச் செய்து காட்டியதைப் பார்த்திருக்கிறேன்.

கோழி வளர்ப்பவர்களுக்கு அசோலா அற்புதமான தீவனம். கோழிக் குஞ்சுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் அசோலாவை 20 சதவிகிதம் வரை சேர்த்தால், குஞ்சுகள் நன்கு வளர்ந்து நல்ல எடையுடன் காணப்படும். கோழிகளுக்கு அசோலாவை உணவாக இட்டால், மஞ்சள் கரு நல்ல தேர்ச்சியுடன் உருவாகும். மேலும், கோழிகளில் நோய் எதிர்ப்புத் தன்மையும் இருக்கும். அசோலா கொடுக்கப்படும் கோழிகளின் இறைச்சியும் முட்டையும் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால் கூடுதல் பால் கிடைக்கும் என்பது அனுபவ விவசாயிகளின் கருத்து. இதைப் பச்சையாகவோ, பதப்படுத்தியோ பயன்படுத்தலாம். அசோலாவில் அதிக புரதச்சத்தும், கொழுப்புச்சத்தும் உள்ளன. மேலும், இதில் நார்ப் பொருள்கள் குறைவு. கால்நடைகளின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் அசோலா கொண்டிருக்கிறது. அசோலாவை உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு அளித்தால், பன்றிகள் அசோலாவை நன்றாக உட்கொண்டு அதிக எடை பெறும்.

தமிழ்நாட்டில் அசோலா அறிமுகப்படுத்தப் பட்டாலும், கேரளாவிலுள்ள விவசாயிகள்தான் இதைப் பயன்படுத்தி, பலன் பெற்று வருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

‘‘எங்களுக்கு ஏற்காட்டில் நிலம் இருக்கிறது. இங்கு செளசெள சாகுபடி செய்ய விரும்புகிறோம். இயற்கை முறையில் சாகுபடி செய்யும் நுட்பங்களைச் சொல்லுங்கள்?’’

- ஆ.முத்து, சேலம்.

‘‘இயற்கை முறையில் சாகுபடி செய்ய விரும்பும் உங்களுக்கு வாழ்த்துகள். இயற்கை விவசாயத்தில் செளசெள சாகுபடியை நிச்சயம் செய்ய முடியும். பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்... போன்ற இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை முறையாகக் கொடுத்துவந்தால், செளசெள நல்ல விளைச்சலைக் கொடுக்கும். கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் உயரமுள்ள இடங்களில் மட்டுமே செளசெள வளரும். ஏற்காடு, கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டருக்கு மேல் உள்ளது. எனவே, பயப்படாமல் சாகுபடி செய்யுங்கள். செளசெளவில் உயர் விளைச்சல் ரகங்கள் கிடையாது. வெள்ளை, பச்சை என்ற இரண்டு பாரம்பர்ய ரகங்கள் மட்டுமே உள்ளன. இந்த ரகங்கள் நல்ல விளைச்சலைக் கொடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புறா பாண்டி
புறா பாண்டி

மேலும், தேயிலையில் ஊடுபயிராகவும் செளசெளவைச் சாகுபடி செய்யலாம். பொதுவாக, செளசெள பந்தலில்தான் படர்ந்து வளரும். கீழ்ப்பகுதி நிலம் காலியாக இருக்கும். அந்த இடத்தில் தேயிலையைப் பயிரிடலாம். நன்கு வளர்ந்த ஒரு கொடியிலிருந்து ஒரு வருடத்துக்கு சுமார் 25 முதல் 30 கிலோ காய்கள் கிடைக்கும். அறுவடை முடிந்தவுடன் தரையில் இருந்து 60 செ.மீ உயரத்தில் கொடியை அறுத்துவிட வேண்டும். அப்போது பக்கக் கிளைகள் உருவாகி பந்தலில் படரத் தொடங்கும். இப்படிச் செய்துவந்தால், நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரைகூட செளசெள கொடியை நன்றாகக் காய்க்கும் திறனில் வைத்துக் கொள்ளலாம்.

ஜனவரி மாதம் கவாத்து செய்தால், ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை காய்கள் கிடைக்கும். செளசெளவை இயற்கை முறையில் பெரும்பாலும் யாரும் சாகுபடி செய்வதில்லை. நீங்கள் செய்தால், சந்தையில் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. இது குறித்து கூடுதல் விவரங்கள் பெற நீலகிரி மாவட்டம், விஜயநகரத்திலுள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தைத் தொடர்புகொள்ளுங்கள். இது மட்டுமல்ல, மலைப்பயிர்கள் குறித்தும் இங்கு ஆலோசனை கேட்கலாம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அசோலா... மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் உணவு!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு