Published:Updated:

இதைச் செய்தால் பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்!

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

பிரீமியம் ஸ்டோரி

“பீடி இலை மரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டோம். இதன் சிறப்புகளைச் சொல்லுங்கள்?’’

எம்.சிதம்பரம், சேத்தியாத்தோப்பு.

‘‘பீடி இலை மரம் ‘டையோஸ்பைரோஸ் மெலானாக்ஸைலான்’ (DIOSPYROS MELANOXYLON) என்பதாகும். ஆங்கிலத்தில் ‘ஈஸ்ட் இந்தியன் எபோனி ட்ரீ’ என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் இந்தியா.வறண்ட நில தாவரமான இது, காற்றின் வேகத்தைத் தடுத்து, தூசியை வடிகட்டி, காற்றைத் தூய்மைப்படுத்துகிறது. நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகமாக உள்ளன.

இதைச் செய்தால் பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்!

இதன் பட்டையில் ‘டேனின் சத்து’ நிறைய உள்ளது.டேனின் சத்து இருந்தால் அந்த மரப்பட்டைத் தோல் பதனிட உதவும் என்பது கவனிக்கத்தக்கது. இதன் இலை விளை நிலங்களுக்கு நல்ல உரமாவதுடன், வேளாண் கருவிகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது; வண்டிச் சக்கரங்கள் செய்யவும், பில்லியர்டு கழிகள், தூண்கள், கடைசல் வேலைகள், பொம்மைகள், காகிதம் தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். பியானோவுக்குத் தேவையான சாவிகளைத் தயாரிக்கவும்கூட உதவுகிறது. ‘பிளாஸ்மோடியம் பால்சிபோரம்’ என்னும் மலேரியா நோய் பரப்பும் கிருமிகளைக் கட்டுப்படுத்த இதைப் பயன்படுத்துகிறார்கள்.

அத்திப் பழத்துக்கு நிகரான பழம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் இதைக் கொண்டாடுகிறார்கள். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள், இந்தப் பழத்தை சாப்பிடுவதன் மூலம், அந்தக் குறையினைப் போக்கிக் கொள்ள முடியும். ஹீமோகுளோபின் என்பது நம் சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். நம் உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் பொறுப்பு இந்தப் புரதத்துடையதாகும்.

இதைச் செய்தால் பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்!

இதன் பழத்தை உடைத்து விதையை நீக்கிக் காய வைத்து, அதை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இரவில் ஊறவைத்து நாள்தோறும் காலை, மாலையில் குடித்துவந்தால் மலச்சிக்கல், சீதபேதி குணமாகும். இலையை வேகவைத்து கடைந்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு, ரத்தபேதி விரைவாகக் குணமாகும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால், இரைப்பை, நுரையீரல் போன்ற உள் உறுப்புப் பலப்படும். மேலும், பழத்தின் சதைகளைச் சேகரித்து, நிழலில் காயவைத்து பொடியாக்கி, குறைந்தளவு தண்ணீர் கலந்து உண்டுவந்தால் வாதம், பக்கசூலை, இருமல் நீங்கும். சிலர் சத்து குறைவால் அடிக்கடி மயக்கம் அடைந்து கீழே விழுவார்கள். அதற்கு இதை உண்டு வந்தால் குணம் ஏற்படும். இந்தப் பழத்தின் சதைகளை நிழலில் காய வைத்து, பருக்கள் மீது தடவிவந்தால் பருக்கள் உடைந்து, அந்த இடத்தில் வடு இல்லாமல் முகப்பருக்கள் குணமாகும். இதன் பட்டையைச் சேகரித்துத் தண்ணீர்விட்டு மைய அரைத்து கட்டியின் மீது பற்றுபோட்டால் கட்டிகள் உடைந்து விரைவில் ஆறும் எனச் சித்த மருத்துவத்தில் காரை மரத்தின் மருத்துவக் குணங்கள் குறித்து நிறையச் சொல்லியுள்ளார்கள்.

இதன் இலைகள் ஆடுகளுக்கு மிகவும் பிடித்தத் தீவனம். இந்த மரங்கள் உள்ள இடத்தில் தேனீக்கள் அதிகமாக இருக்கும். கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரைமடை, ரங்கநாதசுவாமி திருக்கோவிலில் தலவிருட்சமாகக் காரை மரம் உள்ளது. இந்த ஊருக்குக் காரைமடை என்று பெயர் உருவாக, இந்த மரங்கள்தான் காரணம். இன்னும் பல பகுதிகளில் உள்ள கோயிலில் கூட இந்த மரம் தல விருட்சமாக உள்ளது.’’

செடி முருங்கைச் சாகுபடிக்கு ஏற்ற ரகம் எது?

‘‘பால் பண்ணை வைத்திருக்கிறோம். கொழுப்பு அல்லாத திடப்பொருள்களின் அளவை அதிகரிப்பது எப்படி?’’

ஆர்.சுகந்தி, பண்ணைப்பட்டி.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி பதில் சொல்கிறார்.

