நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

செடி முருங்கைச் சாகுபடிக்கு ஏற்ற ரகம் எது?

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

‘‘செடி முருங்கைச் சாகுபடி செய்ய விரும்புகிறோம். எந்த ரகம் ஏற்றது?’’

@ஆர்.செல்வன், வல்லம்.

“வறட்சியான இடங்களில் நல்ல மகசூல் கொடுக்கும் தன்மைகொண்டது செடி முருங்கை. ‘மொரிங்கா ஒலிஃபெரா’ (Moringa Oleifera) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட முருங்கை, ‘மொரிங்கேசியே’ குடும்பத்தைச் சார்ந்தது. இந்தப் பிரிவில் 10-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் இது காணப்படுகிறது.

செடி முருங்கை
செடி முருங்கை

மென்மையான கிளைகள் எளிதில் முறிந்துவிடக்கூடியது. தண்ணீர்ப் பற்றாக்குறையுள்ள இடங்களில் செடி முருங்கைச் சாகுபடி செய்யப்படுகிறது. செடி முருங்கை எல்லா வகை மண்ணிலும் வளரும். இருந்தாலும், மணல் கலந்த செம்மண் பூமி அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியிலிருந்து `பி.கே.எம்-1’, `பி.கே.எம்-2’ (PKM-1, PKM-2) ஆகிய செடி முருங்கை ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை காய்ப்பது. ஒரு வருடத்துக்கு இரண்டு முறை காய்க்கும். ஆறு மாத காய்ப்பு முடிந்ததும் தரையிலிருந்து இரண்டடி விட்டு அறுத்துவிட வேண்டும். அரிவாள் கொண்டு வெட்டக் கூடாது.

மீண்டும் ஆறு மாதங்களில் காய்க்கும். இப்படியாக ஒரு மரத்தை மூன்று வருடங்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆறு முறை அறுவடை செய்யலாம் . பி.கே.எம்-1 முருங்கைக் காயின் நீளம் அதிகபட்சம் நான்கடி. பி.கே.எம்-2 முருங்கைக்காயின் நீளம் வளமான மண்ணில் ஐந்து அடிக்கு மேலும் காணப்படும். சுவையாக இருக்கும். ஒரு குடும்பத்துக்கு ஒரு காய் போதுமானது. வீட்டுத்தோட்டத்தில் ஒரு செடி முருங்கை இருந்தால்கூடப் போதும். காய்த்துக் குலுங்கும்.

ஓராண்டுக்கு இரண்டு பட்டங்கள் உண்டு. முதல் பட்டத்தில் ஜூன் 1-ம் தேதி விதைக்கலாம். இரண்டாம் பட்டத்தில் டிசம்பர் 1-ம் தேதி விதைக்கலாம். முதல் பட்டத்தில் ஜூன் 1-ம் தேதி விதைத்த செடி முருங்கையைக் காய்ப்புக்குப் பிறகு நவம்பர் 30-ம் தேதி மரத்தை ஹாக்‌ஸா பிளேடு (Hackshaw Blade) மூலம் தரையிலிருந்து ஒரு அடிவிட்டு அறுத்துவிடவும். அறுத்த இடத்தில் செம்மண், சாணம் கொண்டு மூடவும். இது மீண்டும் துளிர்த்து காய்ப்புக்கு வரும். இவ்வாறு ஒரு மரத்தை வருஷத்துக்கு இரண்டு தரம் அறுத்துவிட்டு மூன்றாம் வருடம் பயன் பெறலாம்.

ஏக்கருக்கு 250 கிராம் விதை தேவைப்படும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் அல்லது ஐந்து டன் கன ஜீவாமிர்தம் அல்லது மூன்று டன் மண்புழு எரு இடலாம். குழி அளவு 1.5 ‘ X 1.5 ‘ X 1.5 ‘ என்ற அளவில் இருக்க வேண்டும்.

நீங்கள் கேட்டவை
நீங்கள் கேட்டவை

குழிக்கு 20 கிலோ தொழுவுரம் (அ) 10 கிலோ கன ஜீவாமிர்தம் இட வேண்டும். வரிசைக்கு வரிசை எட்டடி செடிக்குச்செடி எட்டடி என்ற அளவில் இருக்க வேண்டும். முதல் எருவை விதைத்த 65-ம் நாள் ஒரு செடிக்கு 300 கிராம் பிண்ணாக்குக் கலவை (150 கிராம் கடலைப் பிண்ணாக்கு + 150 கிராம் ஆமணக்குப் பிண்ணாக்கு) இரண்டாம் எருவைப் பூக்கும் தறுவாயில் மீண்டும் இட வேண்டும்.

விதைத்த அன்று முதல் பாசனம், மூன்று மற்றும் ஏழாம் நாள், பின் விதைத்த 10, 15-ம் நாள் ஒரு முறை மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும். முக்கியமாக நீர் தேங்கக் கூடாது. விதைத்த 3-ம் மாதம், செடி உயரம் 2.25 அடி உயரத்தின் போது துளிர் நுனியைக் கிள்ளி பக்கக் கிளைகள் தோன்ற வைக்கவும். தேவைப்பட்டால், மீண்டும் நான்கடி உயரத்தில் கிள்ளவும். நுனி கிள்ளாமல்விட்டால் செடியின் வளர்ச்சியும் மகசூலும் பாதிக்கும். ஒரு செடியிலிருந்து ஆண்டுக்குச் சுமார் 200 காய்கள் வரை அறுவடை செய்யலாம்.

மறுதாம்பு விட்டால்தான் செடி முருங்கையில் தொடர்ச்சியாக மகசூல் பெற முடியும். விதைத்த ஆறு மாதங்களில் காய்கள் அறுவடை செய்ததும் தரையிலிருந்து இரண்டடி உயரம்விட்டு மரத்தை அறுக்கவும். செடி முருங்கைச் சாகுபடி செய்தே வாழ்க்கையில் முன்னேறிய விவசாயிகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகாவிலும் இருக்கிறார்கள்.

செடி முருங்கையுடன் தேனீ வளர்ப்பையும் செய்யலாம். இதன் மூலம் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு, விளைச்சலும் கூடும். முருங்கைப் பூ தேனுக்கு நல்ல விலையும் கிடைக்கும். தமிழ்நாட்டில் செடி முருங்கைச் சாகுபடி செய்பவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி கோ.மோகன்ராஜ் யாதவ், பல ஆண்டுகளாக வழிகாட்டிவருகிறார். இவரைத் தொடர்புகொண்டால் செடி முருங்கைச் சாகுபடி மட்டுமல்ல, இலை, காய், விதை ஆகியவற்றை மதிப்புக்கூட்டும் நுட்பங்கள் குறித்த தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வார்.’’

தொடர்புக்கு, செல்போன்: 94430 14897.

செடி முருங்கைச் சாகுபடிக்கு ஏற்ற ரகம் எது?

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.