Published:Updated:

மருந்து நிறுவனங்கள் தேடும் குர்குமின்!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

மருந்து நிறுவனங்கள் தேடும் குர்குமின்!

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘வேளாண்மைப் பொறியியல் துறையில் மண் அள்ளும் இயந்திரம் வாடகைக்குக் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். எந்தப் பணிகளுக்குக் கொடுக்கப்படுகிறது?’’

மு.சந்திரசேகர், சூணாம்பேடு.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் பதில் சொல்கிறார்.

‘‘வேளாண்மை பொறியியல்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தற்போது 60 மண் அள்ளும் இயந்திரங்களும் 10 டிராக் வகை மண் அள்ளும் இயந்திரங்களும் தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைப் பொறியியல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதை விவசாயிகள் அனைவரும், தங்களின் வேளாண்மைப் பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இரண்டு கருவிகளைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் நிலங்களைச் சீரமைக்கக் குறைந்்த வாடகைக்கு விடப்படுகிறது.

ஒரு மணி நேரத்துக்கு டிராக் வகை மண் அள்ளும் இயந்திரம் இயந்திரம் பயன்படுத்த 1,440 ரூபாய் கொடுக்க வேண்டும். மண் அள்ளும் இயந்திரம் பயன் படுத்த 660 ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும் என அரசு விலைநிர்ணயம் செய்துள்ளது.

இந்தக் கருவிகளைக் கொண்டு, விவசாயிகள் தங்கள் நிலத்தில் உயரமான கரைகளும் வரப்புகளும் அமைக்கலாம். மழைநீர் சேமிக்கப் பண்ணைக் குட்டை வெட்டலாம். சில பகுதிகளில் பண்ணைக் குட்டையை மழைநீர் சேமிக்க மட்டுமல்லாமல், மீன் வளர்க்கவும் பயன் படுத்து கிறார்கள் விவசாயிகள். இப்படி ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க’வும் இது நல்ல வாய்ப்பு. மேலும், நிலத் துக்குச் செல்லும் பாதைகளைச் செப்பனிடலாம். நிலத்தைச் சுற்றி ஓடும் ஓடைகளைச் சீர் செய்யலாம். மண் அரிப்பைத் தடுக்கச் சம உயர வரப்புகள் அமைக்கலாம். வேளாண்மைத்துறை மூலம் நீர்வடிப்பகுதி திட்டங்கள் செயல்படுத்தப் பட்ட நிலங்களில் இக்கருவிகளைப் பயன்படுத்த முன்னுரிமை வழங்கப்படும். இந்தக் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். அரசு துறையே, குறைந்த வாடகையில் கருவிகளைக் கொடுக்க முன்வந்துள்ளது நல்ல வாய்ப்பு. இதை விவசாயிகள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், விவசாயிகளின் நிலத்தில் நீர் மேலாண்மை மேம்படும். இதன் மூலம் பயிர்களுக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாது. மண் அரிப்பைத் தடுப்பதன் மூலம் நில வளமும் மேம்படும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 99444 50552.

ராஜாமணி, பிரிட்டோராஜ்
ராஜாமணி, பிரிட்டோராஜ்

‘‘மஞ்சளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விரும்புகிறோம். இதில் உள்ள குர்குமின் பற்றி ஆய்வு செய்ய விரும்புகிறோம். இதன் விவரங்களைச் சொல்லுங்கள்?’’

கே.முனுசாமி, தர்மபுரி.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள மருந்து மற்றும் நறுமணப்பயிர்கள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ராஜாமணி பதில் சொல்கிறார்.

‘‘முன்பெல்லாம், மஞ்சள் சாகுபடி செய்தால் அதை அப்படியே விற்பனை செய்யத்தான் விவசாயிகள் விரும்புவார்கள். இப்போது அதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. மஞ்சளில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றி நம் மக்களுக்குச் சொல்லவே தேவையில்லை. இதன் மூலம் சாதாரணச் சளி முதல் புற்றுநோய் வரை பல நோய்கள் தடுக்கப்படுகின்றன என்று வெளி நாட்டினர் கொண்டாடுகிறார்கள். மஞ்சள் நிறமூட்டி, மணமூட்டி மட்டுமல்ல. ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இதன் மருத்துவக் குணம், அதில் உள்ள குர்குமின் (Curcumin) என்ற மருந்துப் பொருளின் அளவை வைத்துத்தான் மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த குர்குமின் தண்ணீரில் கரையாது. எண்ணெயில்தான் கரையும். அதனால்தான், நம் முன்னோர்கள், எண்ணெய் பயன்படுத்தப்படும் சாம்பார், ரசம்... போன்ற உணவுகளில் பயன்படுத்தினார்கள். தண்ணீரில் கரையாது என்ற உண்மையை, வெளிநாட்டில் பல கருவிகளை வைத்துதான் கண்டுபிடித்தனர். ஆனால், நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அதை அறிந்து வைத்திருந்தார்கள் என்று நினைக்கும்போது வியப்பாகத்தான் இருக்கிறது.

மருந்து நிறுவனங்கள் தேடும் குர்குமின்!

தமிழ்நாட்டில் பெருமளவு சாகுபடி செய்யப்படும் பவானி சாகர் மற்றும் ஈரோடு லோக்கல் போன்ற மஞ்சள் ரகங்களில் 4 சதவிகித அளவுக்கு குர்குமின் அளவு உள்ளது. நல்ல தரமான மஞ்சள் என்றால், 4 சதவிகிதம் என்பதுதான் அளவுகோல். வடகிழக்கு மாநிலங்களில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக மேகாலயாவில் விளையும் ‘மேகா’ என்ற ரகத்தில் குர்குமின் 8 சதவிகிதம் அளவுக்கு உள்ளது. இதற்குக் காரணமும் உண்டு. அங்கு நிலவும் தட்ப வெப்ப நிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், இந்த ரகம் 12 மாதங்களுக்கும் மேல் வயது கொண்டுள்ளது. இதனால், இந்தியாவில் அதிக குர்குமின் அளவு கொண்ட மஞ்சள், அவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த ரகத்தை இங்கே கொண்டு வந்து சாகுபடி செய்தால், அந்த அளவுக்குக் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்புக்கூட்டல் மூலம் குர்குமின் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியவுடன், அதைப் பிரித்தெடுக்கும் ஆலைகள், தமிழ்நாடு, கேரளா... போன்ற மாநிலங்களில் செயல்படத்தொடங்கியுள்ளன. அலோபதி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் குர்குமினை போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குகின்றன. 30 எண்ணிக்கை கொண்ட குர்குமின் மாத்திரைகள் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எங்கள் துறையின் மூலம் இதைப் பரிசோதனை செய்து கொடுக்க, ஆய்வகத்தை உருவாக்கி வருகிறோம். விரைவில் இது செயல்பாட்டுக்கு வரவுள்ளது. உடனடியாகத் தேவைப்படும் விவசாயி களுக்குத் தரமான தனியார் ஆய்வகங்களின் முகவரியினையும், குர்குமின் குறித்த விவரங்களையும் பகிர்ந்து வருகிறோம்.’’

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

மூலிகை மற்றும் நறுமணப்பயிர்கள் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்-3

தொலைபேசி: 0422 6611365.

மருந்து நிறுவனங்கள் தேடும் குர்குமின்!

‘‘வாழைநார் மூலம் என்னென்ன பொருள்கள் தயாரிக்கலாம். இதற்கு எங்கு பயிற்சி கொடுக்கிறார்கள்?’’

ஆர்.சக்திவேல், சென்னிமலை.

‘‘வாழை நாரிலிருந்து கைப்பை முதல் கப்பல் கட்டும் கயிறு வரை தயார் செய்யப்படுகிறது. வாழை நார் புடவைக்கு மவுசு அதிகம். திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் இதற்குப் பயிற்சிக் கொடுக்கிறார்கள்.’’

தொடர்புக்கு,

இயக்குநர், தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், தோகமலை ரோடு,

தாயனூர் அஞ்சல்,

திருச்சி.

புறா பாண்டி பகுதிக்கான கேள்விகளை 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமும் அனுப்பி வைக்கலாம்.

மருந்து நிறுவனங்கள் தேடும் குர்குமின்!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism