பிரீமியம் ஸ்டோரி

‘‘பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம் எது, அதன் சாகுபடி நுட்பங்களைச் சொல்லுங்கள்?’’

க.சரவணன், வந்தவாசி.

சீரகச் சம்பா நெல் சாகுபடியில் அனுபவம் வாய்ந்த முன்னோடி விவசாயி ‘மதுராந்தகம்’ சுப்பு பதில் சொல்கிறார். ‘‘பாரம்பர்ய நெல் ரகங்களில் ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது சீரகச் சம்பா ரகம்தான். பிரியாணி செய்வதற்கு மிகவும் ஏற்றது. ஒரு முறை சீரகச் சம்பா பிரியாணியைச் சாப்பிட்டுவிட்டால், மீண்டும் பாசுமதி அரிசி பிரியாணியை விரும்பமாட்டார்கள். இதன் மணமும் சுவையும் அலாதியானது. இதில் இரண்டு ரகங்கள் உள்ளன. வாசனை உள்ளது, வாசனையில்லாதது. இதில் வாசனையில்லாத சீரகச் சம்பா ரகத்தின் விலை குறைவாக இருக்கும்.

சுப்பு
சுப்பு

சீரகச் சம்பா மட்டுமல்ல, எந்த நெல் ரகமாக இருந்தாலும் ஒற்றை நாற்று நடவு முறைதான் நல்லது. ஆடி அல்லது புரட்டாசிப் பட்டத்தில் நடவு செய்யலாம். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 2 டன் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி உழவுசெய்து நிலத்தைச் சமப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு, தண்ணீர்ப் பாய்ச்சி ஒரு டிராக்டர் அளவுக்கு எருக்கன், வேம்பு போன்ற இலைதழைகளைக் கொட்டி, பரப்பி மக்க விட வேண்டும். பிறகு, சேற்றுழவு செய்து, வரிசைக்கு வரிசை 1 அடி, நாற்றுக்கு நாற்று முக்கால் அடி இடைவெளி இருக்குமாறு ஒவ்வொரு நாற்றாக நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் கொடுத்து வர வேண்டும். நடவுசெய்த 5-ம் நாள், 50 கிலோ வேப்பம் பிண்ணாக்குத் தூளைப் பரவலாகத் தூவ வேண்டும். 10-ம் நாள் 200 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். நடவுசெய்த 18-ம் நாள் கோனோவீடர் மூலம் களைகளை அழுத்தி விட்டு 25 கிலோ வேப்பம் பிண்ணாக்குத்தூள், 25 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்குத்தூள் ஆகியவற்றைப் பரவலாகத் தூவிவிட வேண்டும். 25-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மி.லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 40-ம் நாள் மீண்டுமொருமுறை களைகளை அகற்ற வேண்டும். பூச்சிகள் தென்பட்டால் மூலிகைப் பூச்சிவிரட்டித் தெளிக்கலாம். தொடர்ந்து 20 நாள்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் அல்லது அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்து கொடுத்து வர வேண்டும். கதிர் வருவதற்கு முன்பு வரை 15 நாள் இடைவெளியில் 10 லிட்டர் நீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்கவும். மறந்தும்கூடக் கதிர் வந்த பிறகு, தெளித்துவிட வேண்டாம். அப்படித் தெளித்தால், சீரகச் சம்பா மோட்டா ரகமாக மாறிவிடும். 130 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும்.

குறைந்தபட்சம் 20 மூட்டை (80 கிலோ) கிடைக்கும். நெல்லாக விற்பனை செய்வதைக் காட்டிலும் அரிசியாக மதிப்புக்கூட்டி கொடுத்தால்தான் லாபம் கிடைக்கும். 20 மூட்டை நெல் மூலம் 1,000 கிலோ அரிசி கிடைக்கும். குறைபட்ச விலையாக கிலோவுக்கு 70 ரூபாய் என்றாலும், ஏக்கருக்கு 70,000 வருமானம் கிடைக்கும். விற்பனையில் பிரச்னை இல்லை. பிரியாணி கடைக் காரர்களும் இயற்கை அங்காடிக்காரர்களும் தேடித் தேடி வாங்கிச் செல்கிறார்கள்.’’

தொடர்புக்கு, செல்போன்: 96006 12649.

பிரியாணிக்கு ஏற்ற அரிசி ரகம் எது?

‘‘நெல்லிச் சாகுபடி செய்ய விரும்புகிறோம். எந்த ரகம் ஏற்றது. சாகுபடி நுட்பங்களைச் சொல்லுங்கள்?’’

எஸ்.காளியம்மாள், வேடச்சந்தூர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி நெல்லி விவசாயி முத்துசாமி பதில் சொல்கிறார். ‘‘நெல்லிச் சாகுபடியில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் கன்று தேர்வுதான். ஒரே ரகக் கன்றை நடவு செய்தால், நிச்சயம் மரங்கள் காய்க்காது. காரணம், நெல்லி அயல் மகரந்த சேர்க்கை கொண்ட தாவரம். குறைந்தபட்சம் மூன்று வகையான ரகங்களைக் கலந்து நடவு செய்தால், நல்ல விளைச்சல் கிடைக்கும். ஒரு ஏக்கரில் 15 அடி இடைவெளியில் ஏறத்தாழ 200 கன்றுகள் வீதம் நடவு செய்யலாம். நடவு குழி 3 அடி எடுக்க வேண்டும். அதில் மண்புழு உரம் 2 கிலோ மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேம், டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனஸ் ஆகியவற்றை 50 கிராம் வீதம் மொத்தம் 250 கிராம் ஒரு குழியில் போட்டு நட வேண்டும். ஒரு ஏக்கரில் என்.ஏ.7 ரகக்கன்றுகள்-75, காஞ்சன் ரகக்கன்றுகள் -75, சாக்கையா, கிருஷ்ணா ஆகிய ரகக்கன்றுகளில் தலா 25 என மொத்தம் 200 கன்றுகள் நடலாம்.

பிரியாணிக்கு ஏற்ற அரிசி ரகம் எது?


கன்று வளரும்போது, ஒட்டுப் பகுதியில் அடியில் வரும் பக்கத்தளிரைக் கிள்ளி விட வேண்டும். வயலைச் சுற்றி காற்றைத் தடுக்கச் சவுக்கு நடவு செய்யலாம். ஏக்கருக்கு 5 தேனீப் பெட்டிகள் வைத்தால் மகரந்தச் சேர்க்கையின் மூலம் பூ பிடிப்பது அதிகமாக்கலாம். தேன் மூலமும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.காய்கள் நன்கு திரட்சியாக இருக்க 15 நாள் களுக்கு ஒரு முறை செடிகளுக்கு 2 லிட்டர் வீதம் அமுதக் கரைசலும் பூச்சி வராமல் இருக்கப் பஞ்சகவ்யா மற்றும் பூச்சி விரட்டியையும் தெளிக்க வேண்டும். இயற்கை வழி மூலம் காய்கள் திரட்சியாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இதோடு சுருக்கம் இல்லாமலும் கரும்புள்ளிகள் இல்லாமலும் இருக்கும். இப்படி இருந்தால்தான், சந்தையில் விரும்பி வாங்குகிறார்கள்.

நெல்லி ஆண்டுக்கு இரண்டு முறை காய்க்கும். ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதியில் காஞ்சன் ரகம் ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கிறது. காரணம், அங்கு காற்றில் ஈரப்பதம் எப்போதும் உள்ளது. மற்ற பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் காய்ப்புத் தன்மை சிறப்பாக இருக்கும். முதலில் பிப்ரவரியில் பூக்கும். ஆனால், பிப்ரவரி பருவத்தில் அதிகம் காய்க்காது. விலை கூடுதலாக இருக்கும். ஜூலை பருவத்தில் நிறைய காய்கள் கிடைக்கும். ஆனால், அப்போது விலை குறைவாக இருக்கும்.’’

பிரியாணிக்கு ஏற்ற அரிசி ரகம் எது?

‘‘வேளாண் விளைபொருள்களை மின்னணு மூலம் சந்தைப்படுத்த எங்கு பயிற்சி கிடைக்கும்?’’

சி.ஞானப்பிரகாசம், பெண்ணாடம்.

‘‘இ.காமர்ஸ் என்றழைக்கப்படும் மின்னணு மூலம் வேளாண் விளைபொருள்களைச் சந்தைப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழு பெண்கள்... போன்றவர்களுக்கு இதுபோன்ற பயிற்சி அவசியம். கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், வேளாண் வணிக இயக்ககத்தில் இதற்கான பயிற்சியைக் கொடுக்கிறார்கள். கட்டணம் உண்டு.’’

தொடர்புக்கு, செல்போன்: 63802 57553

புறா பாண்டி பகுதிக்கான கேள்விகளை 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமும் அனுப்பி வைக்கலாம்.

பிரியாணிக்கு ஏற்ற அரிசி ரகம் எது?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு