Published:Updated:

தென்னை வெள்ளை ஈ தாக்குதலுக்கு இயற்கை வழி தீர்வு!

தென்னை மரம்
பிரீமியம் ஸ்டோரி
News
தென்னை மரம்

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

‘‘எங்கள் தோட்டத்திலுள்ள தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் உள்ளது. இதை எப்படிக் கட்டுப்படுத்துவது?’’

- கே.விமலா, நாமக்கல்.

வேளாண்மைத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஆகியோர் வழங்கிய பயிர் பாதுகாப்பு பரிந்துரைகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
புறா பாண்டி
புறா பாண்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘தென்னை மரங்களில் `ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ’ என்னும் பூச்சியின் தாக்குதல், கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. வெள்ளை ஈக்கள் தென்னை ஓலையின் பின்பக்கம் முட்டையிட்டு, கரும்பூஞ்சாணத்தை ஓலைகளின் மேல் ஏற்படுத்தி உணவு தயாரிக்க முடியாமல் செய்துவிடுகின்றன. வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள் மஞ்சள் நிற முட்டைகளை சுழல் வடிவில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இந்த முட்டைகள் மெழுகுப் பூச்சுடன் காணப்படும். முட்டைகளிலிருந்து வெளிப்படும் இளம் குஞ்சுகள் இலைகளின் அடிப்பரப்பில் இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. சுமார் 20-30 நாள்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாகத் தென்னை ஓலைகளின் அடிப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை காற்றின் திசையில் எளிதில் பரவி, அடுத்தடுத்த தோட்டங்களிலுள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றன. குஞ்சுகளும் முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளின் அடியில் இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு, தேன் போன்ற திரவக் கழிவுகளையும் வெளியேற்றுவதால் கீழ்மட்ட அடுக்கிலுள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும் பூஞ்சணம் படர்ந்து காணப்படும்.

இதனால், தென்னையில் சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி பெருமளவு சரிந்திருக்கிறது. வெள்ளை ஈக்கள் தென்னை மரங்களைத் தவிர வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் தாக்குதல் ஏற்படுத்துகின்றன. வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த, ரசாயனப் பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தினால் எதிர்ப்புத்திறன் அதிகரித்துவிடும். இதனால், வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். இதை இயற்கை வழிமுறையில் கட்டுப்படுத்த முடியும்.

மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் ஆன ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை (நீளம் ஐந்தடி, அகலம் ஒன்றரை அடி) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், 5-6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம். மஞ்சள் விளக்குப்பொறிகளை ஏக்கருக்கு இரண்டு வீதம் தென்னந்தோப்புகளில் அமைத்து, மாலை 6 முதல் இரவு 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

மேலும், கிரைசோபாலா இரை விழுங்கிகள் இந்தப் பூச்சிகளின் வளா்ச்சி நிலைகளை நன்றாக உட்கொள்வதால், ஒவ்வொரு தென்னந்தோப்பிலும் இவற்றை ஹெக்டேருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் இட வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒரு லிட்டா் தண்ணீருக்கு வேப்பெண்ணெய் 30 மி.லி அல்லது அசாடிராக்டின் ஒரு சதவிகித மருந்தை ஒரு லிட்டா் தண்ணீருக்கு 2 மி.லி என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து, தென்னை ஓலையின் அடிப்புறம் நன்கு படும்படி 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்து தாக்குதலைக் குறைக்கலாம். இலைகளின் மேல் படரும் கரும்பூஞ்சணத்தை நிவா்த்தி செய்ய ஒரு லிட்டா் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் மைதா மாவுக் கரைசலை தென்னை ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

தென்னை மரம்
தென்னை மரம்

அடுத்து, திருச்சியில் மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம், வெள்ளை ஈக்களுக்குத் தீர்வாக உயிரியல் முறையை முன்வைத்துள்ளது. ‘ஐசேரியா ஃபூமோசோரோசீ’ (Isaria fumosorosea / formerly known as Paecilomyces fumosoroseus) எனும் பூஞ்சாண வகையை உற்பத்தி செய்து, அதை வெள்ளை ஈக்களுக்கு எதிர் உயிரியாகப் பயன்படுத்தித் தீர்வு பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்தப் பூஞ்சாணத்தை விவசாயிகளே பெருக்கிப் பயன்படுத்தலாம். அதற்குத் தேவையான அடிப்படை பூஞ்சாண திரவத்தைப் பயிர் பாதுகாப்பு மையமே வழங்குகிறது. ‘ஐசேரியா ஃபூமோசோரோசீ’ பூஞ்சாணம் தென்னையில் வெள்ளை ஈக்களுக்கு மட்டுமன்றி, அனைத்துப் பயிர்களையும் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்குத் தீர்வாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இனி, இதைத் தயாரிக்கும் முறை பற்றிப் பார்ப்போம்.

100 லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ வெல்லத்தைக் கலந்துகொள்ள வேண்டும். அதில், 100 மி.லி அடிப்படை ‘ஐசேரியா ஃபூமோசோரோசீ’ பூஞ்சாணத்தை ஊற்ற வேண்டும். அத்துடன் இரண்டு கிலோ ஸ்டார்ச் பவுடர் கலந்துகொள்ள வேண்டும். தினமும், 3-4 முறை கலவையை நன்கு கலக்கிவிட வேண்டும். நான்காவது நாளில் மேலும் இரண்டு கிலோ ஸ்டார்ச் பவுடர் கலக்க வேண்டும். அதன் பின், ஆறு நாள்கள் கலவையைப் பாதுகாக்க வேண்டும். 10 நாள்களுக்குப் பிறகு கலவை பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் 3-5 மி.லி பூஞ்சாணக் கலவையைக் கலந்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் மீது தெளிக்க வேண்டும். இதன் மூலம் ஓலைகளில் பரவும் ‘ஐசேரியா ஃபூமோசோரோசீ’ பூஞ்சாணம், வெள்ளை ஈக்கள், முட்டைகளின் மேல் படர்ந்து அவற்றை முழுமையாக அழித்துவிடும். மேலும், பூஞ்சாணத்தால் தாக்கப்பட்ட வெள்ளை ஈக்கள் பறந்து சென்று அருகிலுள்ள தாக்கப்படாத பகுதிகளில் படும்போது அவையும் அழிந்துவிடும் என ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.’’

தொடர்புக்கு,

மத்திய ஒருங்கிணைந்த பயிர்

பாதுகாப்பு மையம்,

தொலைபேசி: 0431 2420190.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தென்னை வெள்ளை ஈ தாக்குதலுக்கு இயற்கை வழி தீர்வு!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.