புறா பாண்டி
புறா பாண்டி

“பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், தனியார் பால் நிறுவனங்கள் கறவைமாடு வளர்ப்போரிடமிருந்து பாலைப் பெறும்போது அதற்கான விலையைப் பாலின் கொழுப்புச்சத்து, கொழுப்பு அல்லாத திடப்பொருள்களின் அளவைப் பொருத்தே விலை நிர்ணயம் செய்கின்றன. பாலில் கொழுப்புச்சத்து, கொழுப்பு அல்லாத திடப் பொருள்களின் அளவை சில தீவன முறைகளைப் பின்பற்றி அதிகரிக்கச் செய்வதன் மூலம் பாலிற்கு நல்ல விலையைப் பெறலாம்.

மொத்த தீவனத்தில் நார்ச்சத்தின் அளவு 30 சதவிகிதத்திற்கு மேல் இருக்க வேண்டும். பசுந்தீவனங்கள் மட்டுமில்லாமல் உலர் தீவனங்களையும், கறவை மாடுகளுக்குச் சேர்த்து கொடுக்கவேண்டும். நார்த் தீவனங்களை மிகவும் சிறுத்துண்டுகளாக நறுக்காமல் ஒரு அங்குலத்திற்கு மேல் இருக்குமாறு வெட்ட வேண்டும். கோ-3 அல்லது கோ-4 கம்பு நேப்பியர் புல்லை, 40 முதல் 45 நாள்களுக்குள் அறுவடை செய்து தீவனமாக அளிக்கவேண்டும். பருத்திக் கொட்டை, பருத்திக்கொட்டைப் பிண்ணாக்கு, புளியங்கொட்டைத் தூள், மரவள்ளிக்கிழங்கு திப்பி ஆகியவற்றைத் தீவனமாக அளிக்கலாம்.

தரம் குறைவான உலர் தீவனங்களான வைக்கோல், தட்டை ஆகியவற்றைத் தீவனமாகக் கறவை மாடுகளுக்குப் பயன் படுத்தும்போது தாது உப்பு கலவை (30-50 கிராம்), பிண்ணாக்கு வகைகள் (200-500 கிராம்), ஈஸ்ட் நொதி (10 கிராம்) கொடுக்க வேண்டும்.

மாட்டின் இனம், கறவை நிலை, தீவனம், பராமரிப்பு முறைகளைப் பொறுத்து மாறுபடும். பாலில் உள்ள சத்துகள் (சதவிகிதம்) தண்ணீ ர் 83-87, கொழுப்பு 3-5 (பசும்பால்), 6-8 (எருமைபால்), புரதம் 3.5-3.8, சர்க்கரை 4.8 - 5.0, தாதுக்கள் 0.7 ஆகியவையாகும். கொழுப்பு, புரதம் ஆகியவை பெருமளவு மாறுபடும் சத்துகளாகும். சர்க்கரை, தாதுக்கள் சிறிதளவு, மாறுபடும் சத்துகளாகும்.

கறவை மாடுகளுக்குப் போதிய அளவு சரிவிகித சமச்சீர் தீவனம் அளிக்க வேண்டும். உதாரணமாக 10 லிட்டர் கறக்கும் மாட்டிற்கு உண்ணும் அளவிற்கு உலர் தீவனம், 30 கிலோ பசுந்தீவனம், ஒவ்வொரு 2.5 லிட்டர் பால் உற்பத்திக்கும் ஒரு கிலோ கலப்புத் தீவனம் என்ற அளவில் வழங்க வேண்டும். கன்று ஈன்ற பின் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு கிலோ தானியமாவு (கம்பு, ராகி, சோளம், மக்காச்சோளம்) அளிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 15 லிட்டருக்கும் மேல் கறக்கும் மாடுகளுக்கு அடர் தீவனத்தை நான்கு அல்லது ஐந்து வேளை பிரித்துக் கொடுக்க வேண்டும். மேலும் ஒரு மாட்டிற்கு 30 கிராம் என்ற அளவில் சோடியம் பை கார்பனேட் கொடுக்க வேண்டும். 100 கிலோ கலப்புத் தீவனத்திற்கு 300-500 கிராம் சோடியம் பை கார்பனேட் சேர்க்கலாம்.

தவிடு, பிண்ணாக்கு, தானியமாவு ஆகியவற்றை ஊறவைத்துக் கொடுக்கலாம். தீவனத்தில் நொதி (20-30 கிராம்) சேர்ப்பதால் செரிமானத்திறன் கூடுவதோடு பாலில் கொழுப்பல்லாத திடப்பொருள்களின் அளவும் அதிகரிக்கும். கோடைக்காலத்தில் வெப்ப அயர்ச்சி அதிகம் என்றால் கட்டாயம் மாட்டைக் குளிப்பாட்ட வேண்டும். மேலும், தீவனத்தில் பேக்கரி ஈஸ்ட் (10 கிராம்), தாது உப்பு கலவை (50 கிராம்) அளிக்க வேண்டும். அதிகப் பால் கறக்கும் மாடுகளுக்குத் தானிய அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோல், தட்டைக்குப் பதிலாகச் சத்தான உலர்ந்த புல்லை (Hay) அளிக்கலாம். இதைப் பின்பற்றினால், நிச்சயம் உங்கள் பால் பண்ணையின் பாலுக்கு நல்ல விலைக் கிடைக்கும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைச் செய்தால் பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு