Published:Updated:

மானாவாரி நிலக்கடலை… பாரம்பர்ய ரக நெல் விதைகள் எங்கு கிடைக்கும்?

 புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

‘‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, சீரகச் சம்பா… போன்ற பாரம்பர்ய ரகங்களின் விதைநெல் எங்கு கிடைக்கும்?’’

@சி.ஈஸ்வரி

‘‘புதியதாக உருவாகியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமத்தில், நீங்கள் கேட்டுள்ள பாரம்பர்ய விதைநெல் கிடைக்கும். இந்திய அளவில் பாரம்பர்ய நெல் ரகங்களைப் பாதுகாத்துப் பரவலாக்குவதில் இந்த ஆஸ்ரமத்தில் செயல்படும் அக்ஷய க்ருஷி கேந்திரா பிரிவு முன்னோடியாக உள்ளது.

நெல்
நெல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இங்கு நாம் மண்ணுக்கேற்ற நூற்றுக்கணக்கான அரிய பாரம்பர்ய நெல் ரகங்களைக் காடு, மலையெல்லாம் தேடி சேகரித்து வைத்துள்ளார்கள். உளுந்தூர்பேட்டை பக்கம் செல்லும் விவசாயிகள், ஆஸ்ரமத்துக்கு ஒரு முறை எட்டிப் பார்த்துவிட்டு சென்றால், பாரம்பர்ய ரக நெல் சாகுபடி மீதும் இயற்கை விவசாயத்தின் மீதும் இன்னும் கூடுதல் ஈர்ப்பு ஏற்படும். இப்போதே கிளம்பி விட வேண்டாம். கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்தவுடன் செல்லுங்கள். உங்களுக்கு விதை நெல் தேவைப்பட்டாலும், உடனே நேரில் செல்ல வேண்டாம். தொலைபேசியில் தகவல் தெரிவித்தாலே போதும். உங்கள் வீட்டுக்கு விதைநெல் வந்து சேர்ந்துவிடும்.

தற்போது, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா(சம்பா பருவம்- 150 நாள்கள்), சீரகச் சம்பா (சம்பா, நவரை பருவங்கள்- 140 நாள்கள்) , காட்டுயானம் (சம்பா பருவம்- 180 நாள்கள்), கறுப்பு கவுனி(சம்பா பருவம்- 160 நாள்கள்), மாப்பிள்ளைச் சம்பா (சம்பா பருவம்- 160 நாள்கள்), காலா நமக் (சம்பா பருவம்- 120 நாள்கள்), வெள்ளைப்பொன்னி (சம்பா பருவம்- 135 நாள்கள்), சொர்ணமசூரி (குறுவை, சம்பா பருவங்கள்- 110 நாள்கள்) ஆகிய பாரம்பர்ய நெல் விதைகளை நியாயமான விலையில் விதைப் பரவலாக்கத்துக்காகத் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்கள்; இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பயன்பெறவும்.’’

தொடர்புக்கு,

செல்போன்: 99430 64596, 83006 14296, தொடர்புகொள்ள வேண்டிய நேரம்: காலை 10 முதல் மதியம் 1.30 வரை மற்றும் மதியம் 2.30 முதல் மாலை 5.00 வரை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘மானாவாரியில் நிலக்கடலை விதைக்க விரும்புகிறோம். எந்த ரகம் ஏற்றது, விதை எங்கு கிடைக்கும்?’’

சி.குமரேசன், நாவலூர்.

“நிலக்கடலை மூலம் பெறப்படும் கடலை எண்ணெயில், பிற எண்ணெயைக் காட்டிலும் கூடுதல் சத்துகள் உள்ளன என விஞ்ஞானிகள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். மற்ற எண்ணெய் வகைகளை ஒரு முறை சூடுபடுத்திப் பயன்படுத்திவிட்டால், மீண்டும் அதைப் பயன்படுத்தினால், உடலுக்குக் கேடு விளைவிக்கும். ஆனால், கடலை எண்ணெயை எத்தனை முறை சூடுபடுத்தினாலும், அதன் தன்மை கெடுவதில்லை. இதனால், உணவுப் பொருள்கள் தயாரிப்பில் கடலை எண்ணெய்க்கு மவுசு கூடிவருகிறது.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

நிலக்கடலையை முன் ஆடிப்பட்டம் ஜூன் -ஜூலை மற்றும் பின் ஆடிப்பட்டம் ஜூலை- ஆகஸ்ட்டிலும் சாகுபடி செய்யலாம்.

புறா பாண்டி
புறா பாண்டி

இந்த மாதங்களில் தென்மேற்குப் பருவ மழை மூலம் கிடைக்கும் ஈரப்பதம் மூலம் நிலக்கடலை செழித்து வளரும். இப்படி மானாவாரியில் சாகுபடி செய்ய வேண்டும் என்றால்,கோடைக்காலத்தில் நிலத்தை நன்றாகக் குறுக்கு உழவு செய்து, அதிலுள்ள களைகளை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கோடை மழையில் மண்ணில் மழைநீர் சேமிக்கப்படுகிறது . மேலும் கோடை மழையில் சணப்பை போன்ற பயிர்களை விதைத்து பூக்கும் தருணத்தில் அதை மடக்கி ரோட்டோவேட்டர் அல்லது கலக்கி கொண்டு மடக்கி உழுதும் நிலத்தைத் தயார் செய்து வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் பருவமழை வந்தவுடன் விதைப்புக் கருவியைக் கொண்டு விதைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

செம்மண் நிலங்களைப் பொறுத்த வரையில் மேல்மண் இறுக்கம் கடலை விளைச்சலை மிகவும் பாதிக்கிறது. மேல்மண் இறுக்கத்தை நிவர்த்திச் செய்யத் தொழுஉரத்தை கடைசி உழவின்போது தேவைக்குத் தக்கப்படி இடவேண்டும்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட டி.எம்.வி. ரகங்கள் விவசாயிகளால் விரும்பிச் சாகுபடி செய்யப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக டி.எம்.வி-7 என்கிற ரகம் கடந்த 44 ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய கொத்துவகை ரகம். 105 நாள்களில் விளைச்சலைத் தரவல்லது. இதன் காய்களின் பின்பகுதி ஒட்டகத்தின் முதுகு போன்று இருப்பதைக் கொண்டு இந்த ரகத்தை எளிதாக அறிந்துகொள்ளலாம். இது மானாவாரி, இறவைச் சாகுபடிக்கு ஏற்றது. 74 சதவிகிதம் உடைப்புத் திறனும், 49.6 சதவிகிதம் எண்ணெய்ச்சத்தும் கொண்டது.

நெல்
நெல்

டி.எம்.வி-13 ரகம் சிவப்பு நிற பருப்புகளைக் கொண்ட, அதிக எண்ணெய்ச்சத்து உடைய ரகமாகும். இதன் வயது 105 நாள்கள். பயிர் முதிர்வு காலத்தில் ஏற்படக்கூடிய வறட்சியைத் தாங்கும் ரகம். மானாவாரியில் ஹெக்டேருக்கு 1,613 கிலோ விளைச்சலைத் தரவல்லது.

அடுத்து, விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட வி.ஆர்.ஐ ரகங்கள் பற்றிப் பார்க்கலாம். வி.ஆர்.ஐ-2 என்ற ரகத்தின் இலைகளின் நுனிப்பகுதி சற்று வட்ட வடிவமாகவும், இலைகள் பின்னோக்கி வளைந்து சாம்பல் பச்சை நிறத்திலும் இருக்கும்.

இதன் காய்கள் பெரியதாகவும், மூக்கு எடுப்பாகவும், நடுப்பள்ளம் சற்றே அதிகமாகவும், விதை பருமனாகவும் இருக்கும். இதன் இலைகள் அறுவடை சமயம்வரை பசுமையாக இருப்பதால் தீவனத்துக்கும் உகந்தது. இதன் உடைப்புத்திறன் 74 சதவிகிதம், எண்ணெய்ச்சத்து 48 சதவிகிதம். இதன் வயது 165 நாள்கள், இதன் விளைச்சல் ஹெக்டேருக்கு 1,790 கிலோ மகசூல் கிடைக்கும்.

வி.ஆர்.ஐ-3 என்பது கொத்து ரகம். 95 நாள்களில் விளைச்சலைத் தரவல்லது. இதன் காய்கள் சிறியதாக இருக்கும், 75 சதவிகிதம் உடைப்புத்திறன், 49.5 சதவிகிதம் எண்ணெய்ச்சத்துக் கொண்டது. இது கார்த்திகைப் பட்டம், மானாவாரிச் சாகுபடிக்கு ஏற்றது. ஹெக்டேருக்கு 1,670 கிலோ விளைச்சலைத் தரவல்லது.

நிலக்கடலை
நிலக்கடலை

வி.ஆர்.ஐ-6 என்ற ரகம் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. தமிழகமெங்கும் மணற்பாங்கான, செம்புரை மண் வகைகளில் மானாவாரி, இறவையில் பயிரிட ஏற்றது. 105 நாள்களில் மானாவாரியில் ஹெக்டேருக்கு 1,916 கிலோ விளைச்சல் பெறலாம். சிறிய திரட்சியான பருப்புகள், 50 சதவிகிதம் எண்ணெய்ச்சத்துக் கொண்டது. துரு, இலைப்புள்ளி, மொட்டு அழுகல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் உடையது.

இதைத் தவிரப் பாரம்பர்ய கொத்துக்கடலை ரகங்களையும் மானாவாரியில் விதைப்புச் செய்யலாம். நிலக்கடலைச் சாகுபடி செய்த பிறகு, அந்த நிலம் வளம் நிறைந்த நிலைக்கு உயரும். காரணம், காற்றில் உள்ள தழைச்சத்தை, நிலக்கடலைச் செடிகள் இழுத்து மண்ணை வளப்படுத்தும் பணியைச் செய்யும். எனவே, நிலக்கடலைச் சாகுபடி மூலம் வருமானம் கிடைக்கும், நிலமும் வளமாகும். நிலக்கடலைச் சாகுபடி குறித்த ஆலோசனைகளும் விதை பற்றிய விவரங்களும், இந்த இரண்டு ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் வழங்குவார்கள்.’’

தொடர்புக்கு,

1.திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம்,

தொலைபேசி: 04147 222293, 250001

2.விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம், தொலைபேசி: 04143 260231 .

மானாவாரி நிலக்கடலை… பாரம்பர்ய ரக நெல் விதைகள் எங்கு கிடைக்கும்?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.