Published:Updated:

மீன்களுக்கு தீவனமாகும் அசோலா!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

மீன்களுக்கு தீவனமாகும் அசோலா!

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘மீன்களுக்கு அசோலாவைத் தீவனமாகக் கொடுக்கலாமா? நெல் வயலில் மீன் வளர்க்க விரும்புகிறோம். அதற்கும் பயன்படுத்தலாமா?’’

நீ.பார்வதி, பி.வி.குப்பம்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘அசோலா’ பாலகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

‘‘அசோலா அற்புதமான இயற்கை உரம் மட்டுமல்ல; அருமையான தீவனமும்கூட. கோழிகளுக்கு அசோலாவைக் கொடுக்கிறார்கள். அதேபோல மாடுகளுக்கும் கொடுக்கும்போது, பால் உற்பத்தி கூடுகிறது என்பது அனுபவ உண்மை. மீன்களுக்கும் இப்போது சில விவசாயிகள் கொடுத்து வருகிறார்கள். மீன்கள் மற்ற உணவுகளைவிட அசோலாவை விரும்பி உண்கின்றன.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

மீன் குளத்தில் மூங்கில் குச்சிகளைத் தொட்டி வடிவில் கட்டி மிதக்க விடலாம். அதில் அசோலாவை வளர்க்க வேண்டும். மீன் களுக்குப் பசிக்கும்போது, இங்கு வந்து தின்றுவிட்டுச் சென்று விடும். அசோலாவைக் காய வைத்துப் பொடி செய்தும் தண்ணீரில் தெளித்துவிடலாம். அந்தக் காலத்தில் இயற்கை யாகவே நெல் வயலில்களில் மீன்கள் இருந்தன. அவை காணாமல் போனதற்கு நாம் மண்ணில் கொட்டிய ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லி களும்தான் காரணம். இயற்கை வழி முறையில் விவசாய நிலத்தில் மீன் வளர்ப்பது நல்லது. குறிப்பாக, 140 நாள் வயது கொண்ட நம் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்வது சிறந்தது. மீன் வளர்ப்புக்குத் தேர்வு செய்துள்ள நிலத்தில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும் அல்லது நிலத்தின் ஒரு பகுதியில் தண்ணீர்த் தேங்கி நிற்க ஏற்பாடு செய்ய வேண்டும். இன்னும் ஒரு நுட்பமும் உள்ளது. நெல் வயலின் வரப்பு ஓரத்திலிருந்து 1 மீட்டர் தள்ளி, அரை மீட்டர் ஆழத்தில் பள்ளம் செய்து கொள்ளவும். வயலின் நீளத்துக்குத் தக்கபடி, நீளமாக இருக்கலாம். இப்படி வயலின் நான்கு பக்க புறமும் செய்யலாம். இந்த வழித்தடங்களில்தான், மீன் அதிகமாக இருக்கும்.

புறா பாண்டி
புறா பாண்டி

நெல் நாற்று நடவு செய்த பிறகு, இரண்டு விரக்கடை அதாவது 10 செ.மீ அளவுக்கு நீர் தேங்கி நிற்க வேண்டும். நடவு செய்து ஒரு வாரம் கழித்து ஏக்கருக்கு 50 கிலோ அளவு அசோலாவைத் தூவிவிட வேண்டும். இதன் மூலம் அசோலா வளர்ந்து பெருக்கமடையும். அடுத்த ஒரு வாரம் கழித்து ஏக்கருக்கு 2,000 மீன் குஞ்சுகளை வயலில் விடலாம். அசோலாவை அறுவடை செய்து, பசுஞ் சாணத்துடன் 1:1 என்ற அளவில் சேர்த்து இரண்டு வாரம் மட்க வைத்து நெல்வயலில் தூவிவிடலாம். இதுவும்கூட மீன்களுக்குச் சிறந்த உணவு. இதனால் மீன்களின் கழிவுப் பொருள்களும் நெற்பயிருக்கு உரமாகப் பயன்படுகின்றன. நெல் அறுவடைக்கு முன்பே மீன்களைப் பிடித்து விற்பனை செய்யலாம். அசோலா கொடுத்து வளர்க்கப் படும் மீன் தனிச் சுவையாக இருக்கும்.’’

தொடர்புக்கு, ‘அசோலா’ பாலகிருஷ்ணன், செல்போன்: 97903 69233.

‘‘நெல் தரிசில் உளுந்து விதைக்கலாமா?’’

சி.வண்ணநிலவன், திருநின்றவூர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி முருகையன் பதில் சொல்கிறார்.

‘‘காவிரி டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடிக்குப் பிறகு, உளுந்து விதைப்பது பல காலமாக நடந்துவருகிறது. நெல் சாகுபடி செய்த வயலின் ஈரத்திலேயே வளர்ந்துவிடும். இதை ‘மிதி உளுந்து’ என்றும் சொல்வார்கள். பாரம்பர்ய ரக உளுந்து ரகம் புழக்கத்தில் இல்லை. எனவே, உயர் விளைச்சல் உளுந்து ரகங்களான ஏ.டி.டீ-3, ஏ.டி.டீ-4 ஆகியவை நெல் தரிசில் பயிரிட ஏற்றவை. நெல் தரிசில் உளுந்து விதைக்கத் தைப்பட்டம் (ஜனவரி 15 முதல் பிப்ரவரி வரை) ஏற்ற பருவமாகும். நல்ல முளைப்புத்திறன் உள்ள பூச்சி தாக்காத, சான்றிதழ் பெற்ற விதைகளாக இருந்தால் ஏக்கருக்கு 15 கிலோ விதை போதுமானது. வேர் அழுகல் நோயினால் ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுக்க ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் என்றளவில் விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்த 24 மணி நேரம் கழித்து 30 கிலோ விதையை நுண்ணுயிர்களான ரைசோபியம் 600 கிராம், பாஸ்போ பாக்டீரியா 600 கிராமைக் குளிர்ந்த அரிசிக் கஞ்சியில் கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்திப் பின் விதைக்க வேண்டும்.

அசோலா
அசோலா

ஆட்கள் மூலம் நெல் அறுவடை செய்யும்போது நெல் அறுவடைக்கு ஒரு வாரம் முன்பே, மெழுகு பதத்தில் உளுந்து விதைக்க வேண்டும். இயந்திரம் மூலம் அறுவடை செய்வதாக இருந்தால் நெல் அறுவடைக்கு 5 நாள்களுக்கு முன்பு விதைக்க வேண்டும். விளைச்சலை அதிகரிக்க நன்கு பூத்திருக்கும் தருணத்தில், பத்து லிட்டர் நீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்கலாம். புரோடீனியா என்று அழைக்கப்படும் புகையிலைப் புழுவைக் கட்டுப்படுத்த, அதன் முட்டை குவியல்களையும், இலையில் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும் இளம் புழுக்களையும் பொறுக்கி அழித்துவிட்டு, மாலை நேரத்தில் வேம்புக் கரைசல் அல்லது பூச்சிவிரட்டியைத் தெளிக்கலாம். 75 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும். உளுந்து விதைப்பதன் மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து மண்ணையும் வளப்படுத்தும். அதனால், விவரம் தெரிந்த விவசாயிகள் நெல் தரிசில் உளுந்து விதைப்பதைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.’’

மீன்களுக்கு தீவனமாகும் அசோலா!

‘‘சிப்பிக் காளான், பால் காளான் வளர்க்க விரும்புகிறோம். விதை மற்றும் பயிற்சி எங்கு கிடைக்கும்?’’

ஆர்.ரங்கராஜ், திருவெண்ணெய்நல்லூர்.

‘‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாதம்தோறும் 5-ம் தேதி காளான் சாகுபடி பயிற்சியை நடத்தி வந்தார்கள். கொரோனா பெருந்தொற்று காரணத்தால் சில மாதங்களாக நேரடி பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முதல் மீண்டு நேரடி பயிற்சி கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். கட்டண பயிற்சி இது. முன்பதிவு செய்துகொள்ளவும். இந்தப் பயிற்சியில் சிப்பிக் காளான், பால் காளான் மட்டுமல்ல; இன்னும் பல வகையான காளான் வளர்ப்பு குறித்தும் கற்றுக்கொடுக் கிறார்கள். காளான் விதைகளும் இங்கு கிடைக்கும்.’’

தொடர்புக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-3.
தொலைபேசி: 0422 6611336.

புறா பாண்டி பகுதிக்கான கேள்விகளை 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமும் அனுப்பி வைக்கலாம்.

மீன்களுக்கு தீவனமாகும் அசோலா!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